கனடாவின் புதிய அரசுக்குக் கனடியத் தமிழர் பேரவை வாழ்த்து

0
622

canada-ctcகனடிய நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற லிபரல் கட்சிக்கும் அதன் தலைவர் திரு. ஜுஸ்டின் ட்ரூடோ அவர்களுக்கும் கனடியத் தமிழர் பேரவை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

அத்தோடு ஸ்காபரோ றூஜ் பார்க் தொகுதியில் அமோக வெற்றியீட்டி நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான திரு. ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.

 

திரு. ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகக் கனடியத் தமிழர் பேரவையின் செயற்பாடுகளில் ஆர்வத்தோடு பங்கேற்று வந்துள்ளார்.

 

உண்மையான தலைமைப் பண்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இவர் தமிழ் மக்களுக்கும் ஏனைய இனத்தவருக்கும் முன்னுதாரணமான தலைவராக விளங்கினார். ஸ்காபரோ நகரில் பலஆண்டுகளாக வாழ்ந்து வருவதோடு நீண்டகாலமாக நகரின் நலனுக்காக உழைத்து வருபவர்.

 

இதன் வாயிலாகக் சமூகத்தின் பெரும் ஆதரவைப் பெற்றவர். கனடாவிலும் உலகெங்கும் குறிப்பாக ஈழத்தில் வாழும் நலிவுற்ற மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காயும் உயர்வுக்காயும் அயராது உழைத்தவர்.

 

“திரு ஹரி அவர்கள் கனடியத் தமிழர் பேரவையில் ஆற்றிய பணிகள் அவரது முழுமையான குமுகப் பணிக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்”எனக் குறிப்பிட்டார் கனடித் தமிழர் பேரவையின் தலைவர் திரு. இராஜ் தவரட்ணசிங்கம் அவர்கள்.

 

“தன் பல்வேறுபட்ட ஆற்றல்களை நாடாளுமன்றத்திற் பயன்படுத்துவார் என்பதும் புதிய அரசில் ஓர் முக்கிய பங்காளராய்க் கனடிய மக்களின் நலன்களைப் பேண உழைப்பார் என்பதும் மகிழ்ச்சி தருகிறது”என அவர் மேலும் தெரிவித்தார்.

 

கனடியத் தமிழர் எதிர் கொள்ளும் பல சிக்கல்களுக்குத் தீர்வு காணப் புதிய அரசுடன் இணைந்து பணியாற்றக் கனடியத் தமிழர் பேரவை தயராகவுள்ளது.