thamilarasanதோழர் தமிழரசன் அவர்களின் தாயார் தனது முதுமையிலும் தனது நிலத்தை கொடுத்து அவரை போய் பார்க்கும் தோழர்களிடம் எல்லாம் “என் பிள்ளைக்கு ஒரு சிலை வையுங்கடா நிலம் தாரேன்… ” எனச் சொல்கின்றாராம். அவர் காலத்தில் அவர் மகனும் தமிழ் தேசியத் தலைவருமான தமிழரசனுக்கு ஒரு சிலை செய்ய அரச தடை மீறி செய்வது எப்படி என பின் நிற்கின்றார்கள் எல்லோருமே.

 

ஒப்பற்ற உண்மையான வீரனுக்கு தமிழகத்தில் ஒரு சிலை இல்லை. வீரவணக்கம் செலுத்தவும் தடை.

 

உழைப்பு தொழில் துறைகளில் ஒன்றான திரைத்துறையில் பணத்துக்காக நடித்த தமிழர் அல்லாதவருக்கு ஒரு மணி மண்டபத்தை அரசே முன்னின்று தமிழகத்தில் கட்டி கொடுக்க முன்வருகின்றது…தமிழக மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் அரசின் இந்த செயலில் நீதி உண்டா?

 

சிவாஜி கணேசன் போன்ற சிறந்த கலைஞருக்கு மணி மண்டபம் கட்டட்டும். சிலை செய்யட்டும்.. யாரும் தடை இல்லை ..அதை மக்கள் பணத்திலா செய்ய வேண்டும்? அரசு செய்யும் அளவு அரசியல் தலைவரா அவர்? சரி அதுவே சரி என்றால் திரை கதாநாயகனுக்கு அவ்வளவு முக்கியத்துவம் என்றால் உண்மையான மக்கள் நாயகன் வீரரை வணங்கக் கூட அனுமதி மறுத்த தமிழக அரசை என்ன சொல்வது?

 

மக்களுக்காக போராடிய உண்மையான வீரனை வீர வணக்கம் செலுத்தி வழிபட அணி திரண்ட மக்களின் உணர்வுகளை சிதைத்து வணக்கம் செலுத்தவிடாமல் தடை போட்டு கைது செய்து முடக்கும் தமிழக அரசுக்கு தமிழர்க்கு சம்பந்தமே அல்லாத சோபன் பாபுவுக்கு சிலை கட்டவும் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டவும் மட்டும் எப்படி சரியெனப் படுகின்றது?

 

பொதுவாக தலைவர்களுக்கும் புரட்சியாளர்களுக்குமே சிலை எழுப்புவார்கள்.அந்த வகையில் வணக்கம் செலுத்த கூட அனுமதி மறுக்கும் உண்மையான போராளிக்கு ஒரு நினைவு தூபியையாவது தமிழர்கள் எழுப்ப வேண்டும். அதையும் தோழர் தமிழரசன் அவர்களின் தாயார் காலத்தில் எழுப்ப வேண்டும்.

 

எளிமையை விரும்பிய தலைவரான அவரை தமிழக மக்கள் காலம் எல்லாம் நினைந்து போற்றும் வகையில் தோழமைகள் ஒரு நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும் என்பது தோழர் தமிழரசனை நினைவு கூறும் இக்காலத்தில் தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் தோழமைகளிடம் நான் விடுக்கும் வேண்டுகோள்.