கிழித்தெறியப்பட வேண்டிய அமெரிக்கத் தீர்மானம் – கி.வெங்கட்ராமன்

0
385

vekatramanஇலங்கைக்கு எதிரான தீர்மானம் என்ற பெயரில் இந்த ஆண்டும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானம் முன்வைக்கப் பட்டுள்ளது.

2014 மார்ச் 3 அன்று ஐ.நா மனித உரிமை மன்றக் கூட்டத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் , பிரிட்டன், மொரிசியஸ், மாண்டிநீக்ரோ, மாசிடோனியா ஆகிய நாடுகள் ஒரு வரைவுத் தீர்மானத்தை முன்மொழிந் தன. இதன் மீது விவாதம் நடந்து திருத்தங்கள் இருந்தால் செய்யப்பட்டு வரும் 26.03.2014 அன்று தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது.

கடந்த ஆண்டு அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தில் மேலோட்டமான ஒரு சில மாற்றங்கள் செய்யப் பட்டு இத் தீர்மானம் முன்வைக்கப் பட்டுள்ளது.

சென்ற ஆண்டுத் தீர்மானம் ”சிறீலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பேற்பு ஆகியவற்றை மேம் படுத்துதல்’’ என்று இருந்தது. இந்த ஆண்டு வரைவில் மேற்சொன்னவற்றுடன் ’மனித உரிமைகள்’ என்பதும் சேர்க்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டுத் தீர்மானத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் மற்றும் பொருத்தமான சிறப்புரிமை பெற்ற அதிகாரிகள் இலங்கைக்குள் இலங்கை அரசின் ஆலோசனையோடும் ஒப்புதலோடும் செல்லலாம் என்று இருந்தது. இந்தத் தீர்மானத்தில் அந்த வரிகள் இல்லை.

மற்றபடி கருதத்தக்க எவ்விதமான மேம்பாடும் இத்தீர்மானத்தில் இல்லை. ஆனால் மாறாக, ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளும், 13-ஆவது சட்டத்திருத்தத்தின் வரம்புக்குள்ளும் நிரந்தரமாக சிக்கவைக்கும் முன் மொழிவுகளே இத் தீர்மானத்தில் உள்ளன. தீர்மானத்தில் எந்த இடத்திலும் பாதிக்கப் பட்டவர்கள் ’தமிழர்கள்’ என்ற வாசகமே இல்லை!

‘இனம் அல்லது மதநம்பிக்கை வேறுபாடு எதுவுமின்றி இலங்கையர்கள் அனைவரும் ஒன்று பட்ட நாட்டில் அமைதியாக உரிமையோடு வாழ்வது’ என் பது மட்டுமே வலியுறுத்தப்படுகிறது.

”மத ஒழுகலாறு மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் இலங்கையில் உள்ள இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள் உள்ளிட்டோர் மீது கட்ட விழ்த்து விடப்படும் வன்முறை அதிகரித்துள்ளதைக் கண்டு இம்மன்றம் அதிர்ச்சி அடைகிறது’’ என்று தான் இத் தீர்மானவரைவு கூறுகிறது. அங்கு கூட ”தமிழ்ச் சிறுபான்மையினர்’’ என்ற சொற்கள் இல்லை.

தீர்மானம் நெடுகிலும் ’தமிழர்’ என்ற சொல்லே வராமல் கவனமாக பார்த்துக்கொள்ளப் பட்டுள்ளது.

2013 செப்டம்பர் 21 அன்று மாகாணங்களுக்கு வெற்றிகரமாக தேர்தல் நடத்தப்பட்டதையும் பெருமளவு வாக்காளர்கள் அதில் கலந்து கொண்டதையும் வரவேற்பதாக அத்தீர்மானம் கூறுகிறது. அதே நேரம் தேர்தலையொட்டி நடை பெற்ற வன்முறைகள் அச்சுறுத்தல் போன்றவை குறித்து கவலை தெரிவிப்பதாக கூறுகிறது.

