Samanthaஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியான சமந்தா பவர் (Samantha Power )அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

 

ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கே இவர் சிறிலங்கா வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இவரது பயணத்தில் சிங்கள தலைவர்களை சந்திப்பது மட்டுமல்ல தமிழ் தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

அது சரி யார் இந்த Samantha Power ? இதில் என்ன இருக்கிறது? என்று நீங்கள் யோசிக்கலாம்.

 

நமது விருப்பு வெறுப்புக்களுக்கும் அப்பால் இந்த உலக ஒழுங்கை தீர்மானிப்பது அமெரிக்காவின் நகர்வுகள்தான்.

 

எம்மை அழிக்க வேண்டும் என்று ஒரு நீண்டநோக்கில் ஒரு நிகழ்ச்சி நிரலை கொண்டு நடத்தியதும் இதே அமெரிக்காதான்.

 

இப்போது நடந்த இன அழிப்புக்கு நீதி கேட்டு நாம் போராடுவதும் அனைத்துலக சமூகம் என்று சொல்லப்படுகிற – ஐநா சபையின் அதிகாரங்களை நிழல் நடவடிக்கைகளினூடாக கட்டுப்படுத்தும்- இதே அமெரிக்காவிடம்தான்.

 

எனவே ஐநாவுக்கான அமெரிக்க நிரந்தர வதிவிடப் பிரதிநிதி என்ற பதவியை யார் வகிக்கிறார்கள் என்பது நடந்த இன அழிப்புக்கு நீதி கேட்கும் எம்மை பொருத்தவரையில் மிக முக்கியமானது.

 

ஒரு அரசின் முடிவென்பது ஒரு கூட்டு முடிவு. பெரும்பாலும் தனித்து யாரும் முடிவெடுப்பதில்லை. அமெரிக்க அரசு மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல.

 

ஆனால் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக அந்த அரசிற்குள்ளேயிருந்து விமாச்சித்து வந்த ஒருவர் சமந்தா பவர்.

 

அமெரிக்கா தனது நரித்தனங்களை விட்டு பின்வாங்கிய அல்லது தலையிடாமல் ஒதுங்கிய பல நிகழ்வுகளின் பின்னணியில் சமந்தா பவர் இருந்தார் என்பதுதான் இங்கு முக்கியமானது.

 

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறிப்பாக இனப்படுகொலை குறித்து கடும் விமர்சனம் செய்பவர் மட்டுமல்ல அமெரிக்காவையே இந்த விடயத்தில் திட்டி அவர் எழுதிய நூல் இன்றளவும் பரபரப்பாகவே உள்ளது.

 

குறிப்பாக மே 18 இற்கு பிறகு அமெரிக்கா எமக்கு சார்பாக ஏதாவது ஒரு கருத்தை சொல்லியிருந்தால் அதன் பின்னணியில் சமந்தாபவர் இருந்தார் என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டியது.

 

சிறீலங்கா அரசிடம் முதன் முதலில் ‘பொறுப்பு கூறல்” என்ற விடயத்தை பகிரங்கமாக பேசியது இவர்தான்.

 

சமந்தா பவரை ஐநாவக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக அமெரிக்கா அறிவித்தபோது அமெரிக்காவின் Foreign policy இல் ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருப்பதாகவே அனைத்துலக ஊடகங்கள் அப்போது வர்ணித்திருந்தன.

 

இனப்படுகொலை குறித்த புரிதலுள்ள ஒருவர் ஐநா தூதராகியிருப்பதை ஒரு நம்பிக்கை புள்ளியாக எடுத்து கொள்ளவேண்டும் என்று நாமும் அப்போது எழுதியிருந்தோம்.

 

ஆனால் ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் எமக்கு உவப்பானதாக இருக்கவில்லை.

 

ஆனால் சிறிலங்காவுக்கு “எதிரான” ஜெனிவா தீர்மானங்களில் இவர் கணிசமான பங்களிப்பை செய்தவர் என்றும் ஓரளவிற்காவது அந்த தீர்மானம் நீர்த்துபோகாமல் இருக்க காரணமாய் இருந்தவர் என்றும் ஜெனிவா இராஜதந்திரவட்டாரங்களில் பேசப்படுகிறது.

 

சிங்கள இராஜதந்திரிகளான தயான்ஜயதிலக மற்றும் ஜிஎல் பீரிஸ் போன்றவர்கள் அமெரிக்க தீர்மானத்தில் ஒன்றுமில்லாதபோதும் அதை எதிர்ப்பதற்கு காரணம் சமந்தா பவர் இதில் முக்கிய பங்களிப்பாளராக இருப்பதே.

