“உன்ர தம்பிமார் ரெண்டு பேரின்ர தலையையும் நான்தான் வெட்டினன். அதோ அந்த மலைக்கு பின்னால வச்சித்தான் நிலத்தில கிடத்திப் போட்டு வெட்டினம்.” ஒரு சகோதரியிடம் அயல்வீட்டு இராணுவச் சிப்பாய் சொன்ன வசனங்கள் இவை. ஒரு காலத்தில், கூட இருந்த சிங்களவர்கள் கூடியே இருந்த தமிழர்களுக்கு இரவுத் துரோகம் செய்தமையின் ஒரு சாட்சிதான் நாகம்மாள்.

அது கெவிலியாமடு. இப்போது கெவிலியாமடு (அழுத்தமாக சொல்லப்படுகிறது). அதற்குள் இருக்கும் குடும்பமொன்றின் கதையை மேற்கண்ட வசனங்களில் இருந்துதான் ஆரம்பித்தார் 55ஐக் கடக்கும் நாகம்மாள். இரவில் கடத்தப்பட்டு அல்லது அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்படும் மரணத் துயரத்தின் வலியை அவரின் ஒவ்வொரு பேச்சின் முடிவும், ஈரமாகும் கண்ணீரும் நமக்கு இலகுவாக சொல்லிவிடுகின்றது.

east-1
அதே இடம்தான் பூர்வீகம். அந்த நிலத்தின் நீண்ட பரம்பரையினர். ஆனாலும், அங்கு அதற்கான தடயங்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. சிறு காணித் துண்டு முழுவதும் மண்மேடுகள் காணப்படுகின்றன. அதெல்லாம் தாம் ஒவ்வொரு காலத்திலும் கட்டிக்கொண்ட மண் வீடுகள் என்கிறார் அந்தப் பெண்மணி.

ஏன் நிரந்தர வீடு ஒரு காலத்திலும் அமைத்துக் கொள்ளவில்லையா? அமைத்துக் கொள்ளவில்லை. அடிக்கடி நிகழ்ந்த இடப்பெயர்வுகள் நிலையான வீடுகளை அமைத்துக் கொள்வதிலும், அவற்றைப் பாதுகாத்துக் கொள்வதிலும் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. முற்றிலும் விவசாயம் தவிர வேறு தொழிலறியாதவர்கள். ஆகவே, அவர்களின் பொருளாதாரமும், வாழ்வின் வழக்கமும் பெருமெடுப்பில் நிரந்தர வீடுகளை அமைத்து, நிலத்தின் பூர்வீகத்தன்மையை கொண்டாடும் பிரமாண்டத்தை அவர்களுக்கு வழங்கவில்லை. (இப்போதுதான் கல்வியில் உயர்தரத்தைத் தாண்டும் ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது)

அது நிலையான கிராமம் என்றாலும், நிலையாக யாரும் இருப்பதற்கான சூழல் நிலவவில்லை. 1983இல் உருவான இனக் கலவரம், 1986 வரை கெவிலியாமடுவை தாக்கியிருக்கிறது. அதில் ஒருநாள் இரவு நாகம்மாளின் குடும்பம் சூறையாடப்பட்டது. சிறு வயதிலிருந்து, அயல் வீட்டுக்காரனாக இருந்து, பின்னர் இராணுவத்தில் இணைந்துகொண்ட சிங்கள நண்பன், அந்த நாள் இரவு இரண்டு சகோதரர்களையும் வந்து அழைத்திருக்கிறான். அவனுடன் ஆயுதம் தரித்த வேறு சிலரும் இருந்திருக்கின்றனர். அழைத்துச் சென்றவர்கள் ஊரின் எல்லையாகத் தெரியும் மலையின் அடிவாரத்தில் வைத்து இரு சகோதரர்களின் தலைகளையும் அறுத்திருக்கின்றனர். அந்தக் காலத்தில் தலையறுத்துப் போதல் என்பது இலங்கையில் பிரபலமான கொலை முறையாம்!

“அந்த மலையின்ர அடில வச்சித்தான் வெட்டினவங்களாம். பொடிய கூட கண்ணில காணேல்ல.” சூரியன் மறைந்து கொண்டிருக்கும் மலையை நோக்கித் தன் கையை நீட்டிக் காட்டுகிறார் நாகம்மாள்.

