july-1983-1ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் மிக கொடூரமாக தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், தமிழர் உடமைகளை அழித்தும் கைப்பற்றியும், எரித்தும் என மாபெரும் இன அழிப்பு நடவடிக்கை தென்னிலங்கை தமிழர்கள் மீது மிகக் கொடூரமாக கட்டவிழ்த்த மாதம். கணகெடுத்த படுகொலைகள் ஏறத்தாள 3000 பேர் வரை எனினும் கணக்கின்றி படுகொலையானோர் விபரங்கள் இன்றளவும் அறியபடாமலேயே…தமிழர்கள் என்ற ஒற்றை காரணத்துக்காக படுகொலை செய்யப்பட்டார்கள் எம் தமிழர்கள் சிங்களவர்கள் வாழும் பகுதிகளில்!..குறிப்பாக தென்னிலங்கையில்! தென்னிலங்கையே தீ கக்கி வானெங்கும் கரும் புகையால் மூண்டு இருந்தது.

 

கடுக்கன் போட்ட அடையாளம் பார்த்து தமிழர்கள் தேடித் தேடி சிங்கள காடையர்களால் மிகக் கொடூரமாக துடிக்க துடிக்க கொல்லப்பட்டார்கள்! ஏராளமான பெண்கள் தெருவோரங்களில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கிழித்து வீசப்பட்டார்கள்..கோடிக்கணக்கான தமிழரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டும் அழிக்கப்பட்டும் சிதைக்கப்பட்டன.

 

இத்தனையும் இலங்கை அரசின் கண்காணிப்பில் அவர்கள் துணையோடு நடைபெற்றன. தென்னிலங்கையே சிங்களக் காடையர்கள் கையில் தமிழின அழிப்புக்கு இரையாகி சிதைந்து கொண்டிருந்த போதும் சிங்களக் காவற்படையும் இராணுவமும் எதையும் கண்டு கொள்ளாமல் கை கட்டி வாய் பொத்தி இன்னமும் காடையரை ஊக்குவித்துக் கொண்டும் இருந்தன.

 

“இது எம் தேசம் நீங்கள் வெளியேறுங்கள்” என கூவி கூவி தமிழரை அடித்த காவி உடை பிக்குகள் சிலர் அன்று பேயாட்டம் அடிய காட்சிகள் இன்னமும் எரிகின்ற தீச்சுவாலைகள் பின்னால் காட்சிகளாக விரிகின்றன.

 

july-1983-2அந்த வேளையில் எமக்காக எந்த நாடும் பேசவில்லை. கண்டனம் செய்த மற்ற நாடுகளுக்கும் “எங்கள் வேலை எங்களுக்குத் தெரியும்” என்று அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா திமிரோடு பதிலளித்தார்.

 

என் நாட்டு மக்களை அழிப்பேன் நீங்கள் யார் என்னை கேட்க என்ற தொனியில்.. தென்னிலங்கையில் பம்பலப்பிட்டி, மற்றும் இரத்மலானை பகுதிகளில் அடைக்கலம் தேடிய தமிழர்கள் தற்காலிக முகாம் அமைத்து தங்கி சொல்லொனா அவலங்களை அந்த முகாமில் அனுபவித்தார்கள்.
july-1983-2

 

பசி வலி இழப்பின் கொடுமை என அத்தனை வலிகளையும் சுமந்த மக்கள் வழி தேடி காத்து இருந்தார்கள்..பின்பு ஆயிரக்கணக்கான தமிழர்கள் சரக்கு கப்பல்களில் தேயிலை பெட்டிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் சொத்துக்களனைத்தும் கேட்பார் இல்லாமலே சூரையாடப்பட்டன.

 

வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளும் மிகக் கொடூரமான முறையில் வரலாற்று கொடும் நிகழ்வாக நடந்து முடிந்தன. ஏற்கனவே பல இனப்படுகொலைகள் சிங்களவர்களால் நடத்தப்பட்டாலும் அவையெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது இந்த 83 யூலைப் படுகொலை.

 

இந்த வருடம் 32 ஆம் ஆண்டை நிறைவை செய்யும் கறுப்பு யூலை ஒரு தலைமுறையை கடக்கின்றது. காலங்கள் கரைந்து கடந்து ஓடலாம். ஆனால் எம் நெஞ்சோரம் நிலைத்து நீங்கா நெருப்பாக தகித்துக் கொண்டிருக்கும் கொடிய கரும் நெருப்பாக யுக சோகத்திலிருந்து மூண்டெழும் தீயாக கருப்பு ஜூலை நெருப்பு நிகழ்வுகள் இன்றும் எரியூட்டி கொண்டே இருக்கின்றன. என்றும் எம்மை அணைய விடாமல் மூண்டெழும் கரும் தீயாக கருப்பு ஜூலை இன்னும் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் இருக்கும் என்பது உறுதி!