28.06.2015 ஞாயிறு அன்று கோவையில் நடைபெற்ற ‘எஸ்.என்.நாகராசன் கருத்துலகு’ கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை சிற்சில விரிவுபடுத்தல்களுடன் இங்கு முன்வைக்கப்படுகிறது. ‘மார்க்சிய ஆய்வு வட்டம்’ நண்பர்களுக்கு எனது நன்றி

 

greeceஐரோப்பியன் கமிஷன், சர்வதேசிய நாணய நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி போன்றவற்றுடன் கிரீஸ் நாட்டுக்கு முன்னர் இருந்த கடன் மீளுதல் ஒப்பந்தங்கள் 30.06.2015 செய்வாய் நள்ளிரவு முடிவுக்கு வந்தன. இரு தரப்புக்களுக்கும் இடையில் எந்தவிதமான ஒப்புதலும் உருவாகியிருக்கவில்லை. இந்தச் சூழலில், கிரீஸ் பிரதமர் அலக்சிஸ் பிராஸ் 30.06.2015 நள்ளிரவில் தமது கடனளிப்போருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதன்படி, அவர்கள் முதன்வைத்த நிபந்தனைகள் அனைத்தையும் ஒப்புக்கொள்வதாகவும் (அதனை அமல்படுத்தும் காலநீட்சியில் மட்டும் சில சலுகைகளை அவர் கேட்டிருக்கிறார்), கடனிலிருந்து மீள்வதற்கான வெளியேற்றத் திட்டமொன்றினையும் அவர் அவர்களிடம் கோரியிருக்கிறார். இவரது கடிதத்திற்கு அவரது அமைச்சரவையில் கடுமையான எதிர்ப்புக்கள் எழுந்திருக்கின்றன.

 

கடனளிப்பவர்களின் நிபந்தனைகளில் முக்கியமானது பின்வருமாறு : ஓய்வூதியம் பெறும் வயது என்பதனை 67 ஆக ஆக்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் மிகவும் வறிய நிiiயிலுள்ளோர்க்குத் தரப்படும் சிறப்பு உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட வேண்டும். மக்கள் அதிகமாக உபயோகப்படுத்தும் சில பொருள்களின் மீது விற்பனை வரி அதிகரிக்கப்பட வேண்டும். கடனளிப்பவர்கள் – அரசு – மக்கள் எனும் இந்தச் சமன்பாட்டில் ‘பணம்’ என்பது முதலாகி, ‘மனிதர்’ என்பவர் இரண்டாம் பட்சமாகி இருப்பதை நாம் அறியமுடியும். இலாபம் மட்டுமே நோக்கம் கொண்ட ஒரு முதலாளித்துவச் சந்தைச் சமூகத்தில் மனிதர் என்பவர் எவ்வாறு இன்மைகளாக ஆக்கப்படுகிறார்கள் என்பதற்கான சான்றாக கிரீஸ் அனுபவங்கள இருக்கின்றன.

 

வகைதொகையில்லாமல் கடனட்டைகள் மூலம் நுகர்பொருள் கொள்வனவைத் தூண்டும்-உற்சாகப்படுத்தும் இந்தப் பொருளியல் ஏற்பாடு அதே மக்களை கடனாளிகள் எனும் குற்ற உணர்வுக்குள் ஆழ்த்திவிடுவது மட்டுமல்ல, அதற்கான தண்டனையையும் அவர்களுக்கு மேல்திணிக்கிறது. பன்னாட்டு மூலதனக்காரர்களால் இலாபம் ஒன்றே நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்த முதலாளித்தைத்தைத்தான் காட்டுமிராண்டித்தனமானது என்று குறிப்பிட்டார் போலந்துக்காரரான இரண்டாவது போப் ஜான் பால்.

