IBC-Tamil1தமிழ்த் தேசியத்தை சிங்களத்திடம் விலைபேசி விற்று, அது வீசும் எலும்புத் துண்டில் வயிறு வளர்க்கும் ரிசி என்ற கே.பியின் கையாளிற்குத் தளம் அமைத்துக் கொடுத்து தமிழ்த் தேசியத்தின் வீரியத்தைச் சிதைக்கும் நிகழ்ச்சிகளைக் கடந்த ஓராண்டுக்கு மேலாக ஒளிபரப்பி வந்த ஐ.பி.சி தொலைக்காட்சி, அவற்றின் உச்சகட்டமாகச் சிங்களப் படையினரைப் புகழ்ந்துரைக்கும் நிகழ்ச்சியை அண்மையில் ஒளிபரப்பியிருக்கின்றது.

 

யார் நல்லிணக்கம் பேசினாலும், எவர் நடுநிலைவாதம் பற்றி உபதேசங்களைப் புரிந்தாலும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை சிங்கள இராணுவம் என்பது ஒரு இனவெறி பிடித்த கொலைவெறி இராணுவமாகும். இப்படிப்பட்ட கொலைவெறி கொண்ட ஓர் இனவெறி இராணுவத்திற்கே ஐ.பி.சி தொலைக்காட்சி வெள்ளையடிக்க முற்பட்டிருக்கின்றது. அதுவும் 2009 மே 18 இற்கு முன்னர் தமிழீழ தேசிய ஊடகமாக வலம் வந்து, அதன் பின்னர் தனிநபர்களின் கைகளுக்கு மாறி உலகத் தமிழரின் உறவுப் பாலம் என்று அதன் இன்றைய நிர்வாகிகளால் விதந்துரைக்கப்படும் ஐ.பி.சி தொலைக்காட்சியின் இந்தக் கைங்கரியம், அது சிங்களத்துடன் எவ்வாறான உறவுப் பாலத்தைப் பேணி வருகின்றது? என்ற கேள்வியையே ஒவ்வொரு தமிழர்களிடையேயும் தோற்றுவித்துள்ளது.

 

இங்கு எமது நோக்கம் ஐ.பி.சி தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சி மீதான ‘சடலப் பரிசோதனையை’ நிகழ்த்தி, அது ஏன் இவ்வாறு நடந்து கொண்டது என்பது பற்றிய புதிய கண்டுபிடிப்பை மேற்கொள்வதன்று. மாறாக இனியும் உலகத் தமிழர்களின் உறவுப் பாலம் என்று அழைத்துக் கொள்ளும் தகமை ஐ.பி.சி நிறுவனத்திற்கு உண்டா? என்பது பற்றிய ஓர் ஆழமான தரிசனத்தை மேற்கொள்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

 

ஐ.பி.சி என்ற அடைமொழியில் அறியப்படும் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் 1997ஆம் ஆண்டு நாடக ஆசிரியர் ஏ.சீ.தாசீசியஸ் அவர்களால் தொடங்கப்பட்ட வானொலி. ‘எடுத்த காரியம் யாவினும் வெற்றி’ என்ற தாரக மந்திரத்துடன் ஐ.பி.சி தமிழ் தொடங்கப்பட்ட பொழுதும், கோரப் பசி கொண்ட யானைக்கு ஒப்பான நிதித் தேவைகளைக் கொண்டிருந்த அந் நிறுவனத்தின் செலவுகளுக்கு ஈடுகொடுத்து நீண்ட நாட்களுக்கு வானொலியை நடத்திச் செல்லக்கூடிய நிலையில் ஏ.சீ.தாசீசியஸ் அவர்களாலோ, அன்றி அவருக்குத் துணை நின்ற ஏனையவர்களாலோ முடியவில்லை. ஆனாலும் தங்களால் முடிந்த வரை ஐ.பி.சி தமிழ் வானொலியைத் தக்க வைப்பதற்கான பகீரத பிரயத்தனங்களில் அவர்கள் ஈடுபட்டார்கள். இவ்வாறு நொந்து, நொடிந்து போய், தள்ளாடிக் கொண்டிருந்த ஐ.பி.சி தமிழ் வானொலிக்கு ஆப்பு வைக்கும் நோக்கத்துடன் இந்தியாவின் ஒட்டுக்குழுவான ஈ.என்.டி.எல்.எவ் கும்பலால் போட்டி வானொலி ஒன்றும் பிரித்தானியாவில் தொடங்கப்பட்டது.