முத்தாய்ப்பாக ”சிறீலங்கா அரசாங்கம் பன்னாட்டு மனித உரிமைச் சட்டம் மற்றும் மனிதநேய சட்டம் ஆகியவை மீறப்படுவதாக சொல்லப்படுவனவற்றில் சுதந்திரமான, நம்பகமான விசாரணை நடத்தி மீறல்களுக்கு பொறுப்பானவர் களை அவற்றுக்குப் பொறுப்பாளியாக்க வேண்டும்.’’ என்றும் இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் மீது நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். என்றும், ”மனித உரிமை ஆணையருடைய அறிக்கையில் பரிந்துரைக்கப் பட்டுள்ளவற்றை செயல்படுத்த வேண்டும” என்றும், ”இலங்கையின் 13 ஆவது அரசமைப்புச்சட்ட திருத்தம் கோருவது போல் வடக்கு மாகாண மன்றத்திற்கும் அதன் முதலமைச்சருக்கும் ஆட்சி நடத்துவதற்கு தேவையான அதிகாரத்தையும் வளங்களையும் வழங்க வேண் டும்’’ என்றும் கூறுகிறது.

இறுதியாக ”இலங்கையில் நம்பகமான கருதத்தக்க விளைவுகளை உருவாக்கும் தேசிய நடவடிக்கைகள் செயல்படாமல் போனால் சுதந்திரமான நம்பகமான பன்னாட்டு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்ற ஆணையரின் பரிந்துரையை இம்மன்றம் வரவேற்கிறது. அதே நேரம் பொறுப்பேற்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் தேசிய செயல்பாடுகளை மதிப்பிடுவதுடன் இலங்கையில் இருதரப்பாரும் மேற்கொண்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அவைத்தொடர்பான குற்றங்கள் குறித்து விசாரித்து வரும் 27ஆவது கூட்டத்தில் வாய்மொழி அறிக்கையையும் 28 ஆவதுக் கூட்டத்தில் எழுத்துப் பூர்வமானஅறிக்கையையும் அளிக்கு மாறு மனித உரிமை ஆணையரை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது’’ என்று கூறுகிறது.

கடந்த 2013 திசம்பரில் ஜெர்மனியில் கூடிய ” சிறீலங்கா குறித்த மக்கள் தீர்ப்பாயம்’’ அளித்த தீர்ப்புரையோ, அடுத்தடுத்து சேனல் 4 தொலைக்காட்சி எடுத்துக் காட்டி வரும் ஆதாரங்களையோ ஐ.நா மனித உரிமை மாநாடு திரும்பிப் பார்க்கவே இல்லை.

பிரேமன் தீர்ப்பாயம் தெளிவான ஆதாரங்களுடன் இலங்கையில் நடந்தது ”இனப்படுகொலை”தான் (genocide) இப்போது நடப்பதும் தமிழின துடைப்புதான் (ethnic cleancing) என்று பன்னாட்டு சட்டத்தின் வெளிச்சத்தில் தெளிவு பட கூறியிருக்கிறது.

சேனல் 4 தொலைக்காட்சி சிங்களப் படையாட்களின் கைப்பேசியின் வழி கிடைத்த படத் தொகுப்புகளை கொண்டே நடந்திருப்பது இன அழிப்புதான் என உறுதிபட கூறுகிறது.

இவற்றைக்கூட வேண்டாம், ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த ஆய்வுக்குழுவின் அறிக்கையைக் கூட அமெரிக்கத் தீர்மானம் சட்டை செய்யவில்லை. ஐ.நா பொதுச் செயலாளர் நியமித்த தாருஸ்மான் குழு இலங்கையில் நடந்திருப்பது போர்க்குற்றம் மற்றும் மனித குலத் திற்கு எதிரான குற்றம் என்று வரையறுத்துக் கூறியது.

ஆனால், அமெரிக்க வரைவுத் தீர்மானத்தில்நடந்திருப்பது போர்க் குற்றமென்றோ மனித குலத்திற் கெதிரான குற்றமென்றோ கூட வரையறுத்துக் கூறப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்று வகைப்படுத்தப் படவும் இல்லை.

