santhan-mumராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ள ஒருவரான சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி தனது மகனை கடந்த 25 ஆண்டுகளாகப் பார்க்கவில்லை என்றும், அவரை உடனடியாக பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் .

தமது மகனின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வாதிட்ட நீதிபதிகளுக்கும், விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த செங்கொடிக்கும் ஏனைய அனைத்து சொந்தங்களுக்கும் தங்கள் உள்ளத்தால் நன்றியையும் குடும்பத்தின் சார்பாக தெரிவித்துள்ளார்.

இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மரண தண்டனையிலிருந்து விடுபட்ட சாந்தனை தான் கடந்த 25 ஆண்டுகளாகத் தொலைக்காட்சியில் காட்டப்படும் அவரது புகைப்படத்தை மட்டுமே தான் பார்த்து வருவதாகவும் அவர் கூறினார்.

யாழ் மாவட்டம் உடுப்பிட்டியில் தற்போது தனது ஏனைய பிள்ளைகளுடன் வசித்துவரும் மகேஸ்வரி அம்மையார், சாந்தன் தனது பள்ளிப் படிப்பை முடித்தபிறகு தந்தையுடன் ஆலோசித்து வெளிநாடு செல்ல முயன்றார் என தெரிவித்தார். தனது கணவர் கடந்த ஆண்டு இறந்துவிட்டதால், சாந்தன் என்ன காரணத்திற்காக தமிழ்நாட்டுக்குச் சென்றார் என்பது குறித்த முழு தகவல்களும் அவருக்கு மட்டுமே தெரியும் என்றும் அவர் கூறினார்.

மரணத்தில் தனது மகனும் தொடர்பு பட்டிருந்தார் எனும் தகவல் தனக்கு திடீரென்று தெரியவந்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது என்றும் கூறினார்.

கடந்த 25 ஆண்டுகளாக தனது மகனை நினைத்து பிரார்த்தனைகள் மற்றும் உபவாசங்களை கடைபிடித்து ஆலயங்களுக்கு செல்வதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இறைவனின் அருளால் மட்டுமே தனது மகனுக்கு சிறையிலிருந்து விடுதலை கிடைக்க வழி ஏற்படுமென தான் தொடர்ந்து நம்பி வந்ததாகவும் கூறினார் தில்லையம்பலம் மகேஸ்வரி.

பொருளாதார நெருக்கடி காரணமாக தங்களால் இந்தியா சென்று சாந்தனை பாக்கக் கூடிய முடியவில்லை என்றும், சிறையில் இருபது வருடங்களுக்கும் மேலாக இருக்கும் அவருடன் கடிதத் தொடர்புகூட தமக்கோ, தமது குடும்ப உறுப்பினர்களுக்கோ இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தான் அறிந்தவரை சாந்தனுக்கு விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு இருந்ததாகத் தெரியவில்லை என்று கூறிய அவர், கடந்த 25 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் உட்பட எவரும் தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் கூறினார்.

அதேபோல் இந்த வழக்கில் மரணதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டிருக்கும் மற்றொரு ஈழத் தமிழரான முருகன் குடும்பத்தாருடன் தமக்கோ தனது குடும்ப உறுப்பினர்களுக்கோ எவ்விதத் தொடர்புகளும் இல்லை எனவும் தில்லையம்பலம் மகேஸ்வரி அம்மையார் தெரிவித்தார்.

வாழ்வில் தனக்கு இருக்கும் ஒரே ஆசை தனது மகன் சாந்தனை நேரில் சந்திக்க வேண்டும் என்பது மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.

-நன்றி செண்பகம்