இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் குறித்து, அங்குள்ள அரச சார்பற்ற அமைப்பான மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் பெரும் கவலை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக ஆணைக்குழுவின் விசாரணைகளில் சாட்சியமளிப்பவர்களுக்கான மொழிபெயர்ப்பின் தரம் மிகவும் மோசமாக இருந்ததாகவும், சாட்சிகளுக்கு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்கிடமாக இருப்பதாகவும், விசாரணையில் கேட்கப்படும் கேள்விகள் சில பதில்களை நிர்ணயித்து விட்டு அதனை பெறும் நோக்கில் கேட்கப்படுவது போல இருப்பதாகவும், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
mannar_commission_missing_512x288_bbc
இது குறித்து பிபிசியிடம் பேசிய மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பைச் சேர்ந்த பாக்கியஜோதி சரவணமுத்து அவர்கள், இவை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

குறிப்பாக முழங்காவில் மற்றும் பூநகரி ஆகிய இடங்களில் நடைபெற்ற விசாரணைகளின் போது மொழிபெயர்ப்பில் இடம்பெற்ற பல தவறுகளை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

சாட்சிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படாமை குறித்து கவலை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, காணாமல் போனவர்களுக்கான ஆணைக்குழுவின் விசாரணை நடைபெறும் இடங்களில் பெருமளவு படையினர் காணப்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகிறது.

அத்தோடு விசாரணை நடைபெறும் இடங்களில் சாட்சியமளிக்க வருபவர்கள் புலனாய்வுப் பிரிவினர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்களால் புகைப்படம் பிடிக்கப்பட்டதாக அது கூறுகிறது. இப்படியாக படம் பிடிக்கப்படும் யுக்தி மூலம் சாட்சிகள் பயமுறுத்தப்படுவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

அதேவேளை சில சந்தர்ப்பங்களில் சாட்சிகளிடம் கேட்கப்படும் கேள்விகள், ஆணைக்குழுவினர் ஏற்கனவே நிர்ணயித்த ஒரு பதிலை கூறும் வகையில் சாட்சிகளை இட்டுச் செல்ல முயற்சிப்பதை உணரக் கூடியதாக இருப்பதாகவும் மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.

இந்தக் கவலைகளை திறந்த விசாரணைகளின் போது தாம் அவதானித்த விடயங்களில் அடிப்படையிலேயே தாம் எழுப்புவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
அதேவேளை, இந்த விடயங்கள் குறித்து தாம் ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டுவந்ததாக பாக்கியஜோதி சரவணமுத்து தமிழோசையிடம் தெரிவித்தார்.

”இந்தப் பிரச்சினைகளை தீர்த்துவைக்க அதற்கு அரசாங்கத்தின் உதவி தேவை. அரசாங்கத்தின் உதவியின்றி ஆணைக்குழுவால் இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் குற்றச்சாட்டு குறித்து காணாமல் போனவர்களுக்கான ஆணைக்குழுவின் கருத்துக்களை உடனடியாகப் பெறமுடியவில்லை.

பிபிசி