கூட்டமைப்பின் கவனத்திற்கு

0
726

paraniஇன்னும் ஒரு மாதத்தில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. கூட்டமைப்பும் களத்தில் நிற்கிறது. தமிழ்த்தேசியத் தளத்தில் நின்று பலதரப்பாலும் முன்வைக்கப்பட்ட தேர்தல் புறக்கணிப்பு கோரிக்கையையும் அல்லது அதில் பங்கு பற்றுவதற்கான முன் நிபந்தனைகளையும் புறம்தள்ளிவிட்டு கூட்டமைப்பு தன்னிச்சையாக இயங்கும் இந்த சூழலில் கூட்டமைப்பு தமது தேர்தல் கொள்கை விளக்க அறிக்கையில் – தேர்தல் விஞ்ஞாபனத்திலாவது தாயக கோட்பாட்டை சிதைக்காததும் நடந்த இன அழிப்பிற்கு அனைத்துலக விசாரணையை கோரும் அம்சங்களையாவது உள்ளடக்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய சிந்தனைப்பள்ளியை சோந்தவர்கள் கோரிநிற்கிறார்கள்.

இப்புறசூழலில் கடந்த கிழக்கு மாகாண தேர்தலிற்கு முன்பாக கிழக்கு மக்களிடையே கள ஆய்வு செய்து அவர்கள் அரசியல் அபிலாசைகளையும் உளவியல் போக்கையும்; துல்லியமாக வரையறுத்த ஒரு உளவியல் ஆய்வை காலத்தின் தேவை கருதி கூட்டமைப்பின் பார்வைக்கு வைக்கிறோம். வடக்கு தமிழர்களினது உளவியலும் இதுதான் என்பதை கூட்டமைப்பு மறந்து விடக்கூடாது.

எனவே இந்த எழுச்சியை – மக்களின் தேசிய சிந்தனையை தேர்தல் அரசியலுக்குள் புதைக்காமல் தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்ற தாயக கோட்பாட்டை நோக்கி வளர்த்து செல்ல வேண்டியது கூட்டமைப்பின் கடமை.

ஆசிரியர் குழு

ஈழம் ஈநியூஸ்

கிழக்கு மாகாண தமிழ் மக்களின் தேசிய சிந்தனையை ஒருமுகப்படுத்துவது குறித்து கூட்டமைப்பிற்கும் தமிழ் சிவில் சமூகத்திற்கும் சில வேண்டுகோள்!

கடந்த 3 மாத காலமாக “போருக்கு பின் பெண்கள் சிறார்கள் உளவியலும் அதை ஆற்றுப்படுத்தலும்” என்ற கருப்பொருளில் தாயகத்தில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நாம் மேற்கொண்ட ஒரு சுயாதீன ஆய்வின் முடிவிலிருந்து சில முடிவுகளை தமிழத் தேசியத்தின் பால் அக்கறையுள்ள அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறோம்.

இங்கு எமது ஆய்வின் பிரதான நோக்கமான பெண்கள், சிறார்களின் உளவியல் குறித்து நாம் பேச முன்வரவில்லை. எமது பல்கலைக்கழக ஆய்விற்காகவும் அனைத்துலக தொண்டு நிறுவனங்களுக்கும் மனித உரிமை அமைப்புக்களிற்கும் சமாப்பிப்பதற்காகவுமே நாம் அந்த ஆய்வை மேற்கொண்டோம்.

அதை நாம் சம்பந்தபட்டவர்களிடம் சமர்ப்பிப்போம். நாம் இங்கு பேச விரும்புவதும் சுட்டிக்காட்ட விரும்புவதும் வேறு சில முடிவுகள் தொடர்பானது. எமக்கு அந்த கடமையும் அதற்கான உரிமையும் இருக்கிறது என்று நம்புகிறோம்.

