ltte-nomination-130715-380-seithyஇனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையினை ஜநா முன்னெடுக்குமானால் விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களிற்கு பதிலளிக்க தாம் விசாரணைக்கு முகம் கொடுக்க தயாராக இருப்பதாக ஜனநாயகப்போராளிகள் அமைப்பு அறிவித்துள்ளது.

 

யாழ்ப்பாணத்தினில் இன்று இடம்பெற்ற அவ்வமைப்பின் பத்திரிகையாளர் மாநாட்டினில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அதன் ஊடகப்பிரிவினர் இனப்படுகொலைக்கான  விசாரணை அறிக்கையினில் விடுதலைப்புலிகள் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பதாக கசிந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கொள்ளப்படும் விசாரணை சர்வதேச விசாரணையானால் நாம் அதற்கு முன்னிலையாகி விளக்கமளிக்க தயாராக உள்ளோம். ஏற்கனவே நாம் அனைவரும் நீதிமன்றினில் முன்னிலையாகி புனர்வாழ்வு,தண்டனையென அனைத்தையும் அனுபவித்தே வெளியே வந்திருக்கின்றோம்.இந்நிலையினில் எம்மை மீண்டும் தண்டிக்க முடியாதெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

இதனிடையெ அமைதி வழி முயற்சிகள் தோற்றால் போராட்டத்தை மென்முறை வழியில் அதிர்வுடன் தொடருவோம் என்று தெரிவித்துள்ளது ஜனநாயகப் போராளிகள் கட்சி. ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

 

அந்த விஞ்ஞாபனத்தின் முழு விவரம் வருமாறு:-

 

இலங்கைத் தீவில் தமிழ்பேசும் மக்களின் தேசிய உரிமைகளுக்கான 67 ஆண்டு கால போராட்ட படிநிலை வரலாற்றில் புதிய தளமாக 2015 நாடாளுமன்றத் தேர்தல் இப்போது கட்டவிழ்கின்றது. மூன்று தசாப்த கால அறவழிப் போராட்டங்களைத் தொடர்ந்து, மேலும் மூன்று தசாப்த காலம் முழுத் தீவையுமே உருட்டிப் போட்ட மறவழிப் போராட்டம், அதே ஆயுதமுனையில் மௌனிக்கச் செய்யப்பட்ட பின்னர் புதியதும், விசித்திரமானதுமான புறநிலைச் சூழலுக்குள் தமிழர்களின் அரசியல் செல்நெறி தள்ளப்பட்டிருக்கின்றது.

 

மறவழிப் போராட்டத்தில் கர்மவீரர்களாகக் களமிறங்கி, வார்த்தைகளில் அடக்கிவிட முடியாத அளப்பரிய அர்ப்பணிப்புக்களையும், நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத தியாகங்களையும், ஈண்டு குறிப்பிடவேண்டிய ஈகங்களையும் புரிந்தனர் தமிழீழ விடுதலைப் புலிகள்.

 

அந்தக் குழுமத்திலே புடமிடப்பட்ட போராளிகளான நாங்கள் ஆயுதங்கள் மௌனிக்கப்படும் சூழலின் பின்னர் தடுப்புக்குள் சிக்கி, முகாம்களுக்குள் முடக்கப்பட்டு, வெஞ்சிறைகளில் வாடி, புனர்வாழ்வின் பெயரால் வெளிப்பட்டு, இன்று ஜனநாயகப் போராளிகளாக உங்கள் முன்வந்து நிற்கின்றோம். கொடூர யுத்தத்துக்கு மத்தியிலும் – பெரும் நெருக்குவாரங்களுக்கு இடையிலும் – நம் தமிழர் தாயகத்தில் நமது மக்களுக்கென ஒரு சமாந்தரமான நடைமுறை அரசை செவ்வனே நடத்திக் காட்டிய போராளிகளான நாங்கள் – உலக வரைபடத்திலே நம் தமிழர் தாயகத்துக்கும் பொதுவாகவே உலகத் தமிழர்களின் இருப்புக்கும் ஒருங்கே சிறப்பையும், அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்து அதற்காகத் தம்மையே ஈந்த கர்மவீரர்களின் வழியில் அவர்களுடன் ஒன்றித்துப் பயணித்த நாங்கள் – தற்போது பிறந்துள்ள ஜனநாயகச் சூழலில், நமது தமிழ் மக்கள் தங்களின் அபிலாஷைகளை – வேணவாவை – விருப்பை – ஈட்டுவதற்கான தேசிய அரசியல் பாதையில் அவர்களை வழிநடத்திச் செல்வதற்கான தகைமையும், விருப்பும் உள்ளவர்கள் என்ற அவாவுடன் இந்தப் பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்காக உங்கள் முன்வந்திருக்கிறோம்.

