obamaபுத்தாண்டு பிறந்துள்ள இவ்வேளையில் கடந்த ஆண்டு தமிழர்களுக்கு நல்ல ஆண்டாக தோன்றினாலும் அவ் ஆண்டு உண்மையில் துயர் நிறைந்த ஆண்டே ஆகும். எமது இனம் அழிக்கப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு மூலம் நீதி கிடைக்கும் என்று நினைத்திருந்தபோது, இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமானது ஏதோ தமிழர்களுக்கு கிடைத்த மாற்றமெனெ கருதி வெளிநாடுகள் நடந்து கொண்டதுவும், அதனை நம்ப வைத்து ஏமாற்றிய சில தமிழ்த் தலைமைகளின் தவறான முடிவும் இறுதில் நீதியை புதைத்த ஆண்டாக அமைந்துவிட்டது.

 

இலங்கையில் இறுதியாக நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமிழரின் பலம் உடைந்துபோய்விடக்கூடாது என நினைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு சரிசமமாக வாக்கினை போடாமல் தனி ஒரு கட்சிக்கு அதிகமாக வாக்கினை போட்டமையும், அதனை தமக்கு சாதகமாக பாவித்த ஒருசில தமிழ்த் தலைமைகள் மக்களை தவறாக வழி நடத்துவதற்கும், சர்வாதிகாரப்போக்கில் போவதற்கும் காரணமாக அமைந்ததோடு அவர்கள் இன்று அரசின் கைப்பொமையாக மாறி எமது இலட்சியத்தை, தியாகங்களை விலைபேசும் சக்தியாக மாறியதும் கடந்த ஆண்டின் துயரமான நிகழ்வாகிவிட்டது.

 

மேற்கூறப்பட்ட நிகழ்வுகளை விட, தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையில் மீண்டும் கசப்பினை ஏற்படுத்துவதற்கென்று மக்களை தூண்டும் செயலில் ஈடுபட்டதோடு, எமக்காக இறுதிவரை போராடியவர்களை கேவலப்படுத்தியதும் போன்று பல நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஆண்டின் இறுதியில் தமிழ் மக்கள் பேரவை என்றும் இயக்கத்தின் உதயமானது சற்று ஆறுதல் தரும் செய்தியாக அமைந்தது எனலாம்.

 

பிறந்துள்ள புத்தாண்டில் எமது இனம் தலைநிமிரவேண்டும். எமக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நீதி பெற்றுத்தரும் ஆண்டாகவும், தமிழின விரோத தலைமைகளை மக்கள் இனங்கண்டு தூக்கி எறியும் ஆண்டாகவும் மலரவேண்டும். எமது மக்களுக்கு நிரந்தரமானதும் அனைத்து தமிழர்களும் ஏற்றுக்கொள்ள கூடியதுமான ஒரு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் ஆண்டாகவும் மலரவேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்வோமாக!!

 

நன்றி :

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு