கடந்த கால நினைவுகளின் துடைத்தழிப்பு – உதயராசா

0
711

யாழ் பல்கலைக்கழக சட்டத் துறையின் சமகால சட்ட விடயங்களுக்கான அரங்கம், அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் தமிழ், ஆங்கில மொழிகளில் PEARL தொகுத்து வழங்கும் அறிக்கையான, “கடந்த கால நினைவுகளின் துடைத்தழிப்பு : இலங்கையின் வட-கிழக்கில் நினைவிற் பதித்தலின் வலிந்தொடுக்கல் ” அறிக்கையின் வெளியீட்டில் நினைவுகூரலை ஆவணப்படுத்துகையில் எதிர்நோக்கும் சவால்களும், முட்டுக்கட்டைகளும் எனும் தலைப்பில் சாளின் உதயராசா ஆற்றிய உரை [சுருக்கமான வடிவம்]

 

இடம்: சிற்றரங்கம், பௌதீகவியல் பீடம், யாழ் பல்கலைக்கழகம்.
திகதியும் நேரமும்: செவ்வாய், பெப்ரவரி 28, 2017 பி.ப 2 .

 

சிறிலங்கா அரசாங்கம் தமிழ்த்தரப்புகளின் அழிவுகளை அவர்களே ஆவணப்படுத்துவதற்கு தன்னாலான முட்டுக்கட்டுக்களை செய்து வருகின்றது. இந்த தடைகளை பல்வேறு வழிகளில் மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசு, கடந்த ஆட்சியாளர்கள் போன்றே தற்போது உள்ள சிறிசேன தலைமையிலான அரசு இந்த தடைகளையும் முட்டுக்கட்டைகளையும் ஏற்படுத்தி வருகின்றது. தமிழ்த்தரப்பு தனது உரிமைக்கான போராட்டத்தில் பல்வேறுபட்ட கொடூரங்களையும், அழிவுகளையும் எதிர்நோக்கி வந்துள்ளது. இதன் ஒட்டுமொத்த வடிவமாக முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த படுகொலைகளை ஆவணப்படுத்துவதில் தமிழ்த்தரப்பு முனைப்பு காட்டி வருகின்ற போதிலும்,

 
சிறிலங்கா அரசு அதற்கு தடைகளை ஏற்படுத்தி வருகின்றது. ஆவணப்படுத்தல் என்பது ஒரு இனத்தின் இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாக்கும் செயல்முறையாகும். இந்த ஆவணப்படுத்தல் தமிழ் தரப்பிற்கு ஒருபடி மேல் சென்று இனப்படுகொலையை நிறுவுவதற்கும் ஒரு சான்றாக அமையும். அந்த வகையில் தான் தமிழ்த்தரப்பின் ஆவணப்படுத்தல் அமைய வேண்டும். இவ்வாறன ஆவணப்படுத்தல்களை மேற்கொண்ட தமிழ்த்தரப்பின் ஊடகவியலாளர்கள் மற்றும் மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் சிங்கள அரசுகளினால் கொல்லப்பட்டும் உள்ளார்கள். உதாரணமாக திருகோணமலை குமாரபுரம் படுகொலையை வெளிக்கொணர்ந்த தமிழ் ஊடகவியலாளர் சுகிர்தராஜன் ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 
இந்த படுகொலைகளுக்கான நீதி இன்னமும் கிடைக்காத நிலையில் தான் தமிழ்த்தரப்பு தமது ஆவணப்படுத்தலை தொடர வேண்டியுள்ளது. தற்போது நிலைமாறு கால நீதிக்கான காலம் என கூறப்படும் இந்த காலப்பகுதியிலும் கூட கடந்த காலப்பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு நீதி கிடைக்கவில்லை. அந்த சம்பவங்களின் அச்சுறுத்தல்கள் தற்போதும் அகலவில்லை. தற்போது ஆவணப்படுத்தல் முயற்சியில் இறங்கியுள்ள தமிழ்த்தரப்பும் இந்த அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றது. நல்லாட்சி அரசு என்று கூறுபவர்களிடம் இருந்தும் தமிழ்த்தரப்பு கடந்த காலத்தில் எதிர்கொண்ட ஆபத்துக்கள், அச்சுறுத்தல்கள், நீங்கவில்லை. குறிப்பாக கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்களில் இருந்து மக்களும் சரி ஊடகவியலாளர்களும் விடுவிக்கப்படவில்லை.

