காண்டீபனுக்கு கிடைத்த பார்த்தசாரதி நீ

0
667

தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் எட்டாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். இந்த தருணத்தில் தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு குறித்து அருஷ் அவர்கள் 2006 ஆம் ஆண்டு தமிழ்நாதம் இணையத்தளத்திற்கு எழுதிய பத்தியை ஈழம்ஈநியூஸ் இங்கு மறு பிரசுரம் செய்கின்றது.

காண்டீபனுக்கு கிடைத்த பார்த்தசாரதி நீ – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

சராசரிக் கடமைகளில் இருந்து மனிதனை அப்புறப்படுத்தாமல், அவன் இருக்கும் இடத்தையே கோவில் ஆக்க முடியும் என்று கூறுவது மத தத்துவம். புகுந்தநாட்டில் வாழ்ந்தாலும் அங்கு இருந்தே தாய்மண்ணுக்காக போராட முடியும் என்பதை செயலில் காட்டியவர் தான் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள்.

8,000 மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு தமிழீழ தேசத்துடன் ஒவ்வொரு கணப்பொழுதும் வாழ்ந்த மனிதரை நாம் இன்று இழந்துவிட்டோம். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் ஓரு தசாப்தத்திற்கு மேலாக நடைபெற்ற அகிம்சை போர் தோல்லியை தழுவியபோது. 1970 களின் ஆரம்பத்தில் ஆயுதப்போர் கருக்கொண்டது. ஆரம்பத்தில் இந்தியாவின் தமிழ்நாட்டில் பின்தளம் அமைத்து செயற்பட்ட போராளிகளுடன் தனது விடுதலை உணர்வையும், அரசியல் அறிவையும் பகிர்ந்து கொள்வதற்காக 1970 களில் பிற்பகுதியில் பிரித்தானியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு சென்றவர் தான் கலாநிதி அன்ரன் பாலசிங்கம்.

bala-1
அங்கு தான் தேசியத்தலைவர் பிரபாகரனும் பாலசிங்கமும் முதலில் சந்தித்துக்கொண்டனர். தலைவரின் விவேகமும் தேசத்தின் குரலின் அரசியல் ஞானமும் ஒன்றை ஒன்று ஒத்துப்போயின. இரு மன அதிர்வுகளும் ஒரே பாதையில் பயணித்தன. பல பத்து விடுதலை இயக்கங்கள் இந்தியாவில் தளம் அமைத்து இருந்த போதும் பாலசிங்கம் புலிகளுடன் ஒன்றிப்போனது அவரது தீர்க்க தரிசனமான பார்வையை தான் எடுத்துக் காட்டுகின்றது.

இது தொடர்பாக பாலா அண்ணா முன்னர் கருத்து தெரிவிக்கையில் தான் படித்த விடுதலைத்தத்துவம் அதனூடாக தான் பார்க்கின்ற தமிழீழத்தை தேசியத்தலைவரின் சொல்லிலும் செயலிலும் காண்பதாகவும் அதனால் தான் தலைவரின் பால் கவரப்பட்டு விடுதலைப்புலிகளுடன் ஆரம்பகாலம் தொட்டு இணைந்து செயற்பட்டதாகவும் கூறியிருந்தார். அன்று தொடங்கிய நட்பு இன்று லண்டன் நியூமோடன் வரை தொடர்ந்தது.

இந்த மூன்று தசாப்த்தங்களில் போராட்டம் கண்ட வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், திருப்பங்கள், ஏமாற்றங்கள், நெருக்கடிகள் மிகப்பல. இந்த காலகட்டங்களில் எல்லாம் எமது விடுதலைக்கு உறுதுணையாக எமது தலைவருடன் தோளோடு தோள் நின்ற உன்னத மனிதர் தான் பாலா அண்ணா.

ஆரம்பகாலத்தில் இருந்தே கலாநிதி பாலசிங்கத்தின் வரலாற்றை புரட்டினால் அவர் ஒரு நல்ல எழுத்தாளர், சிந்தனையாளர், அறிவாளர், வாதத்திறைமையாளர், தேசப்பற்றாளர் என்பதுடன் ஒரு நல்ல குடும்பப்பற்றாளர். இந்த எல்லா நற்குணங்களையும் ஒன்றுதிரட்டி அல்லல்படும் மக்களின் விடுதலைக்காக அவர் அர்ப்பணித்தது தான் தமிழீழம் செய்த பாக்கியம்.

