praba-1980sஇந்த நூற்றாண்டின் தலைசிறந்த புரட்சியாளன் தலைமையில் நடந்த ஒரு விடுதலைப் போராட்டம் ஒரு சிலரின் அதிகார – பதவி சுகத்திற்கான வடிகாலாக போவதுடன் முடிவடையப் போவதை கட்டியம் கூறி நிற்கின்றன சிங்கள நாடாளுமன்ற தேர்தலை அடுத்த தமிழ் அரசியல்வாதிகளின் கூத்துக்கள்.

 

நடந்த மற்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இனஅழிப்பை மறந்து விட்டு தேர்தல் அரசியலுக்குள் தம்மை புதைத்துக் கொண்டு பெரும் அக்கப்போரை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். சிங்கள அரசியல் யாப்புக்குட்பட்ட எந்த தீர்வும் குறிப்பாக தேர்தல்கள் எமக்கு விடுதலையை தந்துவிடப்போவதில்லை என்ற உண்மையை இவர்களது அதிகார போதை மக்களுக்கு செல்லவிடாமல் மறைத்துக்கொண்டிருக்கிறது.

 

கட்சி அமைப்பு வேறுபாடின்றி இங்கு அனைவருமே தம்மை இதில் பங்காளியாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

 

புலிகள் தாங்கள் பங்கெடுக்கவிட்டாலும் புறச்சூழலின் நெருக்கடிகளையும் அதன் விளைவுகளையும் முன்னுணர்ந்து தேர்தல் அரசியலுக்கு வழிவிட்டு சில சமயங்களில் ஒதுங்கி நின்றிருக்கிறார்கள். அதன் விளைவாக பிறந்ததுதான் ‘தமிழத் தேசிய கூட்டமைப்பு’

 

மே 18 இற்கு பிறகும் புலிகள் ஒரு ஆளுகை செலுத்தும் சக்தியாக இருந்திருப்பார்கள் என்றால் எப்போதோ கூட்டமைப்பை கலைத்திருப்பார்கள் என்பதே யதார்த்தம். இப்போது புலிகளின் பாத்திரத்தை மக்கள் ஏற்றுள்ளார்கள்.

 

அரசியல்வா(வியா)திகள் மிகத் தெளிவாக புரிய வேண்டிய செய்தி இது. தேர்தல் அரசியலுக்கு புலிகள் சில தருணங்களில் வழி விட்டது போல் தமக்கான ஒரு மக்கள் – போராளித் தலைமையை மீள அடையாளம் காணும்வரை ஒரு தற்காலிக பாத்திரமாக தமிழ் அரசியல்வாதிகளை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இது நிரந்தரமான பதவி இல்லை என்பதை தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களது பினாமிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

மக்கள் தமிழரசுக்கட்சிக்கோ, தமிழத்தேசிய முன்னணிக்கோ அல்லது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் வேறு எந்த கட்சிகளுக்கோ தனித்த எந்த அங்கீகாரத்தையும் வழங்கிவிடவில்லை – இனியும் வரலாற்றில் அதை வழங்கப்போவதும் இல்லை.

 

ஆனால் இந்த புரிதல் இல்லாததன் விளைவுதான் அரசியல்வா(வியா)திகள் பெரும் அக்கப்போரையும் அழிச்சாட்டியத்தையும் தமிழ் அரசியல்பரப்பில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

 

இவையெல்லாம் நாம் பல தடவை எழுதி எமக்கே சலித்துப்போன கருத்துக்கள். ஆனால் திரும்ப திரும்ப தேய்ந்து போன ‘ரெக்கோட்’ மாதிரி எம்மை பேசும் நிலைக்கு எம்மை தள்ளிக்கொண்டேயிருக்கிறார்கள் ‘தேர்தல்’ அரசியல்வாதிகள்.

 

இங்கு நாம் பேச வந்த பிரதான விடயம் அதுவல்ல.

 

அண்மையில் சிங்கள நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை அடுத்து விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் பெயரில் ‘ஜனநாயகப் போராளிகள் கட்சி’ என்ற பெயருடன் மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன் தலைமையில் ஒரு அணி களமிறங்கியுள்ளது.

 

இதன் பின் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் பேராளிகளுக்கான அரசியல் களம் திறக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் சுருக்கமாகப் பார்ப்பதே இந்த பத்தியின் நோக்கமாகும்.

 

முதலில் இந்த கட்சி அல்லது அமைப்பு உருவாகிய பின்புலத்தை மிகச் சுருக்கமாகப் பார்ப்போம். ஏனென்றால் அதை ஆரம்பம் தொட்டு எழுதத் தொடங்கினால் பல்லாயிரம் பக்கங்களில் எழுதிக் குவிக்க வேண்டியிருக்கும். மேற்குலக – பிராந்திய சதிகள் குறித்து எல்லாம் எழுத வேண்டியிருக்கும். எனவே அதை பிறிதொரு தருணத்தில் பார்ப்போம். தற்போதைய தேவை கருதி சுருக்கமாக அதை பதிவு செய்கிறோம்.

