விஜய் நடிக்கும் கத்தி, பாலச்சந்திரன் கொலையை வைத்து எடுக்கப்பட்டுள்ள புலிப்பார்வை போன்ற படங்கள் இலங்கை அரசுக்கு துணை போகும் அறமற்றவர்களின் வணிக முயற்சிகள். இதன் மூலம் தமிழர்களின் போராட்ட உணர்வை சிதைக்கப் பார்க்கிறது இலங்கை என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

ஈழ விடுதலை ஆதரவு அரசியல்களத்தில் தமிழகத்தின் திரைத்துறைக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. பொது மக்களிடத்தில் இவர்களின் ஈழ ஆதரவு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய பல நிகழ்வுகளை குறிப்பிட முடியும்.

kaththi-puli-parvai-12-600
2009க்கு பின் தமிழகத் திரைத்துறையின் ஈழ ஆதரவு அரசியலை உடைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாலிவுட் திரைப்பட விருது வழங்கும் விழாவின் தோல்விலிருந்து இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

தமிழக திரைத்துறையில் இருக்கும் நிதி முதலீட்டு நெருக்கடியையும், வணிக நோக்கமாக இருப்பவர்களையும் இலங்கை பயன்படுத்த எண்ணியது. FICCIயின் (வர்த்தக கூட்டமைப்பு) துணை கொண்டு பல ஒப்பந்தங்களை இந்திய திரை உலகுடன் இலங்கை ஏற்படுத்திக்கொண்டது.

இதன் விரிவான திட்டமாக நாம் புரிந்து கொள்ள கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில்

1. திரைத்துறையில் முதலீடு

2. திரையுலக கலைஞர்களை தமது பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக்கொள்வது.

லைகா மொபைலும் ராஜபக்சேவும்

இதன் அடிப்படையிலேயே தற்பொழுது லைகா மொபைல் நிறுவனத்தின் முதலீடு திரைத்துறையில் பெரிய பேனரில், வணிக ரீதியாக லாபம் கொடுக்கும் நடிகர் விஜய் – முருகதாஸ் மூலமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. லைகா மொபைல் ராஜபக்சேவிற்கு ஆதரவாக பல வர்த்தக பணிகளை மேற்கொண்டதை நாம் அறிவோம். அந்த நிறுவனம் தமிழகத்தில் ‘இலங்கை மீது பொருளாதார தடை இருப்பதை’ அறிந்து பின்வாசல் வழியாக நுழைகிறதா?

சந்தோஷ் சிவன் எனும் தரகுப் படைப்பாளி

மற்றொரு புறம் சந்தோஷ் சிவன் போன்ற அரசியல் தரகு படைப்பாளிகளின் வழியே நுணுக்க அரசியல் படங்களை ஈழவிடுதலைக்கு எதிராக கொண்டுவருவது. இந்தவகையான ‘அறமற்ற’ தொழிற்நுட்ப கலைஞர்களை தமிழ்திரையுலகில் ஆளுமை செலுத்த வைப்பது. சந்தோஷ் சிவனின் ‘இனம்’ திரைப்படத்தினை லிங்குசாமி கொண்டுவந்தார். சூர்யாவை வைத்து லிங்குசாமி இயக்கும் படத்திற்கு சந்தோஷ் சிவன் காமிரா செய்கிறார்.

பிவிஆர் மூலம்…

மாற்று அரசியல் என்கிற பெயரில் தென்னாப்பிரிக்கவின் மூலமாக மேற்குலகினால் முன்வைக்கப்படும் ‘நல்லிணக்கம்’ , ‘இனப்படுகொலை குற்றவாளிகளை மன்னித்து , இணைந்து வாழ்தல்’ என்கிற திட்டத்தினை நுணுக்கமாக அறிவுசீவி சமூகவெளிக்குள் நகர்த்தும் ‘வித் யூ, வித்தவுட் யூ’ போன்ற படங்களை பி.வி.ஆர் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் விநியோகம் செய்யும் ‘புரட்சி’யும் இங்கு நிகழுகிறது.

புலிப் பார்வை எனும் கருத்தியல் சிதைவு

தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கிய பாலச்சந்திரனின் அந்த ‘இறுதிப் பார்வை’ புகைப்படம் இன்றளவும் பலரை துன்புறுத்தும் இனப்படுகொலை பதிவு. இந்த மனப்பதிவினை சிதைப்பதுவும், பாலச்சந்திரன் பற்றியான பிம்பத்தினை உடைப்பதுவும் இந்திய-இலங்கை அரசிற்கு மிக மிக அவசியமான உடனடித் தேவை. இப்பிம்பம் முற்றிலும் முறிக்கப்பட்டால் காலப்போக்கில் பல நினைவுகளை அழிக்க முடியும்.

‘புலிப்பார்வை’ எனும் படத்தின் அறிமுக காணொளியில் உளவியல் ரீதியாக தமிழர்களின் ஆழ்மனதில் புதைந்து நிற்கும், ‘ஏன் இந்த அப்பாவி குழந்தை படுகொலை செய்யப்பட்டான்’ என்கிற கேள்வியை சிதைத்து அழிக்கும் காட்சிப்படுத்தலை காணமுடிகிறது. இதை பிரவீன் காந்தி எனும் வணிகரீதியாக மலிவான படங்களை எடுக்கும் நபரைக் கொண்டு செய்திருக்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகின் வழியாக தமிழர்களின் மீது உளவியல் -பொருளியல்-கருத்தியல் சிதைவினை கொண்டுவரும் ‘போராக’ இது இலங்கை-இந்திய அரசினால் நிகழ்த்தபடுகிறது. இதிலிருந்து தமிழகமும், தமிழ் திரையுலகமும் தப்பிக்குமா எனத் தெரியவில்லை.

இனிமேல் தமிழ் திரையுலகில் ஈழவிடுதலை ஆதரவாளருக்கு கிடைக்கும் வர்த்தக வாய்ப்புகளை விட இலங்கையின் நுண் அரசியலுக்கு துணை போகும் அறமற்றவர்களுக்கு வணிக வாய்ப்புகள் ஏராளம் கிடைக்கலாம்.

இம்முயற்சிகளை முறியடிப்பது ஒட்டுமொத்த தமிழர்களின் கடமை. தமிழகமும், திரையுலகுமும் எழுந்து நிற்குமா? அல்லது 2009 போர் முடிந்ததும் எழுந்த உணர்வலைகள் இன்று அடங்கிவிடுமா?-இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.