இங்கிலாந்துக்காரனாய் இருந்து கொண்டு ஆப்பிரிக்க மக்களுக்காக மனித உரிமை பேசுகிறோம் என்று சொல்லி , போராடுகிற இயக்கங்களிடத்தில் இருக்கும் குறைகளை பெரிதாக்கி காண்பித்துக்கொண்டே , கள்ள மெளனத்தோடு காலனியாதிக்கத்தினை ஆதரிக்கும் வெள்ளைக்கார அறிவு சீவிகளுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல தமிழகத்தின் அறிவுசீவிகள்.

தமிழகத்தில் இருந்து கொண்டு ஈழப்பெண்களின் உரிமை, குழந்தைப் போராளிகள், ஈழ இசுலாமியர் உரிமை, புலிகள் பாசிசம் என்று 2009 மே மாதம் வரை வாய் கிழிய வட இந்தியாவிலும், சிற்றிதழ்களிலும், இந்தியாவின் அறிவுசீவி தளத்திலும் பேசி விட்டு , 2009க்கு பின்பு வெளியாகிக்கொண்டிருக்கும் இனப்படுகொலையின் ஆதரங்களைக் கண்டும் காணாமல் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த அறிவுசீவிகளே நாளை தெற்காசிய பிராந்தியத்திலும் , தமிழர்கள் வாழுமிடங்களிலும் நடக்க இருக்கும் மனித அவலங்களுக்கான அடித்தளத்தினை இடுகிறவர்கள்.

missing-09
ஏனெனில் இவர்களே சிங்களப் பேரினவாதத்தினை தமது அறிவுசீவி வாதத்திறமையினால் காத்தவர்கள். சிங்களப்பேரினவாதத்தினை காக்க ’புலிகளின் பாசிசம்’ என்கிற பிரச்சாரம் பயன்படுத்த முடியாத பொழுது ,அடுத்த ப்ராஜக்டுகளுக்கு நழுவிச் செல்வதை 2009க்குப் பின் அப்பட்டமாக காணமுடியும். புலிகள் இருக்கும் வரை இவர்களது அறிவுசீவி வணிகம் சிறப்பாக நடந்தது.

தமிழகத்தின் தீராநோயாக சீழ்பிடித்து நாற்றமடிக்கும் இந்தக் கும்பல்கள் அம்பலப்பட்டு ஒதுக்கப்படாவிட்டால் அடுத்தடுத்து மனித அவலம் அரங்கேறுவதை நாம் தடுக்க இயலாது..

ஈழப்பெண்கள் மீதான பாலியல் வன்முறை, படுகொலைகள் பற்றி யாஸ்மீன் சூகாவினுடைய அறிக்கை வெளியானது நமக்கு இரண்டு விடயங்களை விளக்கியது.

1. புலிகள் மீது விமர்சனம் வைத்து பெண் உரிமை பேசிய புலி எதிர்ப்பாளர்கள், யாஸ்மீன் சூகா அறிக்கையைப் பற்றி பேசாமல் நழுவியது அவர்களது போலித் தனத்தினை நமக்கு அம்பலப்படுத்தியது.

2. நமக்கு அருகில், நம்முடன் இருக்கும் ஈழப்பெண்களுக்கான அவலத்தினை ஆவணபடுத்துவதை எங்கோ இருக்கும் யாஸ்மீன் சூக செய்ய வேண்டி உள்ளது, ஆனால் இவர்கள் செய்யவில்லை என்றால் என்ன பொருள்?, இவர்களுக்கு இதைச் செய்வதில் எந்த ஒரு வணிக/ பொருளாதார/அரசியல் லாபமில்லை என்பதால் இதைச் செய்யாமல் தவிர்த்தார்கள் என்பதை உணரமுடியும்.

புலிகளை பாசிஸ்டுகள் என்கிற தோற்றத்தினை ஏற்படுத்தி , அரசுகள் புலிகளை தடை செய்வதற்கான கருத்தியல் தளத்தினை ஏற்படுத்திவிட்டு நகர்வது இவர்களது பணி. அதன் பின்னர் புலிகள் இயங்கிய தளத்தில் மக்கள் சந்திக்கும் அவலங்களுக்கும் புலிகளை காரணகர்த்தாவாக்கிவிட்டு அடுத்த வேலைத்திட்டத்திற்கு நகர்வார்கள். எந்த இடத்திலும் சிங்களப் பேரினவாதத்தின் முழு கோரத்தினையும் பதிவு செய்யமாட்டார்கள். இரண்டையும் சம தளத்தில் வைத்துப் பேசிவிட்டு சென்றுவிடுவார்கள்.

இப்படியான ஒரு நிலை பாலஸ்தீன மக்களுக்கும், போராளிகளுக்கும் ஏற்படாமல் இருக்க எட்வர்ட் செயித் உள்ளிட்ட பலர் அறிவுசீவி தளத்தில் போராடினார்கள். இதனாலேயே அங்கு மக்கள் பலியிடப்படுவது ஈழத்தினைப் போல லட்சக்கணக்கில் இல்லை. ஆனாலும் இவர்களைப் போன்றவர்கள் பி.பி.சி, வாசிங்கடன் போஸ்ட் போன்றவற்றில் எழுதுவதால் சில நூறு பாலஸ்தீன மக்களாவது வருடம் தோறும் கொலை செய்யப்படுகிறார்கள்.

இம்மாதிரியானவர்கள் நாசி ராணுவத்தினை விட ஆபத்தானவர்கள், வலிமையானவர்கள், கொடூரமானவர்கள், கொலைகாரர்கள். அரசினால் அழிக்க முடியாத மக்கள் போராளிகளை இவர்கள் தங்களது கருத்துருவாக்கத்தினால் வேட்டையாடுவார்கள். அரசு இனப்படுகொலையை அதன் பின் நிகழ்த்தும். அச்சமயத்திலும் அதன் பின்னரும் மெளனம் காப்பார்கள்.

அரசின் கூலிகளாக பேசும் கர்னல் ஹரிஹரன், சூரியநாராயணன், சத்தியமூர்த்தி, சோ, என்.ராம் போன்றவர்களுக்கும், அரசினை எதிர்க்கிறோம், தேசம் ஒரு கற்பிதம் என்று பேசும் இவர்களும் மக்கள் இயக்கங்களுக்கு எதிராக ஒரே குரலில் பேசுவார்கள்.

மக்கள் இயக்கங்களை, அரசின் கைக்கூலிகள் ’பயங்கரவாதிகள்’ என்பார்கள் ; ’பயங்கரவாதிகள்’ என்பதற்கான தர்க்க நியாயங்களை ’பாசிஸ்டுகள்’ என்பதன் ஊடாக , அரசு முத்திரை குத்தும் முன்பே இவர்கள் உருவாக்கி வைத்திருப்பார்கள். இந்த வலையில் மக்களும் சேர்ந்தே பலியாவார்கள்.

இவர்களைப் போன்ற கொலைகாரர்களை இனிமேல் இப்படியே அழைக்கவேண்டும். ” கருத்துருவாக்க அடியாட்கள்.”

திருமுருகன்காந்தியின் முகநூலில் இருந்து.