kudamkulam-98கூடங்குளத்தில் முதலாவது அணு மின் உலை திறந்து வைப்பு தமிழகத்தின் எதிர்ப்பு இன்றி சத்தமின்றி அரங்கேறி உள்ளது.

 

செய்தி கேட்டதில் இருந்து என் மனம் கூடங்குள தமிழ் உறவுகளுக்காக உருகுவதை என்னால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

 

தமிழக தமிழர்க்கு இல்லாத அக்கறை உங்களுக்கு எதற்கு என சிலர் இந்த பதிவுக்கு வியாக்கியானம் பேசலாம்.

 

ஆனால் இதே கூடங்குள மக்கள் எங்கள் ஈழ தமிழ் மக்களுக்காக போராடிய அந்த கட்டமைக்கப்பட்ட போராட்ட காலங்களை நன்றியோடு நினைக்கின்றேன்.

 

அதற்கும் மேலாக ஒரு சக மனிதனிற்கு நடக்கும் அநீதியை தடுத்து நிறுத்த குரல் கொடுக்க அடிப்படை தகுதி மனிதாபிமானம் உள்ள மனிதர்களாக இருந்தால் போதும் என நினைக்கின்றேன்.

 

அணு உலை ஒப்பந்தம் அடிமை சாசனம் என தெரிந்தும் தமிழக இந்திய அரசுகள் கூடங்குள மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவெடுத்து விட்டன என்ற செய்தி மனதை வருத்துகிறது.
கூடங்குளம் மக்களுக்கு நடக்க இருக்கும் அநீதி என்னை மனம் பதற வைக்கின்றது.

 

மோடியும், புட்டினும் ,ஜெயா அம்மையாரும் கூடங்குளம் அணுஉலை முதல் அலகை திறந்து வைத்து வெற்றி உரை ஆற்றி நியாயப்படுத்தியுள்ளார்கள். ஆனால் மக்கள் நலனை எவரும் கவனத்தில் கொள்ளவில்லை.
இத்தனை காலம் போராடிய கூடங்குளம் மக்கள் போராட்டம் பயனற்று போனதுவா?
தமிழக மக்கள் எப்படி இப்படி ஒரு அநீதிக்கு தட்டி கேட்காமல் துணை போகின்றார்கள்?

 

சென்ற மாதம் அமெரிக்கா, ரஷ்யா என உலா சென்று வந்த மோடி 4 இலட்சம் கோடியில் 6 அணு உலைகளுக்கான ஒப்பந்தம் செய்துள்ளார் (அத்தனையும் அமெரிக்க தயாரிப்புகள்).

 

அதேபோல் ரஷ்யாவிலும் சில அணு உலைகள் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்தியாவின் வல்லரசு கனவுக்கு கொடூரமாக பலியாவார்கள் கூடங்குளம் மக்களே.

 

கேள்வி கேட்க யாரும் இல்லா இப்பகுதி அப்பாவி தமிழ் மக்கள் அநீதியாக அணு கதிர் வீச்சுக்கள் தாக்கங்களுக்கு சந்ததி கடந்தும் பலியாவதற்கு முழுமையான அனுமதி கொடுத்து விட்டு தமிழகம் பார்த்துக் கொண்டு இருக்கின்றது என்று கொடிய யதார்த்தம் மனதை பிசைகின்றது.

 

நவீன காலனித்துவ தாராளமயமாக்களில் அப்பாவி தமிழர்கள் வாழ்வு இரையாகும் கொடுமையை எப்படி தமிழகம் அனுமதிக்கின்றது?

 

இந்திய ஒப்பந்தத்தில் தெரிவு செய்த அணு உலை ஒப்பந்தங்களை கூடங்குளத்தில் மட்டும் 6 அணுஉலைகள் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

அவற்றில் முதல் அலகுதான் நேற்று முன் தினம் எதிர்ப்பு எதுவும் இன்றி மோடி, செயலலிதா, ரஷ்ய அதிபர் புட்டின் உரைகளோடு உத்தியோக பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்தது.

 

“இந்தியா வல்லரசாக வளர்ச்சியடைய அணு மின்சாரம் முக்கியத்தேவை” என்று பிரச்சாரம் செய்யும் ஜெயாவும்,மோடியும், அரச சார்பு ஊடகங்களும் அதற்காக எதற்காக தமிழகத்தில் கூடங்குள பகுதியை தெரிவு செய்து அப்பகுதி மக்களுக்கு ஊறு விளைவிக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்லவில்லை. இந்தியாவில் வேறு இடமா இல்லை? இல்லை எதையும் தட்டி கேட்க மாட்டாத இழிச்ச வாயர்களாக தமிழர்கள் தான் தெரிகின்றார்களா?

