noboruதமிழர்கள் தங்கள் வரலாற்றை வரலாறாக எழுதிவைக்கும் பழக்கமற்றவர்கள் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. இலக்கியங்கள் ஊடாக அறியப்படும் பெருங்கதைகளும் புனைவுகளுமே தமிழர்களின் பண்டைய வரலாறு என்று அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் பண்டைத் தமிழர்களின் வாழ்வுமுறை மற்றும் சமூகக்கட்டமைப்புகள் பற்றிய கோட்பாடுகள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டன.

 

இதில் முன்னோடிகளாக விளங்கியவர்கள் பிரித்தானிய ஆட்சியாளர்களும் ஆய்வாளர்களுமாவர். இவ்வாறு, பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் முன்வைக்கப்பட்டு இப்பொழுதும் செல்வாக்குப் பெற்றுள்ள கோட்பாடுகளில் ஒன்று சேர். சாள்ஸ் தியோஃபிலஸ் மெற்காஃப் (Sir Charles Theophilus Metcalfe) என்பவரால் 1830ல் முன்வைக்கப்பட்டது.

 

‘இந்திய கிராமங்கள் தமக்குத் தேவையான அனைத்தையும் தம்மகத்தே கொண்ட, அயலுறவுக்கான தேவைகளேதும் பெரிதளவிலற்ற, சிறிய குடியரசுகள் போன்றவை’ என்ற மெற்காஃப்பின் கருத்து பின்னாளில், பண்டைய மற்றும் இடைக்கால இந்திய சமூகங்களின் வாழ்வுமுறை பற்றி எழுந்த கோட்பாடுகள் பலவற்றுக்கு ஆதாரமாக அமைந்தது. எனினும் மெற்காஃபின் கோட்பாட்டில் ஓட்டைகள் இருப்பதை ஆதாரங்களுடன் நிறுவுவதாக அமைந்தது ஏழாவது தமிழியல் மாநாட்டில் பேராசிரியர் நோபோரு கரஷிமா ஆற்றிய ஆய்;வுப்பேருரை.

 

ஜப்பானியரான பேராசிரியர் கரஷிமா தென்னிந்திய வரலாற்றியலில் ஒப்பற்ற நிபுணர். வெட்டெழுத்தியல் துறையில் (epighraphy) இவராற்றிய பங்களிப்புகள் ஒரு தலைமுறை அறிஞர்களின் ஆய்வுக்கு ஆதாரமாக அமைந்தன. 1961ல் இந்தியா சென்று சென்னை பல்கலைக்கழகத்தின் பண்டைய இந்திய வரலாறு மற்றும் அகழ்வாய்வுத் துறையில் இணைந்து கொண்ட இவர் பின்னர் இந்திய வெட்டெழுத்தியல் சங்கத்தின் (Epigrphical Society of India) தலைவராகவும் இருந்தார்.

 

1960களில் தமிழியலை ஆய்வுக்குரிய பாடமாக வடிவமைத்ததில் இவருக்கும் பங்குண்டு. 1989 முதல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக விளங்கியதோடு 1995இல் தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது தமிழாராய்ச்சி மாநாட்டை ஒருங்கிணைத்தார். பின்னர் அந்நிறுவனம் அரசியல்மயப்படுத்தப்படுவதைக் கண்டித்து தனது தலைவர் பதவியை 2010ல் உதறினார். தற்பொழுது தனது எண்பதாவது வயதை அண்மிக்கும் நிலையில், டோக்கியோ பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்று ஜப்பானின் டாய்ஷோ பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் பேராசிரியராக தொடர்ந்தும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

 

