காங்கிரஸ் கட்சி தமிழர்களின் உணர்வுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது – சீமான்

0
702

seeman1-300இலங்கை பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதங்கள் மட்டும் அனுப்பி வருகிறது. ஆனால், மத்திய அரசு இலங்கை நட்பு நாடு என்கிறது. போர் கப்பலை இந்திய அரசு இலங்கைக்கு பரிசாக வழங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி தமிழர்களின் உணர்வுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

மீனவர்கள் மீது தாக்குதல்

பரமத்தி வேலூரில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:–

இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகின்றனர். தமிழ்நாட்டில் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி, அதை தடுக்கும் முயற்சியில் பெரம்பலூரைச் சேர்ந்த அப்துல்ரவுப், துண்டு அறிக்கையை தயார் செய்து உடல் முழுவதும் மண்எண்ணெயை ஊற்றி பற்ற வைத்துக்கொண்டு துண்டறிக்கைகளை வீசிக்கொண்டே வீர மரணத்தை தழுவினார். அந்த முதல் தமிழரின் நினைவு நாளான 15–ம் தேதி வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இலங்கை தமிழர்கள் குறித்து நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் பயனற்றது. இலங்கை பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதங்கள் மட்டும் அனுப்பி வருகிறது. ஆனால், மத்திய அரசு இலங்கை நட்பு நாடு என்கிறது. போர் கப்பலை இந்திய அரசு இலங்கைக்கு பரிசாக வழங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி தமிழர்களின் உணர்வுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

இலவசங்களை ஒழிக்க வேண்டும்

தமிழக திராவிட அரசியல் கட்சிகளுக்கு எந்த நிலைப்பாடும் கிடையாது. தேர்தல் நேரத்தில் மட்டுமே அறிக்கைகளை விடுகின்றன. மக்கள் பிரச்சினைகளை அரசு கையில் எடுக்காதபோது, மக்களே அரசை கையில் எடுப்பதை தவிர வேறு வழியில்லை. காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டு கால அரசியல் மக்களுக்கு எரிச்சலை மட்டும் அடைய செய்துள்ளது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி முன் உதாரணமாக உள்ளது. மக்கள் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக விஜயகாந்திற்கு வாக்களித்தனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. இலவசங்களை ஒழிக்க வேண்டும். புரட்சியால் மட்டுமே ஆட்சியை சரி செய்ய முடியும். மக்கள் மனதில் மாற்றத்தை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் நாமக்கல் தெற்கு மாவட்ட இணைச் செயலாளர் முத்துராம் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொருப்பாளர்கள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பாண்டமங்கலத்தில் கொடியேற்று விழாவும், வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சீமான் கலந்துகொண்டார். பின்னர் ராசிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

Dinathanthi