mano-hr_demo_410pxஇந்த நொடியில் என் மனதில் (08/07/14) “கருணாவை பிரித்த” ரணிலும் வேண்டாம், “கிரிசாந்தி புகழ்” சந்திரிகாவும் வேண்டாம், “இறுதி போரை நடத்திய” சரத்தும் வேண்டாம் என்றால் யார்?…. மகிந்த ராஜபக்சவா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் வருகிறது. இந்த பதவியில் ஒரு சிங்கள பெளத்தர்தான் அமர போகிறார் என்பது எழுதப்படாத அடிப்படை விதி. கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் எடுத்த “சரத் பொன்சேகா ஆதரவு” நிலைப்பாட்டை பற்றி இன்றும் சிலர் குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். சிலர் ஒப்பாரியும் வைக்கிறார்கள்.

இலங்கை ஒரே நாடு. நம் தமிழர்கள் சிலர் இந்த நாடு இரண்டாகி விட்டது என எண்ணிக்கொண்டு இருக்கிறார்களோ தெரியவில்லை. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும், ஜனாதிபதி பதவியில் இருப்பவரின் சிந்தனை, பேச்சு, செயல் எம்மையும் பாதிக்கத்தான் போகிறது. ஆகவேதான் இந்த தேர்தலை நாம் தமிழர்கள் (இந்த முறை முஸ்லிம்களும்) எப்படி கையாள போகிறோம் என்பதை பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.

கடந்தமுறை சரத் பொன்சேகாவை தமிழர்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்ததே நான்தான். நாடு முழுக்க சென்று முதற்கட்ட பிரச்சார இயக்கத்தை நாம் வெற்றிகரமாக ஆரம்பித்து நடத்தினோம். நாடெங்கும் தமிழர்கள் அந்த நிலைப்பாட்டை ஆதரிக்க, கடைசி இரண்டு வாரத்தில்தான் கூட்டமைப்பு இந்த நிலைப்பாட்டை எடுத்தது.

சரத் பொன்சேகா வெற்றி பெறவில்லை. அவர் வெற்றி பெற மாட்டார் என்பது எனக்கு தேர்தல் பிரசாரம் ஆரம்பித்து இரண்டு வாரத்திலேயே புரிந்து விட்டது. ஆனாலும், அதை தொடர்ந்தேன். அதற்கு காரணம் உண்டு.

இலங்கை வரலாற்றில் சந்திரிக்கா சமாதான கோஷம் எழுப்பி 62% வாக்கை 1994ல் பெற்றார். அதை மகிந்தவால் யுத்த வெற்றி கோஷம் எழுப்பி கூட பெற முடியவில்லை. அதற்கு காரணம் யுத்த வெற்றியின் ஒரு பங்காளியான சரத்தை நாம் எதிரணியில் நிறுத்தினோம். சரத்தின் மூலம் மகிந்தவுக்கு செல்ல இருந்த கணிசமான வாக்குகளை பிரித்தோம். இது நடைபெறாவிட்டால், மகிந்தவின் சிங்கள-பெளத்த-இராணுவ அரசு இன்று இருப்பதை விட பலமான ஒரு சர்வதிகார அரசாக இருந்திருக்கும்.

ஆகவே சரத் வெற்றி பெறாவிட்டாலும் கூட அவர் மூலம், பேரினவாத கோட்டையை இரண்டாக நாம் பிரித்து விட்டோம். ஆகவே அன்றைய எம் நிலைப்பாட்டை எண்ணி நான் இன்று மகிழ்கிறேன்.

இப்போது சந்திரிக்கா பற்றி பேசப்படுகிறது. நானும் அவருடன் பேசியுள்ளேன். அவர் ஒன்றும் உடன்படவே இல்லை. அதற்குள் தமிழர்கள் சிலர் அவரது அன்றைய ஆட்சி காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை எடுத்து பட்டியல் போடுகிறார்கள்.

அடிப்படையில் நான் ஒரு மனித உரிமை போராளி. எனக்கு என்ன, இது தெரியாதா? தெரியும். சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகள் பற்றியும் எமக்கு தெரியும். சந்திரிக்கா, சரத் ஆகியோர் பற்றி சாதாரண மக்களுக்கு தெரியாத பல விடயங்கள்கூட எனக்கு தெரியும்.

அதுவல்ல, இங்கே கவனிக்கப்பட வேண்டியது. நான் ஒரு மனித உரிமை போராளி மட்டும் அல்ல. ஒரு அரசியல் கட்சி தலைவரும்கூட. (உண்மையில் இந்த பதவிதான் இதுவரை நிரந்தரமானது!).

ஆகவே நாம் அரசியல்ரீதியாகவும் சிந்தித்து காய் நகர்த்த வேண்டியுள்ளது. எதிரணியில் இருக்கின்ற சிங்கள சக்திகளை ஒன்று திரட்ட வேண்டியுள்ளது.

ரணில் முதற்கொண்டு சந்திரிக்கா, சரத், ஜேவிபி போன்ற சக்திகளை பொது மேடைக்கு கொண்டு வரமுடியுமா அல்லது இவர்களில் ஒரு சிலரையாவது கொண்டு வர முடியுமா என்ற முன்னேடுப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியுள்ளது. ஒன்று, மகிந்தவை தோற்கடிக்க வேண்டும். அல்லது, அவரது பெரும்பான்மை வாக்கு பலத்தை குறைக்க வேண்டும்.

“கருணாவை பிரித்த” ரணிலும் வேண்டாம், “கிரிசாந்தி புகழ்” சந்திரிகாவும் வேண்டாம், “இறுதி போரை நடத்திய” சரத்தும் வேண்டாம் என்றால் யார்? மகிந்த ராஜபக்சவா? என மனோ கணேசன் தனது முகநூலில் மேலும் தெரிவித்துள்ளார்.