இலங்கைத்தீவில் தொடர்ந்து பல்லாண்டுகளாக நிகழ்வது இன ஒதுக்கல், இன மோதல், இன அழிப்பு ஆகியவை தான்.

தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே வடக்கு கிழக்கு மக்களும் மலையக மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். வடக்கு கிழக்கு மக்கள் இன அழிப்புக்கு உள்ளானார்கள். இவற்றை யெல்லாம் முற்றிலும் மறைத்துவிட்டு பொத்தாம் பொதுவாக பன்னாட்டு மனித உரிமைச்சட்டம் மற்றும் மனித நேய சட்டம் மீறப் பட்டிருப்பதாகவும் அதிலும் மதச் சிறுபான்மையினர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் வரையறுப் பது முழு பித்தலாட்டம் ஆகும்.

இன அழிப்பு நடந்து ஐந்தாண்டுகள் முடிவடைந்த நிலையில் இந்த ஐந்தாண்டுகளில் ஈழத் தமிழர்கள் தொடர்ந்து இனவதைக்கு உள்ளாகி வருவதையும், தமிழர் தாயகம் திட்டமிட்ட முறையில் சிங்கள் மயமாக்கப்பட்டு வருவதையும் ஐ. நா மனித உரிமை ஆணையரே ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் இச் சிக்கலை முற்றிலும் திரித்து இத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது போதாதென்று இனக் கொலையாளிக்கு மேலும் ஓராண்டு கால அவகாசம் அளிக்கப் படுகிறது. இராசபட்சே நம்பகமான உள் நாட்டு விசாரணை நடத்தி நிலைமையை மேம்படுத்த வேண்டுமாம். அவ்வாறு நம்பகமான விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது இராசபட்சே நடவடிக்கை எடுக்கிறாரா என்று கண்காணித்து ஐ.நா மனித உரிமை ஆணையர் அடுத்த 2015 மார்ச்சில் அறிக்கை அளிக்க வேண்டுமாம். அதற்குப் பிறகு மனித உரிமை மன்றம் மேல் முடிவு எடுப்பதைப் பற்றி ஆய்வு செய்ய லாம் என்கிறது தீர்மானம்.

ஏற்கெனவே ஐந்தாண்டுகள் கடந்து விட்ட நிலையில் இப்போது மேலும் காலம் கடந்துவது இனக்கொலை குறித்தத் தடயங்களை இராசபட்சே அரசு அழிப்ப தற்கே பயன்படும்.

இத் தீர்மானத்தில் ஏதாவது திருத்தங்கள் செய்து மேம்படுத்து வதற்கு ஒரு சிறு வாய்ப்பும் இல்லை. ஏனெனில் இத் தீர்மானம் பாதிக் கப்பட்டது தமிழினம் என்று ஏற்க வில்லை.

நடந்தது இனப்படுகொலை என ஏற்பது இருக்கட்டும் 2008–2009 இலங்கையில் நிகழ்ந்தது போர்க் குற்றம் மற்றும் மனிதகுலத்திற்க்கு எதிரான குற்றம் என்று கூட ஏற்க வில்லை. பன்னாட்டு விசாரணை என்பதை ஆண்டுக்கு ஆண்டு தள்ளிக் கொண்டே போகிறது.

தமிழர் தாயகத்திலிருந்து இராணுவத்தினரை திரும்பப்பெற வேண்டும் என்று கோருவதோடு நின்று கொள்கிறது. சிங்கள மயமாக்கலை கண்டு கொள்ளவில்லை. ஒன்றுபட்ட இலங்கை என்பதை கட்டாயப்படுத்துகிறது.

13 ஆவது சட்டத்திருத்தத் திற்குள் மொத்த சிக்கலையும் அமுக் கப்பார்க்கிறது. கருத்து வாக்கெடுப்புக்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் அடைக்க முயல்கிறது.

