நல்லாட்சி என்ற பெயரில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் இலங்கை அரசுக்கு எதிராக கனடா வாழ் தமிழ் மக்கள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்!

 

இடம்: அமெரிக்க துணைத்தூதரகத்திற்கு முன்னால்

 

திகதி: சனிக்கிழமை பெப்ரவரி 18
நேரம்: மதியம் 2 மணி முதல் 4 மணி வரை

 

சொந்த மண்ணில் தம்மை வாழ விடக் கோரி சனநாயக வழியில் குழந்தைகள் முதியோர் என கொட்டும் பனியிலும் கும்மிருட்டிலும் கட்டாந்தரையிலும் எந்தவித அழுத்தத்திற்கும் அடிபணியாமல் துணிகரமாக இரண்டாவது வாரமாக தொடர்ச்சியாக கேப்பாபிலவு மக்கள் நடத்தும் மண் மீட்பு போராட்டத்திற்கு வலுச் சேர்ப்போம்.

 

இந்த போராட்டத்தினூடாக கனடியத் தமிழர்கள் கீழ்வரும் கோரிக்கைகளை முன் வைக்கின்றார்கள்:

 

1. கேப்பாபிலவு மக்களை உடனடியாக அவர்கள் சொந்த காணிகளில் குடியமர்த்த வேண்டும்.

 

2. தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட 68 ஆயிரம் ஏக்கர் பூர்வீக காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

 

3. தமிழர் தாயகமான வடக்கு கிழக்கிலிருந்து அனைத்து இராணுவமும் உடனடியாக வெளியேற வேண்டும்.

 
இலங்கை அரசு தொடர்ச்சியான அழிவுகளை தமிழர் தேசம் மீது நடத்தி வருகின்றது. அத்துடன் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குரிய சர்வதேச விசாரணையை மழுங்கடிக்கும் முகமாக சர்வதேசத்தையும் மனித உரிமை அவையையும் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றது.

 

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து எவ்வித விசாரணையும் இதுவரை நடத்தப்படவில்லை. சிறைகளுக்குள் விசாரணைகள் ஏதுமின்றி அநீதியாக ஆண்டுக்கணக்காக தமிழ்க் கைதிகள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றார்கள். சிங்கள குடியேற்றம், சிங்கள பெயர் மாற்றம், சிங்களமயமாக்கல், பௌத்த மயமாக்கல், புத்தர் சிலைகள், புத்த விகாரைகள், என கட்டி தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து பறிக்கும் வன்செயல் தொடர்ச்சியாக இன்னும் இடம் பெற்று வருகின்றது. போதை மருந்து பாவனை, கலாச்சார சீர்கேடுகள் என்பனவற்றை வேண்டுமென்றே கட்டவிழ்த்து விட்டு தமிழ் மக்களின் வாழ்வை சிதைப்பது தொடர்கின்றது.

 

காணாமல் ஆக்கப்பட்டுதல், கைதுகள், கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு போன்ற பல கொடும் செயலுக்கு காரணமாக உள்ள அரச படைகள் உடனடியாக வெளியேற வேண்டும்; அத்துடன் அவர்களுக்கெதிரான விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டம் கனடா வாழ் தமிழ் சமூகம், மாணவர் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படவுள்ளது.

 

கனடா வாழ் அனைத்து தமிழ் மக்களும் இந்த கண்டன போராட்டத்தில் கலந்து கொண்டு போராடும் தாயக மக்களோடு தோளோடு தோள் நிற்குமாறு வேண்டுகின்றோம்.