அதாவது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டை நீர்த்து போகச்செய்யும் வகையில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கை பிரித்து தனித்தனியாக மாகாணசபை தேர்தலை சிறீலங்கா அரசு நடாத்த இருக்கிறது. அதில் கூட்டமைப்பும் போட்டியிட இருப்பதை நாம் அறிவோம். இப்போது எமது ஆய்வின் முடிவுகளையும் கூட்டமைப்பின் முடிவையும் ஒப்பிட்டு இதன் சாதக பாதக நிலைகளை நாம் பேச விரும்புகிறோம்.
slave-getty
அண்மையில் தமிழ் சிவில் சமூகம் கிழக்கு மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பு பங்கு கொள்வது தொடர்பாக கூட்டமைப்பை விளித்து விடுத்த அறிக்கை ஒரு காத்திரமான நடவடிக்கையும் வரலாற்றின் போக்கில் மிக முக்கியமான பதிவு என்றும் கருதுகிறோம்.

எனவே அதில் பேசப்பட்ட விடயங்களை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு எமது கருத்துக்களை பேச விரும்புகிறோம். இது தொடர்பான ஆழமான அறிக்கை ஒன்றை நாம் வெளியிட உத்தேசித்திருந்த போதிலும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பு பங்கெடுக்க இருப்பதால் அதற்கு முன்பாக சுருக்கமாக இந்த விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

நாங்கள் அரசியல் விவகாரங்களின் பின்னுள்ள உளவியலை ஆராய்பவர்கள். ஆகவே நேரடி அரசியல் தரவுகளை புள்ளிவிபரங்களை தவிர்த்து அந்த கிழக்கு மாகாண மக்களின் உளவியலின் பின்னணியில் சிலவற்றை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

கிழக்கு மாகாணம்.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கிய முழுமையான தமிழர் தாயகப் பகுதி இது. கிழக்கு மாகாண மக்களின் அரசியல் சார்ந்த உளவியலை 3 பகுதிகளாக நாம் இங்கு பிரித்து பார்க்க வேண்டிய நிலையிலிருக்கிறோம்.

01. அதாவது தமிழீழ விடுதலையோடு தம்மை முழுமையாக இணைத்திருந்த ஒரு காலகட்டம் (2004 எப்ரல் வரையானது இது)

02. அடுத்து 2004 லிருந்து 2009 மே முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து முடிந்த காலப்பகுதியும் அதற்கு சற்று பின்னரும்.. (2010 நடுப்பகுதிவரை இதைக் குறிப்பிடலாம்)

03. தற்போதைய காலப்பகுதி

முழுமையான தேசிய சிந்தனையோடு இருந்த கிழக்கு மக்களின் உளவியல் எதிரிகளினதும் சில அந்நிய சக்திகளினதும் நிகழ்ச்சி நிரலின் விளைவாக ஒரு வரலாற்று துரோகத்தினூடாக 2004 ஏப்ரலில் முழுமையாக துண்டாடப்பட்டது.

மிகவும் தந்திரோபாயமான வகையில் மிகவும் நுட்பமாக தமிழ்த்தேசிய சிந்தனையில் இருந்த அவர்களது உளவியல் பகுதி பகுதியாக சிதைக்கப்பட்டது. 2009 வரை அவர்களில் பெரும்பாலானோர் அந்த சிதைக்கப்பட்ட உளவியலுக்குள்ளேயே இருந்தார்கள் என்பதை நாம் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

நடந்த இனப்படுகொலையும் அதன் பின்னான ஆக்கிரமிப்பு அடக்குமுறை நிகழ்வுகளும் அவர்களின் தேசிய சிந்தனை உளவியலை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறது. மெதுவாக ஆனால் உறுதியாக கிளர்ந்தெழத் தொடங்கியுள்ளார்கள் கிழக்கு மக்கள்.

நாம் எமது ஆய்வில் கண்டடைந்திருக்கும் பேருண்மை இது.

வடக்கு தமிழர்களிடம்கூட இல்லாத தேசிய சிந்தனையை நாம் எமது ஆய்வினூடாக அவதானித்தோம். இது ஒன்றும் பூடகமான விடயமும் அல்ல. ஏனெனில் வடக்கு மக்களைவிட கிழக்கு மக்கள் மும்முனை நெருக்கடியை சந்தித்துள்ளார்கள்.

