வடக்கு கிழக்கு பொருளாதாரத்தில் விவசாயத்திற்கு அடுத்ததாக கடல் வளம் இருக்கிறது . தரையிலிருந்து 200 கிலோமீற்றர் தூரம் வரையிலான பிரத்தியேக பொருளாதார வலயம் இருக்கின்றது. இலங்கை கடற்கரையின் நீளம் 1925 கிலோமீற்றர். அதில் மூன்றில் இரண்டு பங்கு வடக்கு கிழக்கிற்கு சொந்தமானதாக கடற்கரையோரமாக இருக்கின்றது. அதாவது மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளத்தில் இருந்து மட்டக்களப்பு, அம்பாறை வரை பார்த்தால் கிட்டத்தட்ட 900 கிலோமீற்றர் அளவில் எங்கள் கடற்கரை இருக்கின்றது.

எங்களை சுற்றிவர அகலமான கண்டத்திட்டு கண்டமேடை இருக்கின்றது. உலகப்பிரசித்தி பெற்ற மீன்பிடி மேடை (Petro bank) எங்கயுளுடைய கையில் தான் இருக்கின்றது. பருத்தித்துறையில் இருந்து கிழக்காலை 200 கிலோமீற்றர் முல்லைத்தீவு வரை நாங்கள் ஆழ்கடல் கடற்தொழில் செய்ய முடியும்

வடக்கில் மட்டும் இரண்டு இலட்சம் பேர் கடற்தொழிலோடு சம்பந்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள். வளமும், ஆளணி வளமும் எங்களுடையில் கையில் இருக்கின்றது. ஆனால் பயன்பாட்டில் தான் பிரச்சனை இருக்கின்றது.

கடந்த காலங்களில் இலங்கையின் மொத்த கடல்வள உற்பத்தியில் மூன்றில் இரண்டு பகுதியை வடக்கு பகுதிதான் கொடுத்தது. கடலட்டை, சங்கு, இறால், சிங்க இறால் என இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. அதிகமான அந்நிய செலாவணியை வடக்கு பெற்றுக்கொடுத்த காலம் இருந்தது

ஆனால் இன்று யாழ்ப்பாணத்தில் 15000 – 20000 மெற்றிக்தொன் உற்பத்திதான் இடம் பெறுகின்றது. அதே போல் முல்லைத்தீவு, மன்னாரிலையும் மிக மோசமான நிலையில் உற்பத்தி வீழ்ச்சி அடைந்து உள்ளது. தென்பகுதி மீனவர்கள், இந்திய மீனவர்களுடைய அத்துமீறிய ஊடுருவல் வடபகுதி மீனவர்கள் சுதந்திரமாக தொழில் செய்ய பெரும் தடையாக இருக்கிறது . கரையோரம் முழுக்க இராணுவ முகாம்கள் உள்ளபடியால் தென்பகுதி மீனவர்கள் இங்கு வந்து இராணுவ முகாம்களுக்கு அருகில் வாடிகளை போட்டுக்கொண்டிருந்து தொழில் செய்து எங்களுடைய வளங்களை சுரண்டுகின்றார்கள். அரசாங்கம் அவர்களுக்கு அனுமதியும் வழங்கி அவர்களுக்கு பாதுகாப்பும் வழங்குகின்றது. கொக்கிளாய், நாயாறு எல்லைப் பிரதேசம் தலைமன்னார் பியர், சவுத்பார், சிலாபத்துறை என பல இடங்கள் தென்னிலங்கை மீனவர்கள் வசம் போய்விட்டது.

தென்பகுதி மீனவர்கள் குறிப்பிட்ட காலத்தில் வந்து வாடி அடித்து இருந்து கடற்தொழில் செய்து விட்டு குறிப்பிட காலம் முடிய திரும்ப போய்விடுவார்கள். வாடைக்காற்று நேரம் வந்து வாடியடித்து இருந்து விட்டு சோழக காற்று நேரம் அவர்கள் போய்விடுவார்கள். ஆனால் வாடியெல்லாம் அப்படியே இருக்கும். அதற்கு கடற்படையினர் காவல் காக்கின்றார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஆழ்கடலில் பலநாள் கலங்களை (Multiday Boats) பயன்படுத்துகிறார்கள். ஆழ் கடலில் சென்று மீன் பிடிக்கும் அந்தக் கலம் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபா பெறுமதி வரும். அது கடலில் 15 நாள்வரை நின்று மீன் பிடிக்கக் கூடிய வசதி உடையது.

எங்களுடைய கிழக்குப் பக்கத்தால் வந்து அவர்கள் இந்த கலத்தை பயன்படுத்தி எங்களுடைய பெறுமதி மிக்க கடல் வளங்களை சுரண்டி செல்கின்றார்கள். எங்களுடைய கையில் அவ்வாறான ஒரு படகுகூட கிடையாது. இன்று பருத்தித்துறையில் கொஞ்ச பலநாள் கலங்கள் உள்ளன. ஆனால் அவை அந்தளவிற்கு பெரியதல்ல. அதில் நாலைந்து நாள் நின்று மீன் பிடிக்ககூடிய வசதி தான் இருக்கின்றது. ஆழ்கடல் வளம் முழுவதும் அவர்கள் தான் பயன்படுத்துகின்றார்கள் நாங்கள் பயன்படுத்துவதில்லை.