 

இந்தியா வாழ தமிழர்கள் பலியாக வேண்டுமா?

 

அணுஉலை ஆதரவாளர்களும் சுயநலமாகவே கருத்திடுகின்றார்கள். அப்பாவி மக்களை பற்றிய அக்கறை எவரிடமும் இங்கு இருப்பதாக தெரியவில்லை.

 

அணு உலை குறித்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?

 

அணு உலையின் பாதிப்புகள் அப்பாவி மக்களை பாதிக்கும் கொடுமைகளை உணர்ந்து மாந்த நேய அடிப்படையில் எழுகின்ற எதிர்ப்பு இது என்பதை என் தமிழக உறவுகள் உணர்ந்து குரல் கொடுத்து அப்பகுதி மக்களை காப்பார்களா?

 

அணு உலையின் பாதிப்புகள் பற்றி நான் அறிந்த சில தரவுகள்:

 

அணு உலையால் 100 ரூபாய் இலாபமென்றால் அணுக்கழிவுகளால் அவற்றைப் பராமரிப்பதால் அதன் நீண்ட கால பாதிப்பால் சுமார் 200 ரூபாய் நட்டமேற்படும்.

 

அணு உலைகளில் ஏற்படும் விபத்துகளின் பாதிப்பு மிக கொடியவை. அவை ஏற்படுத்தும் இலட்சக்கணக்கான உயிரழிவு, மனித அழிவுகளுக்கும் மேலாக பொருளியல் அடிப்படையில் பார்த்தாலும் ஒரு முறை அணு உலை விபத்து ஏற்பட்டால் சுமார் 2 இலட்சம், 3 இலட்சம் கோடி இழப்பு ஏற்படும்.

 

உயிர் இழப்புகளை கடந்து பல லட்சம் பேருக்கு இதனால் பக்க விளைவு நோய் பாதிப்புக்கள் ஏற்படும். அவை தற்காலிக பாதிப்புகள் அல்ல. பல நூறு ஆண்டுகளுக்கு மேல் இந்த கொடிய பாதிப்புகள் சந்ததிகள் கடந்தும் தொடரும்.

 

அணுஉலை வெடிப்பும் அதன்மூலம் 100 ஆண்டுக்கு மேற்பட்ட அணுக்கதிர் பாதிப்பும் சுற்றுச்சூழலையே பாலைவனமாக்கக் கூடியவை..

 

ஜப்பானில் ஹிரோசிமா நாகசாயி அணு குண்டு தாக்குதலுக்குப் பிறகு இன்றுவரை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மரபணுக் திரிபு காரணமாக ஊனமுற்ற சந்ததிகள் பிறக்கின்றன.

 

புகுசிமா அணுவிபத்துக்குப் பிறகு தாவரங்கள் பூக்களும்கூட மரபணு கோளாறால் விகாரமாகத் தோற்றமளிக்கின்றன.

 

அணுவாயுதம், அணு மின் உலைகள் பற்றிய பாதிப்புகள் அறிந்தும் இந்தியா பொறுப்பற்று மனித பேரழிவுகளில் ஈடுபட்டு வருகின்றமை வேதனை தருகின்றது.

 

தமிழகத்தின் மின்சார தேவையை பூர்த்தி செய்யவோ அல்லது இந்தியாவின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்யவோ மாற்றீடாக பல வழி முறைகள் இருந்தும் எதற்காக இப்படி மனித சமூகத்திற்கு ஊறு விளைவிக்கும் அணு மின் உலைகளை அரசுகள் நடை முறைப்படுத்துகின்றன?

 

அணு மின் உலைக்கு மாற்றீடாக சூரிய ஒளி மின்சாரத்தின் பால் இந்திய தமிழக அரசுகள் அக்கறை செலுத்தலாமே?

 

எந்த விதத் தீமையுமில்லாத சூரியஒளி மின்சாரத்துக்கு ஏன் இது போல் நிதி ஒதுக்கவில்லை?
மக்கள் நலத்திற்கு ஏன் முக்கியத்துவம் தரப்பட வில்லை?

