mill-praஇன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள்.

 

இன்றோடு 28 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும், ஏன்…. உலகத் தமிழர்களிடமும் உள்ளிருந்து இயங்கும் பெரும் விடுதலை சக்தியாக செயற்படுகிறது என்றால் அது மிகையாகாது.

 

கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள்.

 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 யூலை 5ம் நாள் சிறிலங்கா பேரினவாத அரசுக்கும், அதன் இராணுவத்திற்கும் எதிராக, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவ முகாமின் மீது தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளாகும்.

 

எம்மை விழுங்கக் காத்திருந்த விசப் பூதங்களை எல்லாம் அகற்றி எமது விடுதலைப் பாதையினைச் செப்பனிட்டுத் தந்தவர்களுக்கான நாள்.

 

தரை, கடல், வானம், தமிழீழத்திற்கு உள்ளே, தமிழீழத்திற்கு வெளியே என எங்கெங்கு எல்லாம் எமது பகைவர்கள் வீற்றிருந்தார்களோ – அங்கங்கு வைத்தே அவர்களின் ஆணிவேர்களைப் பிடுங்கியவர்களுக்கான நாள்.

 

தமிழரது அரசியல் தாகத்தை இந்த உலகின் முற்றத்தில் முரசறைந்து சொன்னவர்களுக்கான நாள்.

 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அன்று தொட்டு பல தற்கொடைத் தாக்குதல்களை எமது வீர மறவர்கள் தமிழீழ மக்களின் தாயக விடுதலைக்காக நிகழ்த்தியுள்ளார்கள்.

 

பல ஆண்டுகளாக எதிரியின் மத்தியில் உலவி, தேசிய விடுதலையை மட்டுமே தமது தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராமல், தமது பாதையில் எத்தடை வரினும் அதை உடைத்தெறிந்து தமது கடமையை செய்த நெருப்பு மனிதர்கள்.

 

எத்தனையோ கரும்புலிகள் தமது முகத்தையோ, முகவரியையோ, காட்டாமல், தமக்கென சுயநல பெருமை தேடாமல் தமிழ்த் தேசத்தின் இருப்பை நிலை நாட்ட இரும்பு மனிதர்கள் அடையாளம் மறைத்து தமிழீழ விடுதலைக்கு தமது அர்ப்பணிப்பாலும் செயலாலும் தம்மை உரமாக்கி தமிழினத்தின் வரலாற்றில் தம்மை அழியாத அடையாளமாய் இட்டுச் சென்றுள்ளார்கள்.

 

அரசியல் விடுதலையை வென்றெடுப்பதில் எமது இனத்திற்கு இருக்கும் உறுதிப்பாட்டினதும், அர்ப்பண உணர்வினதும் வெளிப்பாடு அவர்கள். அவர்கள் இல்லாமல் போனவர்கள் அல்ல, எம்முன் எல்லாமுமாய் நிறைந்தவர்கள்.

 

நேற்று வரை மட்டுமல்ல, இன்று முதலும், எமது விடுதலையை நாம் வென்றெடுக்கும் வரையும்… அதற்கும் அப்பாலும் அவர்களே எங்கள் நெஞ்சுரம்.

 

இமாலய சாதனைகளை படைத்து வீரகாவியமாகி இன்றும் வெளியில் தெரியா மாணிக்கக் கற்களாய் ஈழவரலாற்றுப் பக்கங்களில் மறைந்து கிடக்கும் தேசப்புயல்களை தமிழீழ மக்களாகிய நாம் தலைசாய்த்து வணங்கி அவர்களின் இலட்சியமான தமிழீழ விடுதலைக்கும், தமிழர்களின் சுதந்திர வாழ்விற்கும் தொடர்ந்து குரல் கொடுத்து, பணி செய்வோம் என இந்நாளில் உறுதி எடுத்துக் கொள்கின்றோம்.

 

“பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்” தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே. பிரபாகரன் அவர்கள்.
நன்றி : விடுதலைப்புலிகள் ஏடு

 

யூலை ஆறும் நினைவிறங்கிக் குளிக்கும் நெடுங்கனவும்!

 

கரும்புலிகள் நாள்  நினைவுக் கவிதை
மறந்திருப்பேனன்றா நினைத்தாய் காலமே!