அதாவது சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் நெருக்கடி ஒருபுறமும் முஸ்லிம்களின் அரச நிகழ்ச்சி நிரலின் விளைவான அழுத்தங்கள் ஒரு புறமும் தம்மை தேசிய சிந்தனையில் இருந்து துண்டாடி தம்மை நடுத்தெருவில் விட்டு விட்டு சிங்களத்துடன் கூடிக்குலாவும் துரோகிகளின் நிலைப்பாடுகளும் அவர்களை மீண்டும் தேசியத்தின் பால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

வடக்கைப்போல் ஆக்கிரமிப்பு அடக்குமுறை நிகழ்வுகள் பெருமளவில் வெளியாக தெரியாத நிலையில் (தெரியாத படி உட்புறமாகத் தாளிடப்பட்ட சூழல்) கிழக்கு மக்கள் ஒவ்வொருவரினதும் தமக்கான நீதியை தாமே பெற வேண்டும் என்ற தனிமனித உளவியல் ஒரு கூட்டு உளவியல் பரிமாணத்தை பெற்றிருக்கிறது.

இதை தமிழ் சிவில் சமூகமும் கூட்டமைப்பும் கவனத்தில் கொள்ள வேண்டும். எமக்கான அரசியல் இந்த உளவியல் பின்னணியிலேயே கட்டமைக்கப்பட வேண்டும்.

கூட்டமைப்பு ஏன் போட்டியிடுகிறது?

கூட்டமைப்பு பிரிக்கப்பட்ட மாகாண சபை தேர்தல்களில் போட்டியிடுவதற்கு பல்வேறு நியாயங்களை முன்வைத்து வருகிறது. அனைத்துமே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய வாதங்களாக அன்றி மக்களின் உடனடி சிக்கல்களை தீர்க்ககூடிய ஆக்கிரமிப்புக்களை தற்காலிகமாக தடுக்கக்கூடிய என்பதான மக்களை முன்னிறுத்திய வாதங்களாகவே உள்ளன.

ஆனால் மக்களின் உளவியல் நிரந்தர அரசியல் தீர்வை நோக்கியதான தேசிய சிந்தனையோடு ஒட்டிய உளவியலாக உருவெடுத்திருப்பதை கூட்டமைப்பு புரிந்து கொள்ளவில்லை அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறது என்று சொல்லலாம்.

இந்த நிலையிலேயே மாற்று அரசியல் போக்கும் சிவில் சமூகத்தின் பங்களிப்பும் தலையீடும் அவசியமாகிறது.

கொஞ்சம் பின்னோக்கி போவோம். 2004 ற்கு பிறகு புலிகளின் நிர்வாகம் செயற்பட்ட காலத்தில் ஒரு வேளை வடக்கு கிழக்கை தமிழர் தாயகமாக அங்கீகரிக்க கோரி ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் கிழக்கு மக்கள் அதற்கு எதிராக வாக்களிக்கக்கூடிய ஒரு புறச்சூழல் உருவாக்கப்பட்டிருந்ததை நாம் மறக்கக்கூடாது.

ஆனால் தற்போது நிலைமை தமிழ்த் தேசியத்திற்கு சார்பாக திரும்பியிருக்கிறது. வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயக்த்திற்காக 100 விழுக்காடு வாக்குகள் கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்படும். எமது ஆய்வில் மக்கள் இதை தெளிவாகவே பதிவு செய்திருக்கிறார்கள்.

கூட்டமைப்பை தற்போது தமது அரசியல் சக்திகள் என்று கிழக்கு மக்கள் நம்புவதை கூட்டமைப்பு தேர்தல் வாக்குகளுக்காக பயன்படுத்தக்கூடாது. மாறாக வடக்கு கிழக்கு இணைப்பிற்கு அதை பயன்படுத்த வேண்டும். இதுதான் சாதுரியமான அரசியல் மட்டுமல்ல சாணக்கியத்தனமானதும்கூட.

ஒரு முதியவர் கூறினார்” கூட்டமைப்பு சார்பாக ஒரு நாயை கொண்டு வந்து நிறுத்துங்கள். அதை வெற்றிபெறச் செய்து காட்டுகிறோம்” என்று.. இது அந்த ஒட்டுமொத்த மக்களின் குரல் என்பதை நாம் எமது ஆய்வினூடாக அவதானித்தோம்..

ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறோம். எந்தவிதமான அச்சுறுத்தல்களும் இன்றி சுதந்திரமாக தேர்தல் நடைபெறும் பட்சத்தில் கூட்டமைப்பு வெற்றி பெறுவது மட்டுமல்ல அரசு வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தையும் இழப்பார்கள். மக்கள் அவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள். ஆனால் தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்று கூட்டமைப்பு நம்புகிறதா?

