கிளாலிப் படுகொலை நினைவுநாள்

0
667

navy9871993 ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் திகதி கிளாலிக் கடற்பரப்பில் போக்குவரத்தில் ஈடுபட்ட மக்கள்மீது சிறிலங்காக் கடற்படையினர் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் ஐம்பது வரையான மக்கள் கொல்லப்பட்டனர்.இதுபோல் இதேகடற்பரப்பில் போக்குவரத்துச் செய்த மக்கள்மேல் நடத்தப்பட்ட படுகொலைகளுள் பெரிய படுகொலை இதுவாகும்.

முதலில் கிளாலிப் பாதை பிறந்த கதையைப் பார்ப்போம்.

யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளுடன் தரைவழியாகத் தொடர்பு கொள்ளவென்று இருக்கும் ஒரேபாதை ஆனையிறவுவழியாகச் செல்லும் நெடுஞ்சாலைதான். இது கண்டிவீதியென்றும் ஏ-9 என்றும் வன்னியில் யாழ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது. அதைவிட்டால் குடாநாட்டின் மேற்குப்பகுதியால் மன்னார் மாவட்டத்தின் பூநகரிக்குச் செல்லும் ‘கேரதீவு – சங்குப்பிட்டி’ என அழைக்கப்படும் பாதையொன்றுண்டு. அது முற்றிலும் தரைவழிப்பாதையன்று. இந்த இரண்டுபாதைகளுமே முறையே ஆனையிறுவுப் படைத்தளம், பூநகரிப் படைத்தளம் என்பவற்றால் மறிக்கப்பட்டிருந்தன. சண்டை தொடங்கியபின் மக்களுக்களின் போக்குவரத்துக்கிருந்த இரண்டு பாதைகளுமே மூடப்பட்டன. யாழ் குடாநாட்டிலிருந்து மக்கள் வெளிச்செல்லவோ உள்வரவோ மாற்றுவழிகளைத் தேடவேண்டிய நிலை.

முதலில் ஆனையிறவுக்கு கிழக்குப் பக்கமாக கொம்படி-ஊரியான் பாதையை மக்கள் பயன்படுத்தினர். இடுப்பளவு உயரத்தில் தேங்கிநிற்கும் நீருக்குள்ளால் சிறுபடகுகளில் கிட்டத்தட்ட ஐந்து மைல் தூரம் பயணித்து வன்னி சென்றடையவேண்டும். பின் தாண்டிக்குளம் வழியாக வவுனியா செல்ல வேண்டும்.

இராணுவத்தினர் ஆனையிறவிலிருந்து மேற்கொண்ட ஒரு முன்னேற்ற முயற்சியுடன் கொம்படி-ஊரியான் போக்குவரத்துப் பாதையும் மூடப்பட்டது. சும்மா விட்டுவிட முடியுமா? பாதையொன்றில்லாவிட்டால் யாழ்ப்பாணம் வாழாது. அன்றும்சரி, இன்றும்சரி இதுதான் நிலைமை. மாற்றுப்பாதையாக கிடைத்ததுதான் கிளாலிக் கடனீரேரிப் பாதை.

தென்மராட்சியிலுள்ள கிளாலி என்ற கடற்கரையிலிருந்து மறுதொங்கலில் பூநகரிக்கு அண்மித்த நல்லூர், ஆலங்கேணி போன்ற பகுதிகளுக்கு கடனீரேரியூடாகப் பயணிப்பதே அந்த மாற்றுவழி. கிளாலியிலிருந்து நல்லூரை நோக்கிப்போகும்போது இடப்பக்கம் ஆனையிறவுப் படைத்தளம், வலப்பக்கம் பூநகரி கூட்டுப்படைத்தளம். இரண்டுபக்கமிருந்துமே ஆபத்துத்தான். அதிலும் பூநகரி கூட்டுப்படைத்தளத்தின் அங்கமான நாகதேவன்துறை கடற்படைத்தளத்திலிருந்து மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டுதான் மக்களின் கிளாலிக் கடனிரேரிப் பயணம் நடந்தது.

தொடக்கத்தில் பூநகரி – நாகதேவன்துறை கடற்படைத்தளத்திலிருந்து வரும் கடற்படையினரால் பல தாக்குதல்கள் மக்கள்மேல் நிகழ்த்தப்பட்டன. பலர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர். அப் படுகொலைகளுள் அதிக எண்ணிக்கையான மக்கள் ஒரேதடவையில் கொல்லப்பட்ட சம்பவம்தான் 1993 ஜனவரியில் நடந்தது. அன்றைய படுகொலையில் ஐம்பது வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

கடற்படையினரில் நீடித்த படுகொலைகளால் மக்கள் அச்சமடைந்தாலும் கிளாலிக் கடனீரேரிப் பாதையை விட்டால் வேறு வழியில்லையென்ற நிலையில் தொடர்ந்தும் பயணித்தனர்.

மேலும் ஒரு நினைவு

(02.01.2007) வன்னியில் மக்கள் குடியிருப்பு மீது சிறிலங்கா வான்படை தொடர்ச்சியாக பலதடவைகள் குண்டுவீச்சுத் தாக்குதலை மேற்கொண்டதில் ஒரு கிராமம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் இலுப்பக்கடவையிலிருக்கும் படகுத்துறை என்ற கடற்கரைக் கிராமமே தாக்குதலுக்குள்ளானது. இங்கிருந்த 25 வீடுகளில் 20 வீடுகள் முற்றாகத் தரைமட்டமாக்கப்பட்டது 15 வரையானோர் கொல்லப்பட்டும், 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.