இன்று ( ஜனவரி 22)  சென்னை உமாபதி கலையரங்கத்தில் ‘அறிவாயுதம்’ குழுவினரின் ஏற்பாட்டில் ‘ தமிழினப் படுகொலையும் ஐநாவின் அணுகுமுறையும் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பேசும்  போதே போருக்கு பின்னரான பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் இனஅழிப்பு குறித்த பின் கற்கை ஆய்வாளரும் அரசியற் செயற்பாட்டாளருமான பரணி கிருஸ்ணரஜனி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

(தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த உரை முழுமையாக ஒலிபரப்பபடவில்லை. அந்த உரையின் முழுமையான எழுத்து வடிவம் இது.)

 

கடந்த ஏழு வருடங்களாக தமிழின அழிப்பின் முதன்மை குற்றவாளிகளாக ஐநாவை குறிப்பிட்டு பேசியும் எழுதியும் அதை ஒரு செயற்பொறிமுறையாக மாற்றவும் முயன்றும் வரும் ஒரு தரப்பின் பிரதிநிதியாக எனது கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம் என்று எண்ணுகிறேன்.

 

ஈழத்தில் நடத்தப்பட்டது உண்மையில் மனித குலத்திற்கு எதிரான, அமைதிக்கெதிரான குற்றம். இதுவே இன அழிப்பாக மாறியது. இது ஐநாவின் பூரண அறிவுடன் நடத்தப்பட்டது.

 

எனவே ஐநா வை குற்றவாளியாக நாம் அடையாளப்படுத்துவது மட்டுமல்ல ஐநாவிற்கு சமாந்தரமாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டியதன் தேவையையும் வலியுறுத்த வேண்டிய கடப்பாட்டில் நாம் உள்ளோம்.

 

ஏனென்றால் பொறுப்பற்ற விதத்தில் மனித விழுமியங்களுக்கு முரணாக மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்கிய ஒரு அமைப்பின் கட்டமைப்பு ரீதியான தோல்விக்குள் சிக்கி அழிவுற்ற ஒரு இனமாக மேற்படி பொறிமுறையை உருவாக்குவதுதான் சரியானதும் நீதியை நோக்கி நகர்வதுமாகும்.

 

ஐநா தமிழின அழிப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருக்கிறது என்று தெரிந்திருந்தும் தமிழ் அமைப்புக்களோ, தமிழ் அரசியல் தலைவர்களோ அதை கண்டிக்கவோ அதை அனைத்துலக மட்டத்தில் ஒரு விவாதமாகவோ கூட மாற்ற முன்வரவில்லை. இதன் விளைவுதான் ஏழு வருடங்களைக் கடந்தும் எமக்கான நீதி மறுக்கப்பட்டு வருகின்றதென்பதை இங்கு அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

 

ஐநா விற்கு எதிரான சட்டரீதியான பேராட்டங்களை முன்னெடுக்கும் அதே நேரத்தில் ஐநாவிற்கு எதிராக ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் போராட்டங்களையும் விரிவு படுத்தியிருக்க வேண்டும். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.

 

பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல், கரன் பாக்கர், ரம்சிகிளார்க் என்று பல உலகறிந்த சட்ட அறிஞர்கள் தமிழ் அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பிலேயே இருக்கிறார்கள். எனவே அமைப்புக்கள் இந்த பலத்தையும் அறிவையும் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் குழு கும்பல் மோதல்களுக்குள் நமது அமைப்புக்கள் சுருங்கிப்போன அவலம்தான் நடந்து முடிந்திருக்கிறது.

 

நடந்து முடிந்த விடயங்களை பேசுவதோ – பரஸ்பரம் குற்றங்களை வீசுவதோ ஆரோக்கியமான போக்கு இல்லை. ஆனாலும் நாம் ஏன் தேங்கிப் போய் இருக்கிறோம் என்பதை கண்டறியவும் – அதிலிருந்து மீளும் ஒரு பொறிமுறையை உருவாக்கவும் சிலவற்றை இங்கு பேச வேண்டியுள்ளது.

 

அறிவாயுதம் குழுவினர் ஒரு பொருத்தமான தலைப்பை தெரிவு செய்திருக்கிறார்கள்.

 

‘தமிழினப் படுகொலையும் ஐநாவின் அணுகுமுறையும்’ ..இங்கு இரண்டு விடயங்களை நாம் முதன்மையாக பார்க்க வேண்டும்.

 

01. ஐநா எங்களை எப்படி அணுகியது? 02. ஐநா வை நாம் எப்படி அணுகினோம்?

 

இதை 2009 இற்கு முன்பும் பின்பும் என்று நாம் வேறு பிரித்து பார்க்க வேண்டும்.

 

உலக வல்லரசுகளின் கைப்பாவை அமைப்பான ஐநா ஒரு போராடும் இனத்தை எப்படி கையாளும் என்பதில் போதிய அறிவிருந்தும் நாம் அந்த கோணத்தில் ஐநாவை அணுகவில்லை. அதீத நம்ரிக்கைகளை வளர்த்து விட்டோம் அல்லது அதை விட வேறு தெரிவில்லாத நிலை என்று கூட இதை வரையறுத்துக் கொள்ளலாம்.

