கொழும்பு மகசின் சிறையில் பிரித்தானியாவை சேர்ந்த தமிழர் கோபிதாஸ் மர்ம முறையில் கொல்லப்பட்டமை கண்டனத்திற்குரியது.

0
554

gobithas2007 இல் விடுதலைப்புலிகளுக்கு உதவியாக செயல்பட்டதாக கனடா, பிரித்தானியா , மற்றும் அயர்லாந்து நாடுகளின் பிரஜைகள் மூவர் சிறிலங்கா சென்ற போது சிறிலங்கா அரசின் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

குணசுந்தரம் ஜெயசுந்தரம் , ராய் மனோஜ்குமார் சமாதானம் ,கோபிதாஸ் ஆகியோரே இந்த மூவர். இவர்களில் குணசுந்தரம் ஜெயசுந்தரம் அயர்லாந்து நாட்டுக் குடியுரிமையும் , ராய் மனோஜ்குமார் சமாதானம்கனடிய குடியுரிமையும் பெற்றவர்கள். தற்போது சிறையில் மர்மமான முறையில் தீர்த்துக்கட்டப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் கோபிதாஸ் பிரித்தானிய பிரஜை ஆவார்.

கனடிய அரசின் தொடர்ந்த முயற்சி மற்றும் தலையீட்டினால் ராய் மனோஜ்குமார் சமாதானம் கடந்த நவம்பர் மாதம் விடுவிக்கப்பட்டு கனடா வந்தடைந்தார். கனடா வந்தடைந்த கையோடு சிறிலங்கச் சிறையில் மனித உரிமைகளை மீறி தான் அனுபவித்த சித்திரவதைகளை கனடியத் தமிழ் ஊடகங்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டியதுடன் , இதற்கான இழப்பீட்டினையும் , நீதியையும் பெற்றுத் தரக் கோரி ஐ.நா விடம் முறைப்பாடு செய்திருந்தார்.

ராய் மனோஜ்குமார் சமாதானம் சிறிலங்கச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அங்கு சிறை வைக்கப் பட்டிருந்த குணசுந்தரம் ஜெயசுந்தரம் , கோபிதாஸ் ஆகிய இருவரில் கோபிதாஸுக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இவரும் மனித உரிமைகளுக்கு எதிராக தான் துன்புறுத்தப்பட்டு வருவதாக மனித உரிமை ஆணையத்திடம் புகாரளித்து, எஞ்சியுள்ள தண்டனை காலத்தை பிரித்தானியாவில் அனுபவிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கைக்கு பிரித்தானிய அரசும் செவி சாய்த்து , கோபிதாஸ் எஞ்சியுள்ள தண்டனைக் காலத்தை அங்கு அனுபவித்துக் கொள்ளலாம் எனக் கூறிய பின்னரே இந்த மர்ம மரணம் நிகழ்ந்துள்ளது.

இம்மரணத்திற்கான காரணம் மார்படைப்பே என அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ள போதிலும் கூட நிச்சயமாக திட்டமிட்ட கொலையே என்ற சந்தேகங்களும் வலுத்து வருகின்றன. இதன் பின்னணியை அலசி ஆராய்ந்ததில் எமக்குப் புலப்படும் சில விடயங்கள் என்னவென்றால்,

முதலாவதாக கோபிதாஸ் பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பபப்டும் பட்சத்தில் ஏற்கனவே அனுப்பப்பட்ட கனடிய பிரஜை போன்று இவரும் சிறிலங்க அரசுக்கு எதிராக ஐ.நாவில் முறைப்பாடு செய்யவோ அல்லது சிறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை அப்பட்டமாக வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டவோ முடியும்.

இரண்டாவதாக சேனல் 4 வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக சிறிலங்க அரசின் போர்க்குற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறது. இதனை சிறிலங்காவிலும் , இந்தியாவிலும் ஊடகங்களில் காண முடியாமல் செய்யும் அரசின் ராஜ தந்திர நடவடிக்கைகளுக்கு ஆப்பு வைப்பது போல யூடியூப்பிலும் இந்தக் குற்றங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருவதினால் ராஜபக்சே அரசின் முகத்திரை கிழியத் தொடங்கி விட்டது.

