மே 15 ஐ உலக குடும்ப தினமாக ஐநா (International Day of Families – 15 May) பிரகடணப்படுத்தியுள்ளது. வேறு சில நாடுகள் தனித்தனியாக வேறு சில தினங்களில் அதை கொண்டாடுகின்றன.

 

பெப் 20 ஐ கனடா தனது குடும்ப தினமாக கொண்டாடுகிறது. ( கனடாவின் வேறு சில மாநிலங்களில் பெப் 13 அன்று கொண்டாடுகிறார்கள்) சிலர் அதை உலக பொது தினம் என நினைத்து இன்று சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள்.

இங்கு பேச வந்த விடயம் அதுவல்ல.

 

ஐநா என்ற உலக பொது அமைப்பு ஈழத் தமிழினத்தை அழித்தொழிக்க துணையாக நின்றது மட்டுமல்ல அதன் ‘குடும்ப அமைப்பை’ குலைப்பதனுடாக தனது இனஅழிப்பை தொடர்ந்து கொண்டிருக்கும் சிங்களத்திற்கு இன்னும் முண்டு கொடுத்துக் கொண்டிருக்கிறது.

 

மே 15 ஐ குடும்ப தினமாக கொண்டாடும் ஐநா அதே மே மாதத்தின் நடுப்பகுதியில்தான் இந்த இனத்தை -அதாவது இந்த இனத்தின் ‘குடும்ப அமைப்பை’ குலைக்க துணைபோனது. என்ன ஒரு நகைமுரண்?

 

தொடரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை சிங்களம் தமிழீழத்தில் பிரயோகித்து வருகிறது. இலகுவில் யாராலும் அடையாளம் காணப்பட முடியாத அதி நுட்பமான வடிவங்கள் அவை.

 

அதன் 27 வடிவங்களை மிக அண்மையில்தான் நானும் நண்பர்களும் கண்டுபிடித்தோம். ஆனால் இதை கண்டுபிடிப்பதற்கு நான் தனிப்பட்ட முறையில் கொடுத்த விலை வார்த்தை வெளிகளுக்கு அப்பாற்பட்டவை.

 

இந்த 27 வடிவங்களினதும் மைய சரடாக இருப்பது ‘குடும்பம்’ என்ற அமைப்பியல்தான். அதை தகர்ப்பதனூடாக இந்த இனம் மீதான இறுதி அழித்தொழிப்பை இனஅழிப்பு அரசு நடத்திக்கொண்டிருக்கிறது.

 

நாமே எம்மீது ஒரு யுத்தத்தை நடத்தும் ஒரு வழிமுறையை திறந்து விடடிருக்கிறது இனஅழிப்பு அரசு.

 

இங்கு குற்றவாளிகள் நான் நீங்கள் உட்பட அனைவரும்தான். எங்களின் கையை கொண்டே எங்கள் கண்ணை குத்தும் வழிமுறைகளை இனஅழிப்பு அரசு திறந்து விட்டுவிட்டு தூர நின்று வேடிக்கை மட்டும் பார்க்கிறது.

 

நடந்த மற்றும் தொடர்ந்து நடந்து கொண்டீருக்கும் இனஅழிப்பின் பக்க விளைவாகவும் போருக்கு பிந்திய சமூகத்தில் தோற்றம் பெறும் அடிப்படை சிக்கல்களின் – முரண்பாடுகளின் விளைவாகவும், குறிப்பிட்ட இனக் குழுமத்திற்குள் குறிப்பாக 35 தொடக்கம் 40 வரையிலான மனப் பிறழ்வுகளை – உளவியற் சிக்கல்களை அடையாளம் காண முடியும்.

 

நம்மில் ஒவ்வொருவரும் – புலம் பெயர்ந்திருந்தாலும் கூட குறைந்தது 10 உளவியற் சிக்கலுக்குள் எம்மை பொருத்திக் கொண்டவர்களே.. ஆளாளுக்கு புற- அக சூழலின் விளைவாக இதன் தாக்கத்தின் அளவு வேறுபடுமேயொழிய முற்றாக இல்லை என்று கூற முடியாது.

 

நேரடியாக வன்னி இறுதி இனஅழிப்புக்கு முகம் கொடுத்தவர்களின் நிலையை இங்கு வார்த்தைகளால் விபரிக்க முடியாது. அதை இங்கு வெளிப்டையாக எழுதுவது கூட தவறு.