இந்தக்கணம் வரை பல வேட்பாளர்கள் அச்சுறுத்தப்பட்டிருப்பதாகவும் ஆயுதக்குழுக்கள் நடமாட்டம் இருப்பதாகவும் கூட்டமைப்பே முறைப்பாட்டை வெளியிட்டிருக்கிறது. ஏன் இந்த முரண்பாடு? சுதந்திரமாக – ஜனநாயக முறைப்படி நடக்கப்போவதில்லை என்று தெரிந்தும் தாயக கோட்பாட்டை சிதைக்கும் இந்த தேர்தலில் ஏன் கூட்டமைப்பு பங்கு பற்றுகிறது?

தேர்தலில் பங்கு கொள்வதற்கான முன் நிபந்தனைகள்.

01. இணைந்திருந்த மகாணங்களை சட்ட திருத்தங்களினூடாக பிரித்த அரசின் தேர்தலில் கலந்து கொள்வதற்கு முன்பாக தமிழ் மக்களின் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் கூட்டமைப்பு ஏன் சில நிபந்தனைகளை அரசுக்கு முன்வைக்கவில்லை?

02. அனைத்துலக சமூகத்தின் நேரடி கண்காணிப்பை அழுத்தமாக கோர வேண்டும். இல்லையேல் தேர்தலில் கலந்து கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்.

03. முழுமையான தமிழர் தாயகமாக இருந்த கிழக்கு மாகாணம் படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டு தமிழர்கள் விகிதாசாரம் குறைக்கப்பட்டிருக்கிறது. மூவின மக்களும் செறிந்து வாழும் பகுதியாக கிழக்கு மாகாணம் தற்போது மாற்றப்பட்டிருக்கிறது. எனவே இந்த தேர்தல் அடிப்படையில் எப்படி தமிழர் தாயக கோட்பாட்டிற்கு வலுச்சேர்க்கும் என்று கூட்டமைப்பு நம்புகிறது.

04. முஸ்லிம் தலைவர்கள் சிறீலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரமே தொடாந்து செயற்பட்டு வருகிறார்கள். இந்த தேர்தலிலும் அவர்கள் எடுத்த முடிவே அதற்கு சாட்சி. முஸ்லிம்களுடன் சமரசம் செய்து அவர்களின் தனித்துவம் அங்கீகரிக்கப்படாமல் தமிழர் தாயகக் கோட்போடு பூர்த்தியடையாது. இது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அதற்கு இந்த தேர்தல் உதவப் போவதில்லை என்பதை கூட்டமைப்பு உணரவேண்டும். அதற்கு வேறு மாற்று வழிகளை இரு தரப்பு சிவில் சமூக பிரதிநிதிகளே முன்வைக்க வேண்டும்.

05. இந்தியா பிராந்தியத்தில் ஒரு மறுக்க முடியாத சக்தி என்றும் அதன் அறிவுரைகளை தொடர்ந்து செவி மடுக்கும் கூட்டமைப்பு இந்த தேர்தலில் பங்கு கொள்வதற்கு முன்பாக ஏன் இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படையில் வடக்கு கிழக்கு இணைப்பு குறித்து இந்திய அரசிற்கு எந்த முன்நிபந்தனையையும் வைக்கவில்லை.. எதற்குமே பெறுமதியில்லாத 13 வது திருத்த சட்டத்தை முன்மொழிவதற்கு ஒரு மக்கள் கட்சியோ ஏன் தேர்தல்கூட தேவையில்லை என்பதை கூட்டமைப்பு உணராதது துரதிஸ்டவசமானது.

எமது முடிவும் கருதுகோளும்..

எமது ஆய்வின்போது மட்டக்களப்பில் ஒரு பாடசாலை அதிபர் கூறினார்” கருணா என்ற ஒரு தனிமனிதனை வைத்து ஒட்டுமொத்த கிழக்கு மக்களையும் மதிப்பிடாதீர்கள். நாம் என்றும் தேசியத்தின் பக்கமே. எமது தலைவர் பிரபாகரன்தான். இடையில் நடந்தது தாய்க்கும் பிள்ளைக்குமான கருத்து வேறுபாடு. ” என்று.. இந்த குரலை ஒட்டுமொத்த கிழக்கு மக்களுமே ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்தினார்கள்.