 

இவையயல்லாம் அரங்கேறிக் கொண்டிருந்த பொழுது பிரித்தானியாவில் எவ்வித தடைகளுமற்ற அமைப்பாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இயங்கி வந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரித்தானியக் கிளை மட்டுமன்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகச் செயலகமும் அக்காலப் பகுதியில் இலண்டனிலேயே இயங்கி வந்தன. தமிழீழ தாயக மக்களைப் புலிகளின் குரல் வானொலி ஒருங்கிணைத்தமை போன்று புலம்பெயர்வாழ் தமிழர்களையும், ஏனைய உலகத் தமிழர்களையும் ஒருங்கிணைப்பதற்கான வானொலி ஒன்றின் தேவை அன்றைய காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. இதன் விளைவாக எந்த நேரமும் நிதி நெருக்கடிக் கடலில் மூழ்கி அமிழுந்து போகும் தறுவாயில் தத்தளித்துக் கொண்டிருந்த ஐ.பி.சி தமிழ் வானொலியை மீட்டு அதனைத் தமிழீழ தேசிய வானொலியாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் தீர்மானித்தார்கள். இதன் விளைவாக பிரித்தானியாவின் சட்ட திட்டங்களுக்கு இணங்க, தமிழ்த் தேசிய உணர்வாளர்களைப் பங்குதாரர்களாகக் கொண்ட நிறுவனமாக 1999ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் நாளன்று ஐ.பி.சி தமிழ் வானொலி பரிணமித்தது.

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலி என்ற கோதாவிலோ, அன்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களைப் பங்குதாரர்களாகவோ ஐ.பி.சி தமிழ் வானொலி கொண்டிருக்காத பொழுதும், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் செல்நெறிக்கு இணங்க செயற்படக்கூடியவர்கள் என்று அடையாளம் காணப்பட்டோரைப் பங்குதாரர்களாகவும், இயக்குநர், செயலாளர், தலைமை நிறைவேற்று அலுவலர், செய்தி ஆசிரியராகக் கொண்ட நிறுவனமாகவே 2009 மே 18 வரை ஐ.பி.சி தமிழ் வானொலி இயங்கியது. இந்தப் பத்தாண்டு காலப் பகுதியில் ஐ.பி.சி தமிழ் வானொலியின் தலைமை நிறைவேற்று அலுவர் பொறுப்பை சிவப்பிரகாசம் சிவரஞ்சித், கு.ரமணன், நாதன் (முரசு என்று அழைக்கப்பட்டவர்) ஆகிய மூவரும் வெவ்வேறு கட்டங்களில் வகித்தனர்.

 

இந்தப் பத்தாண்டு காலப்பகுதியில் பல்வேறு நெருக்கடிகளையும், சவால்களையும் ஐ.பி.சி தமிழ் வானொலி எதிர்கொண்ட பொழுதும், தமிழீழ தேசிய ஊடகம் என்ற பண்பியல்புடனேயே அது இயங்கி வந்தது. ஐ.பி.சி தமிழ் வானொலியில் அன்று பணிபுரிந்த அனைவரும் தேசியவாதிகளாக இருக்கவில்லை. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தையும், அதன் தலைமையையும் வெறுத்தவர்களும், தேசியவாதிகளாகப் பாசாங்கு செய்தவாறு தமக்கென்றொரு ஊடக முத்திரையைக் குத்துவதற்காகத் துடித்தவர்களும், மக்கள் பணத்தைச் சுரண்டி அதில் தமது கஜானாவை நிரப்புவதில் குறியாக இருந்தவர்களும் இருந்தார்கள்.