 

பிரச்சினை இங்கு அதுவல்ல. 2009 இற்கு பிறகு நீதி வேண்டி நிற்கும் ஒரு தரப்பாக நாம் எப்படி ஐநா வை அணுகினோம் என்பதுதான் இங்கு பிரச்சினையே!

 
ஐநாவை ஒரு குற்ற தரப்பாக நாம் அணுகத் தவறிவிட்டோம். ஐநாவை குற்றவாளியாக்குவதனூடாகத்தான் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும் என்ற கள யதார்த்தத்தை – நிலவரத்தை நாம் மறந்து விட்டோம்  அல்லது அதன் சாத்தியம் குறித்த அச்சத்தால் அதை விரும்பியெ மறக்க முயன்றோம் என்று கூட இந்த நிலையை வர்ணிக்கலாம்.

 

ஐநா உண்மையிலேயே குற்றவாளிதானா?

 

இந்தக் குற்றச்சாட்டை முதன் முறையாக நாங்கள் முன்வைக்கவில்லை. இக் குற்றச்சாட்டு 2009 இனஅழிப்பு நேரத்தில் உலெகெங்கிலுமுள்ள பல மனிதநேய ஆர்வலர்கள், மனித உரிமையாளர்கள் உட்பட பல மேற்குலக ஊடகங்களினாலும் பரவலாக முன்வைக்கபட்டது.

 

அவர்கள் தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் சபையின் மீதும் அதன் செயலாளர் நாயகத்தின் மீதும் தமது கண்டனத்தை இன்றுவரை பதிவு செய்து வருகிறார்கள். குறிப்பாக “இன்னர்சிற்றிபிரஸ்’  இதை ஒரு இயக்கமாகவே முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப்படுகொலைகள் தீpடீரென்று நடந்த நிகழ்வுகள் அல்ல. சர்வதேச ஊடகங்கள், மனித உரிமை அமைப்புக்கள்இ தொண்டு நிறுவனங்கள் என்பவற்றை முற்றாக வெளியேற்றிவிட்டு வெளி உலகத்துடனான தொடர்புகளை முற்றாகத் துண்டித்துவிட்டு பொருளாதார மருத்துவ தடைகளை போட்டுவிட்டு குறிப்பான ஆறு மாத காலப்பகுதிக்குள் கிட்டத்தட்ட ஓன்றரை இலட்சம் உயிர்களை காவு கொண்டு ஒரு இனப்படுகொலையை நடத்தி முடித்திருக்கிறது சிறீலங்கா பேரினவாத அரசு.

 

இங்கு குறிப்பான விடயம் என்னவெனில் சிறீலங்கா அரசின் படிப்படியான மேற்படி நடவடிக்கைகளை அவதானித்து ஒரு இனப்படுகொலை நிகழப்போகிறது என்பது பல தரப்பாலும் உணரப்பட்டு உடனடியாக போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று அதற்கு சிறீலங்கா அரசை இணங்கச்செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் ஐக்கிய நாடுகள் சபையிடம் பல தரப்பாலும் முன்வைக்கப்பட்டது.

 

நாம் வீதியில் மாதக்கணக்காகக் கிடந்ததே அதற்கு சாட்சி. ஆனால் காத்திரமான எந்த நடவடிக்கையையும் ஐநா மேற்கொள்வில்லை என்பது மட்டுமல்ல இன்றுவரை இவ் இனப்படுகொலை தொடர்பாக ஒரு மைளனத்தையே கடைப்பிடித்துவருகிறது. இது ஐநாவின் சாசனத்திற்கும் தோற்றத்திற்குமே ஒருமுரணான விடயம்.

 

உலகப் போர்களின் விளைவாக நிகழ்ந்த அனர்த்தங்களினாலும் மனிதப் பேரழிவுகளினாலும் அதிர்ச்சியுற்ற அரசுகள் – அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து இனி இப்படியான மனிதப்பேரழிவுகள் நடைபெறக்கூடாது என்ற கொள்கையுடன் முன்னெச்சரிக்கையாக தோற்றுவித்த ஒரு உலக பொது அமைப்பு இந்த நவீன யுகத்தில் ஒரு இனம் தனது சொந்த நிலத்தில் வைத்து அழித்தொழிக்கப்பட்டதை அனுமதித்ததும் அதனைத் தடுக்காததும் அந்த அமைப்பின் தோற்றத்தையும் இருப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

 

ஐ.நா சாசனத்தின்படி நாடுகள் என்ற உள் வெளி எல்லைகளுக்கு அப்பால் ஒரு இனத்தின் மொழி, அடையாளம், பண்பாடு, இறைமை என்பவை பாதுகாக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் இனம், மொழி, பண்பாடு, நிலம் என்ற அடையாளங்களின் மீதான அழித்தொழிப்பே மனித உயிர்களாகக் காவு கொள்ளப்பட்டது. இது இந்தப் பூமிபந்தில் வாழும் ஒரு இனம் தொடர்பான ஐநாவின் சாசனத்திற்கு முரணானது.

 

இந்த அடிப்படையிலேயே “இன்னர்சிற்றிபிரஸ்” உட்பட பல ஊடகங்கள், மனிதநேய ஆர்வலர்கள், மனித உரிமையாளர்கள் பான்கிமூன் மீது குற்றத்தை சுமத்துகிறார்கள்.