 

நீண்ட கால அடக்குமுறை வரலாற்றுக்குள் சிக்கியிருக்கும் சிறுபான்மை இனத்த வர்களான நாங்கள், இன்று அரசியல், பொருளாதார, சமூக, வாழ்வியல், பண்பாட்டு ரீதியாகவும், கொடூர சட்ட அடக்குமுறை மூலமும் எதிர்கொண்டிருக்கும் பெரும் அரசியல் சவால்களை முறியடித்து மீள்வதற்கு அடம்பன் கொடி போல திரண்டிருப்பதே ஒரே உபாயம் என்பதை முழுமையாக உணர்ந்து ஏற்கின்றோம். ஆனால் எங்கள் தலைமையால் உருவாக்கப்பட்டிருந்த ஐக்கிய அரசியல் கட்டமைப்பு, எங்கள் மக்களுக்காக உயிரும், உதிரமும் கொடுத்துப் போராடிய போராளிகளான எங்களையே இந்த அரசியல் கட்டமைப்புக்குள் நுழையவிடாது நெட்டித் தள்ளும் கபடத்தனப் போக்கில் செயற்படுவதால், வேறு மார்க்கமின்றி, இந்தத் தேர்தலில் சுயேச்சைக் குழுவாக – சிலந்திச் சின்னத்தில் – களமிறங்கியிருக்கின்றோம். இலங்கைத் தமிழர்கள் செறிந்து வாழும் வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை தேர்தல் மாவட்டங்களிலும் ஜனநாயகப் போராளிகளான எங்களுக்கு அதீத வரவேற்பும், அமோக ஆதரவும் இருந்த போதிலும், இன்றைய நிலையில் அந்த மாவட்டங்களில் தமிழர்களின் வாக்குகளை சிதற விடுவது தேசிய ரீதியில் தமிழர்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பாதித்துவிடும் என்ற பொறுப்புணர்வு கருதி அதனைத் தவிர்த்துக் கொள்ளத் தீர்மானித்தோம். இதுவரை போர்க்களத்தில் ஆயுதச் சமராடிய புலிகளாகிய நாங்கள் இப்போது முதல் தடவையாக, நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, யாழ்ப்பாண மாவட்டத் தேர்தல் களத்தில் கர்மவீரர்களாக – அஹிம்சைப் போராளிகளாக – களமிறங்கியிருக்கிறோம்.

 

இந்தப் பொதுத்தேர்தலின் பின்னர் உடனடியாக எமது கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டைக் கூட்டி எமது கட்சியின் நிர்வாக விடயங்களுக்கான அலுவல்களைத் தேர்ந் தெடுப்பதுடன் கட்சியின் கொள்கை விளக்க பிரகடனத்தையும் நீண்டகால இலக்கு பற்றிய அறிக்கையையும் விடுப்போம். எங்கள் பொதுத் தேர்தல் அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் மகிழ்வடைகிறோம்.

 

