ஒரு தலைவியின் கவிதைகள்! தமிழினியின் கவிதை புத்தகத்திற்கு தீபச்செல்வன் எழுதிய முன்னுரை

0
880

tamiliniஒரு கரும்புலிகள் நாள். கிளிநொச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் புலிக்கொடியை ஏற்றி பேசத் தொடங்கினார் தமிழினி அக்கா. வலிமையான குரல். செறிந்த கருத்துக்கள். விடுதலை நோக்கிய கம்பீரமான முகம். ஈழப் போராட்டத்தில் மிக முக்கியமானதொரு போராளித் தலைவி தமிழினி அக்கா. அந்த நிகழ்வின் பின்னர் தமிழினி அக்காவின் உரையை பல்வேறு மேடைகளில் நிகழ்வுகளில் கேட்டிருக்கிறேன். பத்திரிகைகளில் அவரது ஆபச்சை ஆர்வத்தோடு வாசிப்பேன்.

 

2007இல் என்னுடைய கவிதைகளைப் பற்றி தமிழினி அக்கா வெற்றிச்செல்வி அக்காவுடன் பகிர்ந்த அபிப்பிராயங்களை வெற்றிச்செல்வி அக்கா சொன்னார். அப்போதும் தமிழினி அக்கா பல்வேறு புனைபெயர்களில் கவிதைகளையும் சிறுகதைகளையும் எழுதிக்கொண்டிருந்தார். போர், தாயகத்தில் நடந்த நிகழ்வுகளில் பற்கேற்பது என்று பல்வேறு வேலைச் சுமைகளின் மத்தியிலும் அவர் எழுதினார், வாசித்தார். இலக்கியம் குறித்து உரையாடினார்.

 

எங்களுடைய போராட்டம் மிகவும் முக்கியமான பல ஆளுமைகளை உருவாக்கியது. பல்வேறு சாதனைகளை அடையாளங்களை கொண்டு உலகில் பேசப்பட்ட போராட்டங்களில் ஒன்றானது. அந்த வகையில் ஒரு பெண் போராளியாக போராளித் தலைவியாக தமிழினி அக்காவுக்கு ஈழப் போராட்டத்தில் மிகவும் முக்கியமான இடம் உண்டு.

 

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண்களுக்கு சம இடம் இருந்தது. பெண் போராளிகள் போர்க்களங்களில் சிறந்த போர் வீராங்கனைகளாக சிறந்த போர்த்தளபதிகளாக இருந்தனர். தமிழினி அக்கா போர் மண்ணில் சிறந்த தலைமைத்துவத்தோடும் ஆளுமையோடும் உருப்பெற்றார். போராட்டக் களத்தில் பெண்களின் பிரச்சினை, சமூகப் பிரச்சினை போன்ற விடயங்களில் தனது ஆளுமை மிக்க பார்வையை, கவனத்தை செலுத்தினார்.

 

தமிழினி அக்காவின் அடையாளம் தமிழ் சூழலில் புதிய அடையாளம். அதனால் அவர் தமிழ் சமூகத்தில் மிகவும் நேசிப்பிற்கும் கவனத்திற்கும் உரியவராக மாறினார். குழந்தைகள், சிறுவர்களுக்கு பிடித்த ஒரு போராளியானார். தலைவியானார். அவ்வாறுதான் தமிழினி அக்கா எனக்கும் பிடித்த ஒரு போராளியாக, போராளித் தலைவியாக இருந்தார்.

 

தமிழினி அக்கா வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டதாகவும் அந்த நிகழ்வில் பிடித்த சில புகைப்படங்களையும் பத்திரிகையாளர் சஞ்சித் எனக்கு அனுப்பியிருந்தார். அந்தப் புகைப்படங்களைப் பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். சரணடைந்தபோது இருந்த தமிழினி அக்கா போராட்டத்தில் இணைந்த காலத்தில் இருந்தைப்போல இருந்தார் அந்தப் புகைப்படங்களில். தமிழினி அன்று தமிழினி இன்று என்று ஊடகங்கள் அவரது புகைப்படத்தை பிரசுரித்தன.