 

ஆனாலும் தமிழீழ தேசத்தின் மீதும், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீது ஆழமான பற்றுணர்வைக் கொண்டவர்களை நிர்வாக மட்டத்தில் பெரும்பான்மையாகக் கொண்ட நிறுவனம் என்ற வகையில் தமிழீழ தேசியத் தடத்தில் ஐ.பி.சி தமிழ் உறுதியாகப் பயணித்தது. இந்தப் பத்தாண்டுகளில் ஐ.பி.சி தமிழ் வானொலியின் நிர்வாக பீடத்தில் ஆட்கள் மாறினார்களே தவிர, அந்நிறுவனத்தின் தேசியப் பண்பியல்பு மாறவில்லை.

 

இவ்வாறு புலம்பெயர் தேசங்களில் தமிழீழ தேசிய ஊடகம் என்ற பண்பியல்போடு இயங்கிய ஐ.பி.சி தமிழ் வானொலிக்குத் தமிழீழ தாயகத்தில் தனியான இடம் ஒன்றும் இருந்தது. தமிழீழ தாயகத்தில், அதிலும் குறிப்பாக தமிழீழ நடைமுறை அரசு இயங்கிய வன்னிப் பெருநிலப்பரப்பில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசறைகள் அனைத்திலும் அதிகாலை வேளையில் முதன் முதலில் ஒலிக்கும் வானொலியாக ஐ.பி.சி தமிழ் வானொலியே திகழ்ந்தது. போர் ஓய்வுக் காலப்பகுதியில் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சியில் ஈடுபடும் ஒவ்வொரு போராளிகளும் ஐ.பி.சி தமிழ் வானொலியின் செய்திகளையும், அதில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளையுமே முதன் முதலில் செவிமடுப்பார்கள்.

 

இவை எல்லாவற்றுக்கும் அப்பால் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் விரும்பிக் கேட்கப்படும் வானொலியாக ஐ.பி.சி தமிழ் வானொலி விளங்கியது. வேலைப்பளு காரணமாக அதிகாலை வேளையில் ஐ.பி.சி தமிழ் வானொலியைத் தன்னால் செவிமடுக்க முடியாத சந்தர்ப்பங்களில் அன்றைய ஒலிபரப்பின் ஒலிப்பதிவை வாகனத்தில் செல்லும் பொழுது அல்லது ஓய்வு கிடைக்கும் நேரத்தில் தலைவர் அவர்கள் செவிமடுப்பார். அத்தோடு, வானொலியின் ஒலிபரப்புக்கள் பற்றிய தனது கருத்துக்களையும், விமர்சனங்களையும் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் (கஸ்ரோ) அவர்களிடம் இடையிடையே தலைவர் அவர்கள் தெரிவிப்பதும் உண்டு.

 

ஐ.பி.சி தமிழ் வானொலி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டிருந்த அபிமானத்திற்கான மூன்று உதாரணங்களை நாம் இங்கு குறிப்பிடலாம்.

 

2005ஆம் ஆண்டின் நடுப்பகுதி அது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஐ.பி.சி தமிழ் வானொலியின் தாயகத்திற்கான சிற்றலை ஒலிபரப்புக்களைத் தெளிவாகச் செவிமடுப்பது இடையிடையே வன்னியில் கடினமாகியிருந்தது. அக் காலப்பகுதியில் ஐ.பி.சி தமிழ் வானொலியின் செய்தியாளர் என அறியப்பட்ட ஒருவர் கிளிநொச்சி சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பொழுது திடீரென அவரது வாகனம் கடற்புலிகளின் தளபதி சூசை அவர்களின் மெய்ப்பாதுகாவலர்களால் வழிமறிக்கப்பட்டது. வாகனத்தில் இருந்து இறங்கிய தளபதி சூசை அவர்கள், பதற்றத்துடன் நின்ற சம்பந்தப்பட்ட செய்தியாளரிடம் வந்து ‘நீங்கள் தானா ஐ.பி.சியின் செய்தியாளர்?’ என்று கேட்டார். அதற்கு அந்தச் செய்தியாளரும் தயக்கத்துடன் ‘ஆம்’ என்று கூற, ‘நான் ஐ.பி.சியின் நேயர். என்னால் ஐ.பி.சியைக் கேட்க முடியாமல் உள்ளது. உங்கள் ஐ.பி.சி நிர்வாகத்திடம் கூறி நான் ஐ.பி.சியைக் கேட்பதற்கு ஒழுங்கு செய்து தருவீர்களா?’ என்று அந்தச் செய்தியாளரிடம் தளபதி சூசை அவர்கள் கேட்டுக் கொண்டார்.