ரொரன்ரோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஏழாவது தமிழியல் மாநாட்டின் முதல்நாள் அமர்வின் இறுதியில் பேராசிரியர் கரஷிமா ஆற்றிய பேருரையின் தலைப்பு ‘தமிழ் வெட்டெழுத்துக்களிலிருந்து அறியப்படும் கடந்தகாலம் – கிராமிய சமூகங்களும் சாதியக் கட்டமைப்புக்கான எதிர்ப்புகளும்’. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இவரால் மேற்கொள்ளப்பட்டுவரும் வரலாற்று ஆய்வுகளுக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் கண்டெடுக்கப்பட்ட செப்புத் தகடுகளிலும், கல்வெட்டுக்களிலும், மட்பாண்ட ஓடுகளிலும் காணப்பட்ட வெட்டுழுத்துக்களே (inscriptions) ஆதாரமாக அமைந்தன. தமிழியல் மாநாட்டில் இவராற்றிய பேருரைக்கும் இதே வெட்டெழுத்துக்களிலிருந்தே தகவல்களைத் திரட்டியிருந்தார். இந்தியாவின் பலபாகங்களிலிருந்தும், இலங்கையின் மாந்தை பகுதியிலிருந்தும் இதுவரை 59,800 வெட்டெழுத்துப் பொறிப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

மொழிவாரியாக நோக்கினால் அவற்றுள் பெரும்பான்மையானவை, அதாவது 28,000, தமிழ் வெட்டெழுத்துக்கள். கன்னடம் தெலுங்கு ஆகிய திராவிட மொழிகளில் மொத்தம் 16,000 வெட்டெழுத்துக்களும், சமஸ்கிருதம் உள்ளிட்ட ஆரிய மொழிகளில் 12,800 வெட்டெழுத்துக்களும், பாரசீகம் போன்ற பிறமொழிகளில் 3,000 வெட்டெழுத்துக்களும் உள்ளன. தமிழில் உள்ள 28,000 வெட்டெழுத்துக்களை காலவாரியாக பார்த்தால்;, அவை கி.மு. 3ம் நூற்றாண்டு முதல் கி.பி. 19ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவையாக உள்ளன. எனினும் அவற்றுள் மிகப்பெரும்பான்மையானவை, அதாவது 19,000 வெட்டெழுத்துக்கள், 10ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டுக்குட்பட்டவை.

 

சோழ, பாண்டிய, விஜயநகர அரசுகளும் இந்தக் காலத்திற்குரியனவென்பதால், இந்த அரசுகளின் வரலாற்றை கிடைக்கப்பெற்ற வெட்டெழுத்துக்களிலிருந்து ஒரளவுக்கு அறிந்துகொள்ளலாம் எனக்கூறுகிறார் கரஷிமா. அத்தோடு, கிடைக்கப்பெற்ற வெட்டெழுத்துக்களில், குறிப்பாக தமிழ் வெட்டெழுத்துக்களில், பதியப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு வகைப்பட்டதாக இருப்பதால், அந்தந்தக்காலகட்டத்தின் சமூக-பொருளாதார நிலைகள் பற்றியும் எம்மால் அறியமுடிகிறது என்கிறார் அவர்.

 

இந்த வெட்டெழுத்துக்களில் சோழ மண்டலத்தைச் சேர்;ந்த நாற்பது கிராமங்கள் பற்றி விரிவாகவும், இலங்கை உட்பட்ட வேறு மண்டலங்களைச் சேர்ந்த 16 கிராமங்கள் பற்றிச் சுருக்கமாகவும் வழங்கப்பட்டுள்ள தகவல்களை கரஷிமா பொருள்விளக்கம் செய்து (decipher) அட்டவணைப்படுத்தியுள்ளார்.

 

இந்த அட்டவணையிலிருந்து கிராமத்தின் பரப்பளவு, வரிவிலக்குப் பெற்ற நிலங்கள், வௌ;வேறு தொழில்களில் ஈடுபட்ட சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட குடியிருப்புகள் போன்ற தகவல்களை அறிய முடிகிறது. மேலும், கோவில், குளம், சுடுகாடு போன்ற சமூக வாழ்வுக்கு அத்தியாவசியமான விடயங்களையும், சூட்டடிப்புக்களம், தானியக்களஞ்சியம் நீர்க்கால் வாய் போன்ற பொருளாதார வாழ்வுக்கு அத்தியாவசியமான விடயங்களையும் எல்லாக் கிராமங்களும் தம்மகத்தே கொண்டிருக்கவில்லை எனவும் அறியமுடிகிறது. இதிலிருந்து, இந்தக் கிராமங்கள் தங்கள் சமூக-பொருளாதார வாழ்வுக்கு ஒன்றில் ஒன்று தங்கியிருந்தமை தெளிவாகிறது என எடுத்துக்காட்டி, ‘இந்தியக் கிராமங்கள் தன்னிறைவானவையாக இருந்தன| என்ற கோட்பாட்டை கரஷிமா நிராகரிக்கிறார்.

