சிறீலங்காவில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரில் மயிரிழையில் உயிர்தப்பிய கத்தோலிக்க மதகுரு அன்ரன் ஸ்ரீபன் சிறீலங்கா அரசின் பயங்கரவாதத்தடுப்பு பிரிவினால் கடந்த புதன்கிழமை (03) விசாரணைசெய்யப்பட்டுள்ளார். உயிர்ப்பதிவு என்ற கவிதை நூல் ஒன்றை வெளியிட்டது தொடர்பிலேயே சிறீலங்கா அரச படையினர் அவரை விசாரணைசெய்துள்ளனர்.

uyirpathivu_cover
யாழ் மாவட்டத்தில் உள்ள ஆயரின் இல்லத்திற்கு சென்ற மூன்றிற்கு மேற்பட்ட சிறீலங்காப்படையினர் மதகுருவையும் அவரின் உதவியாளரையும் விசாரணை செய்துள்ளனர். இறுதிக்கட்டப்போரின் போது பாடசாலைகள், தேவாலயங்கள் மற்றும் வைத்தியசாலைகள் மீது சிறீலங்கா படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான வான் குண்டுவீச்சுக்கள் மற்றும் எறிகணை வீச்சுக்கள் தொடர்பான முக்கியமான சாட்சி ஸ்ரீபன் ஆவார்.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் அவர் தனது நூலிலும் கவிதையாக குறிப்பிட்டிருந்தார். வான் தாக்குதல்களை சிறீலங்கா அரசே மேற்கொண்டிருந்தது ஏனெனில் சிறீலங்கா அரசிடமே கிபீர் தாக்குதல் விமானங்கள் இருந்தன.

முன்னர் போர் இடம்பெற்ற ஏ-9 நெடுஞ்சாலையில் புதிதாக புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது தொடர்பில் மதகுரு எழுதிய கவிதையில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பிலும் சிறீலங்கா படையினர் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சிறீலங்கா அரசு சிங்களக் குடியேற்றங்களையும், படைக்குவிப்புக்களையும் துரிதமாக மேற்கொண்டு வருகின்றது.

உயிர்ப்பதிவு புத்தகத்தை வினியோகம் செய்த கிளிநொச்சி பாடசாலைகளைச் சேர்ந்த மூன்று தலைமை ஆசிரியர்களையும் சிறீலங்கா அரசு விசாரணை செய்துள்ளது. சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கையை சிறீலங்கா ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இந்த நூல்களை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே ஆசிரியர்களுக்கு அனுப்பியிருந்தார். சிறீலங்கா அரசின் இந்த நடைவடிக்கை மக்களின் கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயலாகும்.