கட்டுவன் மேற்குப் பிரதேசத்தில் நூறு குடும்பங்களுக்கான “வீட்டு உணவுத் தோட்டத் திட்டம்” ஆரம்பிக்கப்படுகிறது!

வீட்டு உணவுத் தோட்டத் திட்டத்திற்காக குடும்பங்களை அணி திரட்டுவதற்காக, யூன் 19, 2020 அன்று, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கட்டுவன் மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் வட கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நடுவம் (NEED CENTER) ஒரு சமூக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.

இந்தக் கூட்டத்தை அரச கிராம அலுவலர் மற்றும் அரச பொருளாதார அபிவிருத்தி அலுவலர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற குடும்பங்கள் சமீபத்தில் இலங்கை அரச படைகளால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வீட்டுத் தோட்டத் திட்டத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிக் குடும்பங்கள் 2020, யூன் 21 ஆம் தேதிக்கு முன்னர் தங்கள் வீட்டு வளாகத்திற்குள் தோட்டத்திற்கான நில ஏற்பாடுகளைத் தொடங்குவார்கள். நில ஏற்பாடுகள் முடிந்ததும் அவர்களுக்கு விதைகள் மற்றும் நாற்றுகளை வட கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நடுவம் (NEED CENTER) விநியோகிக்கத் தொடங்கும்.

பயனாளிக் குடும்பங்கள் பயிரிடலை ஆரம்பித்த பின்னர், மூன்று மாதங்கள் வரை அவர்களுக்கான நிபுணத்துவ ஆலோசனையையும், கண்காணிப்பையும் வட கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நடுவம் (NEED CENTER) வழங்கும். இதனால் பயனாளிக் குடும்பங்கள் சிறந்த வீட்டுத் தோட்டங்களை உருவாக்குவது உறுதிப்படுத்தப்படுகிறது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இந்த வீட்டு உணவுத் தோட்டத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் நோக்கம், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான பொருளாதாரத்தை மேம்படுத்துவதும், COVID-19 க்கு பிந்தைய சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் அந்த மக்களுக்கு சத்தான உணவை வழங்க உதவுவதுமாகும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கட்டுவன் மேற்குப் பகுதியில் வாழும் நூறு பயனாளிகள் குடும்பங்களுக்கு உதவும் வகையில் இந்தத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வீட்டு உணவுத் தோட்டத் திட்டம் கனேடிய தமிழர் பேரவையின் (Canadian Tamil Congress) ஆதரவுடன் கனடாவில் உள்ள “நவா வில்சன்” சட்ட நிறுவனத்தின் நிதியுதவியினால் மேற்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here