 

மெற்காஃப் முன்வைத்து இப்பொழுதும் செல்வாக்குப் பெற்றுள்ள இன்னொரு கோட்பாடு, பண்டைய மற்றும் இடைக்கால இந்தியக் கிராமங்களின் கட்டமைப்பிலும், சமூக வாழ்விலும் பாரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை என்பதாகும். மெற்காஃபின் இந்தக் கருத்து பின்னாளில் ‘பண்டையகாலம் முதல் அண்மைக்காலம் வரை கீழைத்தேயம் மாற்றங்களற்று தேக்கநிலையை அடைந்திருந்தது| என்ற கருத்து வலுப்பெற வழிகோலியது. வெட்டெழுத்துக்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு நோக்கும்போது, இந்தக் கருத்திலும் உண்மையில்லை என கரஷிமா நிறுவுகிறார்.

 

கண்டெடுக்கப்பட்டுள்ள வெட்டெழுத்து பொறிப்புகளில், அந்தந்தக் கிராமங்களால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டு அந்தத் தீர்மானங்களை மீறுபவர்களுக்கு என்ன நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு என்ன நடக்கும் என்பது கிராமத் தலைமைகளால் வழங்கப்படும் தண்டனைகளாக இல்லாமல் ‘இதை மீறுபவன் உடற் கழிவில் உருளும் புழுவாக மாறுவான்|, ‘அறுபதாயிரம் ஆண்டுகள் நரகத்தில் உழலுவான்|, ‘பத்தாயிரம் பசுக்களைக் கொன்ற பாவத்திற்காளாவான்| என்ற வகையிலான சாபங்களாகவே இருக்கிறது. இந்த சாபங்கள் பிராமணீய சாதிக்கட்டமைப்பு ஒன்று இக்காலத்தில் இருந்ததை உறுதிப்படுத்துகிறது என்கிறார் கரஷிமா.

 

எனினும், இந்த சாபக்கேடுகளை கூர்ந்து நோக்கினால், இவை காலப்போக்கில் மாற்றம்பெற்று வருவதையும், பிராமணீயக் கருத்துகளிலிருந்து மாறுபட்ட அல்லது பிராமணீயக் கருத்துக்களுக்குப் புதிதான பலவிடயங்கள் காலப்போக்கில் தோன்றுவதையும் காணமுடியும் என்கிறார்;. ஒன்பதாம் நூற்றாண்டளவில் பெரும்பாலும் பிராமணர்களுக்கு நிலப்பிரபுக்களால் வழங்கப்பட்ட நிலங்கள் மற்றும் கோவில்களில் விளக்கிடுவதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்ட தானங்கள் பற்றிப் பேசிய வெட்டெழுத்துப் பொறிப்புகள், காலப்போக்கில் மாறி 12ம் நூற்றாண்டளவில் கிராமத்தின் பல்வேறு பகுதியினரும் இணைந்து மேற்கொண்ட தீர்மானங்களையும், சர்ச்சையில் ஈடுபட்ட இருதரப்பினரை சமரசம் செய்துவைக்க எடுக்கப்பட்ட தீர்மானங்களையும் குறிப்பிட ஆரம்பிக்கின்றன. இந்தத் தீர்மானங்களை மீறுபவர்களுக்கான சாபக்கேடுகளாக ‘சிவத்துரோகம்;|, ‘ஊர்த்துரோகம்|, ‘நாட்டுத்துரோகம்| போன்ற பிராமணிய கருத்துக்களிலிருந்து விலகிய விடயங்கள் தோன்றுகின்றன.