 

‘இயல்பாக இருக்கிறோம்” என்று நம்பிக் கொண்டிருக்கும் அவர்கள் இந்த விபரிப்பை வாசித்தால் வெறொரு உளவியல் சிக்கலுக்குள் தம்மை புதைக்க நேரிடும்.

 

அது சமூகத்தில் பல மோசமான விளைவுகளுக்கு வழி கோலும். தற்போது நடந்து கொண்டிருப்பது அதுதான்.

 

ஒரு ஈழத்தமிழ் உயிரியின் எந்த பிரச்சினையும் தனிப்பட்டதல்ல. – அது மே 18 இற்குப் பிறகு பொதுப் பிரச்சினை.

 

எதையும் வெளியாக பேசவும் முடியாது. ஆனால் உளவியல் ஆற்றுப்படுத்துகையும் அவசியம். இது குறித்த புரிதல் உள்ள எங்களுக்கு ஒரு சிக்கலான நிலை இது.

 

கடந்த வருடம் இப்படி ஒரு முயற்சியில் தான், ஒரு சிறிய அணுகுமுறைத் தவறால் நான் என்னை தொலைக்க வேண்டியிருந்தது. அது ஒரு குறியீட்டு நிகழ்வாக மாறி பல புதிய இனஅழிப்பு வடிவங்களை கண்டடைய வழிகோலியது மட்டும் அதனால் விளைந்த ஒரே நன்மை.

 

ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மீட்சியும் இல்லை. மேலதிக அவலத்திற்குள் தம்மை புதைத்துக்கொண்டார்கள்.  போதாததற்கு இனஅழிப்பின் குறியீடாக மாறி அச்சமூட்டுகிறார்கள்.

 

குடும்பம் என்ற அமைப்பு குறித்து பேசும் போது மட்டுமல்ல ஒரு இனம் குறித்து பேசுவதென்றாலும் அங்கு பெண்கள்தான் ஆதாரமும் அடிப்படையும்.

 

இனஅழிப்பு அரசு அவர்களையே நுட்பமாக குறிவைப்பதன் பின்புலம் இதுதான்.

 

எனவே இதற்கு எதிர்வினையாற்றுவதென்றால் – இதிலிருந்து இனத்தை காப்பதென்றால்  நாம் முன்வைக்கும் தியரிகள் பிற்போக்குத்தனமும், பெண்ணடிமைத்தனமும் நிறைந்த ஒரு கருத்தியலாக உருத்திரண்டதை ஒரு கட்டத்தில் அவதானித்தோம். அதிர்ச்சியாக இருந்தது.

 

மே 18 அன்று முள்ளிவாய்க்காலை எமது பெண்கள் கடக்க தொடங்கிய நாளிலிருந்து அவர்கள் இந்த இனத்திற்கான பாவச் சிலுவையை சுமக்க தொடங்கி விட்டார்கள். எதிரியின் இலக்கும் அவர்கள்தான் – நமது இலக்கும் அவர்கள்தான்.

 

போராட்ட களத்தில் நின்று ஆளுமையுடனும் உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமுமாய் இருந்த அவர்களை நாம் மீண்டும் ‘பெண்களாக’ மாற்ற அல்லது அணுக வேண்டிய நிர்ப்பந்தம். கண்ணுக்குத் தெரியாத போர்க்களம் அது.

 

பெண்ணுரிமையும் காக்கப்பட வேண்டும் அதே சமயம் இனத்தின் பண்பாடும் காக்கப்பட வேண்டும் என்ற ஒரு புதிய சிக்கலை எமது இனப் பெண்கள் சந்திக்கத் தொடங்கிய களம்தான் முள்ளிவாய்க்கால். இங்கு ஆலோசனை என்பதும் அது குறித்த உளவியல் ஆற்றுப்படுத்துகை என்பதும் கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பான விடயம். கொஞ்சம் சறுக்கினாலும் பன்முக பிரச்சினைகளை தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டி வரும்.

 

பெண்ணியத்தின் தாயான சிமோன் தி பெவார், பேராட்டத்தில் பண்பாட்டின் பாத்திரம் குறித்து பேசிய அமில்கர் கப்ரால் தொடக்கம் நமது பெரியார் வரை சல்லடை போட்டு ஆய்வு செய்து சிலரை முழுமையாகவும் பலரை பகுதியளவும் சிதைத்து  இந்த இனஅழிப்புக்கு எதிரான ஒரு தியரியை கண்டடைந்தோம்.