 

சர்வதேச கூட்டு அரச பயங்கரவாதத்தால்- சிறீலங்கா மட்டுமல்ல – அழித்தொழிக்கப்பட்ட ஒரு இனத்தின் இரத்த சாட்சியங்கள் நாங்கள். ஐநாவின் சாசனத்திற்கெதிராக நாம் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறோம். இதை நாம் உலகத்திற்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

 

தாயகம்இ தேசியம்இ சுயநிர்ணயம் என்ற எமது அரசியல் அவாவை வெல்வதன் பின்னணியில் அதன் அடிப்படையாக இனம், மொழி, பண்பாடு, நிலம் என்ற அடையாளங்கள் இருக்கின்றன. மீண்டும் மீண்டும் பேசப்படுகிற ஒரு விடயமாக இது இருக்கிறது. இந்த அடையாள அழிப்பே முள்ளிவாய்க்காலின் பின்னணயில் இருந்தது. எனவே எமக்கு பதில் சொல்லவேண்டியவர் பான்கிமூன்தான். அவர் தற்போது தனது பதவி காலத்தை முடித்துவிட்டார். ஆனாலும்; அவர் குற்றவாளி என்பதில் எனக்கு தெளிவு வேண்டும்.

 

நாம் பான்கிமூனை குற்றவாளியாக்கி போராடுவதனூடாக எமது போராட்டம் பன்மைப்படுத்தபடும். உலக கவனம் அதில் குவியும். விளைவாக இனப்படுகொலை குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்படும். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நேரிடையான சூத்திரதாரிகளான சிங்கள இராணுவஇ அரச தலைவர்கள் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்படும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆனால் நாம் அந்த வாய்ப்புக்களை தவற விட்டு விட்:டோம்.

 

பெரும் போர் நடந்து முடிந்த தேசங்களில் ஐநாவின் அமைதிப்படை சென்று பணியாற்றுவதும் ஏதிலிகள் முகாம்களை ஐநா பொறுப்பெடுப்பதும் வழமை. ஆனால் சிறீலங்காவில் என்ன நடக்கிறது?

 

நாம் வீதியில் இறங்கி இதற்கான நியாயத்தைக் கேட்பதுடன் சிறீலங்காவில் ஐநா அமைதிப்படையின் பிரசன்னம் முக்கியமானது என்பதையும் அறிவிக்க வேண்டும். ஏதிலிகள் முகாம்களையும் சரணடைந்த போராளிகளையும் ஐநா பொறுப்பெடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளினூடான எமது ஐநாவிற்கெதிரான போராட்டம் அந்த மக்களிற்கும் போராளிகளிற்குமான கவசம் என்பதுடன் எமது போராட்ட நியாயத்தை மீண்டும் உலகறியச்செய்வதுடன் எமது போராட்டத்தின் அடுத்த பாய்ச்சலாகவும் மாறும்.

 

எமது போராட்டங்கள் ஒரு கோர்வையுடன் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.

 

நாம் ஐநாவிற்கு எதிராக ஒரு வழக்கை பதிவு செய்யுமாறு தொடர்ந்து கேட்டு வந்தோம். ஐநா மீது வழக்கு தொடர முடியாது என்பதும் அதற்கு சட்ட விலக்கு இருக்கிறது என்பதும் எமக்கு தெரியாததல்ல. ஆனாலும்; இந்த முயற்சி எமக்கு சில இராஜதந்திர வெற்றிகளை பெற்று தரும் என்ற கோணத்தில் சிந்திக்க நாம் வலியுறுத்தினோம்.

 

அதாவது ஒரு இனம் ஏன் ஐநா வை குற்றவாளி என்கிறது? அதன் மீது வழக்கு தொடுக்க முனைகிறது?  என்ற கோணத்தில் ஒர விவாதத்தை உலக அளவில் எழுப்பி தமிழின அழிப்பிற்கான நீதியை நோக்கி நகரும் ஒரு முயற்சியே தவிர இந்த வழக்கு ஏற்றுக்கொள்ள பட மாட்டாது என்பது மட்டமல்ல அது நின்று பிடிக்காது என்பதும் எமக்கு தெரியும்.

 

நாம் ஐநா எமக்கு அநீதி இழைத்து விட்டது என்பதை கண்டடைந்த உடனேயே 2009 யூன் மாதமளவிலேயே ஐநா மீது – குறிப்பாக பான்கிமூன் மீது ஒரு வழக்கை பதிவு செய்ய முனைந்திருக்க  வேண்டும். குழு கும்பல் மோதல்களும், தோல்வி தந்த உளவியல் பாதிப்புக்களும், அரசியல் இராஜதந்திர விவேகமற்ற செயற்பாடுகளும் இதைத் தடுத்து மடைமாற்றி விட்டன.

 

அப்போதே ஒரு வழக்கை பதிவு செய்திருந்தால் எமது நீதிக்கான படிமுறைகள் வேறு ஒரு பரிமாணத்தை எட்டியிருக்கும். இப்படி தேங்கிப்போயிருக்க மாட்டோம்.

 

இலங்கையில் ஐநாவின் செயற்பாடுகள் கட்டமைப்பு ரீதியாகத் தோல்வியுற்றன என்ற வெளிப்படையான அறிவிப்புடன் இறுதி அறிக்கையும் ஐநாவிற்கான பரிந்துரைகளும் எப்போதோ வெளிவந்து விட்டன. அதற்கு முன்பாக  ஐநா செயலர் பான்கிமூன் ஐநா வின் பிரதி பொது செயலாளர் ஜேன் எலிசன் கூட வெவ்வேறு தருணங்களில் இந்த தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருந்தார்கள்.