 
எந்தவொரு ஆவணப்படுத்தல் முயற்சியில் ஈடுபட்டாலும் கடந்த காலங்களின் நினைவுகள் அச்சுறுத்துகின்றன. இதற்கு பொறுப்புக்கூறல் என்பது இல்லாமையே காரணம் என நான் சிந்திக்கின்றேன். நல்லாட்சி அரசு என கூறும் இந்த அரசில் நேரடியான இராணுவ அச்சுறுத்தல் என்பது ஒப்பீட்டளவில் குறைவாக தான் உள்ளன.

 

ஆனால் அவர்களது செயற்பாடுகள் முன்னரை வீட தீவிரமாக உள்ளன. ஒரு போராட்டம் நடைபெற்றால், ஒரு கூட்டம் இடம்பெற்றால் அங்கு சிவில் உடையில் சென்று புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல். ஊடகவியாலாளர்களை பின்தொடர்ந்து உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தல், இவை அனைத்தும் வடகிழக்கில் சர்வ சாதரணாமாக நடைபெறுகின்றன. இவற்றுக்கு மக்களும் ஊடகங்களும் பழகிவருவது தான் அவர்களது வெற்றியாகவும் உள்ளது.

 
இருப்பவற்றை மறைத்தலும் இல்லாதவற்றை இருப்பது போன்று காண்பிக்கும் செயற்பாடுகளும் இங்கு நடைபெறுகின்றன. ஒரு இடத்தில் புத்தர் சிலை எடுக்கப்பட்டால் அதனை பொது முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவிப்பதும், அதே தமிழ் மக்களுடைய வரலாற்று இடமாக காணப்பட்டால் அதனை பௌத்த மயமாக்கலால் மறைக்கும் நடவடிக்கையிலும் சிங்கள தரப்பு இறங்கியுள்ளது. இதற்கு உதாரணமாக திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை குறிப்பிடலாம். அடுத்து தமிழர்களின் நினவுகூரலை அளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மாவீரர் துயிலும் இல்லங்களை அடையாளம் இல்லாமல் தரைமட்டம் ஆக்கும் முயற்சிகளில் சிங்களம் இறங்கியுள்ளது. அதில் அவர்கள் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார்கள்.

 

இவ்வாறான தமிழர்களின் எதிர்கால இருப்பை அவர்களது வரலாற்றை ஆவணப்படுத்த முயலும் போது தான் உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுகின்றது.

 
எனினும் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் பரவாயில்லை, என ஆவணப்படுத்தலை மேற்கொள்ள முயற்சிக்கும் போது பாதிக்கப்பட்ட தரப்பு அச்சம் காரணமாக முன்வராத தன்மை இப்போதும் உள்ளது. மேலும் இன அழிப்பு மனித பேரவலங்கள் தொடர்பில் ஆவணப்படுத்த முயலும் போது பாதிக்கப்பட்ட தரப்பிற்கு அவற்றை மீள நினைவுபடுத்துவது கடினமாக உள்ளது. இதற்கு போதிய உள ஆற்றுப்படுத்துகை மேற்கொள்ளபடாமையும், கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் மீள நிகழாது என உறுதிப்படுத்தாமையுமே காரணமாகும். இது தவிர ஆவணப்படுத்தல் ஒன்றை மேற்கொள்ளும் போது எம்மிடையே போதிய பயிற்சி, ஆளணி, நிதி என்பனவும் சவால்களாக உள்ளன. எனினும் ஆவணப்படுத்தல்களில் இவ்வாறன சவால்கள் இருக்கின்ற போதிலும் தமிழ் மக்கள் வரலாற்றில் தொடர்ச்சியாக தாமாக முன்வந்து ஆவணப்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறன ஒரு ஆவணப்படுத்தல் தான் கடந்த வருடம் நடைபெற்ற மாவீரர் தினமாகும்.

 
2009 க்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் தான் மக்களை கட்டாயப்படுத்தி துப்பாக்கி முனைகளில் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க வைத்தார்கள் என்ற எண்ணம் மேற்குலக சக்திகளிடமும் சில முற்போக்கு சக்திகளிடமும் புரையோடியிருந்தது. ஆயினும் அந்த நினைப்பை கடந்த வருடம் நடைபெற்ற மாவீரர் தினம் தகர்த்து எறிந்துள்ளது. புலிகள் இல்லை, ஆயுதங்கள் இல்லை, ஆனாலும் மக்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் பல்லாயிரக்கணக்கில் திரண்டு கண்ணீருடன் நினைவு கூர்ந்தார்கள். இந்த நிலையில் தான் தன்னுடைய கண்காணிப்பிற்கு கீழும், அனுமதியிலும் தான் நினைவு கூரல்கள் நடைபெற வேண்டும் என்று தெற்கு விரும்புகின்றது. அதற்காக தான் தற்போது வடக்கில் துப்பாக்கிளுக்கு பதிலாக கமராக்கள் நீளுகின்றன. ஒரு நாள் கமராக்கள் கீழிறக்கப்பட்டு துப்பாக்கிகள் நீளும் என்பதும் எமக்கு தெரியும்.