 

இதேபோன்ற இன்னொரு சம்பவமும் 2005ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிழல் யுத்தத்தை சந்திரிகா அம்மையாரின் அரசாங்கம் முடுக்கி விட்டிருந்த காலப்பகுதி அது. இனியும் சமாதானம் பேசுவதால் எதனையும் சாதிக்க முடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் எண்ணத் தலைப்பட்டிருந்த அக்காலப்பகுதியில் ஆட்சேர்ப்புக்களை மேற்கொண்டு படையணிகளைப் பலப்படுத்துமாறு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களிடம் தலைவர் அவர்கள் பணித்திருந்தார்.

 

அக்காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சேர்ப்பிற்குப் பொறுப்பாக கொள்கை முன்னெடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் இளங்கோ (ரமேஸ்) அவர்களே விளங்கினார் (பின்னர் தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளராக விளங்கியவர்). அப்பொழுது ஆட்சேர்ப்புக்கள் மந்த கதியிலேயே இடம்பெற்றன. அவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழீழ தாயகத்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வொன்றில் மக்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் ஐ.பி.சி தமிழ் வானொலியின் ஒலிபரப்பாகியிருந்தன. அன்று காலை ஐ.பி.சி தமிழ் வானொலியை செவிமடுத்ததும் இளங்கோ அவர்களை அழைத்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன், ‘ஆட்சேர்ப்புக்கள் எந்தக் கட்டத்தில் இருக்கின்றன?’ என்று கேட்டார். அதற்கு ஆட்சேர்ப்புக்கள் மந்த கதியில் இருப்பாகவும், இன்னமும் மக்கள் முழுமையாக அணுகப்படவில்லை என்றும் இளங்கோ அவர்கள் பதிலளித்த பொழுது, கடும் கோபம் கொண்ட சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள், ‘இன்று காலை ஐ.பி.சி கேட்டீர்களா?’ என்று கேட்டார். அதற்கு ‘இல்லை’ என்று இளங்கோ அவர்கள் பதிலளித்த பொழுது, ஒரு ஒலித்தட்டை அவரிடம் கையளித்த சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள், ‘ஐ.பி.சியின் இன்றைய செய்தியைக் கேட்டு விட்டு வந்து கதையுங்கோ’ என்று அனுப்பி வைத்தார்.

 

இவ்வாறு ஐ.பி.சி தமிழ் வானொலி என்பது அன்று தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை எங்கோ உள்ள தொலைதூர நாடொன்றில் இருந்து ஒலித்த தமிழீழ தேசத்தின் உரிமைக் குரலாகவே பார்க்கப்பட்டது.

 

இதனால்தான் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.சி தமிழ் வானொலியின் ஆண்டு விழாவிற்கு வழங்கிய செய்தியில் பின்வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்திருந்தார்: ‘தாயகத்தில் இப்போது சேவல் கூவிப் பொழுது விடிவதில்லை. ஐ.பி.சியின் தொடக்க ஒலி கேட்டே எம் பொழுது விடிகின்றது. எம் முதல் பணி காலையில் ஐ.பி.சி கேட்டல் என்றாகி விட்டது. இதன் வழியிலே எம்மக்கள் உலகைக் காண்கின்றனர், அறிகின்றனர்’ என்றார். இது மட்டுமா? 2005ஆம், 2006ஆம் ஆண்டுகளில் ஐ.பி.சி தமிழ் வானொலியின் கலையகத்தில் நடைபெற்ற ஆண்டு விழாக்களில் சிறப்பு அதிதியாக தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்.