 

இந்த ஒப்புதல் வாக்கு மூலத்தை வைத்து நாம் என்னதான் செய்வது?

 

வரலாற்றில் முதல் தடவையாக கெயிட்டி மக்கள் ஐநா மீது 2 வருடங்களுக்கு முன்பு நியூயோர்க் நீதிமன்றில் ஒரு வழக்கை பதிவு செய்திருக்கிறார்கள். இவ்வாறான நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளிலிருந்து சட்டப்படியான விலக்கு பெறும் தகுதி அதாவது (டநபயட வநசஅள ஐஅஅரnவைல) இருப்பதாக ஐநா கூறுகிறது.

 

இந்த வழக்கின் தீர்ப்பு பாதகமாக அமைந்தாலும் அது சர்வதேச சட்டத்தின் மிக முக்கியமான மைல் கல்லாகவே இன்றளவும் பார்க்கப்படுகிறது உண்மையில் தமிழர்கள் செய்திருக்க வேண்டிய சாதனையை கெயிட்டி மக்கள் தட்டி சென்று விட்டார்கள்.

 

எமது வழக்கும் இத்தகையதுதான். வழக்கு முடிவு முக்கியமல்ல. எமது இன அழிப்பில் ஐநா உடந்தையாக இருந்தது என்ற அனைத்துலக மட்டத்திலான எமது குற்றச்சாட்டுத்தான் முக்கியமானது. வழக்கில் தோல்வியுற்றாலும் இந்த வரலாற்று குற்றச்சாட்டு ஐநாவையும் மேற்குலகையும் எமக்கான நீதியை வழங்க உந்தும். தொடர்ந்து எம்மை இம்சிக்கும் அல்லது நீதியை மடைமாற்றும் வேலைகளை நாம் தடுக்க உதவும்.

 

ஏனெனில் ஒன்றல்ல இரண்டல்ல ஐநாவிற்கு எதிரான ஆயிரக்கணக்கான ஆதாரங்கள் எம்மிடையே குவிந்துள்ளன.

 

வரலாற்றில் முதல் தடவையாக ஒரு இன அழிப்புக்கு உடந்தையாக ஐநா இருந்தது என்பதை நிறுவி ஐநா செயலாளர் நாயகத்தை பதவிநீக்கம் செய்து தமது நீதியை பெற்றார்கள் என்ற வரலாற்றை எம்மால் படைத்திருக்க முடியும். ஆனால் இன்று ஏதோவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. வெறும் பார்வையாளர்கள் போல் நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.

 

2009 இல்தான் ஏமாற்றப்பட்டோம். ஆனால் தொடர்ந்தும் நமது அணுகுமுறைத் தவறினால் உள்ளக அளவில் ஐநாவிற்குள்: பல சதிகள் அரங்கேற நாமே வழி கோலிவிட்டோம்.

 

அதாவது இலங்கையில் தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டது இன அழிப்பும் அமைதிக்கெதிரான குற்றமுமாகும். 2002இன் சமாதான நடவடிக்கைகள் ஊடாக வேறுபட்ட காரணங்களுக்காகப் பேச்சுவார்த்தை அடிப்படையிலான தீர்வை அடைய முயன்று கொண்டிருந்த இலங்கைத் தீவின் மக்கள் அனைவருக்கும் எதிராக நிகழ்த்தப்பட்ட அமைதிக்கெதிரான குற்றமாகவும் அது இருக்கிறது.

 

இலங்கையின் வன் கொடுமைகளை வரலாற்று நோக்கில் உண்மையாகப் பிரதிபலிக்கும் வகையில் சர்வதேச மனிதநேயச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்றே பல வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

 

ஐநா வின் பிரதிபொது செயலாளர் ஜேன் எலிசன் இலங்கை இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற அனைத்து உள்ளக அமைப்புகளும் தோல்வி கண்டுள்ளதாக கூறியுள்ளர். இதுவே போதும் நாம் ஐநாவை குற்றவாளி என்று அறிவிக்க..

 

ஆனால் பிற்பாடு இதையும் தாண்டி பான்கிமூன் சில உள்ளக சதிகளில் ஈடுபட்டது ஆதாரங்களுடன் பல தரப்பாலும் முன்வைக்கப்பட்டுள்ளன. நம்பியார் தொடக்கம் சார்ள்ஸ் பெற்றி வரை பான்கிமூன் ஐநா விதிகளை மீறியிருக்கிறார். இதை நாம் சொல்லவில்லை இன்னர்சிற்றி பிரெஸ் விரிவாகவே பதிவு செய்திருக்கிறது.

 

முதலில் நம்பியார். வெள்ளைக்கொடி விவகாரம் தொடக்கம் பல சதிகள் செய்தவர் இவர்தான்.
அடுத்து தமிழின அழிப்பை நடத்தி முடிக்க ஏதுவாக பான் கீ மூன் இந்திய கைக்கூலி நம்பியாரை களம் இறக்கியது போல் நடந்து முடிந்த இன அழிப்பை மறைக்க நோர்வே கைக்கூலி சார்ள்ஸ் பெற்றியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போரில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய எகிப்தைச் சேர்ந்த தொராயா ஒபெய்ட் என்ற அதிகாரி நியமனத்திற்கு பதிலாக நியமித்தவர் பான் கீ மூன்.