 

உலகவயமாதல் என்றால் என்ன? நமது சமகால உலகில் முன்போது இருந்தது போல மூடுண்ட சமூகமாக, சிந்தனையளவில் பரஸ்பரம் ஊடுறுவ முடியாதவாறு, சுயதேவைப் பூர்த்திப் பொருளாதாரம் கொண்ட, இலட்சியயவயமான இறையாண்மை கொண்ட ஒரு நாடு என்பதெல்லாம் இனி இல்லை. புவியியலால் வரையறுக்கப்பட்ட அரசியல் சமூகங்கள் வழக்கொழிந்துவிட்டது என இதற்குப் பொருளல்ல. மாறாக, உலகளாவிய, பிராந்திய, பன்னாட்டு விதிக்குள், அடையாளத்தினுள், கூட்டுறவினுள், ஒன்றுபடளுக்குள் அது இருத்தப்பட்டிருக்கிறது. அரசியல் சமூகங்கள் என்பது இன்று ’உடைந்த எல்லைகள்’ கொண்ட ஒரு உலகுக்கு அமைவாக மாற்றப்பட்டிருக்கிறது என்கிறார் மேற்கத்தியப் பொருளியலாளரான ஒ-நீல்.

 

உலகை இன்று அரசுகள் ஆள்வதில்லை. உலக அளவில் உலக வங்கி-வோர்ல்ட் பேங்க், சர்வதேச நாணய நிதியம்-ஐ.எம்.எப் போன்றனவே ஆள்கின்றன. இதனுடன் பிராந்திய வங்கிகளும் இணைந்து மேற்கு-கிழக்கு-வடக்கு-மேற்கு என உலகை ஆள்கின்றன. ஐரோப்பாவில் இவ்வாறான அமைப்பு ஐரோப்பிய மத்திய யூனியன் வங்கி. 1993 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் ஒரே அரசியல் அமைப்பாகவும் பொருளாதார அமைப்பாகவும் உருவானது. அதன் பெயர் ஐரோப்பிய ஒன்றியம். ஒற்றை ஐரோப்பியச் சந்தையை உருவாக்குவது இலக்கு. மூலதனம், தொழில்வாய்ப்பு, விநியோகம், அனைத்தையும் ஐரோப்பிய மயப்படுத்துவது அதனது நோக்கு.

 

ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பு நாடுகளின் கரன்சிகளுக்குப் பதிலாக பொதுவாக யூரோ கரன்சியைக் கொணர்ந்தது. பாதுகாப்புக்கென நேட்டோ அமைப்புக்குள் தனது உறுப்பு நாடுகளைக் கொணர்ந்தது. ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளுக்கு இடையில் கடவுச் சீட்டு இல்லாமல் பயணம் செய்தல், வேலை தேடிச் செல்தல், குடியேற்றக் கொள்கைகளை பொதுவாக வரையறுத்தல் என்பதை ஐரோப்பிய யூனியன் பிரஜைகளின் உரிமைகளாக அங்கீகரித்தது. சோவியத் யூனியன் உடைவின் பின் பெரும்பாலுமான கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் ஐரோப்பிய யூனியனின் கீழ் வந்தன. இன்று 28 நாடுகள் ஐரோப்பிய யூனியனில் இருக்கின்றன.

 

ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் மூன்று வகையான அசமத்துவ பொருளியல் பகுப்புகள் உள்ளன. பாரம்பர்யமான வடக்கு ஐரோப்பிய அரசுகளே ஐரோப்பிய யூனியன் வங்கியைக் கட்டுப்படுத்துகின்றன. ஓப்பீட்டளவில் நலிந்த பொருளாதார வளம்கொண்ட தெற்கு ஐரோப்பிய நாடுகளான கிரீஸ், ஸ்பெயின், இத்தாலி, போர்த்துக்கல், அயர்லாந்து போன்ற நாடுகள் வடக்கு நாடுகளைச் சார்ந்தே இருந்து வருகின்றன. கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மூன்றாவது இடத்தில் இருக்கின்றன. குறைந்த கூலி, மேற்கத்திய நாடுகளுக்கான அதிகமான நுகர்பொருள் உற்பத்தி, மானுவல் லேபர் எனப்படும் உடழைப்பை மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குத் தருகிறவர்களாகவே அவர்கள் இருந்து வருகிறார்கள்.