 

சூரியஒளி மின்சாரத்திட்டங்களை தனியாருக்கு கொடுத்து மக்களைக் கொள்ளையடிப்பதேன்?
அணு உலை ஒப்பந்தம் என்பது விபத்து காப்பீடற்ற,பாதுகாப்பற்ற, ஒரு தலைப் பட்சமான, ஏகாதிபத்தியங்களின் கேவலமான நிபந்தனைகளை உள்ளடக்கிய ஒரு அடிமைசாசனமே என்பதை ஏன் இன்னமும் தமிழக அரசு உணரவில்லை? உணரவில்லையா இல்லை அக்கறை இல்லையா?

 

அரசுகளின் கேவலமான சுயநல சிந்தைக்கு பலியாக போகும் அப்பாவி கூடங்குள மக்களை காக்க தமிழகம் விழித்தெழ மாட்டாதா?

 

சில கடந்த கால அணுக்கதிர்பாதிப்புகளை பார்ப்போம்.

 

1945-ஆகஸ்டு-9 காலை 11.02க்கு அமெரிக்கா ஜப்பான் மீது அணு குண்டைப் போட்டது .
அணு குண்டைப்போட்டு 70 ஆண்டுகளாகி விட்டது. ஆனால் அதன் கொடிய பாதிப்புகள் இன்றும் தொடர்கிறது. இது எத்தனை பேருக்கு தெரியும்?

 

குண்டு போட்டதும் 90,000 ஜப்பானிய மக்கள் உடனே வெந்துருகி மடிந்தார்கள். 125 பேர் அடுத்த 1வாரத்திற்குள் செத்தார்கள்.

 

இன்னும் சில இலட்சம் பேர் குணப்படுத்த முடியாத நோயினால் அடுத்த சில ஆண்டுகளிலே மடிந்தார்கள்.
எஞ்சிய சில பேர் வாழவும் முடியாமல்,சாகவும் முடியாமல் இப்போதும் அந்த கொடூரத்தின் பக்கவிளைவுகளோடு சாட்சிகளாக வாழ்கிறார்கள்.

 

அதில் ஒருவரான ஷிரோஹி சொல்கிறார்:

 

“நான் தனியார் கூரியர் சர்வீசில் வேலை பார்த்து வந்தேன்.அன்று எனது வயது 16. அன்று தபால் கொண்டு போகும் போது குண்டு விழுந்த இடத்திலிருந்து 1.5 கி.மீ தூரத்தில் சைக்கிளில் போய் கொண்டிருந்தேன்.

 

திடீரென பின்பக்கம் முதுகில் தீ பிடித்ததுபோல் தசை வெந்துவிட்டது.
இரு கைகளை இன்று வரை மடக்க முடியவில்லை.
அந்த புண் இன்று வரை ஆறவில்லை.

 

எரிச்சலை ஆற்ற தினமும் பலமுறை குடும்பத்தினர் இப்போதும் களிம்பு தடவிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

 

எனக்கேன் சாவு வரவில்லை?” என வேதனையோடு அழுகிறார்.

 

அடுத்து ஒருவரான சுமிதேரு தனிக்சி குண்டுபோட்டதும் உயிர்பிழைக்க ஓடியிருக்கிறார். கால் சகதியில் மாட்டியது போல் உணர்வு. கீழே பார்த்த போது ஒருவர் உடலை மிதித்துள்ளார்.அவரது உடல் வெந்து கூழ்போல் ஆகியுள்ளது.

 

அதைத்தான் அவர் மிதித்ததும் கால் உடலுக்குள் இறங்கிவிட்டது.

 

அதை நடுக்கத்தோடு இப்போதும் நினைவில் வைத்துள்ளார்.

 

ஹிரோஷிமா, நாகசாகியில் இது போல பல மனித கொடூர அவலங்களின் சோகக்கதைகள் அந்நாட்டில் எல்லோர் வீட்டிலுமுண்டு.

 

யுத்தத்தை நிறுத்த என சப்பைக்கட்டு கட்டினாலும் அணுவாயுதத்தை பரிசோதித்து பார்க்கவும் ஏகாதிபத்திய பிரிட்டனை இரண்டாம் இடத்துக்கு தள்ளி முதலிடத்துக்கு வரவும், ஆதிக்கத்தை நிலை நிறுத்தவுமே அணுகுண்டைப் போட்டது அமெரிக்கா.

 

அந்த இரண்டு குண்டுகளைப் போட்ட விமானிகள் இது பற்றி கூறுகையில், “நாங்கள் சாதாரண குண்டு என்றுதான் நினைத்தோம். இவ்வளவு பெரிய அழிவை உண்டாக்குமென நினைக்கவில்லை” என் பின்னாளில் வருந்தினர்.