 

இவர் 4 மாதத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கையை 9 மாதங்கள் கடந்தும் சமர்ப்பிக்காமல் மௌனம் சாதித்து வருவதாக இன்னர்சிற்றி பிரஸ் குற்றம் சுமத்திய பிற்பாடுதான் பல இழுத்தடிப்புக்களின் பின் அது வெளிவந்தது. இந்த சார்ள்ஸ் பெற்றிதான் விதிகளுக்கு முரணாக ஐநா நிபுணர் குழு அறிக்கையை பார்வையிட்டவர்.

 

அடுத்து இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது நாற்பதாயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டனர் எனவும் அதற்கான காணொளி ஆதாரங்கள் உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி கிறிஸ்டொப் ஹென்ஸ் ஒரு பக்கம் தெரிவித்த பின்பும் எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைக்கும் பான் கீ மூன் உத்தரவிடவில்லை.

 

மாறாக இன அழிப்பு அரசின் இராணுவ அதிகாரிகள் ஐநா பதவிகளையும் தூதரக பதவிகளையும் அலங்கரித்தார்கள். வெள்ளைக்கொடி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பாலித கோகன்ன தொடக்கம் இசைப்பிரியாவை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலைசெய்த சவேந்திர சில்வா வரை இந்த பட்டியல் நீளமானது.

 

அடுத்து வன்னிப் போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை ஐநா நிபுணர் குழு அறிக்கையின்படி 40000. அந்த அறிக்கையை தயார் செய்த மூவர் குழுவில் ஒருவரான ஜஸ்மின் சூக்கா அண்மையில் ஊடகவியலாளர் பிரான்சேஸ் கரிசனிடம் தனிப்பட்ட முறையில் சொல்லிய எண்ணிக்கை 75000.

 

ஆனால் அவர் ஏன் அதை நிபுணர் குழு அறிக்கையில் பதிவு செய்யவில்லை என்பதற்கு இன்று வரை பதிலில்லை. பாருங்கள் 35000 பேரை ஐநா தெரிந்தே விழுங்கிவிட்டது. ஆனால் வண பிதா ராஜப்பு ஜேசப்பு அடிகளார் போன்றவர்கள் சொல்லும் உண்மையான எண்ணிக்கை 146679.

 

இப்படி எண்ணற்ற திருகுதாளங்கள் தமிழினத்திற்கு எதிராக ஐநாவிற்குள்ளேயே நடந்தது – இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.

 

இதன் பின்பும் ஐநா வின் நிகழ்ச்சி நிரலின் பின் எப்படி நாம் இழுபட முடியும்?  ஐநா வை இக்கட்டில்தள்ளி அதை நாம் வளைப்பதனூடாகவே நாம் ஒரு நீதிக்கான பாதையை தெரிவு செய்யலாமே ஒழிய எந்த நிபந்தனையுமின்றி ஐநாவின் பின் இழுபடுவதனூடாக எதையும் சாதிக்க முடியாது.

 

இவ்வளவு விமர்சனம் இருந்த போதிலும் ஐநாவுடன் உடன்படும் புள்ளிகளையும் நாம் சரியாக பயன்படுத்தவில்லை என்பதையும் இந்த இடத்தில் குறிபப்pட்டேயாக வேண்டும்.

 

தமிழின அழிப்பில் ஐ.நா ஒரு பங்காளி என்ற பொழுதும் தமிழ்த்தேச விடுதலைக்கான அங்கீகாரத்தில் ஐ.நா வின் இடம் மறுக்க முடியாத ஒரு பாத்திரமாகிறது. புலிகளின் மே 18 செய்தி என்பதே ஐ.நா வை சுற்றி வைக்கப்பட்ட – வரையப்பட்ட பொறி(முறை)கள்தான். எனவே நாம் வளைத்தும்இ சுற்றியும் ஊடறுத்தும் ஓட வேண்டிய பாதை ஐ.நாவை மையமாகக் கொண்டது தான் என்பது வெளிப்படை.

 

ஐ.நா வுடன் உடன்பட்டும்இ உடன்படாமலும் அதாவது ஐ.நா வின் இனஅழிப்பு பங்களிப்பை அம்பலப்படுத்துவது தொடக்கம்இ இனஅழிப்பில் ஐ.நா வை குற்றவாளியாக்குவது வரை எதிர்த்தும் ஐ.நா வின் தலையீட்டை மிக தந்திரமாக எதிர்கொண்டு, அதனோடு ஒத்தோடுவது வரை இதன் உள்ளடக்கத்தை பலவாறாக விபரிக்கலாம்.

 

ஆனால் மே 18 இற்கு பிறகு அரசியல் செய்ய புகுந்த யாருமே இதைக் கவனத்தில் கொள்ளவில்லை அல்லது இந்த உண்மையின் ஒரு பகுதியை மட்டும் நம்ப விரும்பினார்கள். அல்லது தாம் தெரிந்தே உருவாக்கிய – தம்மை இயக்கும் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் ஊடாக இந்த உண்மையை மழுங்கடிக்க முனைந்தார்கள்.