 

எடுத்துக்காட்டாக, வடக்கு ஐரோப்பிய நாடுகளின் கட்டுமானத் தொழிலில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான போலந்து மற்றும் ருமேனியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டு வருகிறார்கள். மேற்கு நாடுகளின் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கென கிழக்கு ஐரோப்பியப் பெண்களைக் கொண்டுவருவது என்பது ஒரு தொழிலாகவே வட ஐரோப்பிய நாடுகளில் செழித்திருக்கிறது. வட ஐரோப்பியச் சந்தைக்காக நீலப்படம் தயாரிப்பது அந்நிய செலாவணிக்கான தொழில்துறையாக இருப்பதை ‘எ செர்ப்பியன் பிலிம்’ எனும் கோரமான திரைப்படம் நமக்குக் காட்சிப்படுத்துகிறது. ஐரோப்பிய யூனியன் பிரஜைகளாக இவர்கள் இருந்தாலும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் நடைமுறையிலுள்ள சேமநல உதவிகள் இவர்களுக்குக் கிடைக்காதவாறு பிரித்தானிய உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சட்டங்கள் இயற்றி வருகின்றன.

 

வேல்பேர் ஸ்டேட் அல்லது சேமநல அரசு என்பது நவதாராளவாத சமூகத்தின் ஒரு அரசநெறி. வேலையற்றவர்கள், சமூகத்தின் நலிந்த பிரிவினர், வயது வந்தோர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அரசு நிதியிலிருந்து உதவித் தொகை வழங்குவது என்பதே அதன் நெறிமுறை. இலவச மருத்துவம், பள்ளியிறுதி வரை இலவசக் கல்வி போன்றனவும் இதனது அடிப்படைகள்.

 

கடந்த இரு தசாப்தங்களாக பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் இந்த சேமநல உதவி என்பதை வெட்டி வருகிறார்கள். மருத்துவத் துறையை கொஞ்சம் கொஞ்சமாக இலாபநோக்குள்ள நிறுவனமாக மாற்றி தனியார் வசம் கொண்டுவிட நினைக்கிறார்கள். பிரித்தானியாவில் சென்ற மூன்று ஆண்டுகளின் முன்பு கல்லூரிப் படிப்பின் ஆண்டுக் கட்டணம் மும்மடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது. இத்தகைய கொள்கை மாற்றத்திற்கான காரணங்களில் ஒன்றாக வெள்ளையரல்லாத மக்களின் குடிபெயர்வும், கிழக்கு ஐரோப்பியக் குடிபெயர்வும் இருக்கிறது என்பதால், அவர்களுக்கு இந்த உதவிகள் கிடைக்காமல் செய்ய அரசுகள் கருதுகின்றன.

 

பொது மருத்துவ வசதியைப் பயன்படுத்தி வரும் குறைந்த வருமானமுள்ளோர், தொழிலாளி வர்க்கத்தினர், வறிய நிலையிலுள்ளோர் இதனால் அரசுகளுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உள்நாட்டில் கல்வி, மருத்துவம், சேமநல உதவிகளை வெட்டி வரும் பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய அரசுகள், தமது நுகர் பொருள் உற்பத்திக்கான, குறைந்த கூலித் தொழிலாளர்களைத் தரும் தெற்கு ஐரோப்பிய மற்றும் கிழக்கு ஐரோப்பிய அரசுகளின் மீதும் இத்தகையக் கட்டுப்பாடுகளைக் கொணருமாறு வலியுறுத்துகிறார்கள்.