மொத்தத்தில் சில வார்த்தை விளையாட்டுகளின் ஊடாக இனக் கொலையாளிகளுக்கு ஆதரவு அளிக்கும் தீர்மானமே அமெரிக்கத் தீர்மானம் ஆகும்.

இலங்கை ஆட்சியாளர்கள் மீது மென்மையான சில குற்றச்சாட்டுகள் இத்தீர்மானத்தில் வைக்கப் படுவதைக் கூட இராசபட்சே விரும்பவில்லை. வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறார். அவர் விரும்புவதெல்லாம் 2009 சூனில் நடந்தது போல் ஐ.நா மனித உரிமை மன்றத்தில் மேலும் ஒரு பாராட்டுத் தீர்மானம் தான். எனவே இத் தீர் மானத்திற்கு எதிராக பல்வேறு நாட்டுத் தலைவர்களை சந்தித்து வலியுறுத்துகிறார்.

அமெரிக்கத் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ள சூழலில் இந்தியாவின் முயற்சி என்ன என்பது கவனிக்கப்பட வேண்டியது ஆகும்.

அண்மையில் மியான்மரில் இராசபட்சேவை சந்தித்த மன்மோகன் சிங் வலியுறுத்தியது கவனம் கொள்ளத்தக்கது. இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுற வுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் “வடக்கு மாகாணத்திலி ருந்து பெரும் தொகையான படை யினரை இலங்கை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். அதைக் கேட்டுக் கொண்ட குடியரசுத் தலைவர் இராசபட்சே வடக்கு மாகாணம் தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினரை இடம் பெறச் செய்ய அறிவுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்’’ என்று விளக்கினார்.

இதேதான் அமெரிக்க வரைவிலும் முன் வைக்கப்பட்டுள்ளது. 13- ஆவது சட்டத்திருத்தத்தின் படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட வேண்டும் என்றும், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அதிகாரமும் நிதி ஆதாரமும் வழங்க வேண்டுமென்றும் தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பது இந்தியாவின் வாசகம் என ஐயுற இடமிக்கிறது . மோரீசியசின் வாயிலாக இந்தியா இதனை கொண்டுவந்திருக்கக் கூடும்.

இதைக் கூர்ந்து நோக்கினால் தான் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இதில் உள்ள சதித்திட்டம் புரியும்.

இம் முன்மொழிவு, தமிழர்களிம் தாயகமான கிழக்கு மாகாணத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை. அதைச் சிங்கள மாகாண மாக எடுத்துக் கொள்கிறது. வடக்கு மாகாணம் பற்றி மட்டும் பேசுகிறது. கிழக்கு மாகாணத்திலும் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.

இராசபட்சே கணிசமான படைக் குறைப்பு செய்துகொள்ள வேண்டும். 13 ஆவது சட்டதிருத்தத்தின் அடிப்படையில் வடக்கு மாகாண மன்றத்திற்கு சில அதிகாரங்கள் வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் இந்திய அரசின் செல்வாக்கில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டணியினரை இலங்கை நாடாளுமன்ற அனைத் துக் கட்சிக் குழுவில் இணையச் செய்யலாம் என்பதே இந்த பஞ்சாயத்து.

இவ்வாறு செய்துவிட்டால் இலங்கை அரசின் சிங்கள மயமாக்கல் முயற்சிக்கு எந்த கேள்வி முறை யுமிருக்காது.
சிங்களவர்களாக இருந்தால் என்ன? தமிழர்களாக இருந்தால் என்ன? எல்லோரும் இலங்கையர் தான் எனக் கூறி உலக அரங்கில் இதை ஏற்கச் செய்துவிடலாம்.

ஏனெனில், 13 ஆவது திருத்தத்தில் நிலம் தொடர்பான அதிகாரம் மாகாண அரசுக்கு வருவதற்கான வழியில்லை. இலங்கையின் ஒற்றை ஆட்சி முறை கூட்டாட்சியாக மாற்றப்படுவதற்கும் வழியில்லை.