 

அவரது அடையாளத்தை காணவில்லை. முகத்தில் இருந்த கம்பீரத்தை காணவில்லை. இருள் சூழ்ந்து சோகம் நரம்பி மெலிந்து போயிருந்தார். ஒரு ஆளுமை மிக்க போராளியை தடுப்புச் சிறை இப்படித்ததான் சிதைத்துவிடுமா? எல்லாவற்றையும் இழந்து வெறும் நிராயுத பாணியாக நிற்பதைப்போல் இருந்தார். எங்கள் இனம் 2009 யுத்தத்தில் எல்லாவற்றையும் இழந்ததைப்போல தமிழினி அக்கா யாவற்றையும் இழந்துபோயிருந்தார்.

 

2013ஆம் ஆண்டில் தமிழினி அக்கா விடுவிக்கப்பட்டபோது கொழும்பில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அவரிடம் நேர்காணல் ஒன்றை எடுக்க தொலைக்காட்சி நிர்வாகம் விரும்பியது. தமிழினி அக்காவின் தொலைபேசி எண்ணை ஒருவாறு பெற்றுக்கொண்டு அவருக்கு அழைத்தபோது தமிழினி அக்கா இருக்கிறாரா என்று கேட்டேன். “அப்படி யாரும் இல்லை“ என்று எதிரிலிருந்து பதில் வந்தது. சிவகாமி அக்கா இருக்கிறாவா என்றேன் மீண்டும். “அப்படியும் யாருமில்லை“ என பதில் வந்தது.

 

மீண்டும் அவரது எண்ணை சரிபார்த்தேன். அவரது எண்தான். தடுப்பிலிருந்து விடுதலை செய்யப்பட்டபோது இந்த சமூகத்தில் யாருடனும் பேச விரும்பாமல் அவரிருக்கும் சூழ்நிலையை புரிவது அவ்வளது கடினமானதல்ல. அப்போது அவர் அரசியலில் ஈடுபடுவார் என்று கருத்துக்கள் வெளியிடப்பட்டதோடு அரச தரப்பு அவரை அரசியலில் ஈடுபட வற்புறுத்தியது. அரசியலில் ஈடுபடமாட்டேன் என் குடும்பத்துடன் வாழ்கையை கழிக்க விரும்புகிறேன் என்று தமிழினி அக்கா கூறியிருந்தார்.

 

 

ஒருநாள் முகப்புத்தகத்தில் தமிழினி ஜெயதேவன் என்ற பெயரில் நட்புக் கோரிக்கை வந்திருந்தது. உண்மையில் தமிழினி அக்காவா? அல்லது அவரது பெயரில் வேறு யாராவது உருவாக்கியுள்ளார்களா என்று சந்தேகத்துடன் வணக்கம், நீங்கள் யார்? தமிழினி அக்காவா? என்று பேட்டேன். தமிழினி அக்காவின் பதில்களின் ஊடாக அவர்தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். என்னுடைய எழுத்துக்களை வாசித்தத்தைப் பற்றி அவரது அபிப்பிராயங்களை வாழ்த்தை ஊக்குவிப்பை உள்பெட்டியில் எழுதினார்.

 

எந்த சூழ்நிலையிலும் படிப்பை கைவிடாத உங்கள் கெட்டித்தனத்தை நினைத்தால் எனக்குப் பெருமை என்று ஒருநாள் எழுதியிருந்தார். அக்கா காலச்சுவட்டில் பிரேமா ரேவதி எழுதிய தமிழினி நலமா படித்தீர்களா? என்று கேட்டேன். தடுப்பில் இருந்தபோது யாரோ கொண்டு வந்து தந்து படித்ததாக சொன்னார். அக் கட்டுரையை படித்தபோது மிகவும் வருத்தமுற்றேன் என்றேன். ஏன் என்று கேட்டார். தெரியவில்லை அக்கா என்றேன்.

 

திருமணத்தின் பின்னர் தமிழினி அக்கா வெளிநாடு செல்ல இருக்கிறார் என்று கேள்விபட்டேன். ஒரு நாள் அக்கா நீங்கள் வெளியில் போகப் போகிறீர்களா என்று கேட்டு உள்பெட்டியில் எழுதினேன். ஆம் தம்பி என்று பதிலிட்டார். போக முன்னர் உங்களை ஒருமுறை பார்க்க வேண்டும் என்றேன். தற்போது கொழும்பில் மருத்துவம் பெற்றுக்கொண்டிருப்பதாகவும் வீடு வந்ததும் அழைக்கிறேன் என்று முகவரியை அனுப்பினார். எனது எண்ணை பெற்றுக்கொண்டார்.

