சுப்ரமணியன் சுவாமி என்ற ஒரு கோமாளியை இங்கே அழைத்து வந்து, அவரை இந்திய அரசின் பிரதிநிதி என்று, அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் உருவகப்படுத்தி காட்ட, இலங்கை அரசாங்கத்தால் முடியுமானால், இந்திய அரசின் கதாநாயகனான நரேந்திர மோடியை சந்தித்து, 13ம் திருத்தம் தொடர்பாகவும், அதை மென்மேலும் விரிவாக்குவது தொடர்பாகவும் உரையாட தமிழ் தேசிய கூட்டமைப்பால் முடியும்.

swamy
இந்தியாவில் ஒரு நகரசபை உறுப்பினராக கூட மக்களின் வாக்குகளை பெறாத, பெற முடியாத சுப்பிரமணிய சுவாமிக்கும், இங்கே அவரை அழைத்து வந்து, ஊதிப்பெருப்பித்து காட்டி நாடகமாடியவர்களுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்திய பயணம் நல்ல ஒரு சாட்டையடி என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது –

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு குழுவினர் இந்தியா செல்கின்றனர். இந்த ஊவா தேர்தல் களத்தை பயன்படுத்தி, கூட்டமைப்பின் டெல்லி பயணத்தை, திரித்து பேசி, நாட்டை குழப்ப, இனி ஒரு குழு கிளம்பும். இந்திய துணையுடன் நாட்டை இரண்டாக பிரிக்க முயற்சி என்று கூச்சல் அடுத்த சில நாட்களுக்கு கேட்கும்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் தீர்வில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத அங்கம் என்பதை இலங்கை அரசு தன் செயல்கள் மூலம் இன்று ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே கூட்டமைப்பினர் இந்தியா சென்று தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை காண வழி தேடுவார்கள் எனில், அது இந்நாட்டில் வாழும் எல்லா இன மக்களுக்கும் நன்மை தருவதாகும். ஆகவே இந்தியா செல்லும் கூட்டமைப்பினர் இந்நாட்டில் வாழும் எல்லா இன மக்கள் சார்பாகவுமே செல்கிறார்கள். இந்நாட்டில், அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுவோம் என்ற கொள்கையை முன்னெடுத்து செல்கிறார்கள்.

இந்திய அரசு இலங்கையின் உண்மை யதார்தத்தை உணர்ந்து செயல்படும் என நாம் எதிர்பார்க்கிறோம். அதிகாரத்தை பகிர பிடிவாதமாக இலங்கை அரசு மறுப்பதே, இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான பிரதான முட்டுக்கட்டை என்பதை இந்திய அரசு உணர வேண்டும்.

இலங்கை அரசு, சுப்பிரமணிய சுவாமியை ஒப்பந்த அடிப்படையில் கொழும்புக்கு அழைத்து வந்து, அவருக்கு எழுதி கொடுத்து, அதை வாசிக்க சொல்கிறது. இந்த அரசு சொல்வதை அவரும் செய்கிறார். அதானால்தான் அவர்இ இலங்கை வந்து எங்களுக்கு 13ம் திருத்தத்தின் அமுலாக்கம் பற்றி கற்று கொடுக்கிறார். இந்த சட்டமூலத்தில், பொலிஸ் அதிகாரம் தவிர, ஏனைய 90 விகித அதிகாரங்கள் இன்று அமுல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார். எங்கள் நாட்டில், எங்களை நிலைமையை பற்றி, எங்களுக்கு இவர் பாடம் நடத்துகிறார். இது இந்த வருடத்தின் மிகபெரும் நகைச்சுவை.

இவரை பயன்படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் ஒரு போலியான அபிப்பிராயத்தை ஏற்படுத்த இந்த மகிந்த அரசு முயல்கிறது. சுப்ரமணிய சுவாமி இந்திய அரசின் பிரதிநிதி என்றும் அவர் வாயில் வரும் கருத்துகள், இந்திய அரசின் கருத்துகள் என்றும் காட்ட இலங்கை அரசு முயல்கிறது. இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வா, புது டெல்லி சென்று இந்திய அரசு சொல்லிக்கொடுத்ததை பேசினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த சுவாமி டெல்லியில் இருந்து இங்கே வந்து இந்த அரசு சொல்லிக்கொடுத்ததை பேசுவதாகும். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தமிழ் ஹிந்தி திரைப்படங்கள் இலங்கையில் பாரம்பரியமாக ரசிக்கபடுகின்றன. இவற்றில் நடிக்கும் காமெடி நடிகர்கள் இங்கே ரொம்ப பிரபல்யம். இத்தகைய ஒரு காமெடி நடிகர்தான் சுப்ரமணிய சுவாமி.

(அத தெரண தமிழ்)