காணாமல் போனோர் – சாட்சிகள் அற்ற போரின் எஞ்சிய சாட்சிகள் – ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழு

0
624

naaniசிறீலங்கா அரசின் இனஅழிப்பு போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களிற்கு நீதி வேண்டியும், தொடர் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் தமிழ் மக்களின் விடுதலைகோரியும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மேற்கோண்டுவரும் போராட்டத்தின் ஒரு பலனாகவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் திருமதி நவநீதம்பிள்ளை அவர்களின் சிறீலங்காவுக்கான பயணம் அமைந்துள்ளது.

தமிழ் மக்கள் செறிந்துவாழும் மற்றும் சிறீலங்கா அரசின் கொடூரமான இனஅழிப்புக்கு உள்ளாக வடபகுதிக்கு சென்ற அவர், சாட்சிகள் அற்ற போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எஞ்சிய சாட்சிகளை சந்தித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ள கருத்து வருமாறு:

செப்டெம்பரில் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அறிக்கை:

சிறிலங்காவில் மனித உரிமைகள் பேணப்பட்டு வருகின்ற விதம் குறித்து எதிர்வரும் செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் இடைக்கால அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

அத்துடன் முழுமையான அறிக்கையை 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டதொடரில் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் எஸ் நவநீதம் பிள்ளைக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, சிறிலங்காவில் காணாமல் போனவர்கள் மற்றும் யுத்த குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைகள் தொடர்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் சிறிலங்காவில் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் சுதந்திரமான சர்வதேச விசாரணைக்குழுவொன்று அமைக்கப்படல் வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே உலகில் காணாமல் போனோர் தொடர்பில் அனைத்துலக மன்னிப்புச்சபை விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

காணாமல் போனோர் 30 ஆயிரம் – சர்வதேச மன்னிப்புச்சபை
31 08 2013

யுத்த காலத்திலும், யுத்தத்தின் பின்னரும் இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் விசாரணைகளை நடத்தவேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈராக்கிற்கு அடுத்தபடியாக, இலங்கையில், 1980 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 12ஆயிரம் பேர் வரை காணாமல் போயுள்ளனர்.
missi09
எனினும், காணாமல் போனோரின் எண்ணிக்கை 30 ஆயிரமாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் உரிய விசாரணைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை இது குறித்து, பொய்யான வாக்குறுதிகளே அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபையின் சிறீலங்காவுக்கான நிபுணர் யொலன்டா பொஸ்டர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் நியமித்துள்ள ஆணைக்குழுவின் சுயாதீன தன்மை தொடர்பாக மன்னிப்பு சபை கேள்வி எழுப்பியுமுள்ளது

சிறீலங்காவில் காணாமல் போனோர் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில்,சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. இலங்கையின் தென்பகுதியில் 1970-1980 ஆண்டுக்களில் பலர் காணாமல் போயினர்.

இதனை தவிர போர் காலத்தின் போது அதிகமானோர் காணாமல் போயினர்.இந்தநிலையில் குறித்த பிரச்சினையை ஆராய அண்மையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தக்குழு உரியமுறையில் நீதியாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.

இதுவே நாட்டை முன்னேற்ற வழியில் இட்டுசெல்ல வழிவகுக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் திருமதி நவநீதம்பிள்ளை அவர்களின் சிறீலங்காவுக்கான பயணம் தொடர்பில் முகநூலில் வெளியிடப்பட்ட கவிதை இது:
war-crime434
ஏன் வந்தாய் தாயே…!

மனிதங்கள் செத்துப்போய்
ஆண்டுத் திதிகள் நான்காய் உறுண்டபின்
தசைகளும் பிண்டங்களும் நெக்கியும்
எலும்புக்கூடுகள் உக்கியும் போனபின்
ஏன் வந்தாய் தாயே…! இங்கு

விடுப்புப் பார்க்கவா
சுற்றுலாவாய் பொழுது போக்கவா
விருந்து உண்ணவா வந்தாயா…?

உன்னை தமிழச்சி என்று என் சொந்தம் பெருமைகொண்டதே
உன் தங்கசச்சிகள் சிதைக்கப்பட்டபோது
உன் தம்பிகள் காணாமல் போனபோது
உன் சொந்தங்கள் கருவறுக்கப்பட்டபோது
ஏங்கே போனாய் தாயே…!

செம்மையாக்கப்பட்ட வீதி பயணங்களுடனும்
அபிவிருத் தரிசிப்புக்களுடனும்
கைலாகு கொடுப்புக்களுடனும் முடிந்துவிடுமா உன் பயணம்…?

தமிழீழ தோழன் ராஜன்
லுகானோ சுவிஸ்