 

மறப்பதுபோலவும் இருக்கும் மாயத்தை நினைத்து

நீ மகிழ்ந்தும் இருக்கலாம்

தூங்கி விட்டானென்று நினைத்து
என் கைத்தடியை
நீ களவெடுத்து ஒழித்து வைத்து
என் அந்தரிப்பை பார்க்கவும்
ஆசைப்பட்டிருக்கலாம்

 

என்ன நினைத்தாய் என்னை
மூச்சுவிடவும் மறக்கலாம்
என் மொழியையும்
மொழிக்காய் வீழ்ந்த விதைகளையும்
என் இனத்தையும்
இனத்துக்காய் வெடித்த
கால் முளைத்து நின்ற காற்றையும்
மறக்கச்சொல்லி
உலகம் முடிந்த பின்னும் ஆசை கொள்ளாதே

 

கொற்றவை தேவியின் மடியை பார்க்கிறேன்
கருவள்ளல்களை அள்ளி அணைத்து
புருவம் உயர புன்னகைக்கின்றாள்

 

என்ன புன்னகை அது
காற்றிலும் கடல் அலையிலும்
அன்றொரு அழகிய பொழுதில் தோள்தடவி போன
புரிந்து கொள்ள முடியா புதிரின் முளைத்த
இதயங்களின் கலவையில் செய்த காவியமா அது.

 

அருகில் சூரியனை பார்த்தும்
அணைப்புக்குள் ஆகாயத்தை பார்த்தும்
வார்த்தைகளில் மலரைப்பார்த்தும்
வழி தடத்தில் துறவைப்பார்த்தும்
வருகையிலே விடிவின் முகத்தை பார்த்தும்
வியந்து நின்ற கணங்களில்
இனத்தின் கடவுள்களை கண்டோம.

 

கருமை நிறம் தரித்து
கண்களில் ஒளி படைத்து
தடை நீக்கிகளாய் நாமம் தரித்து
அருளிப்போன அல்லிமலர்களே!

 

காலம் எங்களை
எப்படி ஆக்கியிருக்கின்றது பாருங்கள்
கயவன் எங்களின்
காலடியில் நின்று கொண்டு
அதர்மத்துக்கு கோயில் கட்டி கொண்டாடுகின்றான்.

 

உங்கள் ஈகங்களிலும்
இதய வேட்கைகளிலும்
நிமிர்ந்த நின்று களை கட்ட
காவடியாடிய கவியரசுகள் பல
இன்று சுயநலத்துக்குள் சுருண்டு
வெருண்டு
கரித்துண்டுக்கும் கவிபாட முடியாமல்
காதல்
கலவி முடிந்த களைப்பு
கூதல் காற்றில்
கூந்தலுக்குள் உறக்கம் என்று
தலைப்புக்களை மாற்றி
தடுமாறிக்கொண்டு திரிகிறார்கள்.

 

மில்லருக்கும் திலீபனுக்கும்
மேடை கட்டி சன்னதம் ஆட யார்வரப்போகிறார்கள் என்று
சலித்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது.

 

அங்கயற்கண்ணிக்கும் யாழினிக்கும்
வேங்கைப்பா எழுதி வியக்க எத்தனை பேர்கள் தயார்
நொந்துபோகாமல் விடுதலைபெற்று
தந்தைக்கும் மகனுக்கும்
மாமனுக்கும் மச்சானுக்கும் ஈகத்தின்பேரால்
பதவிகளை பறித்தெடுத்து
பட்டாபிசேகம் செய்யும் பரம்பரைதானே
இப்பொழுது
ஆமை குட்டிபோட்டாற்போல அணிவகுக்கிறது.

 

துன்னாலையில்தான் சூரியன் உதித்தது என்பது
எத்தனை பேருக்குத்தெரியும்
தமிழன் தலைவிதி
நெல்லியடியில் தான் தன் மானத்தால்
தன்னை வெடியாக்கிய வெண்மனதால்
எண்பத்தாறுகளில் எழுத்தப்பட்டதை
எத்தனைபேர் இன்று நினைத்திருப்பீர்கள்.

 

பலருக்கு தேர்தல் மயக்கம்
இன்னும் ஒரு பகுதிக்கு மகிந்த வந்தால்
இன்னும் வாலை இறுகப்பிடித்து
நக்கி நலம் விசாரித்து
பழையபடி கொள்ளை மதுமாது வியாபாரம்
கடத்தல் கப்பத்தில் ஈடுபடலாம் என்ற கனவு
மண்டைபெருத்த சிலருக்கு
மைத்திரியின் மௌனம் பற்றிய ஆராய்ச்சி
இன்னும் சிலருக்கு
முன்னாள் போராளிகள்
காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் கண்ணீர்
சிறையில் வதையும் எங்கள் தேயும் வாழ்வுகள்

 

முள்ளம் தண்டு வடம் பாதித்து படுக்கையே வாழக்கையான பிறவிகள்
இவர்களை வைத்து
சட்டை மடிப்புக்குலையாமலும்
மண் படாமலும்
என்ன செய்யலாம் இந்த தேர்தலில் என்று
ஏக்கமும் தூக்கமில்லாத இரவும்.