முல்லைத்தீவு மற்றும் வடமராட்சி கிழக்கு கடலில் அட்டை பிடிக்கும் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கிறது . தென்பகுதி மீனவர்களுக்குத்தான் ஆழ்கடலில் மூழ்கி அட்டை பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது. எங்களுக்கு அவ்வாறு வழங்குவதில்லை. இலாபம் முழுக்க அவர்கள் தான் பெற்றுக்கொள்கின்றார்கள். கடல் அட்டையை பிடித்து மதிப்புக்கூட்டி தென்பகுதி நிறுவனங்களுக்கு ஏற்றுவது வரை அவர்களே பார்க்கின்றார்கள். மன்னாரில் எங்களுடைய ஆட்கள் சிலர் பிடிக்கின்றாரகள். ஒரு அட்டை 50 ரூபாதான். சில அட்டை 20 ரூபா. இரண்டு இன அட்டைதான் இருக்கின்றது. அவர்களுக்கு ஒரு நாளைக்கு 300, 400 அட்டை கிடைக்கும் என்கிறார்கள். இதை ஒரு தென்னிலங்கை கம்பனி எடுத்துச் சென்று தாங்களே மதிப்புக்கூட்டி வர்த்தகம் செய்கின்றது. அதனை நாங்கள் செய்வதற்கான வாய்ப்பு எங்களிடம் இல்லை. கடுமையாக உழைத்து அவர்களுக்குத்தான் கொடுக்கின்றமே தவிர வேறொன்றுமில்லை. அவர்கள் அட்டை பிடிக்கும போது எங்களுடைய வலைகளை வெட்டிவிடுவார்கள்.

இதுமட்டுமில்லாமல் இறால், அட்டை, நண்டு எல்லாவற்றையுன் தென்பகுதியிலிருந்து வரும் கம்பனிகள் தான் கொண்டு போகின்றார்கள். நீல நண்டு 400 தொடக்கம் 450 ரூபா வரை போனது இன்று ஒரு கிலோ நண்டு 1500 ரூபா. முதலிடத்து நண்டு இங்கே வாங்க முடியாது இங்கே சந்தையில் வருவதெல்லாம் மூன்றாம் தரமுடையதுதான் வருகின்றது. பெரிய இறால் எல்லாம் இன்று 2500 ரூபா முதல் 3000 ரூபா வரை விற்பனையாகின்றது. இன்று நாங்கள் அவை எல்லாம் சாப்பிட முடியாத கட்டம் இருக்கிறது . நிறைய அள்ளிச் செல்கின்றார்கள். ஆனால் சம்பாத்தியம் முழுக்க எங்களுக்கு வருவதில்லை. அது தென்பகுதி கம்பனிகள் போன்றவற்றிற்கே சென்றடைகின்றது.

கடல் அட்டை, நண்டு, இறால் போன்றவை வளர்க்கலாம். இங்கு அதற்கு சரியான இடம் இருக்கின்றது. ஆனால் சரியான ஆளணி இல்லை, முதலீடில்லை, பாதுகாப்பு இல்லை அவ்வாறாக நிறைய பிரச்சனை இருக்கின்றது. அது பற்றிய ஆய்வும் இல்லை அக்கறையும் இல்லை. வடக்கு கிழக்கு கடல் வளத்திற்கு இந்திய மீனவர்களும், தென்பகுதி மீனவர்களும் பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றார்கள்.

பெரிய கடல் பன்றிகளை டைனமற் அடிச்சு பிடிக்கின்றார்கள். இதனால் கடலில் வாழ்கின்ற சிறிய மீன்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஏராளமாக செத்து மிதக்கின்றன. கரையோரத்தில் கண்டத்தாவரங்கள் எல்லாம் வெட்டி. கண்டல் தாவரங்கள், மரக்குற்றியை ஏற்றிக்கொண்டு போய்விடுவார்கள். படுப்பு வலை போட்டால் அதிலை சிக்கி வலை எல்லாம் கிழிந்து அழிந்து போய்விடும். வலிச்சல் வலை வழிந்து போனால் தான் மீன் படும். இடையிலை இந்த குற்றிகளில் வலை சிக்கினால் வலை வழியாது. இதனாலை மீன் படாது, வலை சேதமாகும். கண்டல் தாவரம் பாதுகாக்கப் பட்டது. அதனை வெட்ட கூடாது. ஆனால் அதை வெட்டிக்கொண்டு போகிறார்கள். கேட்க யாருமில்லை

மன்னாரிலை நிறைய மீனவர்கள் தொழில் இல்லாமல் சரியான கஸ்டபடுகிறார்கள் . அவர்கள் அனுமதி பெற்ற தென்னிலங்கை முதலாளிகளுக்கு கூலிக்கு நின்றுதான் அட்டை பிடிச்சு கொடுக்கிறாங்கள்.

இங்கு துறைசார்ந்த கல்வி இல்லை. பாடசாலைகளில் இது சம்பந்தமான பாடமே இல்லை. ஆனால் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மீன்பிடி தொழில் தொடர்பான பாடம் இருக்கின்றது. விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் பல்கலைக்கழகத்தில் கடல்வளப்பயிற்சியை தொடங்கி அதில் படித்த மாணவர்களை வடமாகாணத்தில் அதற்கான ஆசியர்களாக நியமித்து பாடசாலைகளில் படிப்பித்தார்கள்

கரையோர மாணவர்கள் நல்ல ஆர்வத்தோடு இந்தப் பாடத்தை கற்றிருக்கின்றார்கள். இன்று அந்த பாடமே இல்லை. படிப்பிற்கப்படுவதுமில்லை. ஆசிரியர்களும் அதற்கென்று இல்லை. அதில் பயிற்சி பெற்றவர்களும் கிடையாது. சரியான நிபுணத்துவ ஆலோசனை இல்லை.

எங்களுடைய கடல்வளங்களை கடற்தொழிலுக்கு , சுற்றுலாப் பயணத்துறைக்கு வினைத்திறனுடன் பயன்படுத்த முடியும் . ஆனால் அதை செய்வது யார் ? அதற்க்கான பொறிமுறை என்ன ?

இனமொன்றின் குரல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here