 

இனஅழிப்பு பின் புலத்தில் மனித உறவுகள், இனஅழிப்பு பின்புலத்தில் ‘இசங்களின்’ வீழ்ச்சி, இனஅழிப்பு பின் புலத்தில் பெண்களும் – பெண்ணியமும் -பெண்ணுரிமையும்’ என்று பல கோணங்களில் இந்த உரையாடலை நீட்டியே ஒரு தற்காப்பு வடிவத்தை பெற்றோம்.

 

அது சரியானது என்று கூறமுடியாது – இந்த இனஅழிப்புக்கு எதிரான ஒரு தற்காலிக – தற்காப்பு வடிவம். அவ்வளவே!

 

விதவைகள், அரை விதவைகள், மாற்று திறனாளிகள் என்று எமது பெண்களின் நிலை இனஅழிப்பு பின்புலத்தில் பாலியல் முரண்பாடுகளையும்  மையமாகக் கொண்டது.

 

ஏற்கனவே திருமண தடை, மண முறிவுகள் என்று மே 18 இற்கு பிறகு எமக்கெதிரான ஒரு பண்பாட்டு போர்க்களம் ஒன்று திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு ஆரோக்கியமான சமூகமாக நாங்கள் இல்லை என்பதும் பிறப்பு வீதம் முற்றாக வீழ்சியடைந்து எமது கருவள வீதம் பாதிக்கப்பட்டு பாரிய இனஅழிப்பை நாம் சந்தித்துள்ளோம்.

 

எனவே பாலியல் கல்வி, மற்றும் பாலியல் ரீதியான எமது கண்ணோட்டம் இங்கு அதி தேவையாகிறது. பல அப்பாவி பெண்கள் சமூக கண்ணோட்டத்தில் பாலியல்ரீதியான முத்திரை குத்தப்பட்டு ஓரங்கட்டுப்படும் விபரீத சூழலை வார்த்தைகளால் விபரிக்க முடியாது.

 

அனைத்து புரிதல்களும் உள்ள எம்மை போன்றோரே இத்தகைய சூழலை எதிர்கொள்வதில் அணுகுமுறைத் தவறுகளை விடுத்து விடுகிறோம். ஏனென்றால் நாமும் இந்த இனஅழிப்பின் பக்க விளைவுகள் தானே.. ஆண்களின் பார்வை இங்கு மாற்றப்பட வேண்டும். பெண்களும் தம்மை காலத்தின் தேவை கருதி தம்மை சுய பாதுகாப்புக்கு உட்படுத்த வேண்டும்.

 

பல கோணங்களில் பேச வேண்டிய பிரச்சிளை இது.

 

எனவே இந்த இனஅழிப்புக்கு சரியான எதிர்வினை என்றால் நாம் ‘குடும்பம்’ என்ற கட்டமைப்பை குலையாமல் பேணுவதில்தான் தங்கியுள்ளது. இது கொஞ்சம் பிற்போக்குத்னமாகவும் பெண்ணிய முரண் கதையாடல்களுக்கும் வழி சமைப்பதாகவும் சிலர் கருதலாம்.

 

ஆனால் இதில்தான் தங்கியுள்ளது நமது இருப்பும் அடையாளமும். கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு பகுதியாக இனஅழிப்பு அரசு “குடும்பம்” என்ற அமைப்பை சிதைப்பதில் கவனத்தை குவித்துள்ளதை அதை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கே புரியும்.

 

2009 நேரடி இனஅழிப்புக்கு பிறகு விதவைகள், அரை விதவைகள், மாற்று திறனாளிகள், தொடர் மண முறிவுகள், திருமண தடைகள் இதன் விளைவான பெண் தலைமைத்துவ குடும்பங்களை தொடர்ந்து பேணும் இனஅழிப்பு அரசின் நுட்பமான சதி ‘குடும்பம்’ என்ற அமைப்பை சிதைப்பதனூடாகவே அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

 

இது பெண்களை மையமாகக் கொண்ட பொருண்மிய, உளவியல், பாலியல் முரண்பாடுகளுக்கு வழி சமைக்கிறது. இது பல சமூக ஏற்றத்தாழ்வுகளையும் –  இனத் தளம்பலையும் கட்டமைக்கிறது.

 

இதனால் ஒரு ஆரோக்கியமான சமூகமாக நாங்கள் இல்லை என்பதும் பிறப்பு வீதம் முற்றாக வீழ்சியடைந்து எமது கருவள வீதம் பாதிக்கப்பட்டு பாரிய இனஅழிப்பை நாம் சந்தித்துள்ளோம்.

