safe_imageCACQMKSXகூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் சார்ந்து என்ன செய்கிறது? என்ன செய்யப்போகிறது? என்பது இந்தக்கணம் வரை யாருக்கும் தெரியாது. நடக்கும் சம்பவங்களைப் பார்த்து நாங்களாக ஏதாவது அனுமானித்துக்கொள்ள வேண்டியதுதான். நம்பிக்கை தரும் எந்த அறிகுறியும் இதுவரை இல்லை.

ஆனால் கூட்டமைப்பின் பின் அணிதிரளுங்கள், கூட்டமைப்பை விமர்சனத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள், அதுதான் சாத்தியம் மட்டுமல்ல களயதார்த்தமும் கூட என்ற கோசங்களுக்கு மட்டும் குறைவில்லை.

கூட்டமைப்பின் மீது மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் அரசியல்வாதிகள் மீதே மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து வரும் தருணம் இது. அதை தாயகத்தில் நிகழும் சம்பவங்கள் தினமும் உறுதிப்படுத்தி கொண்டிருக்கின்றன.

புலிகள் குறித்த முதன்மையான விமர்சனமாக “வெளிப்படைத்தன்மையற்ற” (Transparency)ஒரு அமைப்பு என்ற குற்றச்சாட்டு இப்போதைய தமிழ் அரசியல்வாதிகள் சிலரால் முன்பு முன்வைக்கப்பட்டது. ஆனால் தற்போது கூட்டமைப்பு மட்டும் எந்த அடிப்படையில் இயங்குகிறது? என்ற எமது கேள்விக்கு பதில் சொல்ல அவர்கள் தயாராக இல்லை.

கடந்த வாரம் சுமந்திரன் போர்க்குற்றங்களுக்கான அமெரிக்கத் தூதர் ஸ்டீபன் ராப் சந்திப்பை அடுத்து பிபிசி க்கு வழங்கிய நேர்காணலில் மக்களை மீண்டும் ஏமாற்றும் தந்திரங்களை செய்வதை காணலாம்.

புலிகள் மீதான் போர்க்குற்றங்கள் குறித்த கேள்விக்கு விடையளிக்க முற்படும் அவர், தாம் அதையும் வலியுறுத்துவதாக பிதற்றுவது மட்டுமல்ல ஐநா நிபுணர் குழு அறிக்கையை அதற்கு துணைக்கு அழைக்கிறார்.

ஐநா நிபுணர் குழு அறிக்கையை தமிழர் தரப்பு பல நிபந்தனைகளுடன்தான் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இது கூட தெரியாமல் மேற்குலக நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் புலிகளையும் போர்க்குற்றவாளிகளாக்கி நடந்த இனஅழிப்பை மறைக்கும் உத்தியை கூட்டமைப்பு செய்வதாகவே இதை நாம் கருதவேண்டியுள்ளது.

இது கூட பரவாயில்லை. ஒவ்வொரு வருடமும் ஜெனிவாவில் சிறீலங்காவிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படும்போதும் அதை இந்தியா தடுப்பதும் நீர்த்துப்போகச் செய்வதும் வழமை. கடந்த முறை கூட அமெரிக்கா கொண்டு வந்த அரைகுறையான ஒன்றுக்கும் உதவாத தீர்மானத்தில் கூட இந்தியா கைவைத்து அதன் ஒட்டு மொத்த சாராம்சத்தையும் செயலிழக்கவைத்ததை நாம் அறிவோம்.

ஆனால் இந்த நேர்காணலில் சுமந்திரன், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா மேலும் வலுப்படுத்தியதாக கதை அளக்கிறார். முழுப்பூசணிக்காயை சோற்றில் புதைப்பது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இங்கு சுமந்திரன் ஒரு பூசணிக்காய் தோட்டத்தையே புதைக்கிறார்.

இனியும் இவர்களை நாம் நம்ப வேண்டும் என்று வகுப்பெடுப்பவர்களை என்னவென்று சொல்வது?

அண்மைக்காலமாக பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் உலகத் தமிழர் பேரவை போன்றவைகளின் அறிக்கைகளில் கூட இருதரப்பையும் போர்க்குற்ற விசாரணைக்குள்ளாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நாசூக்காக முன்வைக்கப்படுவதை நாம் பார்க்கிறோம். கேட்டால் இராஜதந்திரமாம்.!

தாயகத்தில் மாற்று அரசியல் கட்சி என்று சொல்லப்பட்ட ததேமமு புலிகளுக்கு எதிரான போர்க்குற்ற சாட்சிகளை ஆவணப்படுத்தியவர்களுடன் கொஞ்சி குலாவுகிறது. கேட்டால் அதுவும் இராஜதந்திரமாம்.!கண்ணைக் கட்டுது.

ஒன்று புரிகிறது. எல்லோரும் சேர்ந்து மக்களை நடுத்தெருவில் விடப்போகிறார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது. மற்றவர்களை பற்றி பிரச்சினையில்லை. ஆனால் மக்களின் பிரதிநிதிகள் என்ற அடையாளத்துடன் கூட்டமைப்பு செய்யும் மேற்படி கூத்துக்கள் தமிழ்மக்களின் விடுதலையை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சிகள் என்றே கருத வேண்டியுள்ளது.

ஒன்றிரண்டு விடயங்களில் முரண்பட்டால் விமர்சனம் செய்து அதை நல்வழிப்படுத்தலாம். ஆனால் கூட்டமைப்பின் அரசியல் அடிப்படையே தவறாக இருக்கிறது.

தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களும் மாணவர் புரட்சியும்தான் இந்த மாதிரியான செயற்பாடுகளுக்கு முடிவுரையாக இருப்பது மட்டுமல்ல இனத்தின் விடுதலையையும் தீர்மானிக்கும்.

நாம் எப்போது அந்த செயற்பாடுகள் குறித்து சிந்தித்து செயற்படுத்தப்போகிறோம்?

ஈழம்ஈநியூஸ்.