இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியது மிகப்பெரிய தவறு என இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியும் தற்போதைய இந்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சருமான வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

 

IPKF-LTTEஇந்திய இராணுவத்தால் பயிற்சி வழங்கப்பட்ட விடுதலைப் புலிகளுடன் இந்திய அமைதிப்படை மோதியமை மிகப்பெரிய தவறு எனக் குறிப்பிட்டுள்ள வி.கே.சிங், இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகளுடன் போரிட்டு அதன் தலைவர் பிரபாகரன் இருக்கும் இடத்தை நெருங்கிய போதும் மேலிடத்தின் உத்தரவு காரணமாக புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பித்துக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது என்றும் வி.கே.சிங் கூறியுள்ளார்.

 

இந்திய அமைதிப்படை, விடுதலைப் புலிகளுடன் மோதியமை மிகப்பெரிய தவறு என்ற உண்மையை உணர்வதற்கு அல்லது வெளிப்படுத்துவதற்கு 28 ஆண்டு காலம் இந்தியாவுக்குத் தேவைப்பட்டமை தான் மிகப்பெரிய வேதனை தரும் செய்தியாகும்.

 

இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து இந்திய அமைதிப்படை எங்களைக் காப்பாற்றும் என எதிர்பார்த்திருந்த தமிழ் மக்களுக்கு கிடைத்த செய்தி அதிர்ச்சியானது. விடுதலைப் புலிகளும் இந்திய அமைதிப்படையும் மோதிக்கொண்டதில் அப்பாவித் தமிழ் மக்கள் பலியாகிப் போன மிகப்பெரும் கொடூரம் நடந்தேறியது.

 

யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் இந்திய அமைதிப்படை நடத்திய தாக்குதலில் மருத்துவர்களும் வைத்தியசாலைப் பணியாளர்களும் உயிரிழந்து போன துயரம் இன்றுவரை கறைபடிந்த வரலாறாகவேயுள்ளது.

 

இந்நிலையில் இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகளுடன் மோதல் நடத்தியமை மிகப்பெரும் தவறு என முன்னாள் இந்திய இராணுவத் தலைமைத் தளபதி கூறும் போது, அமைதிப்படையால் கொல்லப்பட்ட தமிழ் உறவுகளை நினைத்து கண்ணீர் விடாமல் எங்ஙனம் இருக்க முடியும்?

 

எப்போதும் எங்களைக் கொன்ற பின்பே நடந்தது தவறு என்று கூறுகின்ற நாசகாரம் எங்கள் விடயத்தில் சர்வசாதாரணமாயிற்று.

 

விடுதலைப் புலிகளுடன் போர் தொடுத்த இந்திய அமைதிப்படை அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றொழித்த கொடூரத்தின் தாக்கம் இன்னமும் மறந்து மறைந்து போகவில்லை.

 

இந்நிலையில் இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியது மிகப்பெரும் தவறு என்று கூறுவதனூடாக எங்கள் உறவுகளை அநியாயமாகக் கொன்றொழித்தீர்களே! என்று மனம் பதைபதைக்கிறது.

 

இது இந்திய அமைதிப்படை தொடர்பானதாக இருக்க, வன்னியில் நடந்த பெரும் போரில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் விடயத்தில் சர்வதேசம் முழுவதும் தவறிழைத்த கொடுமையை எங்ஙனம் மறக்க முடியும்?

 

வன்னிப் போரின் போது பொது மக்களைக் காப்பாற்ற ஐ.நா. தவறிவிட்டது என்று அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூன் காலம் கடந்து கூறுகிறார் எனில், ஈழத் தமிழர்களின் விடயத்தில் எல்லோரும் இப்படித்தான் சொல்வீர்களா என்று நாம் கேள்வி கேட்பது நியாயமல்லவா?

 

ஓ! எங்கள் விடயத்தில் மட்டும் உலகம், கண் இழந்த பின் சூரிய நமஸ்காரம் செய்வதாக இருப்பது எங்கள் விதியா? அல்லது எங்களுக்கான சதியா? என்பது தான் புரியாமல் உள்ளது.

 

வலம்புரி