கொழும்பு, மருதானை சி.எஸ்.ஆர் மண்டபத்தில் காணாமல்போனோரின் உறவினர்கள் கலந்துகொண்ட கூட்டமொன்றினுள் புகுந்த பிக்குகள் தலைமையிலான குண்டர் குழு குழப்பம் ஏற்படுத்தியமை குறித்து அமெரிக்கா விசனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் சிறிலங்காவுக்கான தொடர்பாக அமெரிக்கத் துதரகம் நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டம் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி பௌத்த பிக்குகள் அடங்கிய ஆர்ப்பாட்டக்காரர்களால் குழப்பப்பட்டது.

usa
காணாமற்போனோரின் குடும்பத்தினர் தமது கதைகளை சிவில் சமூகம் மற்றும் இராஜதந்திரிகள் முன்பாக கொழும்பிலுள்ள தேவாலயம் ஒன்றில் எடுத்துக் கூறிக் கொண்டிருந்த போது இந்தக் குழுவினர் அத்துமீறி நுழைந்தனர்.

இந்தக் கூட்டத்தைக் குழப்பும் நோக்கத்துடன் நடந்து கொண்ட இந்தக் குழுவினருக்கு ஆதரவாக சிறிலங்கா பொலிஸார் செயற்பட்டமை குறித்து அமெரிக்கத் துதரகம் கவலை கொள்கிறது.

எனினும், இராஜதந்திரிகள் நடத்திய கலந்துரையாடலை அடுத்து சிறிலங்கா பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சித்தது.

இக்குழுவினர் வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலான முழங்கங்களை எழுப்பியதுடன், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் சுமத்தியதுடன், காணாமல் போனவர்களின் குடும்பத்தினரை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.

அமைதியான வழியில் எதிர்ப்பைத் தெரிவிக்கும் போராட்டத்தை நடத்தாத இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போரினால் பாதிக்கப்பட்டோரின் அமைதியான ஒன்று கூடலில் குழப்பம் ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்களை மிரட்டி, அவர்களை மெளனிக்க வைப்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துமாறும், பேச்சுச் சுதந்திரம், ஒன்று கூடும் உரிமை உள்ளிட்ட அடிப்படை மனிதவுரிமைகளை எல்லா மக்களுக்கும் அனுமதிக்குமாறும் சிறிலங்கா அரசாங்கத்தை அமெரிக்கா உறுதியாக கேட்டுக் கொள்கிறது.

இந்தக் கூட்டத்துக்கு வடக்கில் இருந்து வந்த குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவர்கள் கொழும்பில் இருந்து வீடு திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சிறிலங்கா அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம்’ என இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: உதயன்.