முள்ளிவாய்க்கால் முடிவும் அதன் பின்னரான காலமும் ஈழத்தமிழர்களின் இருப்பை அடியோடு அழிப்பதற்கு, சிங்களம் முழுமூச்சோடு கங்கணம் கட்டி நிற்கின்றது. ராஜபக்சாக்களின் திட்டங்கள் சிங்கள் மண்ணிலிருந்து ஈழத்தமிழர்கள் வாழும் புலம்பெயர் நாடுகள் நோக்கி ஏற்கனவே கால்பதித்துவிட்டன. இன்று அவ்வாறான திட்டங்கள் பன்முகப்படுத்தப்பட்ட செயற்திறன் ஊடாக சிங்களம் பயன்களை அறுவடை செய்ய ஆரம்பித்துவிட்டது.

lyca-6
அவ்வாறான ராஜபக்சாக்களின் திட்டங்களில் ஒன்று, சிங்கள தேசத்திற்கு எதிராக போரிட்ட புலம்பெயர் தமிழர்களின் பொருண்மிய பலத்தைத் தன்னகப்படுத்துவதும் கட்டுக்குள் வைத்திருப்பதுமாகும்.

துணை இராணுவக் குழுக்கள் ஊடாகவும், புலி எதிர்ப்பு அரச ஆதரவாளர்கள் ஊடாகவும், புலனாய்வுத் தகவல்கள் திரட்டப்பட்டு மூலதனமாக முன்னிறுத்தி சிறு வணிகர்கள் முதல் பெரும் தொழிலதிபர்கள் வரை வணிகம் என்ற போர்வையில் வலிந்திழுக்கப்பட்டு கச்சிதமாக தமிழர்களின் பொருண்மிய வலு சிங்கள தேசத்தை நோக்கி நகர்த்தப்படுகிறது.

தமிழர் தரப்பை நோக்கிய ராஜபக்சாக்களின் பொருண்மிய குவி மையங்களாக பின்வரும் விடயங்களை ஓரளவேனும் சுட்டிக்காட்டலாம்.

1. தமிழர் தரப்பினருடனான குறைந்த விலையிலான இறக்குமதி ஏற்றுமதி வணிகங்கள்.

2. ராஜபக்சாகளின் பினாமிகள் ஊடான புலம்பெயர் வணிகர்கள் மற்றும் வணிக நிலையங்கள், வணிக நிறுவனங்கள் ஊடான கறுப்புப் பண முதலீடுகளும் வணிகங்களும்.

3. துணை இராணுவக் குழுக்களின் ஆதரவாளர்கள் ஊடான பணப் பேரத்துடனான கட்டப் பஞ்சாயத்துகள்.

4. சிறீலங்காவில் தமிழர் முதலீடுகளும் ராஜபக்சாக்களின் பணப் பங்குகளும்.

5. தமிழர் தரப்பு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊடான நிதி வருகைகள்.

6. சிறீலங்காத் தூதரங்கள் ஊடான சிறீலங்காவுக்கான நுழைவிசை விண்ணப்பங்களும் பணப் பேரங்களும்.

போன்ற வழிமுறைகள் ஊடாக தமிழர்களை இலக்கு வைத்து தமிழர் பொருண்மியத்தைக் கையகப்படுத்தும் பன்முகப்படுத்தப்பட்ட பல திட்டங்களை ராஜபக்சாக்கள் புலம்பெயர் தமிழ்க் குமூகத்தில் அரங்கேற்றிவிட்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட இரண்டாம் வகையில் நாம் இன்று தமிழ்நாடு நோக்கிய தமிழ்ச் சினிமாவில் மகிந்தவின் முதலீகளில் ஒன்றான லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பான கத்தி திரைபடமும் லைக்கா நிறுவனத்தின் ஊடக வளைப்பும் என்ற விடயத்தையே கட்டுடைக்கவுள்ளோம்.

ராஜபக்ச தனது மற்றொரு கரமான லைக்கா மொபைல் நிறுவனத்தின் ஊடான கத்தி திரைப்படத்திற்காக அள்ளி வீசிய முதலீகளை அறிந்த தமிழின உணர்வாளர்கள் மிருந்த ஆத்திரமடைந்ததுடன் அதற்கான எதிர் நடவடிக்கைகளிலும் களம் இறங்கியுள்ளனர்.

இங்கே லைக்கா மொபைல் நிறுவனத்தின் ஊடான ராஜபக்சவின் பினாமி ஒருவரின் முதலீடு என்பது கட்டுடைக்கப்பட்ட போது, இன்று பேசுபொருளாகவும் எதிர்நிலையாகவும் கத்தி திரைப்படம் முன்னிறுத்தப்படுகின்றது.

இத்திரைப்படத்திற்கான எதிர்பலைகள் தமிழ்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் கருக்கொண்டுள்ளன. அதற்கான கருத்துருவாக்கங்கள் சமூக வலைத் தளங்களில் கொதி நிலையைத் தோற்றுவித்துள்ளன. கத்தி திரைப்படத்தைத் திரையிட அனுமதிப்பதா? இல்லையா? என்ற உடனடி எதிர்வினையால் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது உதவியாளர் ஒருவரே இப்படத்தை இயக்குவதாகக் கரணமடித்துள்ளார்.