அந்தக் கொலைச் சம்பவத்திலிருந்து இரண்டு பெரிய இடப்பெயர்வுகள். அவை புலிகளின் காலத்தில் நடந்திருக்கிறது. சமாதானத்துக்கு முந்திய காலத்தில் புலிகள் மேற்கொண்ட நில மீட்பு நடவடிக்கையின் பயனாக கெவிலியாமடு திரும்பினர் மக்கள். திரும்பி வந்த குடும்பங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்கிறார் நாகம்மாள். நிலம் பெயர்ந்தவர்கள் தற்காலிகமாக தங்கிய இடங்களில் நிரந்தரமாகிவிட்டனர். சிலர் குடும்பமாகவே கொல்லப்பட்டுவிட்டனர். கருணா பிளவோடு புலிகளின் ஆதிக்கம் கிழக்கில் வலுவிழந்து வர, இந்த மக்களோடு அவர்கள் நடந்துகொண்ட விதம் ஆச்சரியத்தைத் தருகிறது. புலிகள் மக்களிடத்திலேயே ஊழல் செய்திருக்கின்றனர். பணம்.. பணம்… என்ற குறிக்கோளுடன் போராளிகள் அலைந்தனர் என்கின்றனர்.

ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார் வயதான ஒருவர்,

அந்தக் காலத்தில பொயின்ர தாண்டித்தான் (புலிகளின் கட்டுப்பாடு கடந்து, இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்) பாங்கில காசு எடுக்கப் போகனும். வீட்டுத் திட்ட காசு நிறுவனங்கள் பாங்குலதான் போட்டிருந்தவ. நாம காசு எடுக்கப் போகேக்குள்ள எவ்வளவு எடுக்கப் போறமெண்ட விவரங்கள் பொயின்ட்ல குடுத்துப்போட்டு போவோணும். திருப்பி வரேக்குள்ள முழுக் காசையும் பொயிண்ட்ல குடுத்து, அவங்க தாற 2 ஆயிரத்தையோ, 3 ஆயிரத்தையோ வாங்கிக் கொண்டு வீட்ட வரோணும். திருப்பிக் கேட்டா அடிப்பாங்கள். இப்ப எங்களவிட அவங்கள் நல்ல வசதியா இருக்கிறாங்கள்.

ஊழல் செய்யாத ஒழுக்கம் நிறைந்த புலிகள் பற்றிய எண்ணம் உள்ளவர்களுக்கு, அந்த மக்களின் கதைகள் மீது நம்பிக்கையீனம் தோன்றும்.

இலங்கை அரசு மேற்கொண்ட மனிதநேய இராணுவ நடவடிக்கை கெவிலியாமடு மக்களைத் துரத்தியிருக்கிறது. போரோய்விற்குப் பின் ஊர் திரும்பினால் இன்னொரு ஆச்சரியம்.

buddist
இவர்களின் கிராத்துக்குள்ளும், அதனைச்சூழவும், தரிசு நிலங்களிலும் 300க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டாயிற்று. பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் மீண்டும் மீண்டும் சிங்களவர்கள் வந்து குடியேறிக் கொண்டேயிருப்பதை அவதானித்தனர். தொடர்ச்சியான போராட்டங்கள், மகஜர் கையளிப்புகள், எந்த மாற்றமும் நடக்கவில்லை. ஆரம்பத்தில் மண் வீடுகளில், குடிசைகளில் இருந்த சிங்கள மக்கள், இப்போது நிரந்தர சிமெந்து வீடுகளுக்கு முன்னேறிவிட்டனர். ஆலமரத்தடியில் அமர்ந்திருந்த புத்தர், பிரமாண்டமான விகாரரைக்கு இடம்மாறிவிட்டார். 300க்கும் மேற்பட்ட சிங்கள குடும்பங்களுக்கு மத்தியில், கெவிலியாமடுவில் எஞ்சியிருப்பது 22 தமிழ் குடும்பங்கள்தான்.

“எங்களாலயும் இஞ்ச இருக்கேலாது. ஒரே ஆனைப் (யானை) பிரச்சின. அந்த ஆனையள் சிங்களத்தில மிரட்டினா மட்டும்தான் பயப்புடுது. தமிழில மிரட்டினா வீட்டுக்குள்ள வருது. எந்தப் பயிரையும் விட்டுவைக்கிதில்ல. ஆத்துத் தண்ணியத்தான் குடிக்கிறம். அரசும், நிறுவனங்களும் எங்கள கவனிக்கிறேல்ல. நான் என்ர பிள்ளையள ரவுண் பக்கம் அனுப்பீற்றன்” என்று நாகம்மாள் குறிப்பிடுவதிலிருந்து விளங்குகின்றது, கெவிலியாமடு, கட்டிருக்கமான கெவிலியாமடுவாக (அழுத்தமான உச்சரிப்பு) விரைவில் மாறப்போகின்றதென்பது.

