சர்வதேச ஆசிரியர் தினத்தை ஒட்டி ஆசிரியர்களின் உரிமைகளையும், படையினர் ஆக்கிரமித்துள்ள பாடசாலைகள் மற்றும் கல்விக்கூடங்களை விடுவிக்ககோரி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் இன்றைய தினம் (06.10.2014) யாழ்.நகரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற குறித்த போராட்டத்தில் தெற்கிலிருந்து சிங்கள ஆசிரியர்கள் மற்றும் வடக்கிலிருந்து தமிழ் ஆசிரியர்கள், பாடசாலை அதிபர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததுடன், அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.

jaffna-2014-2
மேலும் குறித்த போராட்டத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பினர் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, சுற்றறிக்கையை தமிழில் வெளியிடு, பாடசாலைகளில் படையினரின் தலையீட்டை உடன் நிறுத்து, படையினர் ஆக்கிரமித்திருக்கும் பலாலி ஆசிரியர் கலாசாலையை உடன் வழங்கு, என்பன போன்ற கோஷங்களை பதாகைகளாகவும், கோஷங்களாகவும் எழுப்பிக் கொண்டு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது படையினரால் ஏவிவிடப்பட்ட கும்பல் ஒன்று மேற்படி போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு முன்பாக, திடீரென கூடி சர்வதேச தொண்டு நிறுவனங்களிடமிருந்து டொலர்களில் பணத்தைப் பெற்று கூச்சலிடும் தொழிற்சங்கத் தலைவர்கள் என்ற பாதகைகளுடன் கோஷங்களை எழுப்பினர்.

jaffna-2014-6
இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் அவர்களை புகைப்படம் எடுத்தனர். பின்னர் எதற்காக இவ்வாறு போராட்டம் நடத்துகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் கேட்டபோது, ஆசிரியர்களுக்குச் சார்பாகவே நடத்துகின்றோம் என அவர்கள் கூறினர். அப்படியானால் நீங்கள் வைத்திருக்கும் பதாகையில் என்ன எழுதியிருக்கின்றது? என தெரியுமா?எனக்கேட்டதன் பின்னர் அவர்கள் தங்கள் பதாகைகளை திருப்பி பார்த்துவிட்டு அவற்றை தூக்கி வீசிவட்டு அங்கிருந்து சென்றதுடன், சில ஆசிரியர்களும், படையினருமே தமக்கு அந்த பதாகைகளை தந்ததாகவும், ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகின்றார்கள் அவர்களுக்கு சார்பாக அவர்களுடைய போராட்டத்திற்கு முன்பாக இதனை பிடித்துக் கொண்டிருந்தால் போதும் என அவர்கள் தமக்கு கூறியமையினாலேயே தாம் வந்ததாகவும் அவர்கள் கூறியதுடன், அங்கிருந்து உடனடியாகவே சென்றுவிட்டனர்.