 

இதை மாற்றும் எமது முயற்சி பரிதாபகரமாக தோல்வியை தழுவிக் கொண்டிருக்கும் ஒரு சுய அனுபவத்திலிருந்து இதை எழுதுகிறேன்.

 

ஒரு உன்னதமான போராட்டத்தை நடத்திய போராளிகளும் அதைத் தாங்கிய மக்களும் இன்று குடும்ப பிணக்குகளிற்குள் சிக்கவும் அதை விரிக்கவம் வளர்க்கவும் செய்து தமது குழந்தைகளையும் அனாதைகளாக்கி தமது வாழ்வையும் தனிமைப்படுத்த நேரிடுகிறது.

 

இனஅழிப்பு அரசு திட்டமிட்டு நடைமுறைப் படுத்தியதென்பதற்கும் அப்பால் தோல்வியும் நிச்சயமற்ற எதிர்காலமும் எமது மக்களினதும் போராளிகளினதும் உளவியலை ஊனப்படுத்தி குருரமாகச் சிதைத்து அது சமூகத்திற்குள் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.

 

விளைவாக உறவுகளை துண்டித்து குடும்ப வாழ்வின் அடிநாதமான விட்டுக்கொடுக்கும்- மறக்கும் மன்னிக்கும் போக்கிலிருந்து விடுபட்டு முரண்பட்டு தனித்து வாழும் முடிவை தூரநோக்கற்று எடுத்து கொண்டிருக்கிறார்கள்.

 

இது தனிமனிதர்களாக அவர்களைப் பாதிக்கிறதென்பதற்கப்பால் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிற்கு எதிராக பேராடி தன்னை நிறுவ முற்பட்டுகொண்டிருக்கும் ஒரு இனத்தை மோசமாகப் பாதிக்கிறது என்பதுதான் இதன் வெளிப்படை உண்மை.

 

இதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்ததாகத் தெரியவில்லை. எனவே உடனடியாக குடும்ப உறவுகளை துண்டிக்கும் போக்கு தொடராமல் இருக்க உளவளத்துணை அவசியம்.

 

உங்களில் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். பொது மக்களை விடுவோம். மே 18 இற்கு பிறகு உயிர் பிழைத்து தப்பி வந்த பல போராளிகள் குடும்பங்கள் மேற்படி உளவியற் சிக்கல்களுக்குள் தள்ளப்பட்டு குடும்ப பிணக்குகளினால் பரஸ்பரம் நம்பிக்கயற்று பிரிந்திருக்கிறார்கள் இதன் புள்ளிவிபர கணக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் இருக்கிறது.

 

இது மேலும் எமது பெண்களை தனிமைப்படுத்தவும் எமது குடிப்பரம்பலை தடுக்கவுமே வழி செய்கிறது.

 

அதுதான் நாம் உடனடியாக தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ இறுதி இனஅழிப்புக்கு முகம் கொடுத்த ஒவ்வொருத்தருக்கும் உளவியல் ஆற்றுப்படுத்துகை செய்ய வேண்டும் என்று கூறி வருகிறோம். ஆனால் இது தவறாகப் பார்க்கப்படும் போக்கு இன்றளவும் தொடர்கிறது.

 

இதய சுத்தியுடன், நேர்மையுடன் இன அழிப்புக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தால் இனி திருமண தடைகள், மண முறிவுகள் வேண்டாம். விதவைகள், அரை விதவைகள் என்ற நிலை வேண்டாம்.

 

எல்லோரும் குடும்ப வாழ்வின் அடிநாதமான விட்டுக்கொடுக்கும், மறக்கும், மன்னிக்கும் நிலையிலிருந்து குடும்ப வாழ்வில் இணைந்து குழந்தைகள பெற்று எமது ‘குடும்ப’ அமைப்பை பேணுவோம்.

 

இதை வேறு விதமாக சொல்வதென்றால், ‘பெண் தலைமைத்துவ குடும்பங்கள்’ என்ற நிலையை துடைத்தெறிந்தாலே போதும் இனஅழிப்பை சிங்களம் தொடர முடியாது.

 

பரணி கிருஸ்ணரஜனி

 

(கட்டுரையாளர் போருக்கு பின்னரான பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை  மற்றும் உளவியற் சிக்கல்கள் குறித்தும் இனஅழிப்பு குறித்தும் ஆய்வு செய்து வருபவர்)