மனித வாழ்க்கையை பலவகையாகக் கூறு பிரிக்க ஆரம்பித்தால், அளவிட முடியாத அளவு கூறுகளைக்காணலாம். ஆனால் அந்த எல்லா கூறுகளையும் ஒன்று திரட்டி விடுதலைக்கு அர்ப்பணித்தவர் தான் பாலசிங்கம் அவர்கள் என்றால் மிகையாகாது.

எந்த ஒரு விடுதலைப் போரும் இரு பரிமாணங்களை கொண்டது ஒன்று தளத்தில் நிகளும் போர் மற்றயது புலத்தில் நிகளும் போர். இங்கு புலத்தில் நிகளும் போர் என குறிப்பிடுவது.

• சர்வதேசத்தில் மேற்கொள்ளப்படும் விடுதலைப் போருக்கு ஆதரவான பிரச்சாரங்கள்.

• அரசின் பொய்பிரச்சாரங்களை முறியடித்து அதற்கு எதிராக மேற்கொள்ளப்டும் எதிர்ப்பிரச்சாரங்கள்.

• சர்வதேசத்தில் எமது விடுதலைப்போருக்காக திரட்டப்படும் ஆதரவுகள்.

• சர்வதேச நாடுகள் எமது விடுதலைப்போரை நசுக்குவதற்கு எடுக்கும் முயற்சிகளை இனங்கணுதல்.

என ஏறத்தாள களத்தில் நிகளும் போரின் வீச்சிற்கு இணையான வீச்சை கொண்டது தான் சர்வதேசத்தில் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள். இந்த சமரை எதிர்கொள் எமக்கு பலமான ஊடகத்துறையும், சர்வதேச ஊடகத்துறையுடனான சிநேகபூர்வ உறவுகளும் அவசியம். இந்த தத்துவம் உணர்ந்து செயற்பட்டதுடன் தனது எழுத்தாற்றல் மூலம் விடுதலைப்போரின் நியாயங்களை உலகிற்கு மெல்ல மெல்ல உரைத்தவர் தேசத்தின் குரல்.

இந்த உண்மையை அவரது மறைவின் பின்னர் சர்வதேச ஊடகங்ஙளும் சர்வதேச ராஜதந்திரிகளும் வழங்கிய அறிக்கைகள், ஆய்வுகள் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

பி.பி.சீ தனது ஆய்வுச்செய்தியில்:

சிறிய இலங்கைத் தீவில் அல்லல் படும் தனது மக்களின் துயரை உலகிற்கு எடுத்து சொன்னதுடன், புலிகளை சர்வதேச மட்டத்தில் விடுதலைப்போராளிகளாக இனங்காட்டியதில் முக்கிய பங்காற்றியவர் என தெரிவித்துள்ளது. மேலும் பாலசிங்கத்தின் மறைவு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சமாதானத்தை விரும்பும் சிங்கள மக்களுக்கும் ஏற்பட்ட பெரும் இழப்பாகும் எனவும் தெரிவித்தள்ளது.

அசோசியட் பிரஸ் (AP) யின் செய்தியில்:
சிறீலங்கா அரசுடன் நடந்த பேச்களில் பாலசிங்கத்தின் பேச்சுத்திறமையும், வாதங்களும், பிரதிவாதங்களும் அரசதரப்பை பல சமயங்களில் வாயடைக்க செய்ததாக தெரிவித்துள்ளது.

லண்டன் ரைம்ஸ் தனது இரங்கல் செய்தியில்:

அமைதிப்பேச்சின் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்ற நம்பிக்கை நிறைந்த மனிதர் தான் பாலசிங்கம் என்றும் இவரது முயற்சியில் தான் 2002 இல் ஏற்பட்ட அமைதிப்பேச்சின் போது தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டு சுயாட்சி முறைக்கு புலிகள் இணங்கினார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

premathasa1
மேலும் 1990 களின் இறுதிப்பகுதியில் சிறுநீரக நோயினால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்ட போது. அவரின் மருத்துவ சிகிச்சைக்காக கொழும்பினூடாக லண்டன் பயணம் செய்வதற்கு புலிகள் அனுமதி கோரியதாகவும். அதற்குரிய நல்லெண் முயற்சியாக புலிகள் தமவசம் இருந்த படையினரை விடுவித்ததாகவும் தெரிவித்துள்ளது. எனினும் அன்றைய அரச அதிபர் சந்திரிக்காவும் கதிர்காமரும் இராணுவ நலன்களை முன்னிறுத்தி முட்டுக்கட்டை போட்டிருந்தனர்.

