kalashnikov_getty_images_F-300x200ஒரு நாட்டின் இருப்பும் பாதுகாப்பும் அதன் படை பலத்திலும், ஆயுதவளத்திலுமே முற்று முழுதாக தங்கியிருந்த காலத்தில் சோவியத்து ஒன்றியத்தை தனது அறிவு ஆற்றலால் தலைநிமிரவைத்த மிக்கையில் கலாஸ்னிகோவ் நேற்று முன்தினம் (23) காலமாகிவிட்டார்.

எனினும் கடந்த 56 வருடங்களுக்கு மேலாக உலகம் எங்கும் உச்சரிக்கப்பட்ட கலாஸ்னிகோவ் என்ற நாமம் இன்னும் பல தசாப்தங்களுக்கு மேலாக நீடிக்கும் என்பதில் ஐயமில்லை. தனது நாட்டின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட கலாஸ்னிகோவ் தன்னியங்கி துப்பாக்கி (AK-47 rifle) என்ற துப்பாக்கி பல நாடுகளின் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததுடன், பல நாடுகளின் இனஅழிப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கையிலும் முக்கிய பங்கு வகித்திருந்ததது மற்றும் பங்குவகித்தும் வருகின்றது.

ரஸ்யாவின் பெரும்பகுதியை ஜேர்மனியப் படைகள் கைப்பற்றிய நிலையில் ரஸ்யாவின் செம்படை என்னும் இராணுவம் தாக்கிவிட்டு ஓடும் அல்லது சிறு சிறு குழுக்களாக சென்று தாக்கி அழிக்கும் நிலைக்கு மாறியிருந்தது. ஏறத்தான கெரில்லா தாக்குதல் போன்ற தாக்குதலை மேற்கொள்ளும் படையினருக்கான தாக்குதல் ஆயுதம் ஒன்றை தேடி ரஸ்யா அலைந்தவேளையில் ரஸ்ய இராணுவத்தின் டாங்கி படைப்பிரிவின் பொறியியலாளராக பாணியாற்றிய காலாஸ்னிகோவ் உபஇயந்திரத் துப்பாக்கி ஒன்றின் வடிவமைப்பை 1944 ஆம் ஆண்டு ரஸ்யாவின் ஆயுதக் கண்காட்சிக்கு அனுப்பியிருந்தார்.

சமர்க்களத்தில் ஜேர்மன் படையினரின் துப்பாக்கிக் குண்டை தோள்பட்டையில் வாங்கிய நிலையில் வைத்தியசாலையில் இருந்தே தனது பணியை அவர் மேற்கொண்டிருந்தார். முன்னைய உபஇயந்திரத் துப்பாக்கியின் இயங்கு முறையில் இருந்து இந்த துப்பாக்கி வேறுபட்டதாக இருந்தது. அதாவது மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் முன்னைய தூப்பாக்கிகள் முதலாவது வெடிப்பு அதிர்வின் மூலம் கிடைக்கும் பின்உதைப்பைக் கொண்டே அடுத்த சூட்டுக்காக துப்பாக்கி தன்னை தயார் படுத்திக்கொள்ளும், ஆனால் இந்த துப்பாக்கி படை நடவடிக்கையின் போது பல விபத்துக்களை தோற்றுவிக்கக் கூடியது.
அதற்கு மாற்றீடாகவே முதலாவது வெடிப்பின்போது உருவாக்கும் வாயுவைக் கொண்டு உருவாகும் அமுக்கத்தின் மூலம் (Gas-driven rifle) இயங்கும் துப்பாக்கியை கலாஸ்னிகோவ் கண்டுபிடித்திருந்தார். அதன் பயன்பாடு மிகவும் பாதுகாப்பானது. எனினும் 1944 ஆம் ஆண்டு அவரின் துப்பாக்கி வடிவத்தை எஸ்கேஎஸ் துப்பாக்கி வடிவம் பின்தள்ளியிருந்தது. அதன் பின்னர் 1946 ஆம் ஆண்டு கலாஸ்னிகோவினால் சமர்ப்பிக்கப்பட்ட வடிவம் தான் தற்போதைய ஏகே-47 ரகத் துப்பாக்கி.

16_ak47s
அதன் வடிவமைப்பையும், பயன்பாட்டையும், தகமையையும் அதன் பின்னர் வந்த எந்த துப்பாக்கியாலும் பின்தள்ள முடியவில்லை. மடித்துவிடக்கூடிய பின்உதைப்பு தாங்கி அதனை இலகுவாக் மறைத்து வைக்கும் மற்றும் காவிச்செல்லும் தகமைகளை வழங்கியிருந்தது. 32 சன்னங்களை நிரப்பும் ரவைச்சட்டம் அதிக சுடுவலுவையும், 7.62மி.மீ ரவையானது அதிக தூர தாக்குதல் வலு மற்றும் அதிக சேதாரங்களை ஏற்படுத்தும் தகமையையும் அதற்கு வழங்கியிருந்தது.
எந்தக் காலநிலையிலும் இயங்கும் வடிவமைப்பு அதன் பயன்பாட்டை உலகம் எங்கும் பரவ வழிவகுத்திருந்தது. 1960களில் இடம்பெற்ற வியட்னாம் போரின் போது அமெரிக்க படையினரின் பிரதான ஆயுதமாக எம்-16 துப்பாக்கியும், கெரில்லாக்களின் பிரதான ஆயுதமாக ஏகே-47 ரகத் துப்பாக்கியுமே இருந்தன.
காடுகளில் இடம்பெற்ற சமரின்போது, அமெரிக்கப்படையினரின் இழப்புக்கள் அதிகமாகக் காணப்பட்டதால் இரு தரப்பினரினதும், ஆயுதங்களை அமெரிக்க படை பொறியியலாளர்கள் பரிசோதித்திருந்தனர்.