அடுத்து இத்திரைப்படத்திற்கான கதை உரிமையாளர் நீதி மன்றம் சென்று வழக்குத் தாக்கல் செய்வது தொடர்பில் கலந்தாலோசித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

இவ்வகையான எதிர்வினைகளை அறிந்த தயாரிப்பு நிறுவனமான லைக்கா தனது பணபலத்தின் ஊடாக தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்களை அரவணைக்கும் புதிய யுத்தியைப் பயன்படுத்தி இத்திரைப்படத்திற்கான ஆதரவுக் களம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

இவ் யுத்தியின் முதல் அங்கமாக அண்மையில் தமிழ்நாட்டில் ஊடகவியலாளர்கள், மாணவர்கள் மற்றும் கத்தி திரைப்படக் குழுவினரை அழைத்து இரகசியச் சந்திப்பு ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது இந்த லைக்கா நிறுவனம்.

குறித்த சந்திப்பில் லைக்கா நிறுவனத்தினர் ஞானம் அறக்கட்டளை மூலமாக தமிழீழ விடுதலை புலிகளின் காலத்தில் நாங்கள் தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளோம். இன்றும் அதை நாங்கள் தொடர்ந்து செய்கின்றோம். எங்களுக்கும் மகிந்த அரசாங்கத்திற்கும் எதுவித தொடர்பும் இல்லை. இதனை விளக்கப்படுத்தும் நோக்கோடு இன்றும் சில நாட்களில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடாத்தவுள்ளோம் என நியாயம் கற்பித்துள்ளனர்.

பண பலத்தினைக் கொண்டு தமிழ்நாட்டில் கத்தி திரைப்படதிற்கு எதிரிப்புத் தெரிவிக்கும் செய்திகளைத் தணிக்கை செய்யும் நோக்கோடு தொலைக்காட்சிகள், நாளேடுகள் மற்றும் வார ஏடுகளில் பணியாற்றும் ஊடகவியலார்களுக்கு மடிக்கணனிகளையும், பணங்களையும் அள்ளி வழங்கும் கைங்கரியங்களில் இத்தயாரிப்பு நிறுவனம் தற்போது இறங்கியுள்ளது. சுருங்கக்கூறினால் ஊடகவியலாளர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைளை தற்போது இந்நிறுவனம் முடுக்கிவிட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து வெளிவரும் வார இதழ் ஒன்று கத்தி திரைப்படச் சர்சை குறித்த பத்தியை வெளியிட்டிருந்தது. குறித்த பத்தியை எழுத்திய பத்தியாளரை அணுகிய லைக்கா நிறுவனத்தினர் பணம் மற்றும் மடிக் கணனியை வழங்கியதோடு மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் கத்தி திரைப்படம் பற்றிய சர்சைகளை எழுதவேண்டாம் என அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர்.

மகிந்த ராஜபக்சவின் பினாமிகளின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. எத்தகைய எதிர்ப்புக்கள் வந்தாலும் கத்தி திரைப்படத்தை திரையிட அனுமதிக்கப் போவதில்லை என தமிழின உணர்வாளர்கள், மாணவர் அமைப்புக்கள் மற்றும் தமிழின ஆதரவு அமைப்புகள் சூழுரைத்துள்ளன.

லைக்கா மொபைல் நிறுவனத்தின் மென்பொருள் கட்டுப்பாட்டு நிலையம்

Plintron Global Technology Solutions Pvt Ltd
No 1/124 Shivaji Gardens Dlf Special Economic Zone Block 9-A 1st Floor,
Near L & T, Ramapuram, Chennai

லைக்கா மொபைல் நிறுவனத்தின் செல்பேசி அட்டைகளை விநியோகிக்கும் நிறுவனம்

New No.5 (Old No.2),
9th Avenue, Ashok Nagar,
Chennai – 600 083

அத்துடன் சென்னையில் மாற்றுப் பெயரில் இயங்கிவரும் லைக்கா தொலைபேசி நிறுவனத்தின் மென்பொருள் கட்டுப்பாட்டு நிலையத்தையும் மற்றும் இந்தியாவுக்கான லைக்கா செல்பேசி சிம் அட்டைகளை விநியோகிக்கும் நிறுவனத்தையும் முடக்கும் முற்றுகைப் போராட்டங்களை எவ்வாறு நடத்துவது குறித்து தமிழின உணர்வாளர்களும், அமைப்புக்களும் கலந்தாலோசித்து வருகின்றன.

இதேநேரம் தமிழ்நாட்டிலும், புலம்பெயர் தேசங்களில் வணிக நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் லைக்கா பெயர்ப்பலகையை மை பூசி அழிப்பது போன்ற போராட்டளை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்படுகின்றது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையாரினால் தமிழக சட்டமன்றத்தில் இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், கொடுங்கோலன் மகிந்த ராஜபக்ச பினாமி வடிவில் வந்து கத்தி திரைப்படத்தில் முதலீடு செய்திருப்பதை அறிந்தும் அப்படத்தில் நடிப்பதும் அப்படத்தை இயக்குவதும் தமிழ்நாட்டு முதலமைச்சரையும் , சட்டமன்ற தீர்மானத்தையும், தமிழ் நாட்டு தமிழர்களையும் , உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழர்களையும் அவமதிக்கும் செயலாகவே அமையுமென தமிழின உணர்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ள நிலையில் இறுதியில் வெல்லபோவது கொடுங்கோலன் ராஜபக்சவின் பணமா? இல்லை தமிழர்களின் இனமானமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.