ஆனால் அமைதிப் பேச்சுக்களின் போதான பாலசிங்கத்தின் முக்கியத்துவம் கருதி புலிகள் அவரை தமது சொந்த கடற்கலங்கள் மூலம் லண்டனுக்கு அனுப்பி வைத்ததாகவும் அச் செய்தி தொடர்கின்றது.

அமெரிக்காவின் பொஸ்ரன் செய்திஸ்தாபனம் தெரிவிக்கையில்:

சிறீலங்கா அரசுடன் 1985 களில் இருந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை மிகவும் வெற்றிகரமாக நாடாத்துவதில் முன்னின்று செயற்பட்டவர் பாலசிங்கம் என தெரிவித்துள்ளது.

இந்திய செய்தி நிறுவனமான ஐ.எ.என்.எஸ் தெரிவிக்கையில்:
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் எழுந்த நெருக்கடிகளை சமாளிப்பதற்கும், அதனால் வரவிருந்த ஆபத்தை தடுத்ததிலும் பிரபாகரனுடன் தோளோடு தோள் நின்றவர் பாலசிங்கம் என தெரிவித்துள்ளது.

தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று:

புலிகள் அமைப்பில் தேசியத்தலைவருக்கு இணையாக குரல் தர வல்லவர் பாலசிங்கம் மட்டும் தான் என தெரிவித்திருந்தது.

இவை மட்டுமல்லாது இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும் மிகப்பொரும் முக்கியத்துவத்தை கொடுத்து செய்திகளையும், செய்தி ஆய்வுகளையும் வெளியிட்டள்ளன. எல்லாவற்றையும் தருவதற்கு காலம் போதவில்லை.

ராஜதந்திரிகளும், அரச தலைவர்களும் வழங்கிய கருத்துக்களும் அதிகம். நோர்வேயின் அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம், ஹன்சன் பௌயர், தமிழக முதல்வர் கருணாநிதி, வைகோ, நெடுமாறன், வீரமணி, விஜயகாந்த் என சர்வதேச தமிழ் நாட்டுத் தலைவர்களும், தாயகத்தின் தலைவர்களும், போராளிகளும், தளபதிகளும் வழங்கிய கருத்துரைகள் ஏராளம்.

bala-098
உலகெங்கும் எழுந்த இந்த அனுதாபங்கள் எதை கோடிட்டு காட்டுகின்றன? படித்தவர்கள் தொடக்கம் பாமர மக்கள் வரைக்கும் எமது தேசத்தில் மக்கள் படும் துன்பங்களையும், எமது மக்களின் விடுதலைக்கான அவசியத்தையும் மிக நேர்த்தியாக எடுத்து சொல்வதில் மிகச்சிறந்த பேச்சாளர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் என்பதைத் தான். அதாவது தனது உரைகளில் அழுத்தம் தொனிக்க வேண்டிய இடத்தில் அழுத்தமாகவும் நகச்சுவையாக சொல்ல வேண்டிய இடத்தில் நகச்சுவையாகவும், உணர்ச்சி பொங்கவேண்டிய தருணத்தில் உணர்வுபூர்வமாகவும் கருத்துக்களை மக்களுக்கு ஊட்டக்கூடியவர்.

இது மட்டுமல்ல அமைதிப் பேச்சுக்கள் என்று ஒவ்வொரு தடவையும் சிங்கள தேசமும், இந்திய மத்திய அரசும், சிலமேற்குலக நாடுகளும் எமது மக்களை ஏமாற்ற முனைந்த போதெல்லாம் தேசியத் தலைவரின் சிந்தனைகளை பேச்சு மேடையில் பிரதிபலித்தவர் பாலசிங்கம் தான். ஜெனீவா ஒன்று பேச்சின் போது கூட சிங்கள அரசின் காவல்துறை அதிபர்; புலிகள் மீது சுமத்திய கொலைப்பட்டியல் குற்றச்சாட்டைத் தடுத்து தனது வாதத்திறமையால் வாயடைக்கச்செய்தவர்.