 
தமிழ் மக்களுடைய விருப்பங்களை, அவர்களுடைய அழிவுகளை எம்போன்றவர்கள் செய்தால் கடும்போக்காளர்களின் ஆவணப்படுத்தல்கள் பக்கச்சார்பாக தான் இருக்கும் என முத்திரை குத்தி அதனை பெறுமதியற்றதாக்கும் முயற்சிகளில் எம்மவர்கள் சிலரும் இறங்கி விடுவார்கள். இந்த நிலை தான் சர்வதேச அரங்கிலும் காணப்படுகின்றது. இறுதிக்கட்ட போரில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்படும் போதும், எமது சகோதரிகள் இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தபட்டு கொடூரமாக கொலை செய்யப்படும் ஆவணங்களை, காணொளிகளை, தமிழர் தரப்பும், ஊடகவியலாளர்களும் வெளிநாடுகளுக்கு காண்பித்த போது அவற்றை வெளிசக்திகள் நம்பவில்லை.

 
மாறாக சனல் 4 போன்ற வெள்ளைத்தோல் கொண்டவர்களின் ஊடகங்கள் எமது தரப்புக்களிடமிருந்து அவற்றை பெற்று ஒளிபரப்பிய போது தான் உலகம் அதனை நம்பியது. ஈழத்தமிழர்களின் பிரச்சனை சர்வதேச அரங்கில் ஈர்த்தது. வெள்ளையர்கள் சொல்வது தான் உண்மை என்ற நிலையில் தான் தற்போது உலகம் உள்ளது. இவ்வாறன காலத்தில் எவ்வாறு எங்களுடைய ஆவணப்படுத்தல்களை உலகம் கவனத்தில் எடுக்கும் வகையில் மேற்கொள்ள போகின்றோம் என்பது அவதானிக்கப்பட வேண்டும். அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் அற்ற ஆவணப்படுத்தல் சிறிலங்காவில் தமிழர் தரப்பால் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றால் தமிழ் தரப்பு சுயமாக வாழக்கூடிய ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

 
இந்த சந்தர்ப்பம் ஏற்பட இன்னும் ஒரு பத்துவருடங்களோ அல்லது ஐம்பது வருடங்களோ செல்லலாம், அதற்காக ஆவணப்படுத்தலை நிறுத்தி வைக்க முடியாது. ஆவணப்படுத்தலில் ஒரு இடைவெளி ஏற்படுவது என்பது அந்த இனத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும். ஆகவே ஒவ்வொரு தமிழ் ஊடகவியலாளன் அல்லது ஆவணப்படுத்துனர், தமிழர் தேசத்தின் இருப்புக்காக உயிர் அச்சுறுத்தல்களையும் தாண்டி ஆவணப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்து!

 
நன்றி

 

நிகழ்வின் பேச்சாளர்கள் பற்றி…

 
கலாநிதி நிம்மி கௌரிநாதன் : நியூயோர்க் சிட்டி பல்கலைக்கழகத்தின் குடிமை மற்றும் பூகோள தலைமைத்துவத்திற்கான கோலின் பவல் பீடத்தில் வருகைப் பேராசிரியர். கலிபோர்னியா பேர்க்லே பல்கலைக்கழகத்தின் இனம் மற்றும் பாலிற்கான நிலையத்தின் முதுநிலை ஆராய்ச்சி அறிஞர். “பாலியல் வன்முறையின் அரசியல்” முன்னெடுப்பின் தாபகர்இ பணிப்பாளர்.

 
Mario Arul : PEARL இனுடைய பரிந்து பேசுதலின் பணிப்பாளர்.
Shalin Stalin : யாழைத் தளமாகக் கொண்டு கடந்த பல வருடங்களாக மனித உரிமை மீறல்களை பரவலாக ஆவணப்படுத்தியூள்ள ஊடகவியலாளர்.

 

பேச்சாளர்கள்:
கலாநிதி நிம்மி கௌரிநாதன்
(“போர் ஆவணப்படுத்தலின் போது மாறுபட்ட, ஓரங்கட்டப்பட்ட அனுபவங்களை பிரதிபலித்தல்”)
மரியோ அருள்தாஸ்
(“நினைவுகூரலின் அரசியல்”)
சாலின் உதயராசா
(“நினைவுகூரலை ஆவணப்படுத்துகையில் எதிர்நோக்கும் சவால்களும், முட்டுக்கட்டைகளும்”)
தலைமை:
குமாரவடிவேல் குருபரன், துறைத் தலைவர், சட்டத் துறை, யாழ் பல்கலைக்கழகம்