சாந்தன், ஈழத் தமிழ் மக்களின் குரல், ஈழத் தமிழர்களின் எழுச்சியை, புரட்சியை, நம்பிக்கையை, வீழ்ச்சியை, வாழ்க்கை பாடிய பெருங் குரல், முப்பதாண்டு கால போராட்டத்துடன் கலந்த குரல்.

 

எஸ்.ஜி. சாந்தன் என்று அழைக்கப்படும் குணரத்தினம் சாந்தலிங்கம் 1960ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதி பிறந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மைப் பாடகராக இருந்த சாந்தன் 1995வரையான காலத்தில் யாழ்ப்பாணத்தின் நட்சத்திரப் பாடகராக விளங்கியவர்.

 

இசைத்துறையுடன் நாடகத் துறையிலும் ஈடுபாடு கொண்ட சாந்தன் அரிச்சந்திர மயான காண்டம் என்ற நாடகத்தில் நடித்து நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர். 1972இல் கொழும்பில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று அங்கு மருதமாலை மாமணியே என்ற பாடலைப் பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துக் கொண்டார்.

 

அக்கால கட்டத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிறுவர் நிகழ்ச்சியில் பாடல்களைப் பாடியதுடன் நாடகங்களிலும் நடித்தார். 1977இல் கிளிநொச்சிக்கு குடிவந்த சாந்தன் 1981 முதல் இசைவாணர் கண்ணனின் இசைக் குழுவில் இணைந்து பாடல்களைப் பாடினார்.

 

அதற்குப் பிந்தைய கால கட்டத்தில் இந்த மண் எங்களின் சொந்த மண் என்ற பாடலுடன் ஈழப் புரட்சிப் பாடல்களைப் பாடினார். பல நூற்றுக் கணக்கான விடுதலைப் பாடல்களை பாடிய சாந்தன் ஈழத்தின் முதன்மைப் பாடகராகவும் உலகத் தமிழ் மக்களிடத்தில் பிரபலமானார்.

 

தன் நெருப்புக் குரலால் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு புரட்சியை ஊட்டிய சாந்தனின் பாடல்கள் காலத்தால் அழியாதவை. இப்பூமி உள்ளவரை, தமிழர்கள் உள்ளவரை, விடுதலைக்கான தமிழ் மக்களின் தாகம் உள்ளவரை சாந்தனின் பாடல்கள் எங்களுக்குள் ஒலித்தபடி இருக்கும்.

 

சாந்தன் அண்ணாவின் உயிர் உடலை விட்டு பிரிந்திருக்கலாம். ஆனால் விடுதலைக்கு அனலூட்டும் அவருடைய பாடல்கள் எங்களோடு எப்போதும் இருக்கும். அவரது குரலுக்கு மரணமில்லை. சாந்தனுக்கு மரணமில்லை. விடுதலையை விரும்பும் எங்கள் மக்களின் மனங்களில் சாந்தனின் குரல் என்றைக்கும் ஒலித்துக் கொண்டிருக்கும்.

 

இந்நிகழ்வில் ஈழத்தின் மூத்த இசையமைப்பாளர் இசைவாணர் கண்ணன், பாராளுமன்ற பிரதிக்குழுக்களின் தவிசாளர் செல்வம் அடைக்கலநாதன், கண்டி மாவட்ட எம்.பி வேலு குமார், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முக்கியஸ்தர் பாஸ்கரா, வன்னி மாவட்ட எம்பி சாள்ஸ், யாழ் மாவட்ட எம்.பி எஸ்.சிறீதரன் உள்ளிட்ட பலர் அஞ்சலி உரையை ஆற்றினர்.

 

இறுதி நிகழ்வில் ஈழத்தின் இசைக் கலைஞர்கள், படைப்பாளிகள், சாந்தனின் ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

 

நன்றி: துளியம்