 

இவ்வாறு தமிழீழ தேசிய ஊடகம் என்ற தகமையோடு மிளிர்ந்த ஐ.பி.சி தமிழ் வானொலி, 2009 மே 18இற்குப் பின்னர் அதன் தேசியப் பண்பியல்பைத் தொலைத்தது. நான்காம் கட்ட ஈழப் போர் உக்கிரமடைந்த 2008ஆம் ஆண்டு ஆடி மாதம் ஐ.பி.சி தமிழ் வானொலியின் தலைமை நிறைவேற்று அலுவலராக வன்னியில் இருந்து நியமிக்கப்பட்ட நாதன் என்பவர், யுத்தம் நிறைவடைந்ததும் தனது பொறுப்புக்களைப் புறந்தள்ளி, நிதி நெருக்கடியில் இருந்த ஐ.பி.சி தமிழ் வானொலியைக் கைவிட்டார். இவருக்கு அடுத்த படியாக ஐ.பி.சி தமிழ் வானொலியின் நிர்வாகத்தில் இருந்த தினகரன் என்பவரோ தனது முடிவுகளால் ஏற்படப் போகும் பாதிப்புக்களைப் பற்றி சிறிதளவும் சிந்திக்காது வானொலியின் பெரும்பான்மை பங்குதாரராக சு.சத்தியவடிவேலு என்ற தொழிலதிபரை நியமித்தார்.

 

விளைவு: தமிழ் மீடியா லிமிட்டட் என்ற பெயரில் இயங்கிய தமிழீழ தேசிய ஊடகமாகிய ஐ.பி.சி தமிழ் வானொலி சத்தி மீடியா லிமிட்டட் என்ற தனியார் நிறுவனமாகியது. அத்தோடு தமிழீழ தேசிய ஊடகம் என்ற பண்பியல்பை இழந்து தனிநபர் ஒருவரின் விருப்பு, வெறுப்புக்களைப் பிரதிபலிக்கும் ஊடகமாக ஐ.பி.சி தமிழ் மாறியது.

 

ஆனாலும் ஐ.பி.சி வானொலியின் உரிமையாளராக விளங்கிய சத்தியவடிவேலு அவர்களால் அதன் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்து வானொலியை நடத்த முடியவில்லை. போதாக்குறைக்குத் தனிநபர்கள் மீது அவதூறும் பரப்பும் வகையில் ஐ.பி.சி வானொலியில் அவரது நிர்வாகத்தின் கீழ் இயங்கிய அறிவிப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒலிபரப்புக்கள் அவரை நீதிமன்றம் வரை கொண்டு சென்று ஐ.பி.சி தமிழ் வானொலியை எவரிடமாவது கையளித்தால் போதும் என்ற நிலைக்கு இட்டுச் சென்றது.

 

இவ்வாறானதொரு சூழமைவில் 2014ஆம் ஆண்டு ஐ.பி.சி தமிழ் வானொலியில் திடீர் நிர்வாக மாற்றம் ஒன்று ஏற்பட்டது. தமிழீழ தேசிய ஊடகமாக ஐ.பி.சி இயங்கிய காலப்பகுதியில் அதில் அறிவிப்பாளராகப் பணிபுரிந்த பரா பிரபா என்ற ஊடகவியலாளர், லிபரா நிறுவனத்தின் மறு முகமாகச் செயற்பட்டு ஐ.பி.சி வானொலியை கொள்வனவு செய்ததாக தகவல்கள் பரவத் தொடங்கின. எனினும் இது பற்றி பரா பிரபா அவர்களிடம் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் வினவிய பொழுது, ஐ.பி.சி வானொலியைத் தான் தனது தனிப்பட்ட முயற்சியாக வங்கியில் கடன் பட்டுக் கொள்வனவு செய்திருப்பதாகப் பரா பிரபா அவர்கள் அடித்துக் கூறினார். அத்தோடு இலண்டன் தமிழ் மீடியா லிமிட்டட் என்ற தனது பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த நிறுவனமே ஐ.பி.சி தமிழ் வானொலியை சத்தி மீடியா லிமிட்டட் என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்ததாகவும் பரா பிரபா அவர்கள் தெரிவித்தார் (இதே கருத்தையே கடந்த வாரம் ஈழமுரசின் பிரித்தானியச் செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்ட பொழுதும் பரா பிரபா அவர்கள் கூறியிருந்தார்).

