காணாமல்போன மகனை மீட்க போராடிய தாய் கைது: சனல்-4 ஊடகம்

0
632

missing-sisterஇலங்கையின் உள்நாட்டுப் போரின் போது காணாமல்போன தனது மகனை மீட்டு தருமாறு போராடி வந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது 13 வயதான மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கடந்த நவம்பர் மாதம் சென்றிருந்த போது காணாமல் போனவர்களின் குடும்பங்கள், காணாமல் போன தமது உறவினர்களை தேடி தருமாறு கோரி நடத்திய கவன ஈர்ப்பு போராட்டத்தில் இவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு பின் ஜெயக்குமாரி அச்சுறுத்தப்பட்டு, எச்சரிக்கப்பட்டிருந்ததாக சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்களில் தமது மகனை தேடி போராட்டத்தை முன்னெடுத்து வந்த அவரும் அவரது 13 வயதான மகளும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜெயக்குமாரி மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகளின் தாயாவார். மூத்த மகன் போர் நடைபெற்ற போது இனந்தெரியாத ஆயுததாரியினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இரண்டாவது மகன் போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்தார். 15 வயதான மகிந்தன் என்ற அவரது இளைய மகன் விடுதலைப் புலிகளால் இறுதிக்கட்டப் போரின் போது அவர்களின் படையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர், ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சரணடைந்த போது அவரது மகனும் சரணடைந்தாக ஜெயகுமாரி தெரிவித்தார்.

இறுதியில் அவரும் அவரது மகளும் மட்டுமே குடும்பத்தில் எஞ்சியிருந்தனர். தனது மகன் காணாமல் போயுள்ளதாக ஜெயக்குமாரி முறைப்பாடு செய்த போதிலும் இலங்கை அரசாங்கம் அதனை மறுத்துள்ளது.

இலங்கையில் காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்கள் ஜெயக்குமாரி மகனும் உள்ளடக்கப்பட்டார். இலங்கையில் 6 ஆயிரம் பேர் காணாமல்போனதாக பட்டியலிடப்பட்டுள்ளதுடன் பலர் அந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

ஜெயக்குமாரியும் அவரது மகளும் தனது மகிந்தன் சரணடைந்தமை குறித்து அரச அதிகாரிகளிடம் தெரியப்படுத்த அவரை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்த போதிலும் அதிகாரிகள் அதனை மறுத்துள்ளதுடன் அவர் தடுப்பு காவலில் இல்லை எனக் கூறிவந்தனர்.

எனினும் அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில் அவரது மகனது புகைப்படம் இருந்தாகவும் அவர் புனர்வாழ்வு முகாமில் இருப்பதை கப்டன் ஒருவர் காட்டியதாகவும் கைதிகளான முன்னாள் போராளிகளில் தனது மகனும் இருந்ததாக ஜெயக்குமாரி கூறியுள்ளார்.

இலங்கையில் இவ்வாறான விடயங்கள் பற்றி பேசுவது மிகவும் ஆபத்தானது எனவும் ஜெயக்குமாரிக்கும் அவரது மகளுக்கு சத்தமாக அழுது தமது குமுறுலை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிடைத்தது.

பொதுநலவாய நாடுகளில் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை சென்றிருந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.

பொலிஸார் எவரையும் அவர் அருகில் செல்ல இடமளிக்கவில்லை. எனினும் பொலிஸாரின் தடையையும் தாண்டி அழுது புலம்பிய காணாமல் போனவர்களின் உறவினர்களை பிரதமர் சந்தித்தார்.

இதன் போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை மீட்டுத் தருமாறு செய்தியாளர்களிடம் நேரடியாக தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்கள் குறித்து உண்மையை அறிய விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் கூறுகிறது.

ஆனால் காணாமல் போனவர்கள் பற்றிய சாட்சியங்களை வழங்குபவர்கள் அச்சுறுத்தப்படும் தகவல்கள் ஏராளம். சாட்சியம் அளிப்பவர்களை பாதுகாக்க திட்டங்கள் இல்லாத நிலையில், சாட்சியாளர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெயக்குமாரி இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் கொடூரமான இந்த சட்டத்தின் கீழ் அவரை நீண்டகாலம் தடுத்து வைக்க முடியும். அவரது மகள் பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் ஜெயக்குமாரி எனக்கு காணொளி மூலமான கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

எதிர்ப்பு பேரணிகளில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பும் போது இனந்தெரரியாத நபர்கள் தன்னை பின் தொடர்வதாகவும் பாரிய அச்சுறுத்தல் இருப்பதாகவும் உயிர் பாதுகாப்புக்கு தொடர்பில் அச்சத்துடன் இருப்பதாகவும் அவர் அதில் கூறியிருந்தார்.

காணாமல் போனவர்கள் உறவினர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தும் போது தனது மகனை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்து தாம் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும் போது பலர் தம்மை புகைப்படம் எடுப்பதாகவும் அவர்களில் பலரை தமக்கு தெரியாது எனவும் ஜெயக்குமாரி தெரிவித்திருந்தார்.

சனல் 4 தொலைக்காட்சியில் தமது நேர்காணல் வெளியானதில் இருந்து பல சந்தர்ப்பங்களில் தாம் இனந்தெரியாத நபர்களினால் பின் தொடரப்பட்டதாகவும் மகளுடன் கிராமத்தில் வாழும் தான் அங்கு அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும் ஜெயக்குமாரி குறிப்பிட்டிருந்தார் என கெலும் மக்ரே கூறியுள்ளார்.

அதேவேளை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்களின் நடவடிக்கை குழுவின் கூட்டத்தின் பின்னர் லண்டனில் நேற்று செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டார்.

பொதுநலவாய நாடுகளின் தலைமை பதவியை இலங்கை தற்போது வகித்து வருகிறது.கருத்து சுதந்திரம் உட்பட பொதுநலவாயத்தின் மதிப்புகளை பாதுகாக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.

ஆனால் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுக்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை.

மேற்படி கைது சம்பவம் குறித்தும் பொதுநலவாயத்தின் மதிப்புகள் பற்றியும் அமைச்சரிடம் நாம் கேள்வி எழுப்பிய போது, சம்பவம் பற்றி ஆராயமல் பதிலளிக்க முடியாது எனக் கூறினார்.

இதற்கு நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும். இலங்கையில் நீதித்துறையின் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உண்மையை புறநிலையாகவும் ஆழமாகவும் ஆராய்ந்து பார்க்காது ஒரு முடிவுக்கு வருவது தவறானது என நான் நினைக்கின்றேன் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், ஜெயகுமாரி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுடன் சட்டத்தின் பரிசீலனைக்கு உட்படுத்தப்படாமல் அவர் காலவரையறையின்றி, தடுத்து வைக்கப்படலாம் என்பதே இங்குள்ள பிரச்சினையாகும் எனவும் கெலும் மக்ரே குறிப்பிட்டுள்ளார்.