 

இந்த கட்சி ஏதோ திடீரென்று முளைத்தது என்று நம்பினால் உங்களுக்கு தமிழீழ அரசியல் குறித்து போதிய அறிவு இல்லை என்பதே அர்த்தம். 2009 இனஅழிப்பு முடிந்த பிற்பாடு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதே இதற்கான முனைப்புக்கள் தொடங்கப்பட்டன. ஆனால் அன்றைய சூழல் அதற்கு ஏதுவானதாக இல்லை என்பது மட்டுமல்ல அதற்கான தேவையும் இதன் பின்னணியில் இருந்தவர்களுக்கு தேவைப்படவில்லை.

 

இங்கு போராளிகளை ‘முன்னாள் பேராளிகள்’ என்று விளிப்பதை கருத்தியல் ரீதியாகவும் கோட்பாட்டுரீதியாகவும் நாம் கொள்கையளவில் நிராகரிக்கிறோம். அரசியல்ரீதியாக அது தவறு என்றும் கருதுகிறோம். எனவே ‘பேராளிகள்’ என்றே இந்த பத்தியில் அடையாளப்படுத்த விரும்புகிறோம்.

 

இங்கு ஊடகவியலாளர் வித்தியாதரனின் பெயர்தான் பரவலாக இந்த கட்சியின் பின்னணியில் பேசப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. அவரை முன் தள்ளி பின் நிற்பவர்கள் வேறு நபர்கள். குறிப்பாக ‘விடுதலைப்புலிகள்’ பத்திரிகையின் உதவி ஆசிரயராக இருந்து பின்பு அதிலிருந்து விலகி அமெரிக்காவில் குடியேறிய . பொபி அல்லது வழுதி என்றழைக்கப்படும் பரந்தாமன் என்ற நபரே இதன் பிரதான பாத்திரமாவார்.

 

துரோகத்தால் வீழத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் இறுதிக்கணங்களில் இவரது துரோகப் பாத்திரம் குறித்து நிறைய கதைகள் உள்ளன. அவற்றை எழுதித் தீராது. அமெரிக்க, இந்திய, சிங்கள புலனாய்வாளர்களின் செல்லப்பிள்ளையாக வலம் வருபவர் என்பதே இவரைப்பற்றிய ஒருவரி விபரணமாகும்.

 

மே 18 இற்கு பிறகு அழிக்கப்பட்ட போராட்டத்தின் மிச்சம் மீதியாக உள்ள தமிழ்த்தேச அரசியலை நிர்மூலம் செய்ய பிராந்திய – மேற்குலக சதி வலையமைப்பினால் அமெரிக்காவிலிருந்து கொழும்புக்கு இடம் பெயர்க்கப்பட்ட நபர் இவர்: என்பதே இங்கு பிரதானமாக நாம் கவனிக்க வேண்டிய செய்தியாகும்.

 

புலிகளினால் கட்டாய ஆட்சேர்ப்பு மூலம் சேர்க்கப்பட்ட போராளிகளே இன்னும் இனஅழிப்பு முகாம்களில் ‘களி’ தின்று கொண்டிருக்கும் போது 2009 இல் தாயகத்திற்கு வெளியில் நடந்த புலிகளின் வலையமைப்பை – நகர்வுகளை குமரன் பத்மநாதனுடன் சோந்து கையாள்வதாக ‘கதை’ விட்ட ஒரு நபர் எப்படி இனஅழிப்பு முடிந்து ஒருசில மாதங்களிலேயே கொழும்பு சென்றார் என்பதும் எப்படி அமெரிக்கத்தூதரகத்தில் பணியில் அமர்த்தப்பட்டார் என்பதையும் ஒருசெர எடைபோட்டு பார்த்தாலே சில உண்மைகளை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

 

இவரது பின்னணியில் வரும் ஒரு கட்சியை – அத்தோடு தாயகத்தில் இனஅழிப்பு வதை முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட போராளிகள் தாயகத்தில் சிங்கள புலனாய்வாளர்களால் எதிர்கொண்டுவரும் சிக்கல்களையும் ஒரு சேர நோக்கும் போது இந்த வருகையை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது தவிர்க்க முடியாததாகிறது.

 

ஆனால் இங்கு தேர்தலில் குதித்துள்ள கூட்டமைப்பு தொடக்கம் ததேமமு மற்றும் சுயாதீன குழுக்கள் வரை யாருமே எந்த வேறுபாடுமின்றி ‘புலிநீக்க’ மற்றும் ‘தமிழீழ நடைமுறை அரசை’ நிர்மூலம் செய்யும் அரசியலில் குதித்துள்ளபோது நாம் எப்படி ‘ஜனநாயகப் போராளிகள் கட்சி’யை மட்:டும் விமர்சிக்கவும் புறம் தள்ளவும் முடியும்?