 

உலக வங்கி – சர்வதேச நாணய நிதியம் – மேற்கு ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கத்தில் உள்ள, குறிப்பாக ஜெர்மனியின் ஆதிக்கத்தில் உள்ள ஐரோப்பிய யூனியன் வங்கி போன்றவற்றின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கிரீஸ், சைப்ரஸ், ஸ்பெயின், போர்த்துக்கல், இத்தாலி போன்ற நாடுகள் இச்சூழலில் இரண்டு விதமான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய மூலதனத்தில் அவர்களது சந்தைக்காக உறுபத்தி செய்யும் இந்த நாடுகள் மறுதலையில் இந்த நாடுகளின் உற்பத்திகளை நுகர்வதற்கான வரைமுறையற்ற கடன்களை இதே நாடுகளின் நிதி நிறுவனங்களில் இருந்து பெறுகின்றன. குறைந்த கூலி-நுகர்வு சந்தை-அதிகரிக்கும் கடன்சுமை எனும் சுழலில் ஒரு கட்டத்திற்கு மேல் கடன் செலுத்த முடியாத நிலையை அவர்கள் அடைகிறார்கள். நுகர்வுச் சக்தி இல்லாமலாகிறது.

 

கிரீசின் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிக்கு இன்னொரு காரணம, கிரீசின் பெருமுதலாளிகளும் அங்கு செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களும் அரசுக்குச் செலுத்த வேண்டிய வருமான வரியைப் பல ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறார்கள் என்பது. மூலதனக்காரர்கள் வட ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சார்ந்தவர்களாகவும் வட்டிக்குக் கடன் வழங்குபவர்களனாக ‘டிராய்க்கா’ எனப்படும் ஐஎம்எப்,உலக வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கி போன்றவைகள் இருப்பதாலும், நவதாராளவாத சந்தைக் காலச்சார ஒழுங்கின்படி இலாபம் இந்த நிறுவனங்களுக்கும் வறுமையும் இன்னபிற தொடர் விளைவுகளும் தென் ஐரோப்பிய நாடுகளுக்கும் என ஆகிறது.

 

நிதி நிறுவனங்களிடம் நீண்டகாலக் கடன் பெற்றிருக்கும் கிரீஸ் 26 சதவிதம் வட்டி செலுத்தவேண்டிய நிலைமையில் இருக்கிறது. புற்றாக்குறை பட்ஜெட் என்கிற படுபாதாளத்தில் அது வீழ்ந்திருக்கிறது. முதலாம் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியினால் மிகப்பெரிய அழிவுக்கு உள்ளான நாடு கிரீஸ். இன்றைய நிலையில் கிரீசின் தேசிய உற்பத்தி 25 சதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. பொதுத்துறை ஊழியர்களில் 25 சதவீதமானோர் வேலை இழந்திருக்கிறார்கள். வெகுமக்களினிடையில் 30 சதவீதமான உணவு நுகர்ச்சி வீழ்ந்திருக்கிறது. குறைவான உணவையே அந்த மக்கள் உண்கிறார்கள். ஓய்வு ஊதியம் தருவது 60 சதம் விPழ்ந்திருக்கிறது. ஓய்வூதியம் பெருவோரில் 45 சதவீதமானோர் வறுமையில் வாடுகிறார்கள். வேலையின்மை 25 சதவீதம். 25 வயதுக்கும் குறைவானவர்களிடம் 50 சதம் வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கிறது.

 

இந்த நிலைமையில் நாட்டுக்குக் கடன் கொடுத்திருக்கும் நிதி நிறுவனங்கள் தொழிலாளர்களுக்குக் இன்னும் குறைந்த கூலி தருமாறு நிரப்பந்திக்கிறது. இருக்கும் அரசு ஊழியர்களுக்கு இன்னும் சம்பளம் குறைக்கச் சொல்கிறது. தரப்படும் அற்ப சொற்ப ஓய்வு ஊதியத்தொகையில் வெட்டைக் கோருகிறது. அரசு நிர்வாகத்திலும் உற்பத்திப் தொழிற்சாலைகளிலும் இன்னும் ஆட்குறைப்பைச் செய்யுமாறு கோருகிறது. மக்கள் உபபோகிக்கும் அத்தியாவசியப் பொருள்களின் மீது மேலதிக வரியைப் போடுமாறு கோருகிறது.