தோற்றம் 1948ஆம் ஆண்டு முதல் மென்முறை வழியில் முன்னெடுக்கப்பட்ட இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைக்கான போராட்டம், அந்த வழிமுறை வெற்றி பெற்றிராத சூழலில் – 1970களில் – வன்முறைப் போராட்டமாக வடிவ மாற்றம் பெற்றது. வன்முறை வடிவப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்த தமிழீழ விடு தலைப் புலிகள் இயக்கம் 2009ஆம் ஆண்டில் செயலிழக்கச் செய்யப்பட்டது. மீளவும் – முற்றிலும் மாறுபட்ட புதிய சூழலில் தொடரப்படுகின்ற மென்முறைப் போராட்டத்தில் – செயலிழந்து போன தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளாகிய நாம் பங்கேற்கிறோம். ஒரு காத்திரமான – இன்றியமையாத – பங்களிப்பை நாம் வழங்கவேண்டிய தேவை இன்றைய சூழலில் இருப்பதாக நாம் உணர்ந்ததாலேயே நாம் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்திருக்கின்றோம். தீர்வின் அடிப்படை: ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்பிற்குள் தமது சமூக, பண்பாட்டு, பொருளாதார, நிர்வாக மற்றும் அரசியல் விவகாரங்களைத் தாமே ஆளுகை செய்யும் அதிகாரங்கள் தமிழ் பேசும் மக்களுக்கு உரித்தாக்கப்பட வேண்டும் என்பதுவே ஜனநாயகப் போராளிகள் கட்சியின் இலக்கு. இந்த அதிகாரங்கள் அனைத்துமே – தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப் படையிலும், தமது ஒன்றுபட்ட பாரம்பரிய தாயகப் பிரதேசத்தில் தமிழர்களுக்குச் சுய நிர்ணய உரிமை உண்டு என்பதன் அடிப்படையிலுமே அங்கீகரிக்கப்படவேண்டும். தமிழ்த் தேசிய இனத்தின் சுய ஆளுகைப் பிரச்சினைக்குத் தீர்வாக – இலங்கை நாட் டின் பிரிவினையை ஒரு முடிந்த முடிவாக ஜனநாயகப் போராளிகள் கட்சி வலியுறுத்த வில்லை. ஒஸ்லோ ஆவணம்: தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக சுயாட்சி அலகுகளுடன் கூடிய ஒரு கட்டமைப்பைக் கண்டறிவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் சிறீலங்கா அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் அத்தகைய ஒரு பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சி வலியுறுத்துகின்றது.

 

திம்பு பிரகடனம்:

 

அவ்வாறு உருவாக்கப்படும் சுயாட்சிப் பொறிமுறையானது – 1985ஆம் ஆண்டின் திம்பு தீர்மானங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள அங்கீகாரங்களைத் தமிழ் பேசும் மக்களுக்கு வழங்குவதாக அமைய வேண்டும்.

 

அவையாவன:-

● தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசிய இனம்.

● இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகம்.

● தமது அரசியற் தலைவிதியைத் தீர்மானிக்கும் சுயநிர்ணய உரிமை இலங்கைத் தமிழ் மக்களுக்கு உண்டு.

 

வழிமுறை: எமது கோரிக்கைகளை அடைவதற்கான அமைதி வழி முயற்சிகள் அனைத் தும் தோல்வியுறும் பட்சத்தில் – இலங்கை அரசாங்கத்தைப் பணிந்து இறங்கி வரவைப்பதற்கான தாக்கம் மிகுந்த மென்முறைப் போராட்டங்களை – பிற உயிர் களுக்கும்; பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், சுயத்தை வருத்தி, ஈகம் செய்து, அதன்மூலம் ஆட்சித் தரப்பை அடிபணிய வைக்கும் சாத்வீக போராட்டத்தை – ஜனநாயகப் போராளிகள் கட்சி முழு முனைப்புடனும் பற்றுறுதியுடனும் முன்னெடுக்கும். சிங்களம் பேசும் மக்கள்: தமக்கே உரித்தான வாழ்விடங்களில், தமது பண்பாட்டு இயல்புகளைப் பேணிக் காத்தபடி, தன்னிறைவான ஒரு பொருளாதாரக் கட்டமைப்புடன், தமது மத விழுமியங் களைப் பின்பற்றியபடி, இவை எல்லாவற்றிற்குமான ஒரு பாதுகாப்புப் பொறிமுறையு டன் சிங்களம் பேசும் மக்கள் வாழ்வதை ஜனநாயகப் போராளிகள் கட்சி மதிப்பதுடன், அவ்வாறு வாழ்வதற்கு அவர்களுக்கு இருக்கும் உரிமையையும் அது பாதுகாக்கும்.