 

மிக முக்கியமான தத்துவார்த்தக் கேள்வி இது.

 

இது நிற்க.. கொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கிப் போவோம்.

 

un_24_07-pulithan2009 தமிழின அழிப்பின் இறுதிக்கட்டம். பிராந்திய – மேற்குலக சதிகள் மற்றும் உள்ளக துரோகங்களினால் தமிழர் தேசம் முற்றாக அழிக்கப்பட்டு கொண்டிருந்த நிலையில் தலைவர் பிரபாகரன் தனித்த ஒரு மனிதனாக இதற்கு எதிரான பகடையாட்டத்தை ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். விளைவாக இந்த கூட்டணிக்கு எதிராக பல ‘செக்’களை வைத்த தலைவர் பிரபாகரன் அதன் ஒரு கட்டமாக அனைத்துலக அனுசரணையுடன் அரசியற் போராளிகள் ஐநா விடம் ஒப்படைக்கப்படுவதற்கு காய் நகர்த்துகிறார். ஆனால் தமிழின அழிப்பில் ஒரு பங்காளியாக செயற்பட்ட ஐநா இதை வெற்றிகரமாக செய்து முடிக்காதென்பதும் அதை பிராந்திய – மேற்குலக சதி வலையமைப்பு முடக்கும் என்பதையும் தெரிந்திருந்த போதும், மூன்று முக்கிய நோக்கங்களை முன்வைத்து அதை செய்ய புகுந்தார்.

 

01. ஆயுதமின்றி ஐநா அனுசரணையாளர்களை நோக்கி போகும் அரசியல் போராளிகளை கொல்லும் சிங்களத்தின் அப்பட்டமான இனஅழிப்பை அம்பலப்படுத்துவது

 

02. மேற்குலக – ஐநா வுடன் பேசிய பின் சென்ற பேராளிகளை காப்பாற்றாது தமிழின அழிப்புக்கு துணைநின்ற ஐநாவை அம்பலப்படுத்துவது

 

03. இனஅழிப்பு அரசின் படைகளையும் பிராந்திய மற்றும் மேற்குலக சதிவலையமைப்பையும் தாண்டி ஒருவேளை ஐநாவினால் அரசியற் போராளிகள் காப்பாற்றப்பட்டால் கள யதார்த்தம் கருதி ஆயுத வழி முறைகளை கைவிட்ட தமிழ்த்தேச அரசியலை அவர்கள் முன்னெடுப்பார்கள் என்ற நோக்கம் கருதியது.

 

யோகரட்ணம் யோகி தலைமையிலான ஒரு தொகுதி அரசியற்போராளிகள் அணி ஒருசேர ஆயுதங்களை கைவிட்டு சென்றது இந்த பின்னணியில்தான்.. தலைவர் பிரபாகரன் எதிர்பார்த்த முதல் இருவிடயங்களும் நடந்தன. மூன்றாவது யோசித்த விடயத்திற்கு இனஅழிப்பு படைகளும் பிராந்திய மேற்குலக சதிவலையமைப்பும் அனுமதிக்கவில்லை.

 

எனவே மே 18 அன்றே தலைவரின் நகர்வின் பிரகாரம் ‘ஜனநாயகப் போராளிகள் கட்சி’ க்கான தேவை ஊன்றப்பட்டுவிட்டது.

 

ஏனென்றால் இந்த இனத்தை வழி நடத்தவும் அதற்கான சரியான அரசியலை செய்யவும் அந்த போராளிகளால்தான் முடியும். அதுதான் தமிழ்மக்களின் ஒற்றைத் தேர்வும் ஆகும். தற்போது இந்த இடைப்பட்ட ஆறாண்டுகளில் தமிழ் அரசியல்வாதிகளும் மேட்டுக்குடி கனவான் அரசியல் செய்பவர்களும் அடிக்கும் கூத்தைப்பார்த்தால் அதை இன்னும் ஆழமாகவே உணர முடியும்.

 

ஆனால் அதற்காக அந்த போராளிகளை பலிக்கடாக்களாக்கி வரும் நயவஞ்சக அரசியலை நாம் அனுமதிக்கவும் முடியாது.

 

மே 18 இற்கு பிறகு கூட அன்று மட்டுமல்ல என்றுமே புலிகளின் தலைமைதான் தமக்கான அரசியலை வென்றெடுக்கும் ஒரே சக்தி என்று நம்பும் மக்கள் திரளை குழப்ப – அல்லது அதன் இயங்கியல் போக்கை சிதைக்க கேபி தொடக்கம் கேணல் ராம் மற்றும் கேணல் பதுமன் வரை சிங்கள – அன்னிய புலனாய்வு அமைப்புக்கள் களமிறக்கிய சதியை இந்த பின்புலத்தில் வைத்து நாம் புரிந்து கொள்ள முடியும்.