இலங்கை ஒரே நாடு என்று இந்தியா வலியுறுத்துவதைத்தான் அமெரிக்கத் தீர்மானமும் வலியுறுத்துகிறது.

இலங்கை அரசோடு பிணக்கு காட்டிவரும் வடக்கு மாகாண தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இராசபட்சே அரசு அமைக்கும் குழுக்களில் இணைத்துக் கொண்டு விட்டால் ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களை இணைப்பது முற்று முழுதாகிவிடும். வடக்கு மாகாண முதலமைச்சருக்கு சிற்சில நிதி ஆதாரங்களை வழங்கிவிட் டால் போதும்.

அதற்கு பிறகு கருத்து வாக்கெடுப்பு என்ற கோரிக்கைக்கே வழி இல்லாமல் போய்விடும். ஒரு வேளை கருத்து வாக்கெடுப்பை பன்னாட்டுச் சமூகம் ஏற்றுக் கொள் ளக்கூடிய நிலை எதிர்காலத்தில் வந்தால் அதற்குள் சிங்களமய மாக்கல் முழுமை பெற்றிருக்கும். அச்சூழலில் கருத்து வாக்கெடுப்பு நடந்தாலும் தமீழத்திற்கு ஆதர வான முடிவு வரவாய்ப்பில்லை.

இது தான் இந்தியாவின் சதித் திட்டம். அமெரிக்காவும் பிரிட்டனும் ஏற்றுக்கொண்டுள்ள திட்ட மும் இதுதான். எனவே, தமிழர்கள் கீழ்வரும் மூன்று கோரிக்கைகளில் தெளி வாக, உறுதியாக இருக்கவேண்டும்.

1) இலங்கையில் நடந்தது இனப்படுகொலை, அங்கு இப்போதும் தொடர்வது தமிழின அழிப்பு என்பதை பன்னாட்டுச் சமூகம் ஏற்க வேண்டும். இக்குற்றச் சாட்டின் மீது இராசபட்சே உள்ளிட்ட இலங்கை ஆட்சியாளர்கள் மீது தற்சார்பான பன்னாட்டுக் குற்றவியல் விசாரணை மேற்கொள்ளப் பட வேண்டும்.

2) இலங்கைத் தீவுக்குள்ளும் உலகின் பல நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்களிடையே தேசியத் தன்னுரிமை அடிப்படையில் தமிழீழம் குறித்த கருத்து வாக்கெடுப்பு ஐ. நா மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும்

3) உடனடியாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில்ஐ.நா மேற்பார்வையில் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்பட்டு அதன் மேற் பார்வையில் துயர் துடைப்பு, நில உரிமை மீட்பு, வாழ்வுரிமை மீட்பு, பண்பாட்டு உரிமை மீட்பு, ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளின் அடிப்படையில் தமிழர்களின் போராட்டம் அமைய வேண்டும்.

இப்போது முன்வைக்கப்பட்டுள்ள அமெரிக்கத்தீர்மானம் மேற் சொன்ன அடிப்படைகள் அனைத்திற்கும் நேர் எதிரான தீர்மானம் ஆகும் .

எனவே இத் தீர்மானம் ஈழத் தமிழர்களின் உரிமையை நிலை நாட்டும் நீண்ட பயணத்தில் ஒரு படி முன்னேற்றம் என்று பார்க்கிற அழிவுப் பார்வையை ஒரு சிறிதும் ஏற்கக் கூடாது. தமிழினம் குறிப்பாக தமிழி னத்து இளையோர் இந்த ஐ.நா மனித உரிமை மன்ற அமெரிக்கத் தீர்மானத்தை கிழித் தெறிய வேண்டும்.

===============================================

இக்கட்டுரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2014 மார்ச் 16-31 இதழில் வெளிவந்தது. கட்டுரையாளர் கி.வெங்கட்ராமன் இதழின் இணை ஆசிரியர் மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர்.