கிளிநொச்சி மாவட்டத்தில் இளம் பெண்களை இராணுவத்தினர் வற்புறுத்தி படையில் இணைத்துக் கொள்வதற்கு முயற்சி

0
606

kilinochi_women_armyஇலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் இளம் பெண்களை இராணுவத்தினர் வற்புறுத்தி படையில் இணைத்துக் கொள்வதற்கு முயற்சித்திருப்பதாக முறைப்பாடுகள் வந்துள்ளன.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் தன்னிடம் முறையிட்டிருப்பதாக வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

வட்டக்கச்சி பிரதேசத்தில் உள்ள புழுதியாற்றுக்குளத்தில் ஏற்று நீர்ப்பாசனம் மேற்கொள்வதுபற்றி நேரடியாகக் கண்டறிவதற்காகச் சென்றிருந்தபோது, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தன்னிடம் இந்த முறைப்பாட்டைத் தெரிவித்ததாக அமைச்சர் ஐங்கரநேசன் கூறினார்.

இளம் பெண்களை இராணுவத்திற்குக் கட்டாயமாக சேர்ப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த அவர், இராணுவம் நிலைகொண்டு நிர்வகித்து வருகின்ற வட்டக்கச்சி அரசினர் பண்ணையில் வேலை செய்ய வருமாறு இராணுவத்தினர் இளம்பெண்களை வற்புறுத்துவதாகவும் தன்னிடம் முறையிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

வட்டக்கச்சி பண்ணையின் ஒரு மூலையில் வடமாகாண விவசாயத் திணைக்கள அதிகாரிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பெருமளவான பகுதியில் இராணுவத்தினர் விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும், இங்கு பணியாற்றுவதற்காகவே அவர்கள் இளம் பெண்களை வற்புறுத்தி அழைப்பதாகத் தன்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் கூறினார்.

‘முறைப்பாடு செய்யும் பெண்களுக்கு அச்சுறுத்தல்”முறையிட்ட பெண்களை புலனாய்வுப் பிரிவினர் அச்சுறுத்தியுள்ளதாகவும்’ ஐங்கரநேசன் கூறினார்

அங்கு சென்று, இராணுவத்தின் கீழ் வேலை செய்வதற்கு பெண்கள் அஞ்சுவதாகவும் அதேநேரத்தில் தன்னிடம் முறைப்பாடு செய்தவர்களைத் தேடிச்சென்று அச்சுறுத்தும் வகையில் புலனாய்வு பிரிவினர் நடந்து கொண்டதாகத் தனக்குத் தகவல் எட்டியிருப்பதாகவும், இந்த விடயங்கள் குறித்து மாகாணசபையின் ஊடாக நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்தார்.

கட்டாயமாக இராணுவத்திற்கு இளம் பெண்களைச் சேர்ப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பது பற்றி இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரியவிடம் கேட்டபோது, அதனை அவர் மறுத்துரைத்தார்.

‘சிலர் கூறுவதுபோல பலாத்காரமாக எவரையும் படையில் சேர்க்கவில்லை. அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை’ என்றார் இராணுவப் பேச்சாளர்.

இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியில் சேர்ந்து கொள்வதற்கு வன்னிப்பிரதேசம் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

‘பெண்கள் படையணிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 100 பேரையும், கிழக்கு மாகாணத்தில் இருந்து 50 பேரையும் படையில் சேர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சேர்க்கப்படுபவர்கள் அவர்கள் விரும்புகின்ற நேரத்தில் படையில் இருந்து விலகிக் கொள்வதற்கும் வசதிகள் இருக்கின்றன’ என்றும் இராணுவ பேச்சாளர் கூறினார்.

BBC