 

இத்தகைய புரிதல் உள்ள நாம் தான் ஐ.நா வுடன் ஒத்தோட வேண்டிய புள்ளிகளையும் அடையாளம் கண்டு அதனோடு இசைந்து பயணிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் நமது அமைப்புக்கள் அதைக்கூட பயன்படுத்திக்கொண்டார்களா என்றால் அதுதான் இல்லை.

 

இனஅழிப்புக்கு துணைநின்ற மேற்குலகம் குறிப்பாக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை தெளிவான அரசியல் புரிதல் உள்ள யாராலுமே ஏற்க முடியாது. இனஅழிப்பை படிப்படியாக போர்க்குற்றமாகச் சுருக்கி அதையும் காலப் போக்கில் மனித உரிமை மீறல் பிரச்சினையாக்கி  முன்மொழியப்படும் தீர்மானத்தை இனஅழிப்பை எதிர்கொண்ட – தொடர்ந்து எதிர்கொண்டுள்ள ஒரு இனமாக எப்படி ஏற்க முடியும்?

 

மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில்தான் ‘போர்க்கால நெறி பிறழ்வுகள்’ ((War time abuses ) என்று இனப்படுகொலையை சுருக்கியிருந்தார்கள். ஆனால் நடந்தது உண்மையில் மனித குலத்திற்கு எதிரான – அமைதிக்கெதிரான குற்றம். இதன் விளைவாக நடந்தது இன அழிப்பு. இங்கு எல்லோருமே குற்றவாளிகள்தான.

 

எனவே தான் பல தளங்களில் இந்த தீர்மானத்திற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

 

ஆனாலும் நமக்கு இதை விடுத்தால் வேறு தெரிவில்லை என்ற தெளிவான புரிதலுடன் தான் தீர்மானத்தை முடிந்தவரை வலிமையானதாக மாற்ற எம்மைப்போன்ற பலர் நமது எதிர்ப்பை பதிவு செய்தோம்.

 

ஆனால் இந்த தீர்மானத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த சில கட்சிகள், அமைப்புக்கள் இதை எதிர்ப்பதிலே குறியாக இருந்தார்களே ஒழிய இதன் அடுத்த பக்கத்தை பார்க்கவில்லை.
ஏனென்றால் ஐநா தீர்மானமோ அதன் விளைவான விசாரணைக் குழுவோ எமக்கு விடுதலையைப் பெற்றுத்தரப் போவதில்லை என்பது பகுதியளவு உண்மைதான். ஆனால் இந்த தொடர் பிரச்சாரங்களின் விளைவாக மக்கள் ஐ.நா விசாரணைக் குழுவுக்கு தமது இனஅழிப்பு சாட்சியங்களை வழங்காமல்  பின் வாங்கியது தான் பெரும் வரலாற்றுத் தவறாக மாறியிருக்கிறது.

 

இந்த சாட்சியங்களை பதிவு செய்வதென்பது ஐ.நா எமக்கு நீதியை தூக்கித் தந்து விடும் என்பதற்காக அல்ல. தமிழின அழிப்பில் ஐ.நா வும் ஒரு தரப்பு என்ற புரிதல் எமக்கு நிறையவே உண்டு என்பதை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

 

ஆனாலும் எமது வாக்கு மூலங்களை நாம் அனுப்ப வேண்டிய கடமை எமக்கிருக்கிறது. நடந்த இனஅழிப்பை அம்பலப்படுத்தவும் அதை ஒருங்கிணைத்து ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பின் கீழ் ஆவணப்படுத்தவும் என்பது தொடக்கம். எமது நீதிக்கான ஒரு சிறிய புள்ளியாவது இதன் மூலம் உருவாக்கப்படலாம் என்பது வரை ஆயிரம் காரணங்களை அடுக்கலாம்.

 

குறிப்பாக புலிகளை குற்றவாளிகளாக்கி எமக்கான நீதியை குழி தோண்டி புதைக்க இருக்கும் அனைத்துலக – பிராந்திய சதியை முறியடிக்க வேண்டியாவது நாம் இதை அனுப்பியிருக்க வேண்டும்.

 

குறிப்பாக தமிழகத்திலிருந்து ஏராளமான வாக்கு மூலங்களை பதிவு செய்வதினூடாக மேற்குலக நலன்களை மையப்படுத்திய ஐ.நா நகர்வுகளுக்கு எதிராகவும், பிராந்திய வல்லரசான இந்தியாவையும் தமிழர் தரப்பு ஒரு இக்கட்டினுள் தள்ளி தமிழர் போராட்டத்தை வேறு ஒரு பரிமாணத்திற்குள் கொண்டு வந்திருக்கலாம்.

 

இதன் வழி தமிழர் தரப்பு ஒரு பேரம் பேசும் வல்லமையாக உருவெடுக்கலாம்.  ஆனால் நடந்தது என்ன? ஐ.நா வை எதிர்க்க வேண்டிய தெளிவை பெற்ற தமிழக போராட்ட குழுக்கள் சில ஐ.நா வோடு ஒத்தோட வேண்டிய புரிதலை வளர்க்காததால் வந்த சிக்கலா? அல்லது திட்டமிட்டு நடைமுறை படுத்தப்பட்ட சதியின் ஒரு பகுதியா ? என்பதை காலம் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

 

ஏனென்றால் தமிழின அழிப்புக்கு துணை நின்ற இந்தியா தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும்போதும் அதை நீர்த்துபோக செய்து வருகிறது. எனவே நாம்  நீதியை வென்றெடுக்க இந்தியாவிற்கு கடிவாளம் இட வேண்டியது முக்கியமானது. ஆனால் இன்றளவும் அது எமக்கு சர்தியப்படவேயில்லை.