 

இந்த மாற்றங்களுக்குக் காரணம் கிராமங்களில் புதிய சாதிகள் தோன்றியமை அல்லது சாதிகளுக்கிடையிலிருந்த ஏற்றத்தாழ்வு நிலையில் மாற்றமேற்பட்டு தாழ்த்தப்பட்ட சாதிகள் அரசியல் – பொருளாதாரப் பலம்பெற்றமை எனக்கூறுகிறார் கரஷிமா. பன்னிரண்டாம் நூற்றாண்டளவில் சோழ அரசு வீழ்ச்சியுறத் தொடங்க, சிறிய சமூகங்கள் தங்;களைத் தாங்களே தற்காத்துக்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டது. இந்தப் பின்னணியில், பிராமண மற்றும் வேளாள மேலாதிக்கத்தை எதிர்க்கின்ற அமைப்புக்கள் தோன்ற ஆரம்பித்தன. சித்திரமேழி பெரியநாடு, வலங்கை, இடங்கை போன்ற அமைப்புகள், பிராமண மற்றும் வேளாள ஆதிக்கத்தை எதிர்த்து சாதிகளுக்கிடையில் ஏற்றத்தாழ்வற்ற கட்டமைப்பொன்றை உருவாக்க முனைந்தன என்பது கரஷிமாவின் கருத்து. இதன்மூலம், பிராமணிய சாதி முறைமைக்கான எதிர்ப்புகள் தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை நிகழவில்லை என்ற பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்திலும் உண்மையில்லை என்பது புலனாகிறது என்கிறார் அவர். பிராமணீய சாதி முறைமையை உடைத்தெறிய முடியவில்லை என்றாலும், பல்லவர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறைமைக்கான எதிர்ப்பு இடைக்காலத் தமிழகத்திலேயே ஆரம்பித்துவிட்டது என்பதே வெட்டெழுத்துக்கள் நமக்குச் சொல்லும் சேதி என்கிறார் பேராசிரியர் கரஷிமா.

 

முறையான வரலாற்று நூல்கள் இல்லாத நிலையில், எம்மிடம் இருக்கும் வெட்டெழுத்துக்களை கிரமமாக ஆராய்வதன் மூலம் மட்டுமே தமிழகத்தின் வரலாற்றையும் வாழ்க்கை முறையையும் நாங்கள் கிரகித்துக்கொள்ளலாம் என்கிறார் கரஷிமா. இதை முறையாக செய்வதற்கு ஆய்வாளர்கள் வெட்டெழுத்துக்களின் மொழிபெயர்ப்புகளில் தங்கியிராது, நேராக மூலத்திற்குச் சென்று வெட்டெழுத்துக்களை பொருள்விளக்கம் செய்யும் வல்லமையை வளர்த்துக்கொள்ளவேண்டும் என அவர் வலியுறுத்துகிறார். வெட்டெழுத்துக்களை ஆராயவென கணினி சார்ந்த ஒரு புள்ளித்தொகுப்பியல் (statistical) முறைமையை கையாளும் கரஷிமா, இந்த முறைமை இளம் ஆய்வாளர்கள் வெட்டெழுத்துக்களிலிருந்து புதிய புதிய விடயங்களைக் கண்டறிய உதவும் என்கிறார்.

 

‘வெட்டெழுத்துக்களை பொருள்விளக்கம் செய்வது காலந்தாழ்த்தாது செய்யவேண்டிய முக்கியமான பணி. அவ்வாறு செய்யத்தவறினால், ‘எமது உண்மையான வரலாறு மறைந்துபோய் கோட்பாடுகளும் பெருங்கதைகளுமே மிஞ்சும்’ என அண்மையில் பத்திரிகைச் செவ்வியொன்றில் கூறிய பேராசிரியர் கரஷிமா, தமிழியல் மாநாட்டில் இறுதியாகக் கூறியது: ‘கடந்த காலத்திலிருந்து வெட்டெழுத்துக்கள் எம்மை அழைத்து, பல விடயங்களை காதோடு குசுகுசுக்கின்றன’.

 

( மே 2012இல் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஏழாவது தமிழியல் மாநாட்டில் பேராசிரியர் நோபோரு கரஷிமா அவர்கள் ஆற்றிய ஆய்வுப்பேருரை )

 

நன்றி :தாய்வீடு