july-1983-2கறுப்பு யூலை (Black July, ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்த இனப்படுகொலை.

 

தமிழர்கள் உயிர்களையும் சொத்துக்களையும் அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்த கோரமான ஒரு நிகழ்வாகும்.

 

இது தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கை படையினரை திருநெல்வேலியில் படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு என கூறப்பட்ட போதும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட செயற்பாடாகவே ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

இது “இனக்கலவரம்” என்ற பொய்க்குள் நடைபெற்ற “இனப்படுகொலை” நிகழ்வாகும்.
உண்மையில் இக்கோர கறுப்பு யூலை நிகழ்வுகளே ஈழத்து தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தி போராட தூண்டியது என்று கூறலாம்.

 

மூன்று தசாப்தகாலமாக நடைபெற்ற தமிழ் மக்களின் அகிம்சை போராட்டம் தோற்றுப் போக தமிழ் இளைஞர்கள் மத்தியில் புரட்ச்சிகர ஆயுதப் போராட்டமாக மாறுவதற்கு தேவையான வலிமையை கருப்பு ஜூலை வலிகளில் இருந்தே ஈழத்து தமிழ் மக்கள் பெற்றார்கள்.

 

கருப்பு ஜூலையில் உச்ச வடிவம்…

 

வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்!

 

ஜூலை 1983 இல் இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறை நிகழ்வுகளின் போது இடம்பெற்ற உச்சக்கட்ட நிகழ்வைக் குறிக்கும். இதன் போது மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலை நிகழ்வில் எவரும் இன்று வரையில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை.

 

இப்படுகொலை நிகழ்வானது இரண்டு வெவ்வேறு நாட்களில் நடைபெற்றது. இரண்டும் கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான வெலிக்கடையில் இடம்பெற்றன. முதலாவது படுகொலை ஜூலை 25, 1983 இல் 35 தமிழ்க் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் கத்தி மற்றும் வாள்களினாலும் பொல்லுகளினாலும் குத்திக் கொல்லப்பட்டனர். இரண்டாவது நிகழ்வு இரண்டு

 

நாட்களின் பின்னர் ஜூலை 28ம் திகதி இடம்பெற்றது. இதில் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
வெலிக்கடைச் சிறைச்சாலையானது A, B, C, D என நான்கு குறுக்கு வடிவில் அமைக்கப்பட்ட பிரிவுகளைக் கொண்டது. இவற்றில் A3 B3 C3 மற்றும் D3 என்பன சிறைச்சாலையில் கீழ்ப் பகுதியில் உள்ளன. B3, C3 மற்றும் D3 இல் இருந்த அனைவரும் தமிழ் அரசியல் கைதிகளாகும். A3 இல் இருந்தவர்கள் அனைவரும் பயங்கரக் குற்றங்கள் சுமத்தப்பட்ட சிங்களக் கைதிகள்.

 

இப்படுகொலை நிகழ்வில் தப்பிப் பிழைத்தவர்களின் வாக்குமூலத்தின்படி சிறைச்சாலை அதிகாரிகளே அறைக்கதவுகளின் திறப்புகளை சிங்களக் கைதிகளுக்கு கொடுத்ததாக தெரிவித்தனர். ஆனால் சிறை அதிகாரிகளின் கூற்றுப்படி, சிங்களக் கைதிகள் தம்மிடம் இருந்து திறப்புகளைக் களவெடுத்ததாகத் தெரிவித்தனர்.

 

கருப்பு ஜூலையில் வெலிக்கடை சிறைப்படுகொலை, தென்னிலங்கை இனப்படுகொலை ஆகியன நிகழ்த்தப்பட்டன.

 

அதே நேரம் யாழில் திருநெல்வேலி படுகொலைகள் என்பது 1983, சூலை 24, 25 காலப் பகுதியில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் சிங்கள படைத்துறையால் 51 பேர் வரையான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும்.

 

யூலை 23, 1983 இலங்கைப் படைத்துறையினரின் பதின்மூன்று இராணுவம் கொல்லப்பட்டார்கள் என்பதை காரணம் காட்டி ஏற்கனவே சிங்கள பேரினவாதம் திட்டமிட்ட இனப்படுகொலையை கட்டவிழ்த்து தொடர்ந்து பலாலி, சிவன் அம்மன் கிராம், ஆகிய பகுதிகளில் புகுந்து ஸ்ரீலங்கா படைத்துறை தமிழர்களை படுகொலை செய்தது.

 

திருநெல்வேலி தாக்குதல் அல்லது போ போ பிராவோ (Four Four Bravo) என்பது யூலை 23, 1983 அன்று கடமையில் இருந்த 15 பேர் கொண்ட இலங்கை இராணுவ சுற்றுக்காவல் செய்பவர்களின் அழைப்புக் குறியீடாகும். இச் சுற்றுக்காவல் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இச் சம்பவம் கறுப்பு யூலை கலவரத்திற்கு அடிகோலி ஈழப்போரை ஆரம்பித்து வைத்ததென சிலரால் இப்பொழுதும் கருதப்படுகின்றது.

 

ஆனால் கறுப்பு யூலை படுகொலைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட முறையும் அளவும் அதற்கு அரச தரப்பில் இருந்த ஆதரவும் அதனை வெறும் பழித் தாக்குதலாகக் கருத முடியாது.
இந்த தாக்குதலை சாட்டாக வைத்து ஏற்கனவே திட்டமிட்டப்பட்டிருந்தபடி கொழும்பிலும் ஏனைய சிங்களப் பகுதிகளிலும் தமிழ் மக்கள் மீதான வன்முறைகளை ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் அரசு கட்டவிழ்த்துவிட்டது.
வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்

 

அரசில் முக்கிய அமைச்சர்களாக இருந்த பலரே தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தலைமையேற்று நடத்தினார்கள்.

 

வெலிக்கடைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலை அதிகாரிகளின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த கோரத் தாக்குதலில் 58 தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டார்கள்.

 

இந்த வன்முறைகள் தமிழர் வரலாறில் முதல் தடவையாக பாரிய இடப்பெயர்வை ஏற்படுத்தியது. இந்தியா அனுப்பிவைத்த கப்பல்களில் பெருந்தொகையான தமிழர்கள் தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அகதிகளாக அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

 

கருப்பு ஜூலையின் நெருப்பு நினைவுகள் தொடரும்….

 

செந்தமிழினி பிரபாகரன்