 

இக்காலப்பகுதியில் ஐ.பி.சி வானொலியோடு இணைந்து செயற்படுவதற்கான முயற்சிகளில் பிரித்தானியாவில் இயங்கும் தமிழ்த் தேசிய ஊடகமாகிய ஐ.எல்.சி வானொலியின் நிர்வாகிகள் ஈடுபட்டனர். இதற்கான பேச்சுவார்த்தைகளை ஐ.எல்.சி தமிழ் வானொலியின் இணைப்பாளரும், பிரித்தானியாவில் நீண்ட காலமாக தமிழ்த் தேசிய அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருபவருமான அ.தனம் அவர்கள், ஐ.பி.சி தமிழ் வானொலியின் புதிய இயக்குநரான பரா பிரபா அவர்களுடன் மேற்கொண்டார். இது பற்றி அ.தனம் அவர்களிடம் கடந்த வாரம் ஈழமுரசு பத்திரிகையின் பிரித்தானியச் செய்தியாளர் தொடர்பு கொண்டு வினவிய பொழுது, ‘ஐ.பி.சியும், ஐ.எல்.சியும் ஒரே நிறுவனமாக இயங்குவதற்கான முயற்சிகளை நான் மேற்கொண்டேன். இதற்கென்று தனியான செயலணி ஒன்று உருவாக்கப்படுவதையும் நான் முன்மொழிந்தேன். ஆனால் அதனைப் பரா பிரபா ஏற்கவில்லை. தானே ஐ.பி.சியின் இயக்குநராக இருப்பேன். செயலணியாக இயங்குவதில் எல்லாம் தனக்கு உடன்பாடு இல்லை என்றார். இதனால் எமது முயற்சி கைகூடவில்லை’ என்று தெரிவித்தார்.

 

இது இவ்விதமிருந்த ஐ.பி.சி தமிழ் வானொலியை இயக்கி வந்த பரா பிரபா அவர்களைப் பங்குதாரராகவும், இயக்குநராகவும் கொண்ட இலண்டன் தமிழ் மீடியா லிமிட்டட் என்ற நிறுவனத்தில் 2015 தை மாதம் 8ஆம் நாளன்று (சிங்கள அதிபராக மைத்திரிபால சிறீசேன வெற்றியீட்டிய அதே நாளில்) மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. இலண்டன் தமிழ் மீடியா என்ற நிறுவனத்தின் பங்குதாரராகவும், இயக்குநராகவும் பற்ரிக் டேவிட் நிராஜ் (நிராஜ் டேவிட் என்று தமிழ் ஊடகப் பரப்பில் அறியப்படுபவர்) நியமனம் பெற்றார்.

 

இவரது நியமனத்தைத் தொடர்ந்து ஐ.பி.சி தமிழ் பெரும் பணச் செலவில் தொலைக்காட்சிச் சேவை ஒன்றைத் தொடங்கியது. இதற்கென இரண்டு மில்லியன் (அதாவது இருபது இலட்சம்) பவுண்சுகள் செலவில் அதியுயர் தொழில்நுட்ப உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.

 

இதனைத் தொடர்ந்து அண்மையில் சுவிற்சர்லாந்தில் பெரும் பணச் செலவில் விழாவொன்றை ஐ.பி.சி தமிழ் நடத்தியிருந்தமை வேறு கதை.

 

இங்கு ஒரு விடயத்தை நாம் சுட்டிக் காட்ட வேண்டியது அவசியமாகின்றது. இன்று ஐ.பி.சி தமிழ் நிறுவனத்தின் உரிமையாளராகவும், இயக்குநராகவும் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிராஜ் டேவிட் அவர்கள் ஒரு தொழிலதிபர் அல்ல. சமாதான காலப்பகுதியில் நிழல் யுத்தம் தீவிரம் பெற்ற பொழுது தாயகத்தை விட்டுப் புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரியவர் நிராஜ் டேவிட் அவர்கள். இப்பொழுதும் சிறீலங்காவின் குடிமகனாக விளங்கும் அவர் சுவிற்சர்லாந்தில் ஏறத்தாழ பத்து ஆண்டுகளே வசித்துள்ளார். அவரிடம் இருபது இலட்சம் பவுண்சுகள் பெறுமதியான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதி எங்கிருந்து கிடைத்தது என்ற கேள்வி உண்டு. அத்தோடு 1997ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நாள் முதல் வரவை விட செலவை அதிகமாகக் கொண்ட நிறுவனமாகத் திகழ்வது ஐ.பி.சி. அப்படிப்பட்ட ஓர் ஊடக நிறுவனத்தை நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் நடத்துவதற்கான நிதி நிராஜ் டேவிட் அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கப் பெறுகின்றது?