 

உலகவயமாதலில்-தாராள சந்தைப் பொருளாதார அமைப்பில் அரசு எனும் நிறுவனத்தின் கையாலாகத் தனத்திற்கான ஸ்தூலமான சாட்சியமாக கிரீஸ் அரசு ஆகியிருக்கிறது. நிதி நிறுவனங்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற முடியாத கையறு நிலையில் அரசு ஆகியிருக்கிறனது. இந்த நிலையில் இதிலிருந்து தீர்வு என மக்களுக்கு வாக்குறுதியளித்து இடதுசாரிகளின் கூட்டமைப்பு – ரேடிகல் லெப்ட்- எனப் பெயர் பெரும் ‘சிரிசா’ எனும் அமைப்பு தோன்றியது. 2015 ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற கிரீஸ் பொதுத் தேர்தலில் சிரிசா வெற்றி பெறுகிறது. டிராட்ஸ்க்கிய – மாவோயிச – சூழலியலாளர்களின்-பெண்ணிலைவாதிகளின் – முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கத்தவர்களின் கூட்டமைப்பு இது. இவர்களைக் குட்டி முதலாளித்துவச் சிந்தனையாளர்கள் என கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி மதிப்பிடுகிறது. பல சமயங்களில் கம்யூனிஸட் கட்சிகள் போராட்டங்களை ‘பகிஸ்கரிக்கின்றன’ அல்லது ‘நடுநிலை’ வகிக்கின்றன.

 

நிதி நிறுவனக் கடன்களை ரத்துச்செய்யக் கோருவது என்பதுதான் சிரிசாவின் தேர்தல் அறிக்கையின் சாரமாக இருந்தது. காலங்கடந்து நிலுவையாக இருக்கிற கடன்களை 30.06.2016 திகதிக்குள் கட்டவேண்டும் என ‘டிராய்க்கா’ என அழைக்கப்பெறும் மூன்று நிதி நிறுவனங்களும் கிரீசை நெருக்குகின்றன. பகுதியளவு கடன்களை ரத்துச் செய்யுமாறும் மிகுதிக் கடன்களுக்கான வெளியேற்றத்திற்கு உதவுமாறும் கிரீஸ் அரசு கேட்கிறது. இனிமேலும் பொதுமக்களின் மீது எந்த வெட்டுக்களையும் செய்ய இயலாது என அது தயங்கி நிற்கிறது.

 

கடன்களை ரத்துச் செய்ய முடியாது. பொதுமக்களின் நலநிதிகளில், ஓய்வு ஊதியத்தில், சம்பளத்தில் மேலும் வெட்டுமாறு நிதி நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. மக்களின் உணவுப் பொருள்களின் மீது, குளிர்காலத்தில் வெதுப்பூட்டும் எணnணையின் மீது வரிவிதிக்குமாறு நிதி நிறுவனங்கள் கோருகிறது. முன்னைய அரசு அவ்வாறு செய்தபோது அதிக விலை கொடுத்து வாங்கும் சக்தியில்லாதததால் மக்கள் எண்ணெய் வாங்காமல் குளிரில் வாடியிருக்கிறார்கள். பலர் வீட்டை அண்டிய காடுகளில் உள்ள மரங்களை வெட்டித் தம்மை வெம்மைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 