 

சேனனின் லண்டன் காரர் நாவலை கொண்டு வீட்டுக்கு வருமாறும் எழுதியிருந்தார். இப்படி தமிழினி அக்காவை பார்க்க இருந்த நாட்களில்தான் அவர் சாவடைந்தார் என்ற அதிர்ச்சியான செய்தி வெளியானது. அவர் எனக்கு அனுப்பிய முகவரியை வைத்துக்கொண்டு உயிரற்ற தமிழினி அக்காவின் உடலை சென்று சந்தித்த அந்த தருணத்தின் துயரை எப்படி எழுதுவது?

 

தமிழ் சூழலில் மன்னர்கள் புலவர்களாக இருந்திருக்கிறார்கள். ஈழப் போராட்டத்தில் போராளிகள் கவிஞர்களாக இருந்திருக்கின்றனர். தமிழினி அக்கா ஒரு தலைவியாகவும் கவிஞராகவும் எழுத்தாளராகவும் காணப்படுகிறார். ஒரு இனத்திற்காக போராடிய இயக்கத்தின் தலைவி ஒருத்தியின் கவிதைகள் போராட்டம் சார்பில் மிகவும் முக்கியமானதொரு குரலும் சாட்சியும் ஆவணமும்.

 

போர், போரில் அழியும் மனம், போரின் கொடுமை, போரின் விளைவு, போரின் அகோரம், போரின் உள்முகம் என பல்வேறு விடயங்களை மிகவும் அழகியலோடும் கவிதை தரத்தோடும் தமிழினி அக்கா இந்தத் தொகுதியில் உள்ள கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார். 2009க்கு முன்னரான கவிதைகளும் இந்த தொகுப்பில் இடம்பெற்றால் இன்னும் கனதியாக இத் தொகுப்பு வந்திருக்கும்.

 

தமிழினி அக்காவின் மீள் எழுத்துப் பிரவேசம் ஈழப் போர் குறித்த போரில் ஈடுபட்டவர்களின் சாட்சிகளாக குரல்களாக எழுத்துக்கள் பதிவு செய்யப்படும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. போராளிகள் போர் வெறியர்களல்ல, அவர்கள் எதிரில் வந்த போரை முறியடிக்கும் போராட்டத்திலேயே ஈடுபடுகிறார்கள். போர் குறித்த வெறுப்பும் எதிர்ப்பும் தொடர்ச்சியாக போராளிகள் கவிஞர்களின் கவிதைகளில் இடம்பெறுவது இதற்குக் சான்றாகும்.

 

போரை வெறுக்கும் போரின் கொடுமைகளை வெறும் ஈழப் போராளிகளைத்தான் இந்த உலகம் பயங்கரவாதிகள் என்கிறது. எமது போராளிகள் பயங்கரவாதிகள் இல்லை, எமது போராளிகள் வாழ விரும்பும் வாழ்வும் கனவும் என்ன என்பதை போராளிக் கவிஞர்களின் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. அப்படித்தான் தமிழினி அக்காவின் கவிதைகளில் போரின் கொடுமை குறித்த சாட்சியமாக ஈழப் போராளிகளின் குரலாக முக்கியத்துவம் பெறுகின்றது.

 

தமிழினி அக்கா இன்னும் நிறைய எழுதுவார் என்றும் எமது இனத்தின் உள் மனக்குரலாய் என் எழுத்துக்களை முன்வைப்பார் என்றும் எங்கள் இனத்தின் உள் முகமாய் இருப்பார் என்றும் நினைத்திருந்தபோதே அவரது இழப்பு நிகழ்ந்துவிட்டது. ஆனாலும் அவர் எழுதிவிட்டுச் சென்ற இச் சில கவிதைகளே பெரும் சாட்சியமாக, பெரும் குரலாக, பெரும் ஆணவமாக, பெரும் கவிதையாக தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைபெறும். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் எவ்வாறு தமிழினி என்ற பெயரை தவிர்க்க முடியாதோ, அதைப்போலவே தமிழ் இலக்கியத்திலும் ஈழத் தமிழ் போர் இலக்கியத்திலும் தமிழினி என்ற பெயரை தவிர்க்க இயலாது.

 

-தீபச்செல்வன்