கொங்கிறீற் கற்களை கவசமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனையில் அமெரிக்கப்படையினரின் எம்-16 துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட 5.56 மி.மீ துப்பாக்கிச் சன்னம் கொங்கிறீற் கற்களை துல்லியமாக தாக்கியபோதும் அதனை கடந்து செல்லவில்லை. ஆனால் ஏகே-47 துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட சன்னம் கொங்கிறீற் கற்கனை இரண்டாகப் பிளந்து ஊடறுத்துச் சென்றிருந்தன.

பல சோதனைகளின் முடிவாக அமெரிக்க படை அதிகாரிகள் பின்வரும் முடிவைத் தெரிவித்திருந்தனர். அதாவது காடுகளில் இடம்பெறும் சமர்களில் சிறிய மரங்களில் பின்னால் நிலையெடுக்கும் அமெரிக்கப்படையினரை மரங்களை ஊடறுத்துச் செல்லும் ஏகே-47 ரகத் துப்பாக்கிகளின் சன்னங்கள் கொன்று குவிக்கின்றன. அதன் பின்னர் தான் அமெரிக்க 50 கலிபர் துப்பாக்கியின் தேவையை உணர்ந்திருந்தது.

LTTE-fighter
தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் ஏகே-47 துப்பாக்கியின் பங்களிப்பு முக்கியமானது. 1982 ஆம் ஆண்டு கந்தர்மடத்தில் அமைந்திருந்த சிறீலங்காப் படையினரின் வாக்குச்சாவடி காவல்நிலையம் மீதான தாக்குதலின் போது லெப். செல்லக்கிளியினால் சிறீலங்கா படையினரிடம் இருந்து முதன்முiறாயக ஏகே-47 ரகத் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. அந்த தாக்குதலுக்கு விடுதலைப்புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதி லெப். சீலன் தலைமைதாங்கியிருந்தார்.
1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தமிழ்இனஅழிப்பு நடவடிக்கையிலும் சிறீலங்கா படையினர் ஏகே-47 ரகத் துப்பாக்கிகளை அதிகம் பயன்படுத்தியிருந்தது இன்றும் எனது நினைவில் உள்ளது.

பேரூந்தில் சென்ற தமிழ் பொதுமக்களை மானிப்பாய் சந்தியில் வழிமறித்து அவர்களை பேரூந்தில் இருந்து இறக்கி வரிசையாக நிற்கவைத்த பின்னர் அவர்களின் உயிர்களை சிறீலங்கா படையினரின் ஏகே-47 துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட சன்னங்களே பறித்திருந்தன. அந்த படுகொலையின் பின்னர் அங்கு சிதறிக்கிடந்த 7.62 மி.மீ துப்பாக்கிச் சன்னங்கள் அதனை உறுதிப்படுத்தியிருந்தன.

அதன் பின்னர் விடுதலைப்புலிகளும், சிறீலங்கா படையினரும் ஏகே-47 ரகத் துப்பாக்கிகளையும், அதன் சீனத் தயாரிப்பான ரி-56 ரகத் துப்பாக்கிகளையும் பெருமளவில் பயன்படுத்தியிருந்தனர். தமிழ் மக்களுக்கும் கலாஸ்னிகோவின் ஆயுதம் மிகவும் பரீட்சயமாக மாறியிருந்தது. ரி-56 துப்பாக்கிக்கான தயாரிப்பு உபகரணங்களையும் ரஸ்யாவே சீனாவுக்கு வழங்கியிருந்தது.

கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்துவரும் ஏகே-47 துப்பாக்கி மற்றும் அதன் பிரதிவடிவ துப்பாக்கிகள் என்பன ஏறத்தாள 100 மில்லியன் வரையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், உலகம் எங்கும் பயன்பாட்டிலும் உள்ளன. ரஸ்யாவின் ஆயுதவிற்பனையிலும் அது அதிக முக்கியத்துவத்தை வழங்கியிருந்தது.

தனது நாட்டின் பாதுகாப்புக்காக காலாஸ்னிகோவினால் உருவாக்கப்பட்ட ஏகே-47 ரகத் துப்பாக்கியின் வரவினால் பல நன்மைகளும், தீமைகளும் விளைந்தபோதும், அதன் கண்டுபிடிப்பானது தொழில்நுட்பத்துறையிலும், படைத்துறையிலும் மிகப்பெரும் மாற்றத்திற்கு காரணமாக அமைந்திருந்தது என்பதை நாம் மறுக்க முடியாது.

ஈழம்ஈநியூஸ் இற்காக
வேல்ஸ் இல் இருந்து அருஷ்