 

இறுதியாக என் துறை சார்ந்த ஒரு விடயத்தை பதிவு செய்து இந்த உரையை நிறைவு செய்யலாம் என எண்ணுகிறேன். ஐநா மனித உரிமை பேரவையின் நகர்வுகளில் நான் முக்கியமாக கருதும் ஒரு விடயம் இது.

 

ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் அறிக்கையின் பரிந்துரைகளில் எமக்கு பெரும்பாலும் உடன்பாடில்லாத பொதிலும் அது எமது நீதிக்கான பாதைகள் சிலவற்றை திறந்துவிட்டுளள்தை மறுக்க முடியாது.

 

அவரது பரிந்துரைகளை பயங்கரவாத அரசுகள் சேர்ந்து ஒரு தீர்மானமாகக் கொண்டுவந்து ‘உள்ளக விசாரணை’ யில் முடித்துள்ளபோதும் அவரது அறிக்கை எம்மளவில் முக்கியமானது என்பதை நாம் எமக்கேயான முரண்பாடுகளையும் சேர்த்து ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

 

தமிழர் தரப்பு இதைக் கையாள்வதைப் பொருத்தே அதன் பெறுமதியை உறுதிப்படுத்துவதுடன் எமது நீதிக்கான பாதையும் வகுககப்படும்.

 

குறிப்பாக பாதிக்கப்பட்ட தரப்பாக நின்றுகொண்டு இனஅழிப்பு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றம், போர்க்குற்றம் குறித்து எத்தகைய ஆதாரங்களை முன்வைத்தாலும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பு ஒன்றினூடாக அதை ஏற்றுக்கொண்டு பரிந்துரைக்கப்படுவதனூடாகவே அது உலக கவனத்தை குவிக்கும் – நம்பத்தகுந்த ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும்.

 

அந்த வகையில் இறுதிப்போரில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் நடந்ததாக ஐநா மனித உரிமை பேரவை சுட்டிக்காட்டியிருப்பது ஒரு தகுந்த ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று உலக அளவில் ஒரு உரையாடல் தொடங்கிவிட்டது.

 

தமிழர் தரப்பு அதன் மீதான கவனத்தை குவிக்காததும் அதை ஒரு திறந்த உரையாடலாக மாற்றாததும் கவலையளிக்கிறது.

 

குறிப்பாக இறுதிப்போரில் பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைகள் குறிப்பாக பாலியல் வல்லுறுவு குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதை பல மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், அனைத்துலக ஊடகங்கள் ஆய்வுக்குட்படுத்த தொடங்கிவிட்டன.

 

இது ஐநா மனித உரிமை பேரவை அறிக்கையினூடாக கிடைத்த பெரு வெற்றியென்றே கருத வேண்டும்.
இந்த பாலியல் வல்லுறுவுக்குற்றங்கள் இனஅழிப்பு நோக்கில் நடத்தப்பட்டவை என்பதை நாம் நிருப்பிப்போமாயின் சிங்கள அரசு இனஅழிப்பு குற்றவாளியாக அம்பலப்படும்.

 

அதை நாம் மேற்படி அறிவுசார் சமூகத்துடன் இணைந்து நிறுவ உழைக்க வேண்டும்.

 

அண்மையில்  ” Washington Post” இல் பேராசிரியர்கள் Nimmi Gowrinathan  மற்றும் Kate Cronin-Furman  சேர்ந்து மிக முக்கியமான கட்டுரை ஒன்றை இந்த பாலியல் வல்லுறவுக் குற்றங்களை முன்வைத்து எழுதியிருக்கிறார்கள்.

 

இவர்கள் இதற்கு முன்பாக” The Forever Victims?  Tamil Women in Post-War Sri Lanka ” என்ற ஒரு ஆய்வையையம் செய்து வெளியிட்டுள்ளார்கள்.  இதுவும் மிக முக்கியமானது.

 

ஐநா நிபுணர்குழுவில் பங்களிப்பு செய்த யஸ்மின் சுக்கா தொடக்கம் பல பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வரை பலர் தற்போது அனைத்துலகப் பரப்பில் இந்த பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் தொடர்பாக எழுத பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
அமெரிக்கா எப்படி திட்டமிட்டு தமிழின அழிப்பை மறைக்க முற்படுகிறதோ அதற்கு எதிர்விளைவாக இன்று அமெரிக்க அறிவுப் பின்புலத்திலும் -அமெரிக்க ஊடகங்களிலும் தமிழின அழிப்பு ஒரு பேசுபொருளாக மாற ஐநா மனித உரிமை பேரவை அறிக்கை வழி சமைத்திருக்கிறது.

 

அத்தோடு ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியாக சமந்தா பவர் இருக்கிறார்.  அது சரி யார் இந்த சமந்தா பவர் ? இதில் என்ன இருக்கிறது? என்று நீங்கள் யோசிக்கலாம்.