 

அதே வேளையில் – அதே உரிமைகள் நியாயமான முறையில் தமிழ் பேசும் மக்களுக்கும் வழங்கப்படுகின்றமையை வலியுறுத்துவதோடு தமிழ் பேசும் மக்களுக்கும் சிங்களம் பேசும் மக்களுக்கும் இடையில் உருவாகியிருக்கும் உறவுநிலை வெற்றிடத்தை ஜனநாயக வழிமுறைகளில் நிரப்பி – இந்த தீவில் இன நல்லிணக்கம் உருவாக ஜனநாயகப் போராளிகள் கட்சி பாடுபடும். மலையகத் தமிழர் மற்றும் முஸ்லிம்கள்: சக தமிழ் பேசும் இனக்குழுமங்களான மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு தத்தமது தனித்துவ சமூக அடையாளங்களையும் வழக்காறுகளையும் பேணிக் காத்து கௌரவமாக வாழ்வதற்கு இருக்கும் உரிமையை ஜனநாயகப் போராளிகள் கட்சி அங்கீ கரிக்கின்றது.

 

இலங்கைத் தீவில் வாழும் ஒட்டுமொத்தமான தமிழ்பேசும் மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் நலன்களைப் பாதுகாக்கின்ற பணிகளில் மலையக மற்றும் முஸ்லிம் மக்களுடனும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தரப்புகளுடனும் ஏனைய சமூக செயற்பாட்டாளர்களுடனும் சேவையாற்ற ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆவலாக உள்ளது. புகலிடத் தமிழர்கள்: எமது தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்றாலும் புகலிடத் தமிழர்கள் நமது பிரிக்கமுடியாத அம்சம். தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாஷை என்பது புகலிடத் தமிழர்களின் கருத்தியலையும் முற்றாக உள்வாங்கியே அமையவேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சி கருதுகின்றது.

 

எமது தாயகத்தில் வாழும் மக்களின் சமூக, பொருளாதார வாழ்வின் மேம்பாட்டில் ஆக்கபூர்வமான வழியில் பங்களிப்பதற்கு புகலிடத் தமிழர்களுக்கு உள்ள கடப்பாட்டை வலியுறுத்தும் அதேசமயம், தமிழ்த்தேசிய இனத்தின் அரசியல் உரிமைக்கான பயணத்தில் அவர்களுக்கு உள்ள உரித்தையும் ஜனநாயகப் போராளிகள் கட்சி மதிக்கின்றது. இந்தியா: இலங்கை அமைந்திருக்கும் தென்னாசியப் பிராந்தியத்தின் பெரும் நாடு என்ற வகையிலும் – உலகின் இரண்டாவது அதிக பெரும் எண்ணிக்கையிலான சனத்தொகை யைக் கொண்ட நாடு என்ற வகையிலும் – இந்தியாவின் நலன்களுக்கு ஜனநாயகப் போராளிகள் முக்கியத்துவம் கொடுப்பதுடன் எமது மக்களின் சுபீட்சத்திற்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தனது நலன்களைப் பாதுகாத்துக்கொள்;ள இந்தியாவுக்கு இருக் கும் உரிமையையும் ஜனநாயகப் போராளிகள் கட்சி மதிக்கின்றது.

 

அமெரிக்கா:

 

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளும் ஜனநாயகப் போராளிகள் கட்சி, உலகின் அதி பெரிய பொருளா தாரத்தைக் கொண்டதும், ஆகக் கூடிய அரசியற் செல்வாக்கு ஆதிக்கத்தைக் கொண்ட நாடுமான அமெரிக்காவிற்கு தென்னாசிய – இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இருக்கும் நலன்களை மதிக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சி, அந்த நலன்களைப் பாதுகாக்க முன்னெடுக்கப்படும் முயற்சிகள் எமது மக்களின் நலன்களைப் பாதிப்பவையாக இருக்கக்கூடாது என்பதனையும் வலியுறுத்துகின்றது.

 

சுய பொருளாதார ஏற்பாடு:

 

வெளியாரில் தங்கி இராமல் முடிந்த அளவுக்குத் தம்மைத் தாமே தாங்கி நிற்கத் தக்க சுய பொருளாதார கட்டமைப்பு ஒன்றை எமது மக்களுக்கு ஏற்படுத்த ஜனநாயகப் போராளிகள் கட்சி முயற்சிக்கும். இலங்கை அரச நிர்வாகக் கட்டமைப்புகள், வெளிநாட்டு நிதி வழங்கல் நிறுவனங்களின் உதவிகள், நிபுணர்களின் அறிவுக் கொடைகளுடன் இந்த முயற்சிகளை ஜனநாயகப் போராளிகள் கட்சி முன்னெடுக்கும்.