1985 இல் பூட்டான் தலைநகர் திம்புவில் நிகழ்ந்த பேச்சு வார்த்தைகளை வெளியில் இருந்து தேசியத் தலைவருடன் நெறிப்படுத்திய பாலசிங்கம் அவர்கள் அதன்பின்னர் நிகழ்ந்த எல்லா பேச்சுக்களிலும் பங்கு பற்றியது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இந்த வருடம் பேச்சுக்களில் விழுந்த தேக்கநிலையை நீக்குவதற்கு தனது உடல் நிலையையும் பாராமல் வன்னிக்கு சென்று வந்த பாலசிங்கம் அவர்களின் அர்ப்பணிப்பை இன்றும் நோர்வே அனுசரணையாளர்கள் கலங்கிய விழிகளுடன் நினைவு கூர்கின்றார்கள். இப்படி பாலா அண்ணையின் சாதனைகளின் பட்டியல் மிக நீளம்.

bala-11
அதாவது முழுக்க முழுக்க தனது மக்களின் சுபீட்சமான வாழ்வுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு உன்னத மனிதர் அவர். கியூபா அதிபர் பிடல் கஸ்ரோவுடன் தோளோடு தோள் நின்ற சேக்குவாரா போன்றவர் தான் பாலா அண்ணா என்று கூறலாமா?

அங்கு சேக்குவாரா ஆயுதம் ஏந்தி போராடியிருந்தார் ஆனால் பாலா அண்ணா ஆயுதம் ஏந்தாத ஒரு போராளி. அதாவது மகாபாரதத்ததில் காண்டீபனுக்கு ஆசானாகத் தோன்றிய கிருஷ்ண பரமாத்மா போன்றவர் தான் பாலா அண்ணா என்றால் அது தான் யதார்த்தம்.

இன்று தனது தேசவிடுதலைக்காக போராடிக் கொடிய நோயின் பிடியில் சிக்கி மறைந்து போன எமது தேசத்தின் குரலுக்கு நாம் அஞ்சலி செலுத்தும் நேரம். தாயகத்தில் மட்டுமல்லாது உலகத்தில் தமிழ் மக்கள் வாழும் இடம் எங்கும் சோகம் நிறைந்துள்ள வேளையிது. இந்த அற்புத மனிதரின் இறுதி நிகழ்வில் நாம் பங்கெடுப்பதன் மூலம் எமது விடுதலையின் தேவையை பாலா அண்ணையின் கனவை மீண்டும் ஒரு முறை உலகிற்கு உரத்துச்சொல்ல வேண்டும்.

இந்த இறுதிநிகழ்வை சிறுமைப்படுத்த சிங்கள அரசு முயல்கின்றது, இந்த நிகழ்வில் ஒன்று கூடப்போகும் மக்களின் ஆதரவை சர்வதேசமும் உற்று நோக்குகின்றது. ஏனெனில் புலத்ததில் நிகளும் மிக முக்கிய நிகழ்வு இது. தாயகத்தில் இப்படியான எத்தனையோ நிகழ்வுகளை எமது மக்கள் பிரமாண்டமான ஆதரவுடன் நிகழ்த்தி காட்டிவிட்டார்கள். புலத்ததில் வாழும் தமிழ் மக்களும் திரண்டு பங்கெடுத்து தமது ஆதரவை காட்ட வேண்டிய தருணமிது. பங்கு பற்ற முடியாதவர்கள் மலர்வளையங்கயைளாவது அனுப்பவேண்டும். (திணைக்களங்களில் வேலை செய்பவர்கள் அதன் முகவரியில் அனுப்புவது சிறந்தது) இணையத்தளங்களின் ஊடாக இலகுவாக அனுப்ப முடியும்.

லண்டன் அலெக்ஸான்டிரா மாளிகையில் பதியும் எமது கால்தடங்களும், அங்கு குவியும் மலர்ச்சென்டுகளும் எமது தேச விடுதலைக் கனவுடன் உயிர் நீத்த எமது தேசத்தின் குரலின் உன்னத குறிக்கோளை உலகிற்கு அடித்துச் சொல்லவேண்டும்.

அது தான் நாம் எமது விடுதலைக்கு கொடுக்கும் மரியாதை.