 

நமது விருப்பு வெறுப்புக்களுக்கும் அப்பால் இந்த உலக ஒழுங்கை தீர்மானிப்பது அமெரிக்காவின் நகர்வுகள்தான். எம்மை அழிக்க வேண்டும் என்று ஒரு நீண்டநோக்கில் ஒரு நிகழ்ச்சி நிரலை கொண்டு நடத்தியதும் இதே அமெரிக்காதான். இப்போது நடந்த இன அழிப்புக்கு நீதி கேட்டு நாம் போராடுவதும் அனைத்துலக சமூகம் என்று சொல்லப்படுகிற – ஐநா சபையின் அதிகாரங்களை நிழல் நடவடிக்கைகளினூடாக கட்டுப்படுத்தும்- இதே அமெரிக்காவிடம்தான்.

 

எனவே ஐநாவுக்கான அமெரிக்க நிரந்தர வதிவிடப் பிரதிநிதி என்ற பதவியை யார் வகிக்கிறார்கள் என்பது நடந்த இன அழிப்புக்கு நீதி கேட்கும் எம்மை பொருத்தவரையில் மிக முக்கியமானது. ஒரு அரசின் முடிவென்பது ஒரு கூட்டு முடிவு. பெரும்பாலும் தனித்து யாரும் முடிவெடுப்பதில்லை. அமெரிக்க அரசு மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக அந்த அரசிற்குள்ளேயிருந்து விமாச்சித்து வந்த ஒருவர் சமந்தா பவர். அமெரிக்கா தனது நரித்தனங்களை விட்டு பின்வாங்கிய அல்லது தலையிடாமல் ஒதுங்கிய பல நிகழ்வுகளின் பின்னணியில் சமந்தா பவர் இருந்தார் என்பதுதான் இங்கு முக்கியமானது.

 

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறிப்பாக இனப்படுகொலை குறித்து கடும் விமர்சனம் செய்பவர் மட்டுமல்ல அமெரிக்காவையே இந்த விடயத்தில் திட்டி அவர் எழுதிய நூல் இன்றளவும் பரபரப்பாகவே உள்ளது. குறிப்பாக மே 18 இற்கு பிறகு அமெரிக்கா எமக்கு சார்பாக ஏதாவது ஒரு கருத்தை சொல்லியிருந்தால் அதன் பின்னணியில் சமந்தாபவர் இருந்தார் என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டியது.

 

இனப்படுகொலை குறித்த புரிதலுள்ள ஒருவர் ஐநா தூதராகியிருப்பதை ஒரு நம்பிக்கை புள்ளியாக எடுத்து கொள்ளவேண்டும் . ஆனால் ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் எமக்கு உவப்பானதாக இருக்கவில்லை.

 

ஏனென்றால் போரில் பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைகள் மற்றும் பாலியல் வல்லுறவு குற்றங்களை இனஅழிப்பு நோக்கங்களுககாக செய்யப்படுகின்றன என்று வாதிடுபவர் சமந்தா பவர். A problem from hell : America and the age of genocide  என்ற தனது நூலில் மட்டுமல்ல பல கருத்தரங்குகளில் ஆய்வுகளில் பேசியவர் – எழுதியவர் சமந்த பவர்.

 

இதெல்லாம் இவர் ஐநா வதிவிடப்பிரதிநியாக பதவியேற்பதறகு முந்தைய கதைகள். தற்போது அமெரிககாவின் உலகளாவிய நிகழ்ச்சி நிரலை காவும்இ அதை நிறுவ உழைக்கும் ஒரு பதவியில் அமர்ந்திருக்கிறார்.

 

இனியும் அவரது சுய அடையாளம் பேணப்படுமா? தனது கல்வி மற்றும் வாழ்வியல் பின்புலத்தில் நின்று அறம் சார்ந்து சிந்திப்பாரா? என்ற ஐயம் எமக்கு எழுந்தாலும் சமந்தா பவர் போன்ற இனஅழிப்பு தொடர்பான புரிதல் உள்ள ஒருவரை நாம் அவரது புவிசார் அரசியல் நலன் தாண்டியும் சிந்திக்க தூண்ட வேண்டும். அவரது அறத்தை கேள்விக்குட்படுத்த வேண்டும். அதனுடாக எமது தேவைகளை நிறைவேற்ற முற்பட வேண்டும்.

 

இதில் தங்கியுள்ளது தமிழ் சாணக்கியம்.

 

இதெல்லாம் நாம்  ஐநா வை அதை தாங்கும்  – மேற்குலக பிராந்திய அரசுகளை எப்படி அணுக வேண்டும் என்ற மைய கருத்துக்களே ஒழிய.. தீர்வல்ல – முடிவுமல்ல.

 

இவயெல்லாவற்றையும் விட ஐநாவிற்கு எதிராக மக்கள் போராட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும். உண்மையில் ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் போராட்டம்தான் எமது  போராட்டத்தில் பெரும் விளைவை ஏற்படுத்தும்.

 

எமக்கு தாயகம் மட்டுமல்ல புலம் முழுக்க பரந்துள்ள தமிழர்களும் குறிப்பாக தமிழகமும் மிகப்பெரிய பலம். ஐநாவை குறிவைத்து இந்த 3 தளங்களிலும் போராட்டத்தை விரிவுபடுத்தினால் ஐநா வை நாம் வளைக்க முடியும்..

 

இதன்: வழி நீதிக்கான பாதையை கண்டடைய முடியும்.

 

பரணி கிருஸ்ணரஜனி