சட்டக் கல்லூரி மாணவர்கள் 5-வது நாள் உண்ணாவிரதம்

0
310

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி, செங்கல்பட்டு அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் 5 பேர், 5-வது நாளாக திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இலங்கையில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அரசை கண்டித்தும், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது.

கச்சத்தீவை மீட்டெடுத்து மீணவர்களின் கொலையைத் தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.இவர்களை மதிமுக மாநில துணை பொது செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் தங்கராஜ் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ளும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் உடன்படவில்லை.

ஞாயிற்றுக்கிழமை மாலை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவன் மாணவர்களுக்கு ஆதரவுத் தெரிவித்து சால்வை அணிவித்து உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.மாவட்டச் செயலர் சூ.க.விடுதலைச்செழியன், துணைச் செயலர் தே.தென்னவன், இளைஞரணி மாவட்டச் செயலர் செங்கை இரா. தமிழரசன், நகரச் செயலர் அன்புச்செல்வன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.5-வது நாளாக திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் உண்ணாவிரதத்தை கைவிடக் கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர்.

இதனிடையே, நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை 13-10-2013 அன்று நடத்திய மாநில கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. இலங்கையில் நடைபெறவிருக்கிற பொதுநல நாடுகளின் மாநாட்டை எதிர்த்து தோழர்.தியாகு அவர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை நாம் தமிழர் இளைஞர் பாசறை முழுமையாக ஆதரிக்கிறது. போராட்டத்தை பல்வேறு தளங்களில் எடுத்துச் செல்ல இளைஞர் பாசறை உறுதி பூண்டுள்ளது.

2. தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் தாது மணல் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை ஆகியவைகளை நாம் தமிழர் இளைஞர் பாசறை உறுதியாக எதிர்த்துப் போராடவும், தொடர் போராட்டங்களை நடத்தவும் உறுதியேற்கிறது. தாதுமணல் கொள்ளையினை தடைசெய்த தமிழக அரசின் நடவடிக்கையினை நாம் தமிழர் இளைஞர் பாசறை வரவேற்கிறது. அதே சமயத்தில் இந்நடவடிக்கை மிகவும் தாமதமான ஒன்று என்று கருதுவதோடு மட்டுமில்லாமல் மேற்படி தடையினை நிரந்தரமாக்கி மண்ணின் வளம் மக்களுக்கானது என்ற அடிப்படையில் தற்சார்பு பொருளாதார கொள்கையினை பின்பற்றவும் மத்திய, மாநில அரசுகளை நாம் தமிழர் இளைஞர் பாசறை வலியுறுத்துகிறது.

3. தமிழகத்தில் நடைபெற்று வரும் கல்விக்கொள்ளை, மருத்துவக்கொள்ளை ஆகியவற்றை நாம் தமிழர் இளைஞர் பாசறை உறுதியாக எதிர்த்து போராட உறுதியேற்கிறது. மத்திய, மாநில அரசுகள் மேற்படி கொள்ளைகளை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் தமிழர் இளைஞர் பாசறை வலியுறுத்துகிறது.

4. மக்கள் பிரச்சனைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும், காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிராகவும் போராடும் தமிழக கல்லூரி மாணவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை நாம் தமிழர் இளைஞர் பாசறை உறுதியாக எதிர்த்து போராடும். கல்லூரி நிர்வாகிகள் உடனடியாக மேற்படி நடவடிக்கைகளை நிறுத்திகொள்ளவும், மாணவர்கள் மீது எடுக்கபட்ட நடவடிக்கைகளை கைவிடவும் நாம் தமிழர் இளைஞர் பாசறை வலியுறுத்துகிறது.