 

ஏனென்றால் போரில் பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைகள் மற்றும் பாலியல் வல்லுறவு குற்றங்களை இனஅழிப்பு நோக்கங்களுககாக செய்யப்படுகின்றன என்று வாதிடுபவர் சமந்தா பவர். A problem from hell : America and the age of genocide என்ற தனது நூலில் மட்டுமல்ல பல கருத்தரங்குகளில் ஆய்வுகளில் பேசியவர் – எழுதியவர் சமந்த பவர்.

 

இதெல்லாம் இவர் ஐநா வதிவிடப்பிரதிநியாக பதவியேற்பதறகு முந்தைய கதைகள். தற்போது அமெரிககாவின் உலகளாவிய நிகழ்ச்சி நிரலை காவும், அதை நிறுவ உழைக்கும் ஒரு பதவியில் அமர்ந்திருக்கிறார்.

 

இனியும் அவரது சுய அடையாளம் பேணப்படுமா? தனது கல்வி மற்றும் வாழ்வியல் பின்புலத்தில் நின்று அறம் சார்ந்து சிந்திப்பாரா? என்ற ஐயம் எமக்கு எழுந்தாலும் சமந்தா பவர் போன்ற இனஅழிப்பு தொடர்பான புரிதல் உள்ள ஒருவரை நாம் அவரது புவிசார் அரசியல் நலன் தாண்டியும் சிந்திக்க தூண்ட வேண்டும். அவரது அறத்தை கேள்விக்குட்படுத்த வேண்டும். அதனுடாக எமது தேவைகளை நிறைவேற்ற முற்பட வேண்டும்.

 

இதில் தங்கியுள்ளது தமிழ் சாணக்கியம்.

 

ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் அறிக்கையில் இறுதிப்போரில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

அத்தோடு இறுதிப்போரில் பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைகள் குறிப்பாக பாலியல் வல்லுறுவு குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதாக அந்த அறிக்கை ஆதாரங்களுடன் பதிவு செய்கிறது.

 

இந்த பாலியல் வல்லுறுவுக்குற்றங்கள் இனஅழிப்பு நோக்கில் நடத்தப்பட்டவை என்பதை நாம் நிருப்பிப்போமாயின் சிங்கள அரசு இனஅழிப்பு குற்றவாளியாக அம்பலப்படும்.

 

இங்கேதான் சமந்தா பவரின் வருகை முக்கியமாகிறது. அவர் அமெரிக்காவின் அடியாளாக வருகை தருகின்ற போதும் ‘போரில் நடக்கும் பாலியல் வல்லுறவுக்குற்றங்கள் இனஅழிப்பு நோக்கில் நடநத்தப்படுபவை’ என்ற அவரது கோட்பாட்டை – தத்துவத்தை முன்வைத்து நாம் இப்போது அவருக்கு ஒரு ‘செக்’ வைக்க முடியும்.

 

ஐநா மனித உரிமையாளரின் அறிக்கையில் பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்ட பின்னரும், ” அமெரிக்க தீர்மானம் ஏன் நீர்த்துபோச்செய்யப்பட்டது? என்பது தொடக்கம் பாலியல் வல்லுறவுக்குற்றங்கள் நிருபிக்கப்ட்ட பின்ரும் இனஅழிப்பு என்ற சொல்லாடல் ஏன் தீர்மானத்தில் சேர்க்கபப்டவில்லை?” எனபது வரை நாம் அவரை கேள்விக்குட்படுத்த வேண்டும்.

 

இவை தமிழர் தரப்பிற்கும் அவருக்குமான முரண்பாடுகளாக அல்லாமல் இனஅழிப்பு தொடர்பான புரிதல் உள்ள ஒருவருக்கும் அதற்கு தினமும் பலியாகிக்கொண்டிருக்கும் ஒரு இனத்தின் அறத்தின் குரலாகவும் பதிவு செய்யப்பட வேண்டும்.

 

பாலியல் வல்லுறவுக்குற்றங்கள் குறித்து பேசும் ஐநா மனித உரிமை பேரவை அறிக்கையும், அது குறித்த புரிதலுள்ள மிகப்பெரிய அதிகாரத்தில் அமாந்திருக்கும் சமந்தாபவரும், பாலியல் வல்லுறவுக்குற்றங்குளளாகி நீதியை தேடிநிற்கும் தமிழீழ பெண்களும் சந்திக்கும் மிக முக்கியமான புளளி இது.

 

இந்த புள்ளியிலிருந்துதான் எமது நீதிக்கான பயணத்தை வரையறுத்துக்கொள்ள்ள முடியும்.

 

தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களும் சமந்தா பவரை கையாள்வதைப்பொருத்தே இதன் அடுத்த கட்டம் தங்கியுள்ளது.

 

நன்றி பரணி கிருஸ்ணரஜனி