ஆக, கிழக்கு மிக விரைவாக சிங்கள மயப்பட்டு வருகிறது என்பதற்கு கெவிலியாமடு மிகப் பிந்திய ஆதாரம். இந்த நிலத்தவர்கள் தமிழர் நிலத்தின் கிழக்குப் பிராந்தியத்தில் ஆணிவேர் ஊன்றியவர்கள். அதற்கான பண்பாடும், அதற்கான வரலாறும் அவர்களிடம் இப்போதும் உண்டு. அக்கறையற்றிருக்கும் நமது அரசியல் இதுபோன்ற தொன்மைக் கிராமங்களை இழக்கச் செய்து வருகின்றது.

கெவிலியாமடு மிகப் புராதனமான விவசாயக் கிராமம். இன்று அந்த விவசாயத்தையே கைவிடும் நிலையை மக்கள் எட்டியிருக்கின்றனர். வன்முறையும் இடப்பெயர்வும், இவை தந்த உயிரிழப்பும் வறுமையும் கிராமத்தவரின் முகங்களையும் மனதையும் இறுக்கமாக மாற்றியிருக்கிறது. எவரது பேச்சிலும் அவர்கள் நம்பிக்கை காண்பவர்களாக இல்லை. சீஸனுக்கு வரும் அரசியல்வாதிகள் தம்மை ஏமாற்றிவிட்டதையே அவர்களின் கதைகளில் அடிக்கடி நினைவுப்படுத்துகின்றனர்; நம்பிக்கையிழந்து இருக்கின்றனர். இங்கு வாழ்கின்ற 22 குடும்பங்களினதும் இருப்பை உறுதிசெய்தால் மாத்திரமே கெவிலியாமடு என்ற தமிழர்களின் தொன்ம கிராமத்தை சிங்களவர்களின் அபகரிப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும். இல்லையேல் இருபுறமாகவும் நெருங்கி வந்துவிட்ட சிங்களவர்களுக்குப் பயந்து அந்த நிலத்தவர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துவிடவே வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன. இயற்கையும் அதற்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இயற்கை நீர்நிலைகளில் நீரில்லை. குடிநீர் எடுப்பதற்குக்கூட கிணறு இல்லை. அந்த ஊருக்குள் செல்வதற்கு ஒழுங்கான தெரு இல்லை. ஆனால், சிங்களவர்கள் வாழும் பகுதிகளிலும், அவர்களுக்காக மக்களே இல்லாத நடுக்காட்டில் அமைக்கப்பட்டிருக்கும் சிறு பௌத்த விகாரைக்காகவும் நவீன மயப்படுத்தப்பட்ட வீதி இப்போதுதான் போடப்பட்டு பளபளத்துக் கொண்டிருக்கிறது.

அரசும் அரச சாரா நிறுவனங்களும் திட்டமிட்ட வகையில் கெவிலியாமடுவைத் தம் அபிவிருத்திப் பார்வையிலிருந்து விலக்கி வைத்திருக்கின்றன. தமிழ் தரப்பிலிருந்து அரசியல் பேசுபவர்களும் அந்த மக்களின் வாக்குகளை நம்பியிருப்பவர்களும் கெவிலியாமடு போன்ற எல்லைக் கிராமங்களைக் காப்பாற்றுவதற்காகவாவது முன்வரவேண்டும். வெறுமனே அங்கு சென்று நலம் விசாரித்துவிட்டு வருவதில் எந்தப் பயனுமில்லை. ஏதேனும் ஒரு வகையில் எல்லைக் கிராமங்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்துத் தரப்பினரும் தீவிரம் காட்டுவது அவசியம். ஏனெனில், கிழக்குப் பக்கமாக நில அபகரிப்பின் உதயம் மிக வேகமாக விரிவடைந்து வருகிறது. நாகம்மாள் போன்றவர்களும், கெவிலியாமடு போன்ற கிராமங்களும் அடுத்த தலைமுறையின் நினைவிலிருந்தே அகற்றப்படும் அபாயகரமான வேலைத் திட்டமொன்றுக்குள் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றனர். கெவிலியா மடுவிலிருந்து விழித்தெழுவோம்.

ஜெரா
மாற்றம்