சர்வதேச காணாமல் போதலுக்கு எதிரான தினமான இன்று வவுனியாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்தவிற்கும் கோத்தா மற்றும் படையினருக்கெதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் வீதி மறியல் போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே வட மாகாணத்தின் ஐந்து மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் காணாமல் போனோரின் உறவுகளின் இணையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஊர்வலத்திற்கு காவல்துறை தடை விதித்தமைக்குப் பல தரப்புகளும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

vavuni-miss
முன்னதாக வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை காணாமல் போதலுக்கு எதிரான சர்வதேச நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன் போது அரசியல் பிரமுகர்களின் உரைகள் உட்பட பல்வெறு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்காக வவுனியா அரசாங்க அதிபரிடம் மகஜரொன்று கையளிப்பதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வட மாகாணசபை அமைச்சர்கள், வட மாகாண சபை உறுப்பினர்கள ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக இணைப்பாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி.பாஸ்கரா மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ மதபிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதற்கான நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் ஊர்வலமாக வவுனியா மாவட்ட செயலகம் வரை செல்வதற்கு தீர்மானித்து நகரசபை மண்டபத்திற்கு வெளியில் வந்ததும் காவல்துறை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரனிடம் ஊர்வலமாக செல்ல அனுமதி இன்மையால் அவ்வாறு செல்ல வேண்டாம் எனக் கூறினர். எனினும் பாராளுமன்ற உறுப்பினர் நாம் எவருக்கும் தொந்தரவின்றி வீதியோராமாக எமது காரியமொன்றிற்காகச் செல்லப்போகின்றோம் என தெரிவித்து நடந்து சென்றனர்.

இவருடன் அரசியல் பிரமுகர்கள் காணாமல் போனோரின் உறவுகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பலரும் சென்ற சமயம் நகரசபை வாயிலுக்கு அருகாமையில் கலவரத்தடுப்பு பொலிஸாரினால் தடைகள் போடப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர். இதன்போது ஊர்வலமாகச சென்றவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கலவரத்தடுப்பு பொலிஸாரை தள்ளியவாறு சிலர் பொலிஸாரை கடந்து சென்றனர். எனினும் ஏனையோரை பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் ஒவ்வொருவராக செல்லுமாறு பணித்தனர். இதன் பின்னர் பகுதி பகுதியாக வந்தவர்கள் மீண்டும் ஏ9 வீதிக்கு அருகாமையில் வைத்து ஒன்று திரண்டு பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக செல்ல முற்பட்டனர்.

vavunia-missing
இதனையடுத்து மீண்டும் பொலிஸார் தடை விதித்ததுடன் எக்காரணம் கொண்டும் செல்ல அனுமதிக்க மாட்டோம் என தொவித்தனர். இதனால் மீண்டும் ஊர்வலமாக சென்றவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இந் நிலையில் ஊர்வலமாக சென்றவர்கள் வீதியின் குறுக்காக அமர்ந்து கொண்டதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் போக்குவரத்துத் தடைப்பட்டுக்கொண்டது.

இவ்வாறு வீதியில் அமர்ந்தவர்கள் ஜனாதிபதிக்கு எதிராகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸாருக்கு எதிராக கோசங்களை எழுப்பினர். நீண்ட இழுபறிகளின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் மகஜர் கையளிக்கப்பட்டன் பின்னர் அனைவரும் கலைந்து செனறிருந்தனர்.