எனவே இந்த எழுச்சியை – மக்களின் தேசிய சிந்தனையை தேர்தல் அரசியலுக்குள் புதைக்காமல் தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்ற தாயக கோட்பாட்டை நோக்கி வளர்த்து செல்ல வேண்டியது கூட்டமைப்பின் கடமை.

நடந்த இனப்படுகொலையும், போர்க்குற்றங்களும் அதன் விளைவாக ஒட்டு மொத்த தமிழ் மக்களின் தற்போதைய எழுச்சியும் ஒரு அனைத்துலக பொறிமுறையை உருவாக்குவதற்கான துருப்பு சீட்டாக மாறியிருக்கிறது. இதை சாத்தியப்படுத்தியவர்கள் அந்த மண்ணில் வீழ்ந்த மக்களும் புலி வீரர்களும்; என்பதை கூட்டமைப்பு மறந்து விடக்கூடாது.

சிறீலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கி கையிலுருக்கும் ஒரே ஒரு துருப்புச் சீட்டையும் கொடுத்துவிட்டு கூட்டமைப்பு எப்படி ஆட்டத்தை தொடரப்போகிறது என்பது நமக்கு புரியவில்லை. தேர்தலில் பங்கு கொள்வது என்ற கடுமையான யதார்த்தத்தை சிவில் சமூகம் போல் நாமும் புரிந்து கொள்கிறோம்.

எனவே சிவில் சமூகத்தின் அறிக்கையிலும் எமது ஆய்விலும் இருக்கும் மகக்ள் சார் உளவிலையும் கவனத்தில் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகருமாறு கூட்டமைப்பை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.

மாறாக இந்திய – சிறீலங்கா நிகழ்ச்சி நிரலுக்கு ஏதுவாக செயற்பட முடிவடுத்தால் அது ஒரு வரலாற்று தவறாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. விளைவாக நிலப்பறிப்புக்களும் ஆக்கிரமிப்புக்களும் அடக்குமுறைகளும் தொடரும்போது “தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்ற வரலாற்று வசனத்தை உதிர்த்துவிட்டு நீங்கள் கையைவிரிக்கும்போது எழுச்சியும் போர்க்குணமும் கொண்டு கிளர்ந்தெழத் தயாராக நிற்கும் அந்த மக்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை நோக்கி தள்ளப்படுவதற்கான எல்லா புறநிலைகளும் உளவியலும் அந்த கிழக்கு மண்ணில் கருக்கொண்டுள்ளது. உங்கள் தவறான நடைமுறையின் வழி இன்னொரு ஆயுதப் போராட்டத்திற்கு அத்திவாரமிட்ட பெருமையை கூட்டமைப்பு பெறும் என்பதில் எந்த மாற்றமுமில்லை.

போர்க்குணமும் எழுச்சியும் கொண்டு தேசிய சிந்தனையில் ஒருமுகப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மக்களை ஒருங்கிணைத்து அனைத்துலக பொறிமுறையினூடாக தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றப் போகிறதா? அல்லது இன்னொரு நந்திக்கடலை நோக்கி தமிழர்களை அழைத்து சென்ற பெருமையுடன் கூட்டமைப்பு கலையப்போகிறதா?

நாம் கூட்டமைப்பிடம் பதிலை எதிர்பார்க்கவில்லை…செயலைத்தான் எதிர்பார்க்கிறோம்.

உளவியலாளர் குழு சார்பாக

பரணி கிருஸ்ணரஜனி
யாழினி ரவிச்சந்திரன்

(எம்மோடு ஆய்வில் ஈடுபட்ட சக ஆய்வாளர்களின் பெயர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தவிர்க்கப்பட்டுள்ளது. ஏனெனில் சிறீலங்காவின் ஜனநாயகம் அத்தகையது.

எமது ஆய்விற்கு பல வகைகளிலும் உதவி புரிந்த வடக்கு கிழக்கை சேர்நத வெகுஜன அமைப்பு பிரதிநிதிகள்இ பல்கலைக்கழக சமூகம் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு நன்றி).