மூன்றாவதாக சமீபத்தில் சிறிலங்கா சென்று வந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உட்பட பலரும் இறுதிக்கட்டப் போர் குறித்தான விவகாரங்களில் சர்வதேச விசாரணை வேண்டும் என உரத்த குரலில் கோரிக்கை விடுத்து வருவமையும் , அண்மையில் கனடியத் தமிழர் பேரவையின் மீது அடுக்கடுக்காய் பொய்க் குற்றச்சாட்டுக்களை கட்டவிழ்த்து விட்ட ரோகன் குணரத்தினம் ஆகியோருக்கு எதிராக சாட்டையடி போன்ற தீர்ப்புக்கள் நீதிமன்றிலிருந்து வந்திருப்பதும் சிறிலங்க அரசின் ராஜ தந்திர நடவடிக்கைகளை சற்றே ஆட்டம் காணச் செய்துள்ளன.

வட மாகணத்தில் முறைப்படியான தேர்தலை நடத்தி தமிழ் கட்சிகளை ஆட்சியமைக்க அனுமதித்த பின்னர் சர்வதேச அளவில் தங்களுக்கு இருக்கும் அவப்பெயர் மறையத் தொடங்கும் என தப்புக் கணக்கு போட்ட சிறிலங்க அரசுக்கு தங்கள் காய் நகர்த்தல்கள் திட்டமிட்டபடி விளைவுகளை ஏற்படுத்திக் கொடுக்காததால் இன்னும் கோபிதாஸையும் பிரிட்டனுக்கு அனுப்பினால் என்னென்ன பாதகமான விளைவுகள் நேருமோ என்ற அச்சத்தினையும் உண்டாக்கியுள்ளது.

அதன் விளைவாகவே மர்மமான முறையில் கோபிதாஸ் தீர்த்துக் கட்டப்பட்டிருப்பாரோ என்ற சந்தேகங்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன. மூன்றாவது நபரான குணசுந்தரம் ஜெயசுந்தரம் புனர்வாழ்வு மையத்திற்கு அனுபப்பபட்டுள்ளார் என்பதால் அவர் அரசின் நேரடிக் கண்காணிப்பிலேயே இருப்பார். அவர் மூலமாக எந்த விடயமும் வெளியில் தற்போது கசிய வாய்ப்பில்லை என்பதை கருத்தில் கொண்டே கோபிதாசை மர்மமான முறையில் கொன்று விட்டு மார்படைப்பு என நாடகம் போடுகின்றனரோ என்ற சந்தேகங்கள் அங்கு இருக்கும் தமிழ் அமைப்புக்களிடையேயும் எழத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பிலான குற்றச்சாட்டு ஒன்றினையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் பி.பி.சி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தமிழ் அரசியல் தடுப்பு கைதி விஸ்வலிங்கம் கோபிதாஸ் மரணத்துக்கு இலங்கை, இங்கிலாந்து அரசுகள் இரண்டும் பொறுப்பு கூற வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

2007ம் வருடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இவர் ஒரு பிரித்தானிய பிரஜை. கடந்த ஏழு வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் 2009ம் வருடமும், 2011ம் வருடமும் சிறைக்குள்ளே தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார். இதனால் இவர் தொடர்சியாக உடல் உபாதையால் அவதிப்பட்டுள்ளார். அதேவேளை லண்டனில் வசிக்கும் இவரது மனைவியையும், பிள்ளைகளையும் பிரிந்து வாழ்ந்ததும் இவருக்கு பாரிய மன உளைச்சலை தந்துள்ளது.

இந்நிலையில் இவர் தற்போது கழிவறையில் இறந்துகிடக்க காணப்பட்டுள்ளார். இவரது மரணத்துக்கு உடனடி காரணம் எதுவாக இனிமேல் சொல்லப்பட்டாலும்கூட, இந்த மரணம் ஒரு அரசியல் கொலை என்பதை இலங்கை அரசு மறுக்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கமும் பொறுப்பு கூற கடமைபட்டுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய அரசு இலங்கை அரசிடம் இப்போதாவது கேள்வி எழுப்ப வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கோபிதாஸ் என்ற அரசியல் கைதியின் மரணம் தொடர்பாக மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர இந்த அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது. இந்த விவகாரத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும்படி இலங்கை அரசின் கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையும் செய்ய இந்த அரசு தவறியுள்ளது. தமிழ் கைதிகள் ஒன்றில் உடல், உள உபாதைகளால் கொல்லப்படுகிறார்கள். அல்லது அடித்து கொல்லப்படுகிறார்கள்.

தமது பிரஜையின் மரணம் தொடர்பாகவும், அவர் மீது கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாகவும், இவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்ட விசாரணை விவகாரங்கள் தொடர்பாகவும் பிரித்தானிய அரசு இலங்கை அரசிடம் இப்போதாவது கேள்வி எழுப்ப வேண்டும் என கேட்டுகொள்கிறேன்.