 

ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள்:

 

2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆசனங்களை வென்று மக்களின் ஜனநாயக அங்கீகாரத்தைப் பெற்றதன் பின்னர் – தனது அடிப்படைக் கொள்கையுடன் ஒத்ததாக இருக்கின்ற கோட்பாடுகளைக் கொண்டிருக்கும் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றும் வழிமுறைகளை ஜனநாயகப் போராளிகள் கட்சி கண்டறியும்.

 

சமூகப் பிரச்சினைகள்:

 

தமிழ் தேசிய அரசியற் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விவகாரத்தில் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளோடு இணைந்து பணியாற்றுகின்ற அதே வேளையில் – எமது சமூகம் எதிர்கொள்ளும் உள்ளீடான சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காணும் விவகாரங்களில் எமது கட்சி தனித்தும் இயங்கும். பின்வரும் விடயங்களை முதன்மையான சமூகப் பிரச்சினைகளாக எமது கட்சி அடையாளம் காண்கின்றது.

 

● பெண்கள் மீதான பாகுபாடு மற்றும் வன்முறை, பாலியல் சீர்கேடுகள்

● சிறுவர்கள் மீதான அத்துமீறல்கள்

● குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை

● போதைப் பொருள் பாவனை

 

உடனடிக் கவனம்:

 

அரசியற் கைதிகளை விடுதலை செய்தல், காணாமற் போனோரைக் கண்டறிதல், இன்னமும் விடுவிக்கப்படாமல் அரச படைகள் வசமிருக்கும் தமிழ்மக்களின் நிலங்களை விடுவித்தல், இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் மற்றும் போரினால் இயல்பு வாழ்க்கையை இழந்தவர்கள், அநாதைகளானோர், விதவைகளாக்கப்பட்டோர், அங்கவீனமானவர்கள் மற்றும் முன்னாள் போராளிகள், முதியவர்களின் புனர்வாழ்வு, வறுமை ஒழிப்பு ஆகிய விடயங்களே உடனடியாகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய கருமங்களாக எமது கட்சி கருதுகின்றது.

 

நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு அடிப்படையாக முதலில் உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிக்கொணரப்படவேண்டும் என நாம் கருதுகிறோம். இந்தப் பின்புலத்தில் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அரங்கேறிய இனவழிப்புப் படுகொலை அவலங்கள் பற்றிய விடயங்கள் நீதியான – பக்கச்சார்பற்ற – சுயாதீனமான – பொறிமுறை மூலம் கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் செயற்பாடு முழு அளவில் நடைமுறைப்படுத்தப்படு வதை எமது கட்சி வலியுறுத்துகின்றது. மகளிர் மேம்பாடு, கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய துறைகள் சுய பொருளாதார அபிவிருத்தியின் இலக்குகளோடு சேர்ந்து உயர்த்தப்படவேண்டும். யாழ் தேர்தல் மாவட்டத்திற்கு வெளியே: தமிழர்களின் வாக்குகளைச் சிதறடித்து, தமிழர் பிரதிநிதித்துவத்தைப் பாதித்து விடக் கூடாது என்ற காரணத்தினால் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் போட்டியிடுவதைத் தவிர்க்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சி, ஏனைய மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களைச் சிந்தனைத் தெளிவுடன் வாக்களிக்குமாறு கோருகின்றது.

 

அதன் பிரகாரம் –

● இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசிய இனம்

● இலங்கையின் வடக்கு-கிழக்கு நிலம் தமிழர்களது தாயக தேசம்

● இலங்கைத் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு ஆகிய கோட்பாடுகளைத் தமது அடிப்படை அரசியல் நிலைப்பாடுகளாகக் கொண்டுள்ள தமிழ் தேசியத் தரப்பை அடையாளம் கண்டு, ஆதரவளிக்குமாறு – வன்னி, திரு கோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை தேர்தல் மாவட்டங்களில் வாழும் மக்களை ஜனநாயகப் போராளிகள் கட்சி கேட்டுக் கொள்கின்றது.