Missingநீண்டகாலமாக எதுவித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாமும் இணைந்து போராடுவோம் என மன்னார் பிரஜைகள் குழு அழைப்பு விடுத்துள்ளது.

 
தம்மை விடுதலை செய்யக்கோரி சகல சிறைச்சாலைகளிலும் உள்ள அரசியல் கைதிகள் நேற்றைய தினத்திலிருந்து சாகும் வரையுமான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

 

நீண்ட காலமாக இவர்கள் கைது செய்யப்பட்டு எந்தவிதமான அடிப்படை விசாரணைகள் இன்றியும், பிணையில் செல்லக் கூட முடியாத நிலையில் வாழ்க்கையை இழந்து தவிக்கின்றார்கள்.

 

இவர்கள் தங்களை விடுதலை செய்ய வேண்டுமென பல முறை போராட்டங்கள் நடத்தியிருந்தும் எந்தப் பலனும் கிட்டவில்லை. இந்நிலையிலேயே அவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை கையிலெடுத்துள்ளனர்.

 

இந்நிலையில் இக்கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக சிறைக் கைதிகளின் பெற்றோர்கள், உறவினர்கள், ஒன்றிணைந்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை எதிர்வரும் 16.10.2015 அன்று காலை 7.00 மணிக்கு யாழ்ப்பாண நூலகத்திற்கு அருகாமையிலுள்ள முனியப்பர் ஆலயத்திற்கு முன்னால் நடாத்தவுள்ளார்கள்.

 

மேற்படி ஒருநாள் உண்ணாவிரதத்தை வெற்றியடையச் செய்வதற்கு மன்னார் பிரஜைகள் குழு சகல மக்களையும், பிரதேச சபை, மாகாண   சபை, உறுப்பினர்களையும், சிவில் சமூகத்தையும் மத குருமார்களையும், பங்கு பற்றி சிறைக்கைதிகளின் விடுதலைக்காக உதவுமாறு வேண்டுதல்களை விடுத்துள்ளார்கள்.