 

இனி விடயத்திற்கு வரலாம்.

 

இங்கு யாருமே யோக்கியர்களாக இல்லாத சூழலில் வழுதியையும் வித்தியாதரனையும் மட்டும் அவர்களது பின்புலத்தை வைத்து கேள்வி கேட்பது அறம் கிடையாது.

 

அவர்கள் தமது நலனுக்காக அல்லது தமது எஜமானர்களின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் போராளிகளை தேர்தல் களத்தில் இறக்கலாம். ஆனால் அந்த நிகழ்வு இங்கு முக்கியமானது. நமது அரசியல்வாதிகளும் அதன் பினாமிகளும் செய்ய மறந்ததை அல்லது செய்ய விரும்பாததை எதிரிகள் தமதாக்கிகொள்ள எத்தனிக்கிறார்கள் என்பதே இதன் மறுவளமான செய்தி.

 

வித்தியாதரன் கடந்த வாரம் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் கூறிய ஒரு விடயம் முக்கியமானது. அதாவது, ‘இந்த இனத்திற்காக – இந்த மக்களுக்காக முன்னின்று போராடியவர்கள் விடுதலைப்புலிகள். தமது உயிரை துச்சமென மதித்து அதை விலையாகக் கொடுத்து நேர்மையாக போராடிய போராளிகள். அவர்களது ஆயுத போராட்டம் மவுனிக்கப்பட்ட சூழலில் இந்த இனத்திற்கான வாஞ்சை – அபிலாசை சரியாக பிரயோக்கிக்கப்படாமல் அவர்கள் புறக்கணிக்கப்பட்ட ஒரு சூழல் கவலைக்கிடமானது. அவர்கள் ஜனநாயக வெளியில் இயங்குவதற்கான ஒரு இடைவெளியை அல்லது சூழலை நாம் உருவாக்கவில்லை.’ என்கிறார்.

 

வித்தியாதரன் தனது உள் நோக்கங்களுக்காக சொல்கிறார் என்பதற்காக அதன் மைய சரடை நாம் ஏற்காமல் இருக்க முடியாது.

 

நாம் இந்த இடைப்பட்ட காலங்களில் ஒன்றிணைந்து இந்த சூழலை உருவாக்க முனைந்திருக்க வேண்டும். அதுதான் சரியான அரசியல் தேர்வும்கூட. இந்த இனத்தை வழிநடத்தும், ஆளும் தலைமை போராளிகளிலிருந்துதான் உருவாக முடியும் – உருவாக வேண்டும். எனவே இனியாவது பேராளிகள் ஜனநாயக வெளியில் இயங்குவதற்கான முதல் அடியை எடுத்து வைப்போம்.

 

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு போராளிகளைத் தமது கூட்டமைப்பில் இணைக்காததற்கு கூறிய காரணங்கள் அயோக்கியத்தனமானது. இன்னும் இன்னும் பயங்கரவாத முத்திரைகளை குத்தி ‘புலிநீக்க’ அரசியல் செய்வதன் ஒரு பகுதி இது.

 

‘தமிழீழம்’ என்ற நடைமுறை அரசை உருவாக்கி அதன் மையமாக இருந்த போராளிகள் அனைவரையும் ஒரு தட்டில் வைத்து மதிப்பிட்டு அவர்களை அரசியல் நீக்கம் செய்வதென்பது அயோக்கியத்தனமானது.

 

எமக்காக போராடி இன்னும் இந்த இனத்தின் மீதான வாஞ்சையில் களமாட புகும் போராளிகளை சந்தேக கண்கொண்டு பார்க்கும் வரலாற்று அவலத்தின் ‘காட்சிப்பிழை’ என்னவோ?

 

‘நாரதர் கலகம், நன்மையில் முடியும்’ என்பார்கள். ‘ஜனநாயகப் பேராளிகளின்’ இந்த திடீர் தேர்தல் வருகையை நாமும் நிபந்தனைகளுடன் விமர்சிக்கவே முற்படுகிறோம்.

 

ஆனால் வரும் காலங்களில் எதிரிகளின் நிகழச்சி நிரலை தாண்டிய ஒரு புறச்சூழலை உருவாக்கி போராளிகளை அரசியல் பரப்புக்குள் இறக்குவதனூடாகவே தமிழ்தேசிய போலிகளையும் பினாமிகளையும் விரட்டியடித்து தமிழ்த்தேச அரசியலை வென்றெடுக்கும் யுக்தியை நாம் வகுதத்துக் கொள்ள முடியும்.

 

ஈழம்ஈநியூஸ்