 

தம்பி கப்டன் மில்லர்
அச்சாமப்பொழுதில் யாருக்கும் தெரியாமல்
ஊரே அறியாமல்
இனம் வாழட்டும் என்று
உன் இளமைத் தேகத்தை ஏனய்யா கொடுத்தாய்
இன்று இனமா வாழ்கிறது
தமிழர்கள் என்ற பெயரில்
சவங்களுமல்லவா வாழ்கின்றன.

 

நீ போகாது விட்டிருந்தால் முள்ளிவாய்க்கால் கொலைவெறி
முன்னமே நடந்திருக்கும்
வல்லை வெளியில் எங்கள் வரலாற்றை அன்றே புதைத்திருப்பார்கள்.

 

நீ தொடக்கிய
விடியலை நெருங்கித்தொடும் யாகத்தில்
என் தங்கைகளும் தம்பிகளும் இறுதிவரை
ஒன்றும் மிஞ்சாமலல்லவா உருக்குலைத்தார்கள்
தங்கள் சந்தணதேகத்தை.

 

என்ன சோதனை கடவுள்களே!
உங்கள் ஈகத்தில் மேல் எப்படி ஐயா
நாம் தலைகீழாக நடக்கமுடியும்
நீ சொல்லாமல் சென்ற வாரத்தைகள் என்ன என்ன
என்று ஒரு புறத்தில் நினைவு வருத்துகின்றது பிறவியை
மற்றொரு புறம்
நீங்கள் சொல்லிச்சென்ற வார்த்தைகளையும்
கொடுத்துச்சென்று எழுத்துக்களையும்
தொலைத்து விட்டும்
சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டும் கிடக்கின்ற
இதயத்தை துரத்தும் வருத்தம்.

 

நாங்கள் எவன் எவனையெல்லாமே
பூச்செண்டோடு காத்திருக்கின்றோம் வரவேற்க
சிலவேளைகளில் எங்கள் காவல் தெய்வங்களின்
கல்லறைகளை உடைத்த வெறியனை கூட
வீட்டுக்குள் அழைத்து விருந்து வைத்து
வில்லங்கத்துக்கு புன்னனைக்கும் துர்ப்பாக்கியம்
நீங்களோ
கந்தக மலராகி மரணத்தை வரவேற்று
உதிர்ந்து ஒளிர்ந்த வரலாற்றை
நாம் வாழும் காலத்திலேயே காட்டினீர்கள்.

 

என்ன கைமாறு செய்வோம் உங்களுக்கு காவியங்களே!
கஞ்சாவுக்கும் கசிப்புக்கும்
கற்பழிப்புக்கும் பெயர்போயிருக்கிற
எங்கள் சமகால சந்ததிகளுக்கு
உங்களை பற்றி எப்படி ஊட்டுவது என்பது பற்றி
சிந்தித்து தூக்கம் தொலைந்து கிடக்கின்றேன்.

 

தற்கொடைகளால் நிறைந்து
எங்கள் நெஞ்சங்கள் புனிதப்பட்ட மண்ணில்
இப்பொழுது தற்கொலைகள் தான் அதிகம்
முள்ளிவாய்க்காலையே மறந்துவிட்டு
மகிந்தவின் காலடியில் புத்தரின் வாசம் வீசுகின்றது என
முகரப்போன எங்கள் குலத்தில் சிலதை நினைக்கும்போது
முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்து

 

சிந்திய இரத்தத்தை
கொடுத்த உயிர்களை
கடித்த குப்பிகளை
வெடித்த வேதங்களை
எப்படி இந்த வருங்காலத்துக்கு சொல்வேன்
அந்த வரத்தை அருள்க வெடிசுமந்து போன வேதங்களே!
கந்தகம் என்பதில்
எம் தமிழ் உள்ளது
காலத்தில் எழுது எம் கரங்களே!
செந்தணலாகி சீறிய வீரரின்
நாட்குறிப்பென்ன
நம் தமிழ் தமிழ் தான்!

 

-பொன்.காந்தன்