கிரீஸ் அரசுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் பேச்சவார்த்தை தொடர்ந்து கொணடடேயிருக்கிறது. ஐரோப்பிய யூனியன் சட்டங்களின்படி அமைப்பிலிருந்து ஒரு நாட்டை வெளியேற்ற முடியாது. தாம் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகப்போவதில்லை என ‘சிர்சியா’ தொடர்ந்து சொல்லி வருகிறது. நிதி நிறுவனங்களுடன் ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்து கொண்டு மக்களின் மீது சுமைகளைச் சுமத்துவதை, நிதி நிறுவனங்களின் திணிப்பை கிரீஸ் மக்கள் ஒப்பப்போவதில்லை. ‘சிர்சியா’தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒன்றுபட்டுப் போராடுதலை முன்வைத்துப் வருகிறது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி தூரத்தைக் கடைபிடித்து வருகிறது.

 

கிரீசில் தோன்றியிருக்கும் இந்த நெருக்கடி ஒரு நாட்டுக்கு மட்டும் உரியதல்ல. உற்பத்தி, சந்தை, விநியோகம் போன்றவற்றின் செயல்பாடுகள் அனைத்தையும் உலக நிதி நிறுவனங்களும் அதன்பின் இயங்கும் அமெரிக்க வட ஐரோப்பிய ஆதிக்க நாடுகளினதும் பெரும் பணக்காரர்களதும் பொருளியல், ராணுவ, கலாச்சார உலக ஒழுங்குக்குத் தகுந்தவாறே நடத்தப்படுகின்றன. இலாபம் அனைத்தும் உலகின் 1 சதவீதமானவர்களிடம் போக 99 சதவீதமானவர்களிடம் வறுமையும், வேலையின்மையும், கடனும், வீடின்மையும், உணவுப் பற்றாக்குறையும் வந்து சேர்கின்றன. மருத்துவ, கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் இலாப நிறுவனங்களாக மாற்றம் பெறுகின்றன.

 

இது ஒரு உலகு தழுவிய நெருக்கடி. அமெரிக்காவில் 99 சதம் மக்களின் வால்ஸ்ட்ரீpட் போராட்டம், அரபுலகில் அரசியல் ஜனநாயகம் கோரிய எழுச்சி, பிரித்தானியாவில் கல்லூரிக் கட்டண உயர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம், தமது மருத்துவ சேவையைப் பாதுகாக்க பிரான்ஸ் மக்களது போராட்டம் என்பவற்றின் தொடர்ச்சி மற்றும் உச்ச நெருக்கடிதான் கிரீஸ் மக்களின் எழுச்சியாக இருக்கிறது.

 

தாராளவாத பொருளாதார அமைப்பு சவாலுக்கு உள்ளாகியிருக்கிறது. இதனது விளைவுகள் முழு ஐரோப்பாவுக்கும் பெறுமதியானது என இடதுசாரிகள் கருதுகிறார்கள். ஆகவே கிரீஸ் நெருக்கடியை வரலாற்றின் சோதனைச் சாலை என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ‘சிரிசா’ அமைப்பை ஒட்டி ஸ்பெயினும் இடதுசாரி அமைப்புகள் – டிராட்ஸ்க்கிய-மாவோயிச-சிறுபான்மை தேசிய – சூழலியல்-பெண்ணிய அமைப்புகள் ‘பெடோமஸ்’-எம்மால் முடியும் எனப் பொருள்- என ஒரே கூட்டமைப்பாகச் செயல்படத் துவங்கியிருக்கின்றன. அடுத்து வரும் பொதுத் தேர்தலில் ‘சிர்சியா’ போல இந்த அமைப்பும் வெற்றி பெறும் என புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

 

இந்தப் பாணியிலான அமைப்புகள் இத்தாலி, போர்த்துக்கல், சைப்ரஸ் போன்ற தென் ஐரோப்பிய நாடுகளிலும் தோற்றம் பெற்று வருகின்றன. கிழக்கு ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவிலும் ஒன்றிணைந்த இடதுசாரிகள் எனும் அமைப்பு இதுபோலவே கவனம் பெற்றிருக்கிறது.

