கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு விடுக்கும் அவசர அறிவித்தல்

0
490

vipusikaதமிழ் இனஅழிப்பின் உச்சக்கட்ட நடவடிக்கைகளில் இலங்கை அரசு முழுமையாக இறங்கியுள்ளது. தனது சகோதரனை தேடி தினமும் அழுது கொண்ருக்கும் சிறுமி விபூசிக்காவையும் அவர் தாயையும் கடத்தி கைது செய்துள்ளது இலங்கை இனஅழிப்பு அரசு. தொடர்ச்சியாக இலங்கை இனஅழிப்பு அரசினால் குறிப்பாக எங்கள் பெண்கள் மீது மேற்க்கொள்ளப்படும் இவ்வாறான திட்டமிடப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளை கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என சம்பந்தப்பட்ட தரப்பினரிடமும் அனைத்து மனித உரிமை அமைப்புக்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றோம் .

காணாமல் போனோர் போராட்டங்களிலும் முன்னின்று செயற்பட்டு வந்த, தாயாரான பாலேந்திரன் ஜெயகுமாரி (வயது 50) மற்றும் அவரது மகள் விபூசிகா பாலேந்திரன் (வயது 13) தர்மபுரம் பகுதியில் வைத்து சிறீலங்காப் அரச படைகளால் கடத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.நா வின் மனித உரிமை செயலாளர் திருமதி .நவநீதம்பிள்ளையின் யாழ்.பொதுநூலக பயணத்தின் போதும் பிரித்தானிய பிரதமர் திரு. டேவிட் கமருனின் பயணத்தின் போதும் தனது காணாமல் போன சகோதரர்களை கண்டுபிடித்து தரக்கோரி கதறிய விபூசிகா (வயது 13 )என்ற அச்சிறுமியின் கதறல் அனைவரதும் மனங்களை கலங்க வைத்திருந்தது. அந்தக் காட்சிகள் சர்வதேச ரீதியாகவும் கடும் தாக்கத்தினை ஏற்படுத்தி வந்த நிலையில் திட்டமிட்ட சம்பவம் ஒன்றை உருவாக்கிய இலங்கை அரச படைத்தரப்பு அந்தச் சிறுமியின் வீட்டினை சுற்றிவளைத்து சிறுமியையும் தாயையும் கடத்தியுள்ளனர்.

இந்நிலையில் இறுதி யுத்தத்தின் பின்னராக தனது சகோதரனை / பிள்ளையை தேடி அலைந்த குடும்பமே இப்போது கடத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்டவர்களை தேடியவர்களே கடத்தி செல்லப்பட்டுள்ள அவலம் எம் மண்ணில் நடந்துள்ளது. இந்தச் சிறுமியின் கைது அநீதிக்கெதிராக குரலெழுப்பும் எமது தேசத்தின் ஒவ்வொரு பிள்ளைக்கும் எதிரான அநீதியாகும். இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் இருவரும், முறைப்படி யாழ் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல், வவுனியா சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது என தாயகத்தில் இருந்துகிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. செல்வி விபூசிகாவிற்கு அண்மையிலேயே புலம்பெயர் உறவுகளின் ஊடாக அவளது கல்வியை தொடர வழி சமைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை மனிதஉரிமை தொடர்பில் கவனம் செலுத்தப்படும் இவ்வேளையிலேயே இலங்கை அரசாங்கம் இவ்வாறு நடந்து கொள்வதானது இனவழிப்பு அரசின் தன்னிச்சையான செயல்பாட்டினையே எடுத்துக்காட்டுகிறது.

இந்த வேளையில் கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பானது அனைத்து தமிழ் உறவுகளையும் குறிப்பாக புலம்பெயர் பெண்கள் அனைவரையும் ஓரணியில் இணைந்து எம் தாயாக உறவுகளின் குறிப்பாக பெண்களின் துயர்துடைக்க வேண்டுமென உரிமையோடு அழைக்கின்றது. இந்த அநீதியைக் கண்டித்து தாயகத்திலும் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களிலும் ஒரேநேரத்தில் தமிழர்கள் கண்டனப் போராட்டங்களை நடத்துகின்றனர். இன்றைய தாயாக களநிலைமைகளை கருத்தில் கொண்டு இந்தப்போரட்டங்களில் அனைத்து உறவுகளும் கலந்து கொண்டு வலுச்சேர்க்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

“எமது பிள்ளைகளின் உலகைப் பொறுத்தவரை இன்னமும் ஆயுதப் போரை ஒத்த சூழலிலேயே அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். நிரந்தரமான இன அழிப்புக்கு எமது சிறுவர் பலியாகி விடும் நிலை ஏற்பட முதல் காத்திரமான நடவடிக்கையை தேவை. எமது பிள்ளைகள் ஒரு தொலைந்த தலைமுறையாகுவதை நாம் அனுமதிக்க முடியாது.”

-ஜெனீவாவில் அனந்தி எழிலன். 14.03.2014

மேலதிக தொடர்புகளுக்கு :

கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு .

Website: www.ctwdo.ca : E-mail: ctwdo87@gmail.com :