 

அதில் ஒருவர் குற்றவுணர்விலே நினைந்து நினைத்து இறந்தார். மற்றவர் கடைசிநாளில் மனநிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.

 

அதை உருவாக்கிய ஐன்ஸ்டீனோ “இதை கண்டுபிடிக்காமலே இருந்திருக்கலாம். நான் எவ்வளவு பெரிய தவறைச் செய்துவிட்டேன்” என வருந்தினார்.

 

அதற்கு பிறகு இற்றை வரையில் அணுகுண்டு வல்லரசுகளின் சின்னமாகிப் போனது. அதுவே அவர்களின் பெருமிதமாகவும் மாறி விட்டது.

 

அண்மையில் கூட ஜப்பானில் ஏற்பட்ட புகுஷிமா அணுஉலை விபத்து குண்டுபோட்ட அதே விளைவுகளை உருவாக்கி இருக்கின்றது.

 

அந்தப் பகுதி மனிதர் வாழத்தகுதி இல்லாத ‘ரெட் ஸோன்’ பகுதியாக அறிவிக்கப்பட்டு அந்த கழிவுகளை அகற்றும் பணி 3 ஆண்டாக தொடர்ந்தும் இன்னும் முடிந்தபாடில்லை.

 

அந்தப் பகுதியில் வளரும் தாவரங்கள், உயிரினங்கள் அணுக்கதிர்வீச்சால் மரபணுக்கோளாறு பாதிக்கப்பட்டு விகார தோற்றத்தில் காட்சியளிக்கின்றன.

 

வளர்ந்த நாடுகளெல்லாம் அணு உலையை மாந்த நேயம் கருதி படி படியாக மூடிக்கொண்டிருக்கின்றன.
மகாத்மா தேசம், புண்ணிய பூமி என சொல்லும் இந்தியாவோ மனித உயிருக்கு உலை வைக்கும் 10 அணு உலைகளை திறக்க ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது. இது தானா புண்ணிய தேசத்தின் மாந்த நேய பண்பு?

 

ஜப்பானியர்களே அணுக்கதிர் வீச்சை தடுக்க முடியாமல், அணுக்கழிவுகளை அள்ள முடியாமல் செய்வதறியாமல் தவித்து கொண்டு இருக்கையில் அணு கழிவு அகற்றல் பற்றிய எந்த முன்னனுபவம் இல்லாத இந்தியாவால் என்ன செய்யமுடியும் என இந்தியா நினைக்கிறது?

 

இந்தியாவின் பொறுப்பின்மையை சான்று பகரும் கோபால் விஷவாயு கசிவு வரலாறாகி உள்ளது.
போபால் விசவாயுக்கசிவு நடந்து 30ஆண்டாகியும் அந்த ஆலையில் கழிவுகளைக்கூட அள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றது இந்திய அரசு. அது மட்டுமன்றி அந்த விபத்துக்கு காரணமான குற்றவாளிகளை கூட தப்பி கொள்ள உதவி இருக்கின்றது.

 

கூடங்குளத்தில் அணுஉலை வெடித்தால் அல்லது கசிவு ஏற்பட்டால் இதே போல் தான் இந்திய அரசு பொறுப்பின்றி தட்டி கழித்து விடும் என்பதும் உறுதி.

 

இந்திய அரசு கூடங்குள மக்களை அத்தகைய சூழலில் காக்கப் போவதில்லை. தமிழக மீனவர்களை சாக விட்டு பார்த்துக் கொண்டு இருபப்து போலவே அன்றும் கைகட்டி பார்த்து கொண்டு இருப்பார்கள்.
இந்த இடத்தில் இங்கு குறிப்பிட்ட பக்க விளைவுகள், அணுமின் பாதிப்புகள் மிக சொற்பமே. உலக நாடுகள் பலவற்றிலும் இது குறித்த அச்சுறுத்தும் ஆய்வுத் தகவல்கள், அதனை தொடர்ந்த கைவிடல்கள் உண்டு.

 

ஆனால் இந்தியா தமிழகத்தில் தமிழர் நலனில் அக்கறை இன்றி கூடங்குளத்தில் பொறுப்பற்று மக்கள் எதிர்ப்பையும் மீறி அணுமின் உலைகளை நிறுவது மாந்த நேயத்திற்கு இழுக்கு. இதை தமிழர்கள் உணர்ந்து போராடாமல் இருப்பது அனைத்திலும் இழிவு!

உணர்வார்களா தமிழக தமிழ் உறவுகள்? காப்பார்களா கூடங்குள மக்களை?

 

செந்தமிழினி பிரபாகரன்