 

இந்த அமைப்புக்களைத் தலைமை தாங்குபவர்கள் பெரும்பாலும் கல்வித்துறைப் பேராசிரியர்கள் அல்லது ஆய்வாளர்களாகவே இருக்கிறார்கள். மார்க்சிய அமைப்புகளில், அந்தந்த தேசிய கம்யூனிஸ்ட் கட்சிகளில் செயல்பட்டவர்கள் இவர்கள். கிரீசின் பிரதமரும் பொருளாதார அமைச்சரும் இங்கிலாந்தின் மிடில்செக்ஸ் பல்கலைக் கழகத்தில் படித்த ஆய்லாளர்கள். பெடோமோசின் தலைமை தாங்குபவர்கள் சமூகவியலாளர்கள். இவர்களில் பெரும்பாலுமானோர் வெனிசுலா,ஈக்வடார்,பொலிவியா போன்ற இலத்தீனமெரிக்க இடதுசாரி அரசுகளின் ஆலோசகர்களாக இருந்தவர்கள்.

 

இவர்கள் பாரம்பர்யமான கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புகளை தமது தோழமைச் சக்திகளாகக்கருதுகிறார்கள். எனினும், கம்யூனிஸ்ட் கட்சிகள் இவர்களை குட்டி முதலாளியச் சிந்தனையாளர்கள் எனவே அழைக்கிறது. இவர்கள் தமது போராட்டத்தின் இன்றைய இலக்கு புரட்சி என்றோ அலலது சோசலிசத்திற்கானது என்றோ சொல்லிக் கொள்வதில்லை. எல்லா நிலைகளிலும் அசமத்துவத்திற்கு எதிராகப் போராடுவது. ஐரோப்பிய யூனியனின் அதிகாரச் சமநிலையை மாற்றியமைப்பது தமது நோக்கம் என்கிறார்கள். பேடொமஸ் நேட்டோ ராணுவக் கூட்டிலிருந்து ஸ்பெயின் வெளியேறுவது என்பதையும் தமது இயக்கத்தின் இலக்குகளில் ஒன்றாக முன்வைக்கிறது.

 

இவர்களது தத்துவ ஆசிரியர்கள் என நால்வரைக் சொல்லலாம். அந்தோனியோ கிராம்ஸி, ‘மேலாண்மையும் சோசலிசத் தந்திரோபாயமும்’ நூலை எழுதிய எர்னஸ்ட் லக்லோவ்-சந்தால் மொபே, இவர்களுடன் இத்தாலிய மார்க்சிரான அந்தோனியோ நெக்ரி போன்றவர்களே அந்த நால்வர். குறிப்பான சூழலில் குறிப்பான ஆய்வும் அதில் மேலாண்மைக்கு எதிரான போரட்டமும் தந்திரோபாயமும் என்பதனை கிராம்சியில் இருந்து தேர்கிறார்கள். பாரம்பர்யமான கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிலாளி வர்க்க மையவாதம் என்பதற்கும் அப்பால் புதிய சமூக இயக்கங்களான பெண்ணிலைவாத, சூழலியல், சிறுபான்மையின இயக்கங்களையும் அடையாள இயக்கங்களயும் சேர்த்து இடதுசாரி இயக்கம் தோன்ற வேண்டும் என அவர்கள் கருதுகிறார்கள். எர்னஸ்ட் லக்லோவ்-சந்தால் மொபே இதற்கான ஆதர்ஷமாகிறார்கள். இதனைக் குறிப்பாக பெடோமஸ் இலத்தீனமெரிக்க இடதுசாரிகளின் அனுபவங்களில் இருந்து பெற்றிருக்கிறார்கள்.

