TNAஐ.நா மனித உரிமை பேரவையில் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பதனைப் பிற்போட்டு உள்நாட்டு விசாரணையினை ஏற்றுக் கொள்ளமுடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைப்பேரவையில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருந்தது.

 

எனினும் தாங்கள்  உள்நாட்டு பொறிமுறையினை மேற்கொள்வதற்கு கால அவகாசம் தேவை என்றும்  எனவே அறிக்கை சமர்ப்பிக்கும் காலத்தை நீடிக்குமாறும் இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

இதனையடுத்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இக் கருத்தை வெளியிட்டுள்ளது. விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ . சுமந்திரன்  தெரிவிக்கையில்.

 

இலங்கை மீதான விசாரணை அறிக்கையை ஐ.நா. வெளியிட்டதன் பின்னர் இடம்பெறும் தொடர் நடவடிக்கையே மிக முக்கியமானதாகும்.

 

அந்தத் தொடர் நடவடிக்கையை மனித உரிமைகள் பேரவையில் இறுக்கமாக மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச விசாரணை குறித்த அறிக்கை வெளிவர வேண்டும்.

 

இந்த அறிக்கைதான் உண்மையைக் கண்டறிவதற்கான அத்திபாரமாக இருக்கும். உண்மையைக் கண்டறியாமல் அல்லது உண்மையைக் கண்டறிந்து அதை மூடிமறைத்து நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.

 

தற்போது உள்ளூர் விசாரணையை நடத்துவதற்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெற இருப்பதாக அரசு கூறுகின்றது. உள்ளூர் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை.

 

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் மேற்பார்வையின் கீழ் உள்ளக விசாரணை இடம்பெறுவதற்கு உத்தரவாதம் கொடுத்தால், அதை நாம் வரவேற்போம். ஆனால்இ அறிக்கையை வரவிடாமல் தடுத்து,  உள்நாட்டு விசாரணையை முன்னெடுப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

 

ஐ.நா. விசாரணையின்போது விசாரணையாளர்கள் நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படவில்லை. அவர்களுடைய காலத்தை நீடித்து நாட்டுக்குள் வந்து விசாரணையை நடத்த இலங்கை அரசு இடமளித்தால், காலத்தை நீடிக்க நாம் இணக்கம் தெரிவிக்கலாம்.

 

எனவேஇ விசாரணை தொடர்பில்இ ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு இலங்கை அரசு எந்தவிதமான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கின்றது என்று எமக்குத் தெரியவேண்டும். அது தெரிந்தால்தான் அதை ஆதரிக்கலாமா? இல்லையா என்று முடிவு செய்யலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.