உள்நாட்டு போர் நிறைவடைந்துவிட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்து 9 ஆண்டுகள் நிறைவடைந்த போதும், தமிழ் மக்களின் பிரதேசஙகளில் சிறீலங்கா அரசு தனது படையினரை தொடர்ந்தும் நிலைநிறுத்தியுள்ளது. 100,000 இற்கு மேற்பட்ட சிறீலங்கா படையினர் தமிழர் தாயகப்பகுதிகளில் நிலைகொண்டுள்ளதுடன், பல ஆயிரம் காவற்துறையினரும் அங்கு நிலைகொண்டுள்ளனர்.

 
சிறீலங்கா தேசத்தில் சிங்கள மக்கள் வாழும் பகுதிகளுடன் ஒப்பிடும்போது தமிழர் தாயகப்பகுதிகளான வடக்கும், கிழக்கும் ஒரு இராணுவ வலையமாகவே தற்போதும் காணப்படுகின்றது. ஆனாலும் சிறீலங்கா தேசத்தின் சிங்கள மக்கள் வாழும் பகுதிகளுடன் ஒப்பிடும்போது பெருமளவான வன்முறைகளும், திருட்டுக்களும் தமிழர் பகுதிகளிலேயே இடம்பெறுகின்றன.

 
கிறீஸ் பூதங்கள், ஆவா வாள் வெட்டுக்குழுக்கள், தமிழ் மக்களுக்கு துன்பம் விளைவிக்கும் குள்ள மனிதர்கள், பல வகையான திருட்டுக் கும்பல்கள் போன்றவை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் குறிப்பாக வடக்கில் மிக மிக அதிகம். ஆனால் சிங்கள படைகள் அதிகம் நிலைகொண்டுள்ளதும் வடக்கில் தான்.

 
இதன் பொருள் என்ன?

 
சிங்கள அரசின் இனஅழிப்பின் மற்றுமொரு வடடிவமாகவே இதனை அர்த்தப்படுத்திக் கொள்ளமுடியும். ஆனால் சிங்கள அரசின் இந்த இனஅழிப்பில் தமிழ்த் தேசியக் கூடடமைப்புக்கும் பங்கு உண்டு என்பது தான் இங்கு மிகவும் துன்பமான விடயம், ஏனெனில் தற்போது சிறீலங்காவில் நடைமுறையில் உள்ள நல்லாட்சி அரசுக்கு ஆதரவுகளை வழங்குவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான்.

 
சரி தற்போது இடம்பெற்றுவரும் சிங்கள அரசின் இனஅழிப்பில் இருந்து தப்பிப்பது எவ்வாறு?

 
சிங்கள அரசிற்கும், அதற்கு துணைநிற்கும் இந்திய அரசிற்கும் விசுவாசமான தமிழ்க்கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும், பூகோள அரசியலில் சிங்கள மற்றும் இந்திய சக்திகளை அடிபணியவைக்கும் வியூகங்களை வகுக்க வேண்டும்.

 
இவற்றிற்கு அப்பால் வடகிழக்கு மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கக்கோரி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். வடமாகாணசபையின் தற்போதைய முதல்வர் விக்கினேஸ்வரன் அண்மையில் தெரிவித்ததுபோல காவல்துறை அதிகாரங்களை வடமாகாணசபைக்கு வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலுவாக முன்னெடுக்க வேண்டும்.

 
சிறீலங்காவில் மாகாணசபைத் தேர்தல் நடைபெற இருப்பதால் பல அரசியல்வாதிகளுக்கு திடீரென இன உணர்வுகள் உச்சம்பெறுவதுண்டு, எனவே விக்கினேஸ்வரனின் கருத்து அரசியல் சார்ந்ததா அல்லது உண்மையாகவே தனது இனம் எதிர்கொள்ளும் துன்பங்களை கண்டு அதனை எதிர்க்கவேண்டும் என்ற முடிவினால் உண்டானதா என்பது எமக்கு தெரியாது ஆனால் அவர் கூறிய கருத்துக்களில் உள்ள அர்த்தம் உள்ளவாங்கப்படக்கூடியதே.

 
இந்த கருத்தினை கொண்டுதான் சிங்கள அரசின் நயவஞ்சகத்தை நாம் எதிர்க்க முடியும். அதாவது ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சிங்கள படையினரும், பல ஆயிரம் சிங்கள காவல்துறையினரும், பல நூறு புலனாய்வாளர்களும் நிலைகொண்டுள்ள ஒரு பிரதேசத்தில் சாராதரண வாள் மற்றும் கத்திகளுடன் திரியும் சில திருடர்களை கண்டறியமுடியவில்லை என்றால் அங்கு ஒரு திட்டமிட்ட அரசியல் பிழை உள்ளது என்றே கருதவேண்டும்.

 
சிறீலங்கா அரசின் திட்டமிட்ட இந்த அரசியல் பிழையை நாம் மற்றுமொரு அரசியல் நகர்வின் மூலம் தான் சரிசெய்ய முடியும். தமிழ் மக்களின் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள சிங்கள படைகளால் அங்கு வாழும் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்க முடியவில்லை என்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வடமாகாணசபைக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாம் அனைத்துலகத்தின் முன்னால் கொண்டுவரவேண்டும்.

 
இந்திய அரசு, சீனா அரசு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் பிரதிநிதிகளிடம் இது தொடர்பில் முறையிடுவதன் மூலம் இந்த விவகாரத்தில் ஒரு பூகோள அரசியல் தலையீட்டை உருவாக்க முடியுமா அல்லது சிறீலங்கா அரசுக்கும் இந்திய அரசுக்கும் ஒரு பிராந்திய நெருக்கடியை உருவாக்க முடியும்.

 
முள்ளை முள்ளால் எடுக்கும் தத்துவமே இது. தாயகத்தில் உள்ள தமிழ் கட்சிகள், பொதுஅமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் தான் இதனை முன்னெடுக்க வேண்டும், தாயகத்து மக்களின் துன்பத்தை போக்கவேண்டும் என்ற ஒரு உன்னத நோக்கத்திற்காக நாம் இதனை மேற்கொள்ள வேண்டும்.

 
ஈழம் ஈ நியூஸ்