 

அந்தோனியோ நெக்ரி உலகவயமாதல் என்பது வரலாற்று ரீதியில் திருப்பப்பட முடியாதது -இர்ரிவர்சிபிள் – என்கிறார். காலனியாதிக்கமும் ஒரு கட்டம்வரை ஏகாதிபத்தியமும் வலிந்த ராணுவ வகையில் தமது ஆதிக்கத் திட்டங்களை எய்தின. இன்று உலகவயமான சுரண்டல் எனும் மெல்லிய முறையிலேயே தனது ஆதிக்கத்தை வைத்திருக்க முனைகிறது. இதுவே உலகவயமாதல் என்கிறார். நமது அன்றாட வாழ்வின் சகல தளங்களிலும் இது ஊடுறுவியிருக்கிறது. நமது எதிர்ப்பையும் நமது அன்றாட வாழ்வில் துவங்கி சகல தளங்களிலும் நாம் செலுத்த வேண்டும் என்கிறார் அவர.

 

மேற்கின் இடதுசாரி இதழ்களான ரேடிகல் பிலாசபி, நியூ லெப்ட ரெவியூ, லெமான்டே டிப்ளமெடிக் போன்ற இதழ்களில் இந்த இயக்கங்கள் குறித்து அனுசரணையான கட்டுரைகள வந்திருக்கின்றன. இடதுசாரி தாராளவாத இதழ்களான த கார்டியன், லிபரேஷன் போன்ற இந்த இயக்கங்களின் தோற்றத்தை அதன் வெகுஜன அடிப்படையை, ஏற்பை முக்கியமானதாகப் பார்க்கின்றன. பேடோமஸ், மேலாதிக்கம் இன்று செயலபடும் முக்கியமான வெளிகளில் ஒன்று தொலைக் காட்சியென்கிறார் அதன் தலைவர். புதிய விவாதக் கருப்பொருட்களை வைத்து புதிய விவாத வெளிகளைத் திறப்பது என்பது ஒரு கருத்தியல் நடவடிக்கை என அவர் சொலகிறார். ஸ்பெயினின் புகழ்வாய்ந்த தொலைக் காட்சிப் பிம்பமாக அவர் பிரபலமாகியிருக்கிறார்.

 

புதிய சமூக இயக்கங்கள் இடதுசாரிகள் எதிர்கொண்டு வரும் ஒரு முக்கியமான பிரச்சினை. கார்ப்பரேட் காலாச்சார ஒழுங்கிற்கு எதிரான மிகப்பெரும் சவாலாக இன்று சூழலியல் இயக்கங்கள், விவசாய இயக்கங்கள், பழங்குடி மக்கள் இயக்கங்கள் இருக்கின்றன. ஓற்றை அதிகாரக் குவிப்பற்கு எதிரான ஜனநாயக வேட்கையே சிறுபான்மையினப் போராட்டங்கள். மக்கள் தொகையில் பகுதியாக இருக்கிற பெண்களின் பங்கேற்பும் பங்களிப்பும் இன்று அனைத்திலும் அவசியமாகி வருகிறது. போராட்டம் என்பது குறிப்பிட்ட நிலைமை குறித்த ஆய்விலிருநது குறிப்பிட்ட வகையிலான தந்திரோபாயங்களில் இருந்துதான் துவங்கமுடியும். அதற்கு கிரீஸ்-ஸ்பானிய போராட்டங்களிலிருந்து நாம் கற்க முடியும்.

 

அரபு எழுச்சி மற்றும் வால் ஸ்டிரீட் போராட்டம் குறித்த விமர்சனங்களில் இவை தெளிவான இலக்குகள் கொண்ட அமைப்புக்களாகத் திரளவில்லை என்பதை ஸ்லாவோய் ஜிசாக் போன்றவர்கள் முன்வைத்தார்கள். சிரிசாவும் பெடோமாசும் இலக்குகள் என்பதிலிருந்து அமைப்பாகவும் திரளத் துவங்கியிருக்கிறார்கள். உலக அளவில் இது நல்ல சமிக்ஞை எனவே கருத வேண்டியிருக்கிறது..