 

லிபாரா பிளே என்ற இணையப் பரிவர்த்தனை பொறிமுறை ஊடாக ஒளிபரப்பாகும் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கான நிதி வளம் ‘லிபாரா’ நிறுவனத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் உண்டு (சட்டச் சிக்கல்கள் காரணமாக இவ்வாறு தான் எம்மால் எழுத முடியும்). ஆனாலும் இதனை இதுவரை அதிகாரபூர்வமாக லிபாரா நிறுவனம் ஒப்புக் கொண்டதுமில்லை: மறுத்ததுமில்லை. அப்படியயன்றால் ஐ.பி.சி நிறுவனம் எவ்வாறு தனது செலவுகளை எதிர்கொள்கின்றது? இதற்கு விடையில்லை.

 

இது பற்றிக் கடந்த வாரம் பரா பிரபா அவர்களுடன் ஈழமுரசின் பிரித்தானியச் செய்தியாளர் தொடர்பு கொண்டு உரையாடிய பொழுது, தான் தற்பொழுது ஐ.பி.சியின் நிர்வாகப் பொறுப்பில் இல்லை என்றும், ஐ.பி.சியின் செலவுகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் அதனை சரியானவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்கான லிபாரா நிறுவனத்தைத் தான் அணுகியதாகவும், அதனைத் தொடர்ந்து தற்பொழுது ஐ.பி.சி நிறுவனத்தின் இயக்குநராக நிராஜ் டேவிட் திகழ்வதாகவும் கூறினார்.

 

அதேநேரத்தில் ஐ.பி.சி நிறுவனத்தை ஐ.எல்.சி வானொலியிடம் தான் கையளிக்காததற்குக் காரணம் ஐ.எல்.சியிடம் அதற்கான நிதி வளம் இல்லை என்பதாலேயே என்றும் பரா பிரபா அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

எது எவ்வாறிருப்பினும் 2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஐ.பி.சியின் இயக்குநராகத் திகழ்ந்த பரா பிரபா அவர்களிடம், சத்தியா மீடியா லிமிட்டட் என்ற நிறுவனத்திடம் இருந்து எவ்வாறு தனது ஆளுகையின் கீழ் இயங்கிய இலண்டன் தமிழ் மீடியா லிமிட்டட் என்ற நிறுவனத்திற்கு ஐ.பி.சி கைமாறியது என்பது பற்றியோ அன்றி எவ்வாறு 8.01.2015 அன்று நிராஜ் டேவிட் அவர்களின் கைக்கு இலண்டன் தமிழ் மீடியா லிமிட்டட் மாறியது என்பது பற்றியோ இதுவரை திருப்திகரமான பதில் எதுவும் இல்லை.

 

ஒரு தேசிய ஊடகம் என்பது தேசியவாதிகளை நிர்வாகிகளாகவும், தேச பக்தர்களை நிதிமூலமாகவும் கொண்டு இயங்குவது. 2009 மே 18 இற்குப் பின்னர் வலம் வரும் ஐ.பி.சி நிறுவனத்தின் நிலை அப்படி அல்ல. அதில் தேசியவாதிகள் என்று வலம் வருபவர்களும் இருக்கின்றார்கள், பச்சைப் புலியயதிர்ப்பாளர்களாகத் தம்மை அடையாளம் காட்டும் பரபரப்பு ரிசி போன்ற தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்களும் இருக்கின்றார்கள். இவை போதாதென்று ஐ.பி.சியின் நிதி மூலங்களும் மர்ம முடிச்சுக்களாக உள்ளன